கொன்று விடு விசாலாட்சி… 2 | ஆர்னிகா நாசர்

 கொன்று விடு விசாலாட்சி… 2 | ஆர்னிகா நாசர்

Young woman putting off a mask of herself

                           

அத்தியாயம் – 2

தேஜிஸ்வினி பழுப்பும் சிமின்ட் நிறமும் கலந்த முழுக்கை சாட்டின் சட்டை அணிந்திருந்தாள். மேல் பட்டன் இரண்டை திறந்து விட்டிருந்தாள். கரும்பழுப்புநிற ட்ரவுசர் உடுத்தியிருந்தாள். காதில் பிரேமிட்ட முத்து ஸ்டட் ஹை ஹீல்ஸ்.

பென்டியம் ப்ராஸஸர் வாசகமும் கம்ப்யூட்டர் சிப் ஓவியமும் கொண்ட க்ளோஸ் நெக் வெள்ளை பனியனும் அதே நிற பேகிஸ் பேன்ட்டும் உடுத்தியிருந்தான் டியாரா.

ப்ரட் ஸ்லைஸ் ஒன்றன் மீது காய்கறி சாலட் பரப்பினான். அதன் மேல் பிரிட்டானியா ஸீஸ் சிங்கிள் வைத்தான். அதன்மேல் ப்ரூட் சாலட் வைத்து இன்னொரு ப்ரட் ஸ்லைஸால் மூடினான். அப்படியே சிந்தாமல் சிதறாமல் தூக்கி பாதி கடித்தான். ரசித்து தின்றான். 

“ஆ!  டெலிசியஸ்!”

வாய் கொள்ளாமல் டியாரா ராஜ்குமார் தின்பதை எரிச்சலாய் பார்த்தாள் தேஜி.

“நீ சாப்பிடுவதை பார்த்ததும் எனக்கு ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது. ஒருவரின் உணவுப்பழக்கவழக்கத்தை அவரது மனஅழுத்தம் பாதிக்கிறதாம். மனக்கவலைப்படும் சிலர் அதிகமாக மொசுக்கட்டை பூச்சி போல சாப்பிடுவார்கள். அது ஒரு வியாதி. அந்த வியாதிக்கு பெயர் புலிமீயா. சிலர் அறவே சாப்பாட்டை மனக்கவலையால் ஒதுக்குவார்கள். ஆனால் நீ… மன அழுத்தமே இல்லாத ஒரு புல் ஷிட்! நீ ஏன் இந்த அர்த்த ராத்திரியில் இப்டி மொச்மொச்னு தின்னு என் உயிரை வாங்ர?”
“நீ ஒரு டயட் மேனியாக். நான் எது வேணாலும் சாப்டுவேன். எந்த நேரமானாலும் சாப்பிடுவேன். மறுநா வெயிட் வாட்ச் பண்ணி சாப்பாட்டைக் குறைச்சு உடல் எடையை பேலன்ஸ் பண்ணிப்பேன்….”

“தொலை. எப்டியோ தொலை”

“ஓகே… கம்மிங் பேக் டு தி பாய்ன்ட்… ‘மாஸ்டர் கார்டு’னு ஒரு சயின்ஸ் பிக்சன் சுருக்கம் சொன்னேன்ல… உன்னுடைய மசாலா எதாவது இருந்தா சொல்லு… சேத்ருவம்!”

செல்ஃபோன் சிணுங்கியது.

“டியாரா ஹியர்!”

“……………………………..”

“ஓகே இதோ வரேன்!” செல்ஃபோனை அடக்கினான்.

“என்ன புதிய கொலையா?”

“ஆமா… புறப்படு!” இருவரும் மாடிப்படிகளை தபதபவென குதித்து இறங்கினர்.

மாருதிஸென்னில் கிளம்பினர்.

-அந்த பங்களாவுக்குள் எதிர்எதிர் திசையிலிருந்து தேவாவின் ஜீப்பும் டியாராவின் காரும் பிரவேசித்தன.

இறங்கினர்.

உள்ளே நடந்தனர்.

அறுபதாம் கல்யாணக்கூட்டம்.

ஜீவிதா, கீர்த்தி குழந்தைகளுடன் அழுதபடி நின்றிருந்தனர். அருகில் அவரவர் கணவன்மார். அடுத்து பிரசாந்த்.

