கொன்று விடு விசாலாட்சி – 1 | ஆர்னிகா நாசர்
(அத்தியாயம் – 1)
விடிந்தால் அறுபதாம் கல்யாணம். விசாலட்சிக்கும்3 சீனிவாசனுக்கும் திருமணமாகி 32ஆண்டுகள் முடிந்துவிட்டன.
முப்பத்திரெண்டு ஆண்டு திருமண வாழ்வில் இருமகள்கள் ஒரு மகன்.
மூத்தவள் ஜீவிதா. வயது 30 உயரம் 5’,2” மாநிறம் அம்மாவை உரித்து வைத்த தெய்வீக அழகு. ஆனால் குணத்தில் எதிர்மறை. சுயநலக்காரி. கணவன் விஜய் அமெரிக்க சாப்ட்வேர் தயாரிப்பு நிறுவனத்தில் இன்ஜினியர். வாஷிங்டன் டிஸியில் செட்டில் ஆனவர்கள். அறுபதாம் கல்யாணத்துக்காக ஏர் அமெரிக்கா விமானத்தைப் பிடித்து சென்னை வந்திருக்கிறார்கள். 5வயதில் மகன். இரண்டு வயதில் மகள்.
இரண்டாவது பெண் கீர்த்தி வயது 28. உயரம் 5’ 5”. சிவந்த ரோஜா நிறம். விளம்பரக்கம்பெனி எக்ஸிக்யூடிவ் அஜீத்தை காதல்மணம் செய்தவள். மும்பையில் செட்டில் ஆனவள். மூன்று வயதில் மகன் கணவனை முழுதும் சார்ந்திருக்காது ப்யூட்டி பார்லர் நடத்துகிறவள்.
மூன்றாவது கடைக்குட்டி மகன் பிரசாந்த் வயது 24. மகா உயரன். சிவப்பன். பிலிம் இன்ஸ்டிடியூட் படித்துவிட்டு சினிமா வாய்ப்புக்காக அலைபவன். சில படங்களில் சிற்சில வேடங்களும் பண்ணியிருக்கிறான். இடைப்பட்ட நேரங்களில் டெலி சீரியல்களில் அஸிஸ்டென்ட் டைரக்டராக பணிபுரிகிறான். ப்ளேபாய் தனம் அதிகம் பெண் நண்பிகள் எண்ணிக்கை கூறினால் படிக்கும் நீங்களே பொறாமைப்படுவீர்கள்.
விசாலாட்சிக்கு சொந்தஊர் தஞ்சாவூர். சீனிவாசனுக்கு அரியலூர் சீனிவாசன் பரம்பரை பணக்காரர். திருமணத்துக்குப் பின் பலதொழில்கள் செய்து தோற்று கிரானைட் ஏற்றுமதியில் மெஹா வெற்றி பெற்றார். பெற்றுக் கொண்டும் இருக்கிறார்.
அறுபதாம் கல்யாணத்தின் கோலாகல உற்சாகம் அனைவரையும் தொற்றியிருந்தது.
மகள்களும் மகனும் பெற்றோருக்கு பரிசுகள் வாங்கி குவித்திருந்தனர்.
மற்ற நெருங்கிய சொந்தங்களும் பல்வேறு ஊர்களிலிருந்து வந்திருந்தனர்.
இருபதுக்கும் மேற்பட்ட நண்டானும் சிண்டான்களும் பங்களாவுக்குள் விளையாடிக்களித்தன.
பங்களாவும் தோட்டத்துச் செடிகளும் மின்பழங்களை தாங்கியிருந்தன. தோட்டத்தில் சாமியானா போர்டிகோ ஒட்டி பந்தலும் வாழைமரங்களும்.
அம்மாவுக்கு நல்லியில் பத்தாயிரம் பெறுமானமுள்ள பட்டுப்புடவை வாங்கியிருந்தனர். அப்பாவுக்கு பட்டுவேட்டி பட்டு சட்டை அங்கவஸ்திரம் புதுகாலணி இதர இதர.
-அம்மாவின் அருகில் வந்து அமர்ந்தாள் கீர்த்தி.
“என்னம்மா… எங்க டாடிய காணம்?”
ஏதோ பதில் சொல்ல விழைந்தவள் நொடி தாமதித்து பதில் கூறினாள் “எப்பவும் அவருக்கு பிசினஸ்தான். வர மிட் நைட் கூடஆகும்!”
