கொன்று விடு விசாலாட்சி – 4 | ஆர்னிகா நாசர்

 கொன்று விடு விசாலாட்சி – 4 | ஆர்னிகா நாசர்

   

அத்தியாயம் – 4

மான் மிஸ்டர் ரூபன் சாலமோன்!” எழுந்து வரவேற்றார் தேவா (திரும்பி) “டியாரா! ரூபன் ஒரு பிரபல மனோதத்துவ நிபுணர்! காவல்துறையின் பல கேஸ்களை அட்டன்ட் பண்ணி ஜெயித்துக் கொடுத்துள்ளார்!”

ரூபன் சாலமோன் திராவிட நிறத்தில் 165செமீ உயரமிருந்தான். தலை கேசத்தை இடவகிடு எடுத்திருந்தான். மெஸ்மெரிஸ கண்கள் மெலிய மீசை. இறுக்கமான உதடுகள்.

“கிளாட் டு மீட் யூ டியாரா. நான் உங்க தீவிர வாசகன். உங்களின் ‘பாதரச நிலவில் மரணப்புயல்’  இப்போதும் எனக்கு மனப்பாடம். நானும் மனோரஞ்சிதன் என்ற பெயரில் சில கதைகள் எழுதியிருக்கிறேன். ஸைக்கியாட்ரிஸ்ட் ஆன பின் எழுத நேரமில்லை….”

“ரொம்ப சந்தோஷம் ரூபன்…”

“குற்றவாளியை பார்ப்போமா?”

“ஓ யெஸ்!”

தேவா, டியாரா, ஸிஜா, ரூபன் அந்த ஸெல்லுக்குள் நடந்தனர்.

குனிந்திருந்த விசாலாட்சி நிமிர்ந்தாள்.

கண்களில் தாரை தாரையாக கண்ணீர்.

“ஏன் அழறீங்க விசாலாட்சியம்மா?”

“என் பக்க நியாயத்தை எனது குழந்தைகள் கூட உணரவில்லையே….’

“கவலைப்படாதிங்க. ஒரு மனோதத்துவநிபுணரக் கூட்டிட்டு வந்திருக்கோம். உங்க மனக்குறையை பூராவும் கொட்டுங்க. நீங்க சொல்ரது உண்மையா இருந்தா உங்க நியாயத்தை உங்க குழந்தைகள் உணருவாங்க!’’ என்றார்.

மௌனித்தாள் விசாலாட்சி.

டேப்ரிக்கார்டர் மேஜைக்கு வந்தது.

ரூபனுடன் தேஜி இருக்க மற்ற இருவர் விலகினர்.

“பேச ஆரம்பிக்கலாமாம்மா?” ரூபன்.

“இம்!”

டேப் ரிக்கார்டரை ஆன் செய்தாள் தேஜி.

“உங்க பேரு?”

“தெரிஞ்சும் கேக்றீங்களே… விசாலாட்சி!”

“விசாலாட்சின்னா அர்த்தம் என்னன்னு தெரியுமா!”

“அகலமான கண்களை உடையவள்னு அர்த்தம்!”

“உங்க சொந்த ஊர்?”

“தஞ்சாவூர்!”

“தஞ்சாவூரேவா,  பக்கத்துக்கிராமமா?”

“மானம்புச்சாவடி!”

“உங்களுக்கு வயசென்ன ஆகுது?”

“அம்பது. 15.8.1948 பிறந்தேன்…..”

“உங்களுக்கு மெனோபாஸ் பீரியட் முடிஞ்சிருச்சா? (தயங்கி) புரியலையா? உங்களுக்கு மாதவிலக்கு  வர்றது நின்று போச்சா?”’

“ஆமா!”

“நின்னு எத்ன வருஷமாகுது?”

“நாலு வருஷமாகுது!”

“நிக்கும் போது எதாவது உடல் உபாதை மனஉபாதை ஏற்பட்டுச்சா?”

“எது மாதிரி?”