விசாலாட்சியின் நெற்றிக்காயத்துக்கு ஒரு மருத்துவர் முதலுதவி செய்து கொண்டிருந்தார். விசாலாட்சி அழுதுகொண்டிருந்தாள்.

இரத்தக்குட்டையில் சீனிவாசனின் பிணம்.

கையில் கையுறை அணிந்துகொண்டான் டியாரா.

இடது கண்ணுக்கு மேலான நெற்றியில் தோட்டா காயம். தோட்டா பின்னந்தலையில் வெளியேறியிருந்தது.

தோட்டா துளையில் ஒழுங்கீனம்.

இரத்த சேற்றில் டர்னிப் நீர்காய் சிதறல்.

பிரேதத்தின் முகத்தை கவனித்தான். கண்கள் தூக்கமாய் தூங்கியிருந்தன. சீரான சுவாசத்தில் மூக்கு உறைந்திருந்தது. வாய் மெளனம் காத்திருந்தது. எந்த போராட்டமும் இல்லாத மரணம். தூக்கத்தில் மரணம்? இரத்தத்தின் பிசுபிசுப்பை ஆராய்ந்து விட்டு தேவாவிடம் அறிவித்தான்.

“கொலை நள்ளிரவு 12.20லிருந்து 12.50க்குள் நடந்திருக்கிறது”

தேவா தலையாட்டினார்.

“கொலை நடந்தததை யார் பார்த்தது?”

 “அம்மாதான் பாத்து கத்னாங்க. அதோ அந்த ஜன்னல் வழியாத்தான் கொலைகாரங்க அப்பாவை சுட்டுட்டு ஓடியிருக்காங்க!”

டியாரா மெதுவாக விசாலாட்சியிடம் வந்தான். பெயர் அறிந்தான்.

“அம்மா! உங்களிடம் சிலகேள்விகள் கேட்கனுமே!”

விசும்பினாள்.

“எத்ன மணிக்கு படுத்தீங்க? கணவனும் மனைவியும் ஒண்ணாவா?”

“இவர் வெளில போய்ட்டு பன்னன்டு பன்னன்டரை மணிக்குத்தான் வந்தார். சாப்பிட்டார். படுக்கப்போனார். நான் தனியறையில் தான் படுக்க இருந்தேன். பால் சாப்பிடுகிறாரா என கேட்க வந்தேன். அதோ அந்த ஜன்னல் வழியாக இரு முகமூடி கொள்ளையர்கள் பிரவேசித்தனர். நான் அவர்களை பார்த்ததும் கூச்சலிட்டேன் வந்த இருவரில் ஒருவன் துப்பாக்கியை திருப்பி என்னை தாக்கினான். அரவம் கேட்டு எனதுகணவர் எழுந்தார். தலையணைக்கு அடியிலிருந்த தனது துப்பாக்கி எடுத்து அவர்களை எனது கணவர் சுடப்போனார் கொள்ளைக்காரனில் ஒருவன் எனது கணவரின் துப்பாக்கியை தட்டிவிட்டான் அத்துடன். ஃபிரிட்ஜைத் திறந்து ஒரு டர்னிப் காயை என் கணவர் நெற்றியில் வைத்து கணவரின் துப்பாக்கியாலேயே சுட்டான். ரத்தவெள்ளத்தில் சிதறினார் எனது கணவர். ‘கிழவி சத்தம் போட்டு நாம திருடுறத கெடுத்திட்டா வாங்கடா போவம்’னு கூறியபடி ஓடிட்டாங்க!”

டியாரா சலிப்பாய் கேட்டான்.

திறந்திருந்த ஜன்னலுக்கு போனான். காலடி தடயம் தேடினான். தரைக்கும் டார்ச் அடித்தான். தேஜியை அழைத்து தோட்டப்பகுதியை ஆராயச் சொன்னான்.

“அந்த கொள்ளைக்காரங்க என்ன மொழில பேசினாங்க?”

“தெ… தெலுங்கு இ.. இல்ல ஹிந்தி!”

“என்னம்மா இது? தெலுங்குக்கும் ஹிந்திக்கும் அடிப்படை வித்தியாசம் தெரியாது உங்களுக்கு?”

“பதட்டம் சார்!”

