கொன்று விடு விசாலாட்சி – 3 | ஆர்னிகாநாசர்

 கொன்று விடு விசாலாட்சி – 3 | ஆர்னிகாநாசர்

       

அத்தியாயம் – 3

“எனது கணவரை நான் தான் கொன்றேன்!”  விசாலாட்சி அறிவித்ததும் அனைவரும் பிரமித்தனர்.

ஜீவிதா ஓடிவந்தாள்.

“ஏன்ம்மா… உனக்கு மூளைகீளை குழம்பிப் போச்சா? என்ன பேசுரோம்னு தெரிஞ்சு தான் பேசுரியா? போலீஸ்கிட்ட விளையாடக் கூடாதும்மா… நீ சொன்னது உண்மையில்லை தானே?”

கீர்த்தி நெஞ்சில் அடித்துக்கொண்டு கத்தினாள்.

“ஆலமரம் போல தழைச்ச இந்தக் குடும்பத்து மேல யார் கண்ணோ பட்டுப் போச்சு. அதான் இப்டி யாரும் எதிர்பார்க்காத இடியாப்ப சிக்கல். 32 வருஷம் ஒத்துமையா குடித்தனம் நடத்தியிருக்கீங்க…  தொழில்லயும் வாழ்க்கைலயும் பிரமாண்டமா ஜெயிச்சிருக்கீங்க… நீயும் அப்பாவும் ஒரு நா  பொழுது வாய்சண்டை கைசண்டை போட்டு நாங்க பாத்ததில்ல… மேட் ஃபார் ஈச் அதர் தம்பதிகள். அப்பாவை நீ கொல்ல சான்ஸே இல்லைம்மா… யாரைக்காப்பாத்த இந்த பொய்யைச் சொல்ற? நீ கொலைகாரின்னு கடவுளே வந்து சொன்னாலும் நான் நம்பமாட்டேன்!”

பிரசாந்த் வாய்கோணி அழுதான். “அப்பா ஹார்ட் அட்டாக் வந்து செத்திருந்தாலும் பரவாயில்லையே… இப்டி வன்கொலையாகி இருக்கனுமா? இரத்த வெள்ளத்ல டாடி! என்னால் டைஜஸ்ட் பண்ண முடியல… அப்பா மரணமே ஒரு குண்டுன்னா அம்மாவின் பேச்சு இன்னொரு குண்டு! டியாரா! எங்கம்மாவின் உளறலை நம்பி எந்த முடிவும் எடுத்திராதிங்க… ப்ளீஸ் ட்ரேஸ் தி ரியல் கல்பிரிட்!”

மருமகன்களும் விசாலாட்சிக்கு ஆதரவாய் பேசினர்

பேரக்குழந்தைகள் அழுதன. “பாட்டி!”

உறவினர் கலவையான உணர்வுகளைக் காட்டினர்.

எல்லாரும் பேசி முடிக்க டியாராவும் விசாலாட்சியும் காத்திருந்தனர்.

பின் டியாராவே பேசினான்.

“வீணா விசாலாட்சிம்மா மேல பழிபோட எனக்கு விருப்பமில்லை. எல்லா அலிபிகளும் அவங்கதான் கொலையாளின்னு கன்பர்ம் பண்ணுது!”

விசாலாட்சி முகத்தில் குற்றஉணர்ச்சி. விடுதலையான மைக்ரோ மகிழ்ச்சி செய்த கொலைக்கு விளக்கம் தரவேண்டிய கட்டாய இறுக்கம் கூட்டாய் தொனித்தன.

“எனக்கு மனநிலை தெளிவாக இருக்கு. நான் உளறல நான்தான் இந்தக் கொலையை திட்டம்போட்டு செஞ்சேன்!”

“ஏன்? ஏன்?” மிழற்றினர் மகன் மகள்கள்.

