பொத்தினாற்போல மனைவியே தான் வேண்டுமா? குட்நைட் பட அலப்பறை…!
அறிமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் “ஜெய்பீம்” புகழ் மணிகண்டன், முதலும் நீயே முடிவும் நீயே நாயகி மீதா ரகுநாத், ரமேஷ் திலக், ரேச்சல் ரெபேக்கா, பாலாஜி சக்திவேல் என பலர் நடித்திருக்கும் நகைச்சுவை குடும்பத் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் மற்றும் யுவராஜ் கணேசன் இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
குட் நைட் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் பரத் விக்ரமன் எடிட்டிங் செய்துள்ளார். குட் நைட் திரைப்படம் 2023 மே 12ல் திரையரங்கில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று தந்தது.
தற்போது ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது.
குறட்டையை மையமாக வைத்து அழகான, உணர்வுபூர்வமான ‘ஃபீல்குட்’ படம் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன். குறட்டைதான் மையம் என்றாலும் அதைச் சுற்றி நாயகனின் எளிமையான குடும்ப பிண்ணனி, நாயகிக்கு அழகான காதல் காட்சிகள், திருமண வாழ்வில் ஏற்படும் இயல்பான பிரச்சினைகள் , குழந்தை பிறப்பு குறித்த கேள்விகள் என திரைக்கதையை ரசிக்கும்படியாக நகர்த்திச் சென்றிருக்கிறார்.
குறட்டை குறித்த அது சார்ந்து எழும் தீராத ப்ரச்சனையை நகைச்சுவை என்கிற போர்வை போர்த்தி பக்குவமாக கதையை நகர்த்தியுள்ளார் இயக்குனர். அதற்காக அவரை பாராட்டலாம்.
குட்நைட் திரைப்படம் நல்ல ஒரு அழகான குடும்ப படத்தை பார்த்த திருப்தியை கொடுத்தாலும் சில அடிப்படை நெருடல்கள் வருவதை தவி்ர்க்க முடியவில்லை.
மணிகண்டன் முதலில் தனது சக அலுவலக தோழி ஒருவரை காதலிப்பார். ஒரு நாள் பஸ்ஸில் தன்னை மறந்து குறட்டை விட்டு தூங்கும் அவரை அந்த காதலி பார்த்து விடுவார். அந்த பெண்ணை தூங்க விடாமல் எழுப்பி விடும் அந்த குறட்டை சத்தம்.
மறுநாள் தனது காதலை கூறும் மணிகண்டனிடம் தெளிவாக பேசுகிறார் அந்த பெண். ஒரே ஒரு நாள் பஸ்ஸில் உன்னோடு ட்ராவல் பண்றதே எனக்கு இவ்வளவு கஷ்டமா தெரியுது. உன் கூட எப்படி வாழ்நாள் முழுக்க ட்ராவல் பண்றது என கேட்பார். மிக நியாயமான கேள்வி தானே அது. ஒரு பெண் என்பவள் எப்போதுமே எதையாவது தியாகம் செய்தே ஆக வேண்டுமா? அதுவும் முன்னே பின்னே தெரியாத ஒருவருக்காக .. அவளை வில்லியாகவோ திமிர் பிடித்தவளாகவோ நினைப்பது நமது பொது புத்தியில் பதிந்து கிடக்கிறது.
அடுத்து மனைவியாக வரும் மீத்தா தான் என்ன நினைக்கிறார் என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது என எதையுமே உணர்த்தாத ஒரு அமைதியே உருவான மனைவி. தனக்கு குறட்டையால் உடல் மற்றும் மன நல ப்ரச்சனைகள் எழும் போதும் கணவனே கண் கண்ட தெய்வம் என பொறுத்து போகிறார். காதலுடன் அந்த குறட்டை சத்தத்தை டேப் செய்து இரவில் ஹெட் போனில் போட்டு கேட்டபடி தூங்குகிறார். அட டா என்ன அருமையான மனைவி இவர் என பலர் சிலாகித்து போகிறார்கள்.
இதுவும் போதாமல் ஆண்கள் தங்களுக்கு அனு (மீத்தா) போல் ஒரு பெண் தேவை என சமூக வலைதளங்களில் கேட்டு வருகிறார்கள்.
பெண் என்பவள் எப்போதும் எதையும் பொறுத்து போகும் பொறுமைசாலியாக தனது குடும்பத்திற்காக எதையும் தியாகம் செய்யும் தியாகியாக இருந்தே ஆக வேண்டும் என அரிய கருத்தினை சொல்லாமல் சொல்கிறாரா இயக்குனர்.
மணிகண்டனின் அம்மாவாக வருபவர் தன் மகளுக்கு குழந்தை பிறக்கவில்லை என அவர் மாமியார் கேட்பதை தவறென்று புலம்பி அழுவார். தன் மருமகள் வீட்டிற்கு வரும் போது என்னம்மா ஏதும் விஷேஷம் எதுமில்லையா என சாமர்த்தியமாக கேள்விகளை மாற்றி மாற்றி போட்டு சங்கடத்தை ஏற்படுத்துவார். இதுவும் அதே நெருடல் தான். அம்மாவாக ஒரு ஆதங்கம்.. மாமியாராக வேறு ஆதங்கம்…!
பெண்கள் தற்போது படிப்பு ,அறிவு , புத்திசாலித்தனம், எதையும் பகுத்து அறியும் தெளிவு என கைவர பெற்றவர்களாக மாறிவரும் காலகட்டத்தில் , ஆண் பிள்ளைக்கு இப்படி “பொத்துனாப்ல ஒரு மனைவி வருவா” என நினைக்க வைப்பதே ஆக நெருடலாக தோன்றவில்லையா?