படம் எப்படி இருக்கு..?  டிடி ரிட்டர்ன்ஸ் விமர்சனம்..!

 படம் எப்படி இருக்கு..?  டிடி ரிட்டர்ன்ஸ் விமர்சனம்..!

புதுச்சேரியில் தாதாவாக இருக்கும் அன்பரசுக்கு (பெப்சி விஜயன்) ரூ. 25 லட்சம் கொடுக்க வேண்டிய இக்கட்டில் இருக்கிறார் சதீஷின் (சந்தானம்) காதலி சோபியா (சுரபி). அந்தப் பணத்தை சதீஷ் திரட்டிக் கொடுக்கிறார். ஆனால், அது அன்பரசுவிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்டப் பணத்தின் ஒருபகுதி. ‘என் பணத்தைத் திருடி எனக்கே கொடுக்கிறாயா?’ என்று சதீஷையும் அவர் கூட்டாளிகளையும் துரத்துகிறார் அன்பரசு. தப்பிக்க ஓடும் அவர்கள், பாழடைந்த நிலையில் பூட்டப்பட்டிருக்கும் ஒரு பிரெஞ்சுக்காரர் பங்களாவுக்குள் நுழைகிறார்கள். அங்கே அவர்கள் சந்திக்கும் பேய்களும் அவற்றுடன் சதீஷ் கூட்டணியும் அவர்களைத் தேடி வந்து சிக்கும் ஆட்களும் ஆடும் ஆட்டம்தான் கதை.
இதய பலவீனம் கொண்டவர்கள், குழந்தைகள், பெண்கள் பார்க்கக் கூடாது என்றெல்லாம் பயமுறுத்திய பேய் படங்கள் வந்தது ஒரு காலம். தற்போது பேய்களுடன் காமெடி செய்து, அவற்றைக் கலாய்த்துக் கலகலப்பூட்டுவது தற்போதைய ஹாரர் படங்களின் ட்ரெண்ட். அச்சு அசலாக அப்படியொரு ‘மரண’ கலாய் கதைக் களத்தைத் தேர்வு செய்துகொண்டு, மனிதர்களும் பேய்களும் சந்திக்கும் தருணங்களை அங்கம் (slapstick) மற்றும் அங்கத நகைச்சுவையின் வழியே கலகலப்பான கொண்டாட்டமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் எஸ்.பிரேம் ஆனந்த்.

குறிப்பாக சதீஷாக வரும் சந்தானம் தனது ஒன்லைனர் ‘பன்ச்’களின் வழியாக சக கதாபாத்திரங்களை உள்ளீட்டு அர்த்தத்துடன் செய்யும் அங்கதக் கலாய்ப்புகள் திரையரங்கில் பெரும் சிரிப்பலைகளை உருவாக்குகின்றன. அதில், டாஸ்மாக்கில் எக்ஸ்ட்ரா வசூல் பற்றி அடிக்கும் ‘பன்ச்’ டாபிக்கல். எப்பேர்ப்பட்ட வில்லனையும் தனது ‘கலாய்’ வழியாக காலி செய்துவிடும் சந்தானத்திடம் இந்தப் படத்தில் வசமாகச் சிக்கி நம்மைச் சிரிக்க வைக்கிறார் பெப்சி விஜயன். வில்லன் பேயையும் அவர் விட்டு வைக்கவில்லை. நாயகி சுரபி, பார்க்க அழகாகவும் நடிப்பில் சுட்டியாகவும் இருந்தாலும் அவருக்கான காட்சிகள் குறைவுதான். என்றாலும் துணைக் கதாபாத்திரங்களைத் திரைக்கதைக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவுக்கு மட்டுமே பயன்படுத்திக்கொண்டிருப்பது நச்!

சந்தானத்தின் நண்பர்களாக வருபவர்களில் ‘லொள்ளு சபா’ மாறன், மற்றொரு திருடர் குழுவின் தலைவராக வரும் மொட்டை ராஜேந்திரன், அவர் சீடர்களில் ஒருவரான ‘பழைய ஜோக்’ தங்கதுரை, அன்பரசுவின் மகனாக வரும் கிங்ஸ்லி, அவர் அடியாளாக வரும் தீனா, முனீஷ் காந்த் ஆகியோர் நகைச்சுவையில் வெளுத்து வாங்குகிறார்கள். பேய்களாக வந்து அமளி செய்யும் பிரதீப் ராவத், மசூம் சர்க்கார், ரீட்டா ஆகியோரின் பங்களிப்பு அட்டகாசம்.

தொடக்கம் முதல் இறுதி வரை பரபரவென நகரும் திரைக்கதை, பேய் பங்களா அறைகளையும் அந்தக் ‘காற்று உறிஞ்சும்’ இயந்திரத்தையும் திகைப்பூட்டும் வகையில் வடிவமைத்த ஏ.ஆர்.மோகனின் கலை இயக்கம், ஆர்.ஹரிஹர சுதன் நம்பகத் தோற்றத்துடன் உருவாக்கிய வி.எஃப்.எக்ஸ் காட்சிகள், எடிட்டர் என்.பி.காந்தின் விறுவிறுப்பான படத்தொகுப்பு ஆகிய அம்சங்கள், படத்தின் பொழுதுபோக்குச் சுவையை முழுமையாகப் பரிமாறக் கைகொடுத்திருக்கின்றன. சில உருவக் கேலி வசனங்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ கலகலப்பை கேரண்டியாக அள்ளித் தருகிறது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...