“உங்கள் தந்தை எனது கணவர் ‘தேவன்’ ஒப்பனையிட்டுக்கொண்ட ஒரு ‘சாத்தான்’ அந்த சாத்தானுடன் நான் வாழ்ந்த நாட்கள் நரகம் நரகம். ஒரு ஆயுள்தண்டனைக்கு இரு ஆயுள்தண்டனையில்லை-மூன்று ஆயுள் தண்டனை எனது 32வருட தாம்பத்ய வாழ்க்கை. மிஸ்டர் சீனியைக் கொல்றதா, நாம தற்கொலை பண்ணக்கிறதா இதே டைலம்மாதான் எனக்கு 32வருஷமா கோகோ கோலா பாட்டிலுக்குள் புயலை அடக்கி வச்சேன். நான் அழுத கண்ணீரில் கடலின் நீர்மட்டம் பல அடிகள் உயர்ந்திருக்கும். கம்போடிய கொடுங்கோலன் போல்பாட் படித்தவர்களே இருக்கக்கூடாது என படித்தவர்களைக் கொன்றான் அவனது கனவு தேசத்தில் படித்தவருக்கு இடம் இல்லை. சீனிக்கு பெண்கள் மீது அதீத வெறுப்பு. ஆனால் போல்பாட் அளவுக்கு கையில் அதிகாரம் இல்லையே? எல்லா பெண்களையும் கொல்ல முடியவில்லை. என்னை மட்டும் அதுவும் எனது மனதை மட்டும் கொன்னார். அவரது கனவு தேசத்தில் பெண்களுக்கு இடம் இல்லை!”

“அம்மா!” கத்தினாள் ஜீவிதா. “உன் புளுகு மூட்டையை எங்களிடம் விக்காதே. கொலையும் செய்துவிட்டு கொலையான எங்கப்பா மீது அவதூறுகளை அள்ளி வீசுகிறாயே… தகுமா? இப்டி மாற்றிச் சொல்… விசாலாட்சியின் கனவுதேசத்தில் நல்ல கணவன்மாருக்கு நல்ல தந்தையருக்கு இடமில்லை என்று. இந்த 32வருடத்தில் கட்டுப்பாடு- ஒழுக்கம் – குடும்பப்பாரம்பரியம்னு நீதான் எங்களை டார்ச்சர் பண்ணியிருக்க. அங்க நின்னா குத்தம் இங்க நின்னா குத்தம். கீர்த்தி அஜீத்தை காதல் பண்ணிட்டு வந்து நின்னப்ப நீ வானத்துக்கும் பூமிக்கும்ல குதிச்ச. அப்பாதானே உன்னை சமாதானப்படுத்தி கீர்த்தி- அஜீத் திருமணத்தை நடத்தி வச்சார். சீனிவாசன்-விசாலாட்சி திருமணவாழ்வில் நீதான் டாமினன்ட் பார்ட்னர். மேலமேல பொய் சொன்ன- உயிருக்கு உயிரா மதிச்ச தகப்பனே போயாச்சு… நீ இருந்து என்ன கிழிக்கப்போற?- கழுத்தை நெறிச்சுக் கொன்னிருவேன்!”

“ஹெல் வித் யுவர் லைஸ்.  யாரும் நம்ம குடும்பத்துக்கு செய்வினை வைச்சிட்டாங்களா?” கீர்த்தி.

“கமான் கமான் மம்மி…. ஸாரி விசாலாட்சி! கம் அவுட் வித் ரியல் மோட்டிவ்!”

ஆங்காரமாக சிரித்தாள் விசாலாட்சி. “பொய்களுக்கு இந்தியாவும் சீனாவும் சொந்தம் உண்மைக்கு ஆள் நடமாட்டமில்லாத நிக்கோபர் தீவு கூட சொந்தமில்லை. அவசரப்படாதிங்க. கண்ணால் பார்ப்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய். எல்லா வெளிச்சப் பக்கத்துக்கும் ஒரு இருண்ட பக்கம் உண்டு. சீனியின் இருண்ட பக்கத்தில் புழுக்கள் நெளிந்தன. பிணந்தின்னி கழுகுகள் வட்டமிட்டன. விரியன்கள் நெளிந்தன….”