“விடிஞ்சா அறுபதாம் கல்யாணம். ஆனா உன் முகத்ல பெரிசா எந்த சந்தோஷத்தையும் காணம்?”
“கல்யாணமாகி 32வருஷமாகுது மகளே. நாளைக்கி நடக்கப்போறது ஒரு சடங்கு. அவ்வளவுதான். மகிழ்ச்சி என்றால் வானத்துக்கு குதிப்பதும் துக்கம் என்றால் பூமிக்குள் புதைவதும் எனக்கு பழக்கமில்லை மகளே!”
“போம்மா நீ எப்பவும் இப்படி விட்டேத்தியாத்தான் பேசுவ. நூறு ஜோடிகள் திருமணம் செஞ்சுக்கிட்டா அதில் பத்துபேருக்குத்தான் அறுபதாம் கல்யாணம் பண்ற வாய்ப்பே கிடைக்குது. தேர்ட்டி டூ லாங் இயர்ஸ் த பார். எனக்கு கல்யாணமாகி நாலு வருஷந்தான் ஆகுது. அதுக்குள்ள எத்ன அலுப்பு சலிப்பு புளிப்பு தெரியுமா? கடவுள்ட்ட நான் வேண்டுரதெல்லாம் கண்மூடி கண் திறக்கிறதுக்குள்ள எனக்கு வயசாகி என் புள்ளைக பெருசாகி அதுகளுக்கு கல்யாணம் பண்ணிக்குடுத்து பேரன்பேத்தி எடுத்து செத்ரனும்னுதான்”
மௌனித்தாள் விசாலாட்சி.
“இன்னும் 15வருஷத்தில உனக்கும் அப்பாவுக்கும் கல்யாணமாகி அம்பது வருஷமாகிடும். இத விட செம கிராண்டா கொண்டாடுவோம்!”
“அது வரைக்கும் நான் பொழைச்சுக்கிடந்தா சரி!”
“நல்ல கதை போ. நம்ம தலைமுறைல பொம்பளைகளுக்கு ஆயுள் அதிகம். கொள்ளுப்பாட்டி 102வருஷம் இருந்தா. பாட்டி 96. நீ ஒரு 90வரைக்கும் இருக்கமாட்ட? இருப்ப இருப்ப. உன் உடம்பு வலு எங்களுக்கு ஏது? இதோ ஒரு புள்ளை பெத்ததும எப்டி ஆய்ட்டேன் பாரு? மார்பு லோஹிப் வரைக்கும் சரிஞ்சு போச்சு. இடுப்ல சதை மடிப்புகள் அடிவயிற்றில் சந்தனகோடுகள்.”
வெறுமையாக புன்னகைத்தாள் விசாலாட்சி.
“ஏன்ம்மா… உனக்குத் தெரிஞ்சு யாராவது தம்பதிகள் நூறாவது திருமணநாளை கொண்டாடியிருக்காங்களா?”
உதடு பிதுக்கினாள் விசாலாட்சி.
“தொண்ணூறு… எம்பது ரேஞ்ச்?”
நாக்கில் அடிவரிசை பற்களை துழாவியபடி மகளின் கன்னத்தை தட்டினாள் விசாலாட்சி.
“ஸ்கூல் படிக்கும் போதுதான் தொணதொணப்ப. ஒரு புள்ளை பெத்து குடும்பி ஆனபிறகும் உன் வாய் குறையலையே…”
“அம்மாவை என்னடி சீண்டிக்கிட்டு இருக்க?” என்றபடி மூத்தவள் ஜீவிதா அம்மா அருகில் வந்தமர்ந்தாள்.
சொன்னாள் கீர்த்தி.
“உபயோகரமான கேள்விகள்தான் கேட்ருக்க. நானும் என் பங்குக்கு சில கேள்விகள் கேட்கிரேன்…”
விசாலாட்சி கீழ்உதட்டின் உட்புறத்து மெது சதையை செல்லமாய் மென்றாள்.
“அறுபதாம் கல்யாணத்து ராத்திரி மலரும் நினைவுகள் உண்டா? உன் சாந்தி முகூர்த்த அனுபவமெல்லாம் மனசுக்குள் தோன்றி கும்மியடிக்குமே!”
“ஏய் ஜீவி கழுதை… என்னவாய் ஒவரா கூடுது!”
