தமிழ் சினிமாவின் முதல் கனவுக்கன்னி!
வேலைக்காரியாக இருந்தவர்தான் தமிழ் சினிமாவின் முதல் கனவுக்கன்னி! ஹீரோயினிஸம்
பாகவதர் காலத்து வாலிபர்களில் தொடங்கி இன்றைய சிவகார்த்திகேயன் காலத்து இளசுகள் வரை டி.ஆர்.பி. ரேட்டிங்கில் முன்னணியில் இருக்கும் ஒரே நாயகி டி.ஆர்.ராஜகுமாரிதான். அவரது காந்தக் கண்கள் காலம் கடந்தும் காளையரைக் கவர்ந்திழுக்கும் ஈர்ப்பினைக் கொண்டது.
முப்பதுகளில் எஸ்.பி.எல்.தனலட்சுமி என்ற நடிகை முன்னணியில் இருந்தார். அவரது உதவியாளராக தஞ்சையிலிருந்து சென்னைக்கு வந்தவர் ராஜாயி. இவர்தான் பிற்காலத்தில் டி.ஆர்.ராஜகுமாரியாக தமிழ் சினிமாவை அரசாண்டார்.
அப்போது கே.சுப்பிரமணியம் ‘கச்சதேவயானி’ என்கிற படத்தை இயக்க முடிவு செய்திருந்தார். அதற்கு வசீகரம் பொருந்திய ஹீரோயின் தேவைப்பட்டார். சுப்பிரமணியம் வலைவீசி தேடிக் கொண்டிருந்தார். புதுமுகம் யாரும் மாட்டவில்லை.
‘வேறு வழியில்லை, எஸ்.பி.எல் தனலட்சுமியை புக் பண்ணிட வேண்டியதுதான்’ என்கிற இறுதி முடிவுக்கு வந்திருந்தார். அவரை புக் செய்யப் போனபோதுதான் இங்கும் அங்குமாக வளைய வந்து கொண்டிருந்த ராஜாயியைக் கவனித்தார். அவர் மனதுக்குள் சித்தரித்து வைத்திருந்த கச்ச தேவயானி இவர்தான் என்று அலாரம் அடித்தது.
“இந்தப் பொண்ணு யாரு?” என்று விசாரித்தார். “என் தூரத்து உறவுக்கார பொண்ணுதான். கிராமத்துல சும்மா இருந்தா. உதவிக்கு வச்சிருக்கேன்” என்று சொன்னார் தனலட்சுமி. “மன்னிச்சிரு தனம். இவதான் நான் தேடிக்கிட்டிருந்த கச்சதேவயானி” என்றார் சுப்பிரமணியம். இப்படித்தான் ஹீரோயின் ஆனார் டி.ஆர்.ராஜகுமாரி. கிட்டத்தட்ட ஒரு பெண்ணைப் பார்க்கப்போன இடத்தில் வேறு பெண்ணை மாப்பிள்ளைக்கு பிடித்துவிட்ட கதைதான்.
தியாகராஜ பாகவதருடன் இவர் நடித்த ‘ஹரிதாஸ்’, மூன்று தீபாவளிகளைக் கடந்து ஓடியது என்பது தமிழ்நாட்டில் அனைவருக்கும் தெரிந்த சரித்திரம். பாகதவர் – சின்னப்பா, எம்.ஜி.ஆர் – சிவாஜி என இரண்டு தலைமுறை ஹீரோக்களுடனும் நடித்தார்.
இவரது கால்ஷீட்டுக்காக அந்தக் காலத்தில் ஹீரோக்கள் காத்துக் கிடந்தார்கள். தமிழ் சினிமாவின் முதல் கனவுக்கன்னி என்றுகூட இவரை சொல்லலாம். இவருக்கு முன்போ, பின்போ இவரளவு உச்சம் தொட்ட நடிகை என்று ஒருவரைச் சொல்ல முடியாத அளவுக்கு தனித்துவம் மிக்கவர்.
சினிமாவில் சம்பாதித்த பெரும் பணம் அவரது வாழ்க்கையை சொகுசாக்கி விடவில்லை. எங்கே சம்பாதித்தாரோ, அங்கேயே முதலீடு செய்தார். சென்னை தி.நகரில் ‘ராஜகுமாரி’ என்கிற பெயரில் ஒரு தியேட்டர் கட்டினார்.