“டர்னிப் காயை வச்சு சுட வேண்டிய அவசியம் என்ன டியாரா?” என்றார் தேவா.

“ஃப்ரிட்ஜ்ல வச்ச டர்னிப்பை ‘ஸைலன்ஸர்’ ஆக உபயோகப்படுத்தி யிருக்காங்க கொள்ளைக்காரங்க. தோட்டா சப்தம் டுமீலுக்கு பதில் டுஷப்!”

மீண்டும் டியாரா விசாலாட்சியிடம் திரும்பினான்.

“அறைக்குள்ள கொள்ளைக்காரங்களுக்கும் உங்க ரெண்டு பேருக்கும் எத்ன நிமிஷம் போராட்டம் நடந்திருக்கும்?”

“அஞ்சிலயிருந்து பத்து நிமிஷம்!”

விசாலாட்சியின் மகள்கள் மகனிடம் திரும்பினான்.

“உங்களுக்கெல்லாம் அலறல் கேட்ருச்சா? அப்பாவின் மரணஓலம் மட்டுமா? அம்மாவின் கீச்சிடல் சேர்த்தா? கொள்ளைக்காரர்களின் மிரட்டலுமா?”

ஜீவிதா தயங்க

கீர்த்தி முன்வந்தாள்.

“எங்க தாயாரின் அலறல் மட்டுமே கேட்டுச்சு!”

“அலறல் செயற்கையா இருந்ததா, இயற்கையா இருந்ததா?”

“வாட் யூ மீன் டியாரா?” சீறினாள் கீர்த்தி.

“குறுக்கிடக்கூடாது…. உன் பேரென்ன? நீ இறந்தவரின் இரண்டாவது மகளா? இவர்? அவங்க?”

“அது எங்கக்கா ஜீவிதா. ஜீவிதா கணவர் குழந்தைகள் நான் இரண்டாவது கீர்த்தி. இது என் கணவரும் குழந்தையும். இவன் எங்க தம்பி பிரசாந்த். இப்ப நீங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்ரேன். திடீர்னு நள்ளிரவுல அலறல் கேக்கும் போது அந்த அலறலை எப்படி சார் ஆராய்றது? உங்க கேள்விய பாத்தா நீங்க எங்கம்மாவ சந்தேகப்படுற  மாதிரி தெரியுது!”

“அஃப்கோர்ஸ் கீர்த்தி!” தோள்களை குலுக்கினாள் டியாரா. மீண்டும் விசாலாட்சியிடம் நடந்தான்.

“டாக்டர்! விசாலாட்சியின் நெற்றியிலுள்ள ட்ரஸிங்கை அகற்றுங்கள்!”

“ஹெவி ப்ளீடிங் இருக்கு டியாரா!”

“நான் சொல்றதை செய்ங்க!” செய்தார் காயத்தின் அளவை கணித்தான். எந்த திசையிலிருந்து தாக்குதல் நெற்றிக்கு எந்த அளவு அழுத்தத்தில் போயிருக்கும் என ஆராய்ந்தான்.

தனது இடுப்பிலிருந்த ரிவால்வரை எடுத்து பலதிசைகளிலிருந்து தானே தன்னின் நெற்றியில் தாக்கிக் கொள்வது போல பாவித்தான் டியாரா.

இருண்டு போனாள் விசாலாட்சி.

“கொள்ளையர் உங்க கணவரை அவரது துப்பாக்கியாலேயே சுட்டாங்க… சரி… அந்த துப்பாக்கி எங்க?”

“தெ… தெரியல!”

படுக்கைக்கு அடியிலிருந்து துணைஅதிகாரி துப்பாக்கியை எடுத்துக் கொடுத்தார் டியாரா துப்பாக்கியின் உலோக வாயை ஆராய்ந்தான்.  சேம்பரைத் திறந்து தோட்டாக்கள் எண்ணிக்கையை பார்வையிட்டான். மீதி ஐந்து தோட்டாக்கள். அப்படியே பொரன்ஸிக் எக்ஸ்பர்ட்டிடம் நீட்டினான். அவரும் கையுறை அணிந்திருந்தார்.

“ட்ரேஸ் தி பிங்கர் பிரிண்ட்ஸ்!”

ஆமோதித்து விலகினார் நிபுணர்.