“புதிய விடாத தலைவலி. வயிற்றில் சுணக்கம் வீக்கம். ஜாயின்ட்டுகளில் வலி. உக்கார எந்திரிக்க  கஷ்டம். தொடர்ச்சியா வெள்ளைப்படுதல் இது உடல் உபாதை. ‘அய்யய்யோ…. நமக்கு மாதவிலக்கு நின்று போச்சு…. இனி நாம முழுமையான பெண்ணில்லை. அன்பிட் ஃபார் செக்ஸ். நம்ம கணவர் இன்னும் ஆண்மையா இருக்கார். அதனால நம்மளை விட்டுட்டு யாராவது வயசு பொண்ணை பிடிச்சுக்கப் போரார். அவர நம்ம பிடிலயிருந்து விட்டுரக்கூடாது. இப்டின்னு ஒரு எண்ணம். இது மனஉபாதை!”

கிண்டலாய் சிரித்தாள் விசாலாட்சி.

“இந்த மனஉபாதை வந்துதான் நான் என் கணவரைக் கொன்னிருப்பேன்னு கணக்குப் போடுறீங்களோ?”

“வெரி குயிக் அஸம்ஷன். ஸைக்கியாட்ரிக் இன்வெஸ்டிகேஷனில் இது ஒரு  ஸ்டெப். நான் எந்த சந்தேகத்தையும் வச்சுக்கிட்டு அதன்மேல கேள்விகள் அடுக்கிறதில்லை. நீங்க சும்மா பதில் சொல்லுங்க!”

“மாதவிலக்கு நின்னதுக்கு சந்தோஷம்தான் பட்டேன்!”

“ஏன்?”

“செக்ஸ் எனக்கு எப்போதுமே சித்ரவதையாகத்தான் தரப்பட்டிருக்கு. அதிலயிருந்து விடுபட்டோம்னு சந்தோஷப்பட்டேன்!”

“ஓகே… உங்க திருமணம் அரேன்ஜ்டா, லவ் மேரேஜா?”

“பெரியவங்க பாத்து செஞ்சது?”

“திருமணத்துக்கு முன்னாடி யாரையாவது காதலிச்சீங்களா?”

“இல்ல…”

“திருமணத்துதக்கு பின் உங்க கணவர் தவிர்த்து உங்களுக்கு யாராவது ஆண் நண்பர் இருந்தாங்களா?”

ஆங்காரமாக “இல்ல….”

“உங்க பரம்பரைல யாராவது பெண் கொலைகாரிக இருக்காங்களா?”

“இல்ல…”

“கரப்பான்பூச்சிகளைக் கண்டா பயப்படுவீங்களா. அடிச்சுக் கொல்வீங்களா? வீட்டு எலிகளை ஒழிக்க விஷம் வச்சிருக்கீங்களா?”

“கரப்பானுக்கு ஒதுங்குவேன். எலிகளை பிடிக்க கூண்டு வைப்பேன்!”

“உங்களை அடிக்கடி யாராவது கூப்டுறதுமாதிரி ‘குரல்’ கேட்குதா?”

“இல்ல!”

“கண்களுக்குள் விகாரமான உருவங்கள் தெரியுதா?”

“இல்ல!”

“வன்முறை சினிமாக்கள் விரும்பி பாப்பீங்களா?”

“படமே பாக்றதில்ல…”

“கைல நகம் வளக்றது உண்டா?”

“பிடிக்காது. வாராவாரம் வெட்டிருவேன்… நக பராமரிப்பில் படு சுத்தம் நான்!”

ரூபன் விசாலாட்சியின் கண்களை பற்களை சோதித்தான். இரத்த அழுத்தம் சோதித்தான். மூக்கில் டார்ச் அடித்து பார்த்தான்.

“உங்க கணவரைக்கொன்னது நீங்களா, கொள்ளைக்காரங்களா? போலீஸின் பயமுறுத்தலுக்கு பயந்து கொலையை நீங்க செய்ததாக ஒத்துக் கொண்டீர்களா?”

