பூத்திருக்கும் விழியெடுத்து – 6 | முகில் தினகரன்

 பூத்திருக்கும் விழியெடுத்து – 6 | முகில் தினகரன்

   

அத்தியாயம் 6

மறுநாள் நடைபெறப் போகும், இண்டர் ஸ்டேட் டான்ஸ் காம்படிஸனுக்காக அன்று மதியம் இருந்தே அனைத்துக் கல்லூரி மாணவர்களும், மாணவிகளும் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட வகுப்பில் நடனப் பயிற்சியில் ஈடுபடத் துவங்கினர்.

மாலை வாக்கில், பிராக்டீஸிற்கு ஓய்வு கொடுத்து விட்டு, ஸ்டூடண்ட்ஸ் மத்தியில் அமர்ந்து அவர்களுக்கு தன்னம்பிக்கை வாசகங்களைச் சொல்லி ஊக்கப்படுத்திக் கொண்டிருந்தாள் வைசாலி.

அப்போது இடையில் புகுந்த ஒரு மாணவி, “மேடம்… ஒரு சின்ன தகவல்… சொல்லலாமா?” தயக்கத்துடன் கேட்டாள்.

 “டான்ஸ் போட்டியைப் பற்றிய தகவலாயிருந்தால் தாராளமாய்ச் சொல்லலாம்”

 “வந்து… நான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ரெஸ்ட் ரூம் போயிட்டு வந்த போது பக்கத்து அறையில் தங்கியிருக்கற வேற ஏதோ கல்லூரி ஸ்டூடண்ட்ஸ் பிராக்டீஸ் பண்ணிட்டு இருந்ததை ஜன்னல் கேப் வழியா பார்த்தேன்” மேற்கொண்டு சொல்லத் தயங்கி அவள் நிறுத்த,

“ம்….சொல்லும்மா…. என்ன பார்த்தே?” வைசாலி கேட்டாள்.

 “அவங்க டான்ஸ் லெவலே வேற மாதிரி இருக்குது மேடம்!… அதைப் பார்க்கிற வரைக்கும் எனக்குள் இருந்த தன்னம்பிக்கை… அந்த நிமிஷத்திலிருந்து அவநம்பிக்கையா மாறிடுச்சு மேடம்” கவலையோடு சொன்னாள் அந்த மாணவி.

 எடுத்த எடுப்பில் அவளைத் திட்ட ஆரம்பித்தாள் வைசாலி, “ப்ச்…ரெஸ்ட் ரூம் போனா போயிட்டு நேரா இங்க வர வேண்டியதுதானே?… அது எதுக்கு அங்கெல்லாம் போய் எட்டிப் பார்க்கிறது!…ஒண்ணு நல்லா புரிஞ்சுக்கோ… “வாழ்க்கைல ஜெயிக்க வேண்டுமென்றால் அடுத்து என்ன செய்யலாம்?ன்னு தான் பார்க்கணும்!… அதை விட்டுட்டு அடுத்தவங்க என்ன செய்யறாங்க?ன்னு பார்க்கக் கூடாது!… என்ன புரிஞ்சுதா?””

அந்த மாணவி தலை குனிந்து நிற்க,

“சரி… சரி… அப்படியென்ன பெரிய கான்ஸெப்ட் வெச்சிருந்தாங்க டான்ஸுல?” அந்த மாணவியைக் கூல் படுத்தும் விதமாய் வைசாலி கேட்டாள்.

“மேடம்… அவங்க நம்மை மாதிரி ஒட்டு மொத்தமா… குரூப்பா பிராக்டீஸ் பண்ணாம… தனித் தனியா அவங்க பார்ட்டை மட்டும் பிராக்டீஸ் பண்றாங்க மேடம்!..”

