என் சினிமாவெல்லாம் இனிமேல் ஓடுமா
என் கேரியரை காலி பண்ணதே நீதான்!.. பாரதிராஜாவை மேடையிலேயே திட்டிய எம்.ஜி.ஆர்
50,60களில் நாடகத்திலிருந்து சினிமா தோன்றியதாலோ என்னவோ பெரும்பாலான படங்கள் நாடகம் பார்ப்பது போலவே இருக்கும். தமிழ் சினிமாவில் கோலோச்சிய சிவாஜி, நம்பியார், நாகேஷ், பாலையா, எம்.ஆர்.ராதா, விகே ராமசாமி,எஸ்.எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்ட பல நடிகர்களில் நாடகங்களிலிருந்து வந்ததால் அதே நடிப்பைத்தான் சினிமாவிலும் கொடுத்தனர். எம்.ஜி.ஆர் மட்டும் கொஞ்சம் வேறுமாதிரி நடித்தார். ஆனால், அது எல்லாவற்றையும் விட 70 முதல் 80 வரை அந்த பல படங்கள் நாடகத்தன்மை கொண்ட படங்களாகவே இருந்தது.
100 சதவீத படப்பிடிப்புகள் ஸ்டுடியோவில் மட்டுமே எடுக்கப்படும். ஒரு வீடு, தெரு, பாடல் காட்சிக்கு ஒரு அரங்கம் என மொத்த படத்தையும் ஸ்டுடியோவில் எடுத்து முடித்துவிடுவார்கள். பாலச்சந்தர் படங்களே இதற்கு பொருத்தமான சாட்சி. ஆனால், பாரதிராஜா எனும் ஒரு இயக்குனர் வந்த பின்னர்தான் சினிமா வாய்க்கால், வரப்பில் ஓடியது. வயலையும் வரப்பையும், சாதாரண மனிதர்களையும், மண் வாசனையையும், மனிதர்கள் வசிக்கும் வீட்டையும், சாதாரணமாக மனிதர்கள் பேசும் மொழியையும், அவர்களின் வாழ்க்கையையும் அவர்தான் திரையில் காட்டினார். இது ரசிகர்களுக்கு புது அனுபவமாக இருந்தது.
கேமராவை தூக்கி கொண்டு கரட்டு மேட்டில் ஓடியவர் பாரதிராஜா. அதனால்தான் அவரின் படங்களில் ரசிகர்களால் ஒன்ற முடிந்தது. அவர் முதலில் இயக்கிய பதினாறு வயதினிலே திரைப்படத்தின் வெற்றி தமிழ் சினிமாவை புரட்டி போட்டது. ஏனெனில், ஹீரோ என்றால் சுருள் முடி வைத்திருக்க வேண்டும், கதாநாயகி இப்படித்தான் இருக்க வேண்டும். வில்லன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என வழக்கமான சினிமாவில் பல வருடங்களாய் இருந்த இலக்கணத்தை பாரதிராஜா உடைத்திருந்தார். அசிங்கமான தோற்றத்தில் சப்பானி கமலையும், பரட்டை தலை வில்லனாக ரஜினியையும் காட்டியிருந்தார். ரசிகர்களுக்கும் அது பிடித்திருந்தது.
பதினாறு வயதினிலே படத்திற்கு அவர் பாரதிராஜா இயக்கிய திரைப்படம் கிழக்கே போகும் ரயில். அப்படத்தில் ஒரு சூது, வாது தெரியாத ஒரு கிராமத்து பெண்ணின் காதலை காட்டியிருப்பார். இந்த படமும் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த இரண்டு படங்களின் மெகா வெற்றியும் எம்.ஜி.ஆரையே யோசிக்க வைத்தது. அந்த இரண்டு படங்களையும் அவர் பார்த்திருந்தார்.
அலைகள் ஓய்வதில்லை வெற்றிவிழாவில் பேசிய எம்.ஜி.ஆர் பாரதிராஜாவை பார்த்து ‘நீ வந்த பின்னர்தான் என் சினிமாவெல்லாம் இனிமேல் ஓடுமா என்கிற பயத்தையே எனக்கு ஏற்படுத்தியது. இனிமேல் நாங்கள் எடுக்கும் படங்களை மக்கள் ரசிக்க மாட்டார்கள். நீ எல்லாவற்றையும் மாற்றிவிட்டாய். ரசிகர்களுக்கு புது மாதிரியான அனுபவத்தை நீ கொடுத்துவிட்டாய். மக்களின் ரசனையும் மாறிவிட்டது’ என பேசி பாரதிராஜாவை பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.