“ஷிட்!” தரையை உதைத்தான் பிரசாந்த்.

“எனப். எல்லாரும் அமைதியா இருங்க. போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வரட்டும். உங்க தாயாரின் இரகசிய ஒப்புதல் வாக்குமூலம் பதிவாகட்டும் அப்போது எல்லா மர்மங்களும் விடுபடும்!”

சீனிவாசனின் பிரேதம் பல கோணங்களில் புகைப்படமாய் சுட்டுத் தள்ளப்பட்டது. ரேகை தடயங்கள் எடுக்கப்பட்டிருந்தன. துப்பாக்கி கண்ணாடிப்பையில் சீல் செய்யப்பட்டது. ஆம்புலன்ஸிலிருந்து ஸ்டெச்சர் கொண்டு வரப்பட்டது. சீனியின் பிரேதம் போஸ்ட் மார்ட்டத்துக்காக அகற்றப்பட்டது.

அப்பாவின் பிணம் அகற்றப்படும்போது கீர்த்தியும் ஜீவிதாவும் நெஞ்சில் அடித்துக் கொண்டு கதறினர்.

“யப்பா… யப்பாயப்பா யப்பா… போய்ட்டியா? ரத்த வெள்ளத்ல போய்ட்டியாப்பா? கட்ன பொண்டாட்டி கையாலேயே சுடப்பட்டு போய்ட்டியா? எங்கள மார்லயும் தோள்லயும் போட்டு வளத்தியே… உப்புமூட்டை தூக்கி விளையாடுவியே…. யானை…. யானை…. அம்பாரி யானைன்னு உன் முதுகுல ஊர்வலம் வருவோமே? ஒரு நா ஒரு பொழுது ஒரு சுடுசொல் சொல்லிருப்பியா? ஒரு சின்ன கிள்ளு ஒரு சின்ன தட்டு…. ம்ஹிம்…. எப்பவும் உன் முகத்ல சிரிப்புதானே? நிதானம், கம்பீரம், பெருந்தன்மை, ஈகை இவைதானே உன் பிறவிக்குணம்? நல்லவங்களுக்கு கெட்ட சாவுதானா? இனி உன் முகத்தை எங்க பாப்பம்? உன் சங்கீத குரலை எங்க பாப்பம்? சண்டாளி! கொன்னுட்டாளே…. அடியேய்…. தெவ்டியா முண்டை…. பொய் மூட்டை…. அமுக்னி…. எங்கப்பனை சுட்ட உன் கை அழுகிப் போக… உன் கண் ரெண்டும் அவிஞ்சு போக… இன்னும் ஏண்டி உன் உயிரை வச்சுக்கிட்டு இருக்க? நாண்டுக்கிட்டு செத்துப்போடி!”

அம்மா விசாலாட்சி வெறுமையாக மகள்களை பார்த்தாள்.

“ரொம்ப சந்தோஷம் மகள்களா ரொம்ப சந்தோஷம் திட்டுங்க. உங்களுக்கு பால் கொடுத்த மார்பகங்களில் அமிலமழை. உங்களை பெற்றெடுத்த கர்ப்பபைக்குள் பூகம்பம் பூகம்பம். நீங்கள் வெளிவந்த பிறவிப்பாதையில் கள்ளிச்செடியும் ஊமத்தம் பூக்களும். திட்டுங்க மகள்களா… திட்டுங்க… ரொம்ப சந்தோஷம்!”

“டியாரா! இந்த கிழட்டு பொம்பளை நாயை இழுத்துட்டு போங்க… ரொம்பத்தான் ஊளையிடுது!”

தேஜிஸ்வினிக்கு டியாரா சமிக்ஞை செய்தான்.

விசாலாட்சியை தேஜி அழைத்துக்கொண்டு போலீஸ் ஜீப்புக்கு நடந்தாள்.