ரூபனை ஆழமாக பார்த்தாள் விசாலாட்சி

“என் மகன் மாதிரி இருக்க  என்னென்ன கேள்விகள் கேக்ற நான் மொதல்ல ஒளிச்சதுதப்பு. சீனியைக் கொன்னது நான்தான் நான்தான் நான்தான்.  போலீஸ் எதுவுமே என்னை பயமுறுத்தலப்பா…”

“உங்க புருஷனைக் கொல்ல திட்டம் போட்டீங்களா?”

”ஆமா…”

“எத்தனை நாளா?”

“எத்தனை வருஷமான்னு கேளு. கல்யாணம் ஆனதிலயிருந்து நினைச்சுக் கிட்டுருந்தேன். ஆனா நிறைவேற்ற 32 வருஷமாச்சு!”’

“இப்டி கோர்ட்ல சொன்னீங்கன்னு தண்டனை அதிகம்மா…”

“அதிகபட்சம் தூக்குதண்டனை தானே தருவாங்க. கயித்ல சந்தோஷமா நிம்மதியா ஆனந்தமா மனநிறைவா தொங்கிட்டு போரேன்…”

அதிர்ந்தான் ரூபன்.

“உங்க புருஷன் துப்பாக்கி வச்சுக்க உரிமம் பெற்றவரா?”

”ஆமா!”

”துப்பாக்கிய வழக்கமா எங்க வச்சிருப்பார்?”

“அவர் பீரோல…. தோட்டா அகற்றப்பட்டு….”

“சம்பவத்தன்னைக்கி?”

“அவரது தலையணைக்கு அடில… தோட்டாவோட…”

“எப்டி?”

“என்னை சுடனும்னு இருந்தார்…”

”ஏன் சுடல?”

“போதைல இருக்கேன் போதை தெளிஞ்சவுடன் சுடுரேன்னார்!”

ரூபன் நெற்றி சுருக்கி யோசித்தான்.

“ஆக்சுவலா நேத்து ராத்திரி என்ன நடந்துச்சும்மா?”

“என் கணவர் ஒரு வினோதமான பேர்வ்ழி. அவருக்கு சந்தோசமானாலும் சரி துக்கமானாலும் சரி அதக் கொண்டாட நான்தான் அவருக்கு டார்ஜெட். என்னை வெரைட்டி வெரைட்டியா அடிச்சு துன்புறுத்துவார். அவர் துன்புறுத்ரது வெளில யாருக்கும் தெரியாது படைச்ச கடவுளுக்கும் தெரியுமான்றது சந்தேகம். அடி பர்ஸ்ட் நைட்  அன்னைக்கே ஆரம்பிச்சிட்டது. நேத்தி அவர் வீடு திரும்புறது்க்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எனக்கு ஃபோன் பண்ணினார்”

“ஓ! ஃபோன்ல  என்ன சொன்னார்?”

“அடியேய்… நமக்கு நாளைக்கி அறுபதாம் கல்யாணம் போல…. ஊர்லயிருந்து பொண்ணுபிள்ளைக வந்திருக்கு்னு குஷியா இருக்க போல…. இரு…. தாராளமா இரு… மண்டைவெடிக்க சந்தோஷமா இரு… நாளைக்கி உன்னால இருக்கமுடியாது… இத்னி நாள் வருத்தம்  வந்தா சந்தோஷம் வந்தா அடிச்சேன்…. இன்னைக்கி வேற மாதிரி… உன்னை ஆசைதீர சுட்டுக் கொல்லப்போரேன்… போலீஸ்ல மாட்டிப்பன்னு பாக்றியா? மாட்டமாட்டேன்…. உன் நகையெல்லாம் மண்ல புதைச்சு வைச்சிட்டு கொள்ளைக்காரங்க வந்தாங்க. உன் நகைகளை திருடிட்டு உன்னைக் கொன்னுட்டாங்க. தடுத்த என்னை காயப்படுத்திட்டாங்கன்னு நானே நெத்தில செயற்கையா காயம் ஏற்படுத்தி்ப்பேன். அன்பு பொண்டாட்டி போய்ட்டாளேன்னு கதறி அழுது காட்டுவேன். எல்லாரும் நம்புவாங்க. சீனியோட ராசி அப்டி. சீனியோட நடிப்பு அப்டி. நடிப்புன்னா சிவாஜி மாதிரி ஹோஹோன்னு ஓவர் ஆக்டிங் பண்ணிரக்கூடாது. மனசுக்குள்ள நான் சுத்தம்னு பொய் சொல்லி வைப்பேன். அந்த இன்னசன்ட். ஃபீலிங்கை முகத்ல அன்டர்ப்ளே பண்ணுவேன்… ஆகவே சாகத் தயாராயிருன்னார்!”