“ச்ச. நாங்களும் கல்யாணம் ஆனவங்கதான் குட்டிகள் போட்டவங்கதான். சாந்தி முகூர்த்தத்தை பத்தி பேசுரது என்ன தப்பு? உன் அனுபவம் தெரிஞ்சா எங்களோட கம்பேர் பண்ணி பாத்துக்கலாம் பாரு!”
“எந்திரிச்சு போங்கடி!”
“நாளைக்கி நைட் இரண்டாவது முதரலிவு உண்டாம்மா?”
“விடுங்கடி!”
“நீ ரொம்ப அதிஷ்டக்காரிம்மா!”
“ஏன்?”
“உனக்கும் அமைஞ்ச புருஷன்மாதிரி உலகத்ல எந்த பொண்ணுக்கும் அமையாது. அப்பா ஒரு கனவு கணவன். நல்லதொரு ஆண்மகனுக்கு உதாரணபுருஷன். எங்களுக்கு அப்பாமாதிரி புருஷன் இல்லையேன்னு எவ்ளவு வருத்தப்பட்டுருக்கம் தெரியுமா? நெஞ்சைத் தொட்டு சொல்லனும்னா எனக்கோ கீர்த்திக்கோ பிரசாந்துக்கோ அப்பா மேலதான் ஒட்டுதல் அதிகம். நீ படிக்கச் சொல்லி கண்டிப்பு காட்டுவ. நேரம் தவறாமைல கறாரா இருப்ப. சடங்கானதும் ஆயிரம் கட்டுப்பாடு விதிச்ச. நீ எங்களுக்கு ஒரு கமாண்டா அப்பாவோ ஓர் ஆத்ம நண்பன். நான் அமெரிக்காலிருந்து ஓடி வந்தது அப்பாவுக்காக. ஹி இஸ் சச் எ கிரேட் பாதர்…”
“உண்மைதான்!” என்றாள் விசாலாட்சி.
“ஹாய் ஸிஸ்டர்ஸ்! ஹாய் மம்மி!” என்றபடி உள்ளே பிரவேசித்தான் பிரசாந்த். “என்ன அரட்டை நடக்குது இங்க? ஒன்லி லேடீஸா? என்னை சேத்துக்க மாட்டீங்களா?”
“டேய் பிரசாந்த்! போன தடவை ரொம்ப பீத்திக்கிட்ட. இன்னும் ரெண்டே வருஷத்ல நான்தான் சூப்பர் ஸ்டார் நான் சொல்ற கட்சிக்குத் தான் மக்கள் ஓட்டுபோடுவாங்க. விஜய் அமிர்தராஜ் குரூப் ஆஃப் கம்பெனிஸ் மூலம் ‘ஹாலிவுட்டையும் ஒரு கலக்கு கலக்குவேன். இந்த ஜான் ட்ரவோல்டா, மெல் கிப்ஸன், ஜீன் கிளாட் வான்டேம், நிக்கோலஸ் கேஜ் இவங்க இவங்கல்லாம் துண்டக்காணம் துணியக்காணம்னு ஓடப் போறாங்கன்னு பீத்திக்கிட்ட நீ சொல்லி மூணரை வருஷமாகுது காதலிக்க நேரமில்லை நாகேஷா நீ?”
“என்னங்கடி அவ அவ வாழ்க்கைல ஸெட்டிலாய்ட்டீங்கன்னு மப்ல பேசுரீங்களா? வருவேன்டி வருவேன். ‘ஹாலிவுட்டை பாலிவுட்டை கோலிவுட்டை ஒரு கலக்கு கலக்குவேன். கதை திரைக்கதை வசனம் நடிப்பு டைரக்ஷன் எல்லாம் நான்தான். டைட்டானிக் பாத்தீங்களா? ஜேம்ஸ் கேமரூன் தான் டைரக்டர். படமெடுக்கும்போது கேலி பண்ணி சிரிச்சான்க. இன்னைக்கி அவன் 11ஆஸ்கார் அவார்ரோட நான்தான் உலகின் ராஜா என்கிறான். நானும் ஜெயிச்சு சொல்லுவேன். ‘ஐ எம் தி எம்பரர் ஆஃப் தி வோர்ல்டு’னு”
“திமிர்ரா உனக்கு!”
“இம் ஞானச் செருக்குடி!” அம்மாவிடம் திரும்பினான். “ம்மமி! நீ சொல்லும்மா… நான் சினிமால ஜெயிப்பேனா இல்லையா?”