கீர்த்தி வெளியே வந்து வாழைமரங்களையும் சாமியானாவயும் சரித்தாள். மின்பழங்களை உடைத்தாள்.

விடிய ஆரம்பித்திருந்தது.

விஷயமறிந்து அக்கம்பக்கம் குழுமி கிசுகிசுத்தது.

அவர்களை பார்த்து கீர்த்தி கூவினாள். “என்னடி வேடிக்கை? போங்கடி போய் அவஅவ அப்பன்களை பத்ரமா பாத்துக்கங்க. உங்க ஆத்தாக்காரிக சுட்ர போராள்க… ”

கூட்டம் கலைந்தது.

காவல்துறை தலைமை அலுவலகம்.

விசாலாட்சி உள்ளே அழைத்தச் செல்லப்பட்டாள். பெண் போலீஸாரிடம் கையளிக்கப்பட்டாள்.

“இந்த லேடிய தரோவா செக் பண்ணிட்டு ஸெல்ல அடைச்சு வைங்க  தற்கொலை கிற்கொலை பண்ணிக்கப் போராங்க பி கேர் ஃபுல்!”

“உலகத்துக்கு சில உண்மைகளை சொல்லாம நான் சாகமாட்டேன் டிடக்டிவ்  பொண்ணு!”

“தட்ஸ் குட்!”

விசாலாட்சி அழைத்துச் செல்லப்பட

ஒருபெண் போலீஸை தனியே அழைத்தாள் தேஜி. “விடியோ க்ளோஸ் சர்க்யூட் கேமிர மூலம் கண்காணிப்பு பலமா இருக்கட்டும்!”

“ஓகே மேடம்!”

டியாரா தளர்வாய் தேவாவிடம் “ரொம்பக் களைப்பா இருக்கு. பி.எம்.ரிப்போர்ட் வரட்டும். நான் ஈவினிங் வருகிறேன்!”

“ரைட்டோ டியாரா!”

தேஜியும் டியாராவும் மாருதி ஸென்னில் கிளம்பினர்.

லிவ் பச்சை நிற முழுக்கை பனியனும் நீலநிறத்தில் வெள்ளை பூக்கள் கொண்ட ஸார்ட்ஸும் அணிந்திருந்தாள்.

சென்ட் பூசியருந்தாள்.

பழுப்பும் சிவப்பும் கலந்த லிப்ஸ்டிக் உதடுகள்.

ரேமண்ட் காட்டன் பேகிஸ் பேன்ட்டும் ரேமண்ட் ஸ்பெஷல் ஒயிட் சர்ட்டும் உடுத்தயிருந்தான் டியாரா. நல்ல குளியலுக்கு பிறகு தர்பூசணி பழச்சாறு குடித்திருந்தான்.

 “நல்ல தூக்கமா டியாரா!”

“எஸ் உனக்கு?”

“எங்க? கனவிலயும் விசாலாட்சியம்மாதான் படுக்கைல என்னைக் கட்டிப்போட்ருக்காங்க. ஃப்ரிட்ஜ்லயிருந்து பச்ச பசேர்னு டர்னிப் காய் எடுத்துட்டு வராங்க. நெத்தில வைக்ராங்க. டர்னிப்பின் ஜில்லிப்பு நெற்றியில் ஏறுது. ‘மகளே! என்னையா துப்பறிய வந்த’ன்னு சுடுராங்க. டுஷப் மண்டை சிதறி மர்கயா ஆய்டுரேன்…”

சிரித்தான் டியாரா.

“இந்தக்கனவு நியாயமா பாத்தா எனக்குல வந்திருக்கனும் அந்தம்மாவுக்கு கொலைவெறி ஆம்பிளைங்க மேலதான்….”

“அஃப்கோர்ஸ்!”

“அது போகட்டும் கண்ணே… இன்னைக்கி என்ன சைவமா ட்ரஸ் பண்ணிட்டு வந்திருக்க… லோஹிப் தெரியல? லோகட் தெரியல… வாட் எ லைப்? வாட் எ லைப்டா டியாரா?”