“வந்தவங்க உங்களை மட்டும் ஏன் சுடல?”

“தெ… தெரியல!”

“அவங்ககிட்ட துப்பாக்கி இருந்தும் உங்க கணவர் துப்பாக்கியாலேயே உங்க கணவரை எதுக்கு சுடணும்!””

“தெ…தெரியல!”

“உங்களையும் சுட்டிருந்தா ஈஸியா அவங்க திருடிட்டு போயிருக்கலாமே?”

“ஆ… ஆமா!”

“உங்களை பாதுகாக்க உங்க கணவர் கொள்ளையரிடம் போராடினதா சொல்ரீங்க. ஆனா… போராட்டம் நடந்ததற்கான அலிபி இல்ல… அட்லீஸ்ட் வன்முறையை எதிர்த்த முகபாவம் கூட உங்க கணவர் முகத்ல இல்ல…. தூக்கத்ல உயிர் போன மாதிரி இருக்கு!”

திணறினாள் விசாலாட்சி.

“உங்க கணவரை எத்தனை அடி தூரத்லயிருந்து சுட்டாங்க?”

“அது… அது வந்து அஞ்சடி பத்தடி இருக்கும்!”

“சாத்தியமே இல்லை. பாயின்ட் பிளாங் ரேன்ஜ். உங்களுக்கு புரியறமாதிரி சொல்லவா? தூங்றவர் நெத்தில டர்னிப்பை வச்சு சுட்டமாதிரி தெரியுது!”

அழுதாள் விசாலாட்சி.

“எங்கம்மாவை வீணா அவதூறு பேசாதிங்க டியாரா!” ஜீவிதா கத்தினாள்.

“அவதூறு இல்ல. நான் கேக்றதெல்லாம நிஜமான நிஜம்… இன்னும் நாலஞ்சு கேள்விகள்… பதுங்கியிருக்கும் பூனை தானே வெளிவந்துவிடும்!”

தேஜிஸ்வினி திரும்பி வந்தாள்.

“ஸாரி டியாரா. தோட்டத்ல எங்கயும் புதிய புட்மார்க்ஸ் இல்லை. தரோவா அலசிட்டேன்”

டியாரா விஷமமாக சிரித்தான்.

“விசாலாட்சிம்மா… உங்களுக்கும் உங்க கணவருக்கும் இன்னைக்கோ நேத்திக்கோ எதாவது சண்டை நடந்துச்சா?”

“இல்ல?”

“கடந்த ஒரு வாரத்ல?”

“இல்ல!”

“ஒரு மாசத்ல?”

“இல்ல!”

“வாழ்க்கை பூராவுமே சண்டைதானா?”

“இல்ல இல்ல இல்ல….”

“ஆமா ஆமா ஆமா தி இஸ் எ வெல் பிளாண்டு கோல்டு பிளட்டட் மர்டர். கொள்ளையர்கள் வந்ததாக நீங்க சொன்னது பொய். உங்கள் நெற்றிக் காயம் நீங்களே ஏற்படுத்திக்கொண்டது. உங்க கணவரை சுட்டது நீங்க. நாடகமா அலறுனது நீங்க. நானும் எத்னையோ கொலைகாரர்களை கொலைகாரிகளை பாத்ருக்கேன். பட். விடிஞ்சா அறுபதாம் கல்யாணம்…. படு மங்கல நாள்…. அனைத்து தம்பதிகளும் உங்க கால்ல விழுந்து ஆசீர்வாதம் பெறப்போகும் நாள்… மகள்மக பேரன்பேத்தி சொந்தம் பந்தமெல்லாம் கூடியிருக்ற கோலாகல நாள்… இந்த நாள் பார்த்து ஏன் உங்க கணவரைச் சுட்டுக் கொன்னீங்க விசாலாட்சியம்மா?”

நொடி தாமதித்து தனக்குள் விவாதித்து தலையாட்டி சப்தமாய் அறிவித்தாள் விசாலாட்சி.

“இனி மறைக்க என்ன இருக்கு? என் கணவரை நானே கொன்றேன்!”

ஒட்டுமொத்த காட்சி அமையும் அதிர்ந்து ஸ்தம்பித்தது

(-தொடரும்…)

முந்தையபகுதி-1 | அடுத்தபகுதி- 3

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...