 “யெஸ்… சில பேர் குரூப்பா பண்ணினா பார்க்கிற மூன்றாவது மனிதர்களுக்கு தங்களோட கான்ஸெப்ட் லீக் ஆகிடும்ன்னு பயந்துக்கிட்டு அப்படிப் பண்ணிவாங்க… அது வழக்கமான ஒண்ணு தான்,.. மேலே சொல்லு”

 “அங்க ஒரு மாஸ்டர் இருக்கார் மேடம்… பாத்தா நாப்பது…நாப்பத்திஅஞ்சு வயசு இருக்கும் போலிருக்கு மேடம்… ஆனா பசங்களுக்கு சொல்லிக் கொடுக்கும் போது அவர் சில மூவ்மெண்ட்ஸ் செஞ்சு காட்டறார் பாருங்க… யப்பா… யங் ஸ்டர்ஸ் கூட அப்படிப் பண்ண முடியாது மேடம்… அப்படிப் பண்றாரு மேடம்” விழிகளைப் பெரிதாக்கிக் கொண்டு அந்த மாணவி சொல்ல,

அதுவரையில் திடமாயிருந்த வைசாலி மனதில் லேசாய் ஒரு கீறல் விழுந்தது.  “அது யார் அந்த மாஸ்டர் எனக்குக் காட்ட முடியுமா?” கேட்டாள்.

 “மேடம் ஈவினிங் கேண்டீன் போவோமல்ல மேடம்…. அப்ப அந்த காலேஜ் ஸ்டூடண்ட்ஸும் வருவாங்க… கூட அந்த மாஸ்டரும் வருவார்… அப்பக் காட்டறேன் மேடம்”

மாலை ஆறரை மணிவாக்கில் அனைத்துக் கல்லூரி மாணவ, மாணவியரும் அந்தக் கேண்டீனில் கூடியிருக்க, கும்பல் அதிகமாகவேயிருந்தது.

வைசாலியுடன் வந்திருந்த அந்த மாணவி, பக்கத்து அறை மாஸ்டரான அசோக்கை அந்தக் கூட்டத்தில் தேடினாள்.  தேநீருக்கான டோக்கன் கொடுக்கும் இடத்தில் அவன் நின்று கொண்டிருக்க வைசாலியை அவசரமாய் அழைத்தாள் அவள்.

 “மேடம்… மேடம்.. சீக்கிரம் வாங்க… அதோ அங்க டோக்கன் கொடுக்கற இடத்துல பாருங்க நேவி ப்ளூ கலர் சட்டை…” அந்த மாணவி காட்டிய இடத்தில் பார்வையைச் செலுத்தினாள் வைசாலி.

அவள் பார்க்கும் அந்த விநாடியில் நாலைந்து மாணவர்கள் குறுக்கே நடக்க, காத்திருந்தாள்.  ஆனால், அவர்கள் கடந்து போன அந்தக் கணத்தில் அசோக்கும் மறைந்திருந்தான்.

 “என்னம்மா… அங்க நேவி ப்ளூ கலர் சட்டையில் யாருமே இல்லையே?”

 “ம்ம்ம்…ஆமாம்… அவர் நகர்ந்து போயிட்டார் போலிருக்கு மேடம்!… அப்படியும் இங்கேதானே இருப்பார் பார்த்து விடலாம்” என்று சொல்லியவாறே அங்கிருந்து நகர்ந்து சென்று தேடினாள் அந்த மாணவி.

ஆனால், அசோக் அவள் பார்வைக்கும் அகப்படவில்லை.  “எல்லோரும் மறுபடியும் அவங்க ரூமுக்கே பிராக்டீஸுக்குப் போயிட்டாங்க போலிருக்கு மேடம்”

“சரி… வாங்க நாமும் போகலாம்” வைசாலி தன் மாணவ, மாணவியரை மீண்டும் அறைக்கே அழைத்துச் சென்றாள்.

மறுநாள் காலை பத்து மணி வாக்கில் டான்ஸ் காம்படிஸன் ஆரம்பித்து விடும் என்கிற காரணத்தால், அன்று இரவு நெடுநேரம் எல்லா அறைகளிலும் பயிற்சி ஆட்டங்களும், ஊக்க உரைகளும் நிகழ்ந்து கொண்டேயிருந்தன.

கிட்டத்தட்ட ஒரு மணி வரை உச்சத்திலேயே இருந்த இந்த ஆர்ப்பாட்டங்களெல்லாம் அதற்கு மேல் கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து ஒரு கட்டத்தில் மொத்தமாய் ஓய்ந்து விட, அந்த மூன்று மாடிக் கட்டிடம் திடீரென அமைதியானது.