இப்போதைய நடிகைகள் கல்யாண மண்டபம் கட்டுகிறார்கள் அல்லது பண்ணைவீடு வாங்குகிறார்கள். அவரே ஒரு தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். ‘வாழப்பிறந்தவள்’ படத்தைத் தயாரித்து நடித்தார். எம்.ஜி.ஆர் – சிவாஜி இணைந்து நடித்த ஒரே படமான ‘கூண்டுக்கிளி’யின் தயாரிப்பாளர் இவர்தான். நடிப்பில் ஜெயித்தவர், தயாரிப்பில் பெரும் பணத்தை இழந்தார். “ராஜகுமாரி மீண்டும் வேலைக்காரிதான்” என்று இவர் காதுபடவே பலரும் கிண்டலடித்தார்கள்.
அவர் கலங்கவில்லை. விட்ட இடத்திலேயே பிடிக்க வேண்டும் என்று பெருமுயற்சிகள் மேற்கொண்டார். கடைசி சொத்து வரை விற்றார். வாழ பிறந்தவன், கூண்டுக்கிளி ஆகிய இரு படங்களின் தோல்விக்கு பிறகு . மூன்றாவதை நினைக்கவே ராமண்ணாவுக்கு மூச்சுத் திணறியது.
‘பேசாமல் தயாரிப்பை மட்டும் கவனித்தவாறு, எல்.வி. பிரசாத் போன்ற திறமை மிக்க இயக்குநர்களைப் பயன்படுத்திக் கொண்டால் என்ன… ‘ என்று தோன்றியது.
டி.ஆர். ராஜகுமாரி சம்மதிக்கவில்லை.
‘ராமு நீ டைரக்டரா தோல்வி அடையல. சிறந்த தரமான இயக்குநர் என்ற பேரு கிடைச்சிருக்கு. பணம் போனதைப் பத்தி கவலைப்படாதே.
உனக்கு விருப்பமான சப்ஜெக்ட் ஜனங்களுக்குப் பிடிக்கல. மக்கள் எதை ரசிக்கிறாங்கன்னு பாரு. அதுக்கேத்தபடி நீயும் மாறு. ஆல் தி பெஸ்ட். ‘ என்றார்.
கூண்டுக்கிளி வெளியான அதே தினத்தில் தூக்கு தூக்கியும் ரிலீசானது. அதற்கு செம வசூல். தூக்கு தூக்கி போன்ற ஜனரஞ்சகக் கதையான ‘குலேபகாவலி’யை உருவாக்கினார் டி.ஆர். ராமண்ணா. எம்.ஜி.ஆருடன் டி.ஆர். ராஜகுமாரி, ஜி.வரலட்சுமி, ராஜசுலோசனா என்று மூன்று ஹீரோயின்கள் முதன் முதலாக இணைந்து நடித்தனர். ‘விந்தன்’ எழுதிய ‘மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ’ பாடலின் இனிமை இன்னமும் நள்ளிரவுகளில் ‘இன்ப இதிகாசம்’ வாசிக்கிறது.
‘குலேபகாவலி’ யின் ஓய்வற்ற ஓட்டமும் வற்றாத வசூலும் ஆர். ஆர். பிக்சர்ஸை குபேரத்தீவாக்கின.
‘குலேபகாவலி’யைத் தயாரித்து நடித்தார். எம்.ஜி.ஆர் ஹீரோ. மூன்று ஹீரோயின்களில் இவரும் ஒருவர். முன்பு விட்ட இடத்தை இந்த இரண்டு படங்களிலும் மீண்டும் பெற்றார். ராஜகுமாரியாகவே கடைசிவரை வாழ்ந்தார். தான் சம்பாதித்த மொத்தத்தையும் முதலீடு செய்து அவர் ‘குலேபகாவலி’ தயாரித்தபோது சொன்ன பஞ்ச் டயலாக்தான் ராஜகுமாரியின் ஆளுமையைக் காட்டும் உரைகல்.“குலேபகாவலி ஜெயித்தால் நான் குபேரவல்லி. இல்லையேல் பழையபடி வேலைக்காரி.”
நன்றி:வண்ணத்திரை சினிமா இதழ் .