“கடவுள் விருப்பம் மகனே!”
“நீ தத்துவார்த்தமா பேசுவ. நம்பளுக்கு புரியாது. மம்மி! நாளைய அறுபதாம் கல்யாணத்தை மூணு விடியோ கேமிரா வச்சு ஷுட் பண்ணப் போரேன்…. ஷார்ட் பிலிமா எடிட் பண்ணி போட்டுக்காட்ரேன்… பாத்து அசந்திருவ!”
“அதெல்லாம் எதுக்குடா?”
“எங்க விருப்பங்கள்ல தலையிடாதே!” ஏதோ பாடியபடி தனது அறைக்கு போனான் பிரசாந்த்.
கணவன் அழைக்க ஜீவிதா எழுந்து போனாள்.
குழந்தை அழ கீர்த்தி விலகினாள்.
டெலிஃபோன் சிணுங்கியது எதிர்முனை பேசியது பல நிமிடங்கள் மௌனமாய் கேட்டாள் விசாலாட்சி.
ரிசீவரை வைத்தவள் முகம் இருண்டிருந்தது.
சுவர் கடிகாரம் நள்ளிரவு 12 என அடித்து ஓய்ந்தது.
நாளைய விசேஷத்துக்கு வந்திருந்தோர் அனைவரும் தூங்கியிருந்தனர்.
விசாலாட்சி மட்டும் தூங்காது கணவனுக்காக காத்திருந்தாள்.
சுவரில் ஒரு ராட்சத பல்லி.
பல்லியின் வயிறு ட்ரான்ஸ்பரன்டாக தெரிந்தது. அந்த வயிற்று உண்டியலில் ஏராளமான பூச்சிகாசுகள்.
இப்போது பல்லி புதிய இரையைக் கண்டு விட்டது.
சிலந்தி!
சிலந்தியை துரத்தியது பல்லி சட்டென்று சிலந்தியை பல்லி கவ்வியது. சிலந்தியின் எட்டுக்கால்களும் பல்லியின் வாய்க்கு வெளியே துடித்தன. சிறிது சிறிதாக பல்லி சிலந்தியை விழுங்கியது. விழுங்கும் போது சிலந்தியின் கால்கள் ஒடிந்து விழுந்தன. சிலந்தியை முழுக்க விழுங்கிய பல்லி விளக்கின் மறைவில் ஓய்வெடுத்தது.
மணி 12 30 18.
கார் கதவை சாத்தியபடி உட்பட்டார் சீனிவாசன்.
நடையில் தள்ளாட்டம் இருப்பது போலொரு பிரமை.
எழுந்தாள் விசாலாட்சி.
“நா போன்ல சொன்னதை கேட்டாவா? இம் நல்லது. சாப்பாடு எங்கே?”
பரிமாறினாள்.
சாப்பிட்டுவிட்டு இரவாடைக்கு மாறி தூங்கப்போனார் சீனிவாசன்.
அப்பாவும் அம்மாவும் பேசி அப்பா சாப்பிட்டு தூங்கச் செல்வதை ஆடியோ இல்லாத லாங்ஷாட்டில் கண்டாள் ஜீவிதா.
அம்மாவும் அப்பாவின் அறைக்குள் போக விளக்கு ஆஃப் ஆனது.
அரைமணி நேரம் கழிந்திருக்கும்.
பங்களாவே நொறுங்கும் குரலில் அம்மா கிரீச்சிட்டாள். “கொலை!”
அனைவரும் ஓடிவர–
அப்பா சீனிவாசன் இரத்தவெள்ளத்தில் பிணமாய் கிடந்தார். தலைக்காயம் அருகே ஒரு சிதறிய டர்னிப்.
அம்மா விசாலாட்சியின் மண்டை உடைந்து இரத்தம் கொட்டியது “கொ… கொ… கொலைகாரங்க கொ… கொன்னுட்டு எ…எ… என்னை அ… அடிச்சிட்டு இ… இப்டித்தான் குதிச்சு ஓ…. ஓடுராங்க!” திறந்திருந்த ஜன்னலை சுட்டினாள்!
-( நடந்தது.? நாளை…)
3 Comments
ஆரம்பமே அசத்தல்… முதலிலேயே திகிலை கூட்டி விட்டாரே….
அருமையான ஆரம்பம்
Summa starting