“ஓகே… வந்ததும் ஏன் சுடல?”

“கடும் போதைல வந்தார். சாப்ட்டார். மெலிசான குரலில் இப்ப சுட மாட்டேன்டி. கெஸ்ட் எல்லாம் இருக்கா. சுட்டா குறியும் தப்பிடும். நடிப்பும் சொதப்பிடுவேன். சரியாக மூணுமணி்க்கு அலாரம் வச்சு எந்திரிப்பேன். ரெண்டு மணி நேரத் தூக்கம் போதையை தெளிய வச்சிரும். மூணுக்கு எல்லாரும் அசந்த தூக்கத்ல இருப்பாங்க.  அப்ப பாத்து சுடுவேன். என்னடி யோசிக்ற…. எங்கயாவது தப்பிச்சு ஓடிப் போயிரலாம்னு பாக்றியா? கோழைன்னா ஓடிரு. துரத்தி வந்தா சுடப் போறேன். ஓடுகாலி ஓடிட்டான்னு தலைமுழுகிடுவேன். வேற எவளையாவது நச்னு பாத்து ரெண்டாவது பொண்டாட்டியா கட்டிப்பேன் சீனி்க்கு ராசி அப்டி. இல்ல மக மகன்ட்ட சொல்லிப்பாரு. நம்பமாட்டாங்க. மென்ட்டல் ஆய்ட்டன்னு கெக்கலி்ப்பாங்க. அடியேய்… என்னமாதிரி. அவுசாரியா போறதுக்கும் முகராசி வேணும்டி அப்டின்னார்.”

“அப்றம்?”

“படுக்கைக்கு போனார். அலாரம் வச்சார். தூங்கிப் போனார். தூங்கும் சீனி பக்கத்திலேயே ரொம்ப நேரம் உக்காந்து யோசி்ச்சேன். கீயை விடுவித்தே்ன். மெதுமெதுவா அவரது தலையணைக்குக் கீழே கைவிட்டு துப்பாக்கியை எடுத்தேன். உடம்பும் மனசும் நடுங்கிச்சு. நேரடியா சுட்டா சத்தம் கேட்கும். யோசிச்சேன். அப்பத்தான் டர்னிப் அய்டியா வந்துச்சு. ஃப்ரிட்ஜ்லயிருந்து எடுத்தேன். அவர் நெத்தில வச்சேன். துப்பாக்கியோட சேப்டி கேட்ச்சை விடுவிச்சு ட்ரிக்கரை அமுக்க நான் பட்டபாடு… அப்பப்பா… கடைசில நா மனசை தேத்திக்கிட்டேன்… எந்திரிச்சவுடனே கிராதகன் சீனி என்னை சுடப் போறான். தான் முந்திக்கிரதுல தப்பே இல்ல… இந்தாளின் சித்ரவதைலிருந்து நிரந்த நிம்மதின்னு இறுகி சுட்டேன். டுஷப். ஒரு எதிர்ப்பு காட்டாம செத்துப் போனார் சீனி….”

“உங்களுடைய கம்ப்ளீட் 32வருட திருமண வாழ்க்கையை பிளாஷ் பேக்கா சொல்லிடுங்களேன்… உங்க செயலுக்கான முழு நியாயம் கிடைக்கும்!” என்றான் ரூபன்

தேஜி தலையாட்டினாள்.

விசாலாட்சி சொல்ல ஆரம்பித்தாள்.

பிளாஷ் பேக் ஆரம்பம்

-(தொடரும்…)

முந்தையபகுதி – 3 | அடுத்தபகுதி – 5

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...