“ரொம்பத்தான் அலுத்துக்காத. நாளைக்கி பாரு… கிறுகிறுத்து போவ…”

“எப்டி?”

“சஸ்பென்ஸ்!”

“ரியா ஸென் தொப்புள்ல ரிங் மாட்டிக்கிட்டு வந்தா.  நீ வேற எங்கயாவது ரிங் மாட்டிக்கிட்டு வரப் போறியா? ரெண்டு ரிங்கா, ஒரு ரிங்கா?”

“கொஞ்சம் அடக்கி வாசி டிடக்டிவ் பய்யா!” என்றாள் “புறப்படுவமா?”

“யா… யா… ” இருவரும் கிளம்பினர்.

காரை டியாரா செலுத்தினான்.

“எதுக்காக இத்னி வருஷம் கழிச்சு புருஷனை கொன்னிருப்பா விசாலாட்சி?” என்றான் டியாரா.

“தேள்கள் மாதிரி செக்ஸ் வச்சிக்கிட்டதும் ஆம்பிளைகளை பொம்பிளைங்க கடிச்சுத்தின்னரனும். எல்லா பிரச்சனையும் தீர்ந்திடும்!”

“கேனிபாலிஸம்! கொஞ்சம் தள்ளி உக்கார். தொடைய கடிச்சிர போர!”

“டியாரா! விசாலாட்சியை முழுசும் நானே விசாரிக்கிறேன். நீ இடைல குறுக்க வரக்கூடாது ஓகே?”

இருவரும் காவல்துறை கட்டடத்துக்குள் நடந்தனர்.

பரஸ்பரம் வணங்கி தேவா எதிரே டியாரா தேஜி அமர்ந்தனர்.

போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டை  நீட்டினார் தேவா.

பாயின்ட் பிளாங் ரேஞ்சில் சீனி சுடப்பட்டிருக்கிறார். தூக்கத்தில் மரணம். மூளையின் இடதுபகுதி சேதப்பட்டு உள்ளூர இரத்தக்கசிவு மரணத்துக்கு அடிப்படைக்காரணம் 0.22 காலிபர் ரக தோட்டா. மரணநேரம் நள்ளிரவு 12லிருந்து ஒண்ணுக்குள்.

வாசித்ததை தேஜியிடம் கையளித்தான் டியாரா.

“விசாலாட்சி காயத்தையும் ஆராய்ந்தோம் மருத்துவர் வைத்து. காயம் மேம்போக்கானது. தனது வலதுகையால் தன்னைத்தானே தாக்கிக் கொண்டுள்ளார். காயத்தில் திட்டமிட்ட வன்முறை இல்லை. தவிர துப்பாக்கியிலும் குளிர்சாதனப்பெட்டியிலும் ரேகை தடயங்கள் கிடைத்துள்ளன. அவை விசாலாட்சியின் ஸ்பெஸிமன் ரேகையுடன் பத்து அம்சங்கள் ஒத்துப்போகின்றன… விசாலாட்சியை முதல்வகுப்பு ஜுடிஸியல் மாஜிஸ்டிரேட்டிடம் ஒப்படைத்து ஒருவாரம் நம்ம கஸ்டடில வச்சு விசாரிக்க கேட்டம். மாஜிஸ்டிரேட் ஒத்துக்கொண்டார். விசாரணையின் துவக்கமாக மனநல மருத்துவரை வரச் சொல்லியிருக்கிறேன். முதலில் விசாலாட்சி மனநலமானவளா, மனச்சிதைவு அடைந்தவளான்னு உறுதி பண்ணிக்குவம்!”

“வெரி நைஸ் வொர்க் தேவா!”

“தாங்க்யூ டியாரா!”

வாசலில் ஒரு புதியவன் உட்பட்டான்.

-(தொடரும்…)

முந்தையபகுதி -2 | அடுத்தபகுதி- 4

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...