வைசாலியின் அறையில் மாணவச் செல்வங்களெல்லாம் உறங்கிப் போனதும், மறு நாள் என்ன ஆகுமோ?… தன் குழுவினர் வெற்றிக் கோப்பையைத் தட்டிக் கொண்டு வருவார்களா?… தோல்வி என்கிற வார்த்தைக்கு அலர்ஜி என்கிற அர்த்தத்தை ஏற்படுத்திக் கொண்டு வாழும் தன்னால் தோல்வி ஏற்பட்டு விட்டால் அதை ஏற்றுக் கொள்ள முடியுமா? போன்ற எண்ண அலைகளால் உறக்கம் தொலைந்து போய் மெல்ல எழுந்து வராண்டாவில் வந்து நின்றாள். இதமாகத் தடவிச் செல்லும் தென்றல் காற்று அவளுக்கு ஒரு புத்துணர்ச்சியைக் கொடுக்க பக்கத்து மரத்தினூடே தெரிந்த நிலவை ரசிக்க ஆரம்பித்தாள்.

ஆனாலும் அவளுக்கு ஒரு நெருடல் பிறாண்டிக் கொண்டேயிருந்தது.  “யாரவன் பக்கத்து ரூமில் இருக்கும் டான்ஸ் மாஸ்டர்?… அவனையும் அவன் ஆட்டத்தையும்… அவன் கொடுக்கும் கடும்பயிற்சியையும் பார்த்து என் மாணவிகளே மிரண்டு போகிறார்களே…ஏன்?… அவன் என்ன அவ்வளவு பெரிய ஆளா?”

தன் கவனிப்பில் இருக்கும் மாணவ, மாணவிகளை உறங்க வைத்து விட்டு, டான்ஸ் பிராக்டீஸ் கொடுத்துக் கொடுத்து, உள் வலியால் துடிக்கும் கையையும், காலையும் உதறிக் கொண்டே வராண்டாவிற்கு வந்தான் அசோக்.  “ஆஹா… உள்ளார புழுக்கம் தாளலை… இங்கே வெளியே ஜில்லுன்னு காத்து… சூப்பராயிருக்கு”

அந்த வராண்டாவில் நிதானமாய் நடந்து, தென்றல் காற்றை ஆழ உறிஞ்சு ரசித்துக் கொண்டிருந்தவன், தனக்குப் பின்னால், சற்றுத் தள்ளி, யாரோ நிற்பதை உணர்ந்து வேகமாய்த் திரும்பிப் பார்த்தான்.

அதே விநாடியில் அங்கே நின்று கொண்டிருந்த வைசாலியும் அவனைப் பார்த்தாள். பத்தாயிரம் வாட்ஸ் அதிர்ச்சி வாங்கினாள். “அடப்பாவி… நீயா?…” அவள் வாய் அனிச்சையாய் முணுமுணுத்தது.

கண்களைச் சுருக்கிக் கொண்டு வைசாலியை ஆச்சரியமாய்ப் பார்த்த அசோக், “இவளா?… இவ எதுக்கு இங்க வந்திருக்கா?”. அவன் உள் மனம் ஏனோ அச்சப்பட்டது.

அதற்கு மேலும் அங்கே நின்று, அவளைத் தொடர்ந்து பார்க்கவோ… அவளுடன் பேசவோ இஷ்டமில்லாதவனாய், வெறுப்பு அண்டிய முகத்துடன் தன்  அறைக்குள்ளேயே திரும்பினான்.

“ஓ… இந்த அசோக்தான் அந்த மாணவி சொன்ன டான்ஸ் மாஸ்டரா?…” என்று தனக்குத் தானே பேசிக் கொண்டு தன் அறைக்குள் திரும்பினாள் வைசாலி.

அதே நேரம் அறைக்குள் சென்று அமைதியாய்ப் படுத்த அசோக்கின் நினைவில் தன் கல்லூரிக்காதலி வைசாலியின் அக்கால பயங்கரங்கள் திரைப்படமாய் ஓட ஆரம்பித்தன.

-( மலரும்… )

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...