எனக்கொரு காதலி இருக்கின்றாள் – 1 | ஆர்.சுமதி
அத்தியாயம் – 1
குமணன் காலை நேர நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சியை முடித்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தபோது அம்மாவின் அலைபேசி ஒலித்துக் கொண்டிருந்தது. அந்த ஒலியோடு சேர்ந்திசை எழுப்பியது பூஜையறையிலிருந்து வந்த மணியொலி.
அந்த மணியொலி நிற்க நீண்ட நேரம் பிடிக்கும். அம்மா வந்து எடுப்பதற்குள் அலைபேசி ஒலியும் நின்றுவிடும் என்று நினைத்தவனாய் தொலைக்காட்சிக்கு அருகேயிருந்த மேசைமீதிருந்த அலைபேசியை எடுத்தான்.
முத்துலெட்சுமி. அம்மாவின் சினேகிதி. சோபாவில் அமர்ந்தவாறே பேசினான்.
“ஹலோ ஆன்ட்டி குட்மார்னிங்”
“குட்மார்னிங். எப்படியிருக்கே?”
“நல்லாயிருக்கேன் ஆன்ட்டி.நீங்க எப்படியிருக்கீங்க?”
“நல்லாயிருக்கேன்டா கண்ணா. அம்மா எங்கே?”
“அம்மா..முக்கியமான மீட்டிங்ல இருக்காங்க.”
“என்ன நீ? அம்மாவையும் உன் கம்பெனியோட போர்டு மீட்டிங் மெம்பராக்கிட்டியா? அப்படியே இருந்தாலும் இவ்வளவு காலையிலேவா மீட்டிங்கெல்லாம் ஏற்பாடு பண்ணுவே?”
குமணன் சிரித்தான். “ஆன்ட்டி அம்மா பூஜையறையில இருக்காங்க. மாட்டி வச்சிருக்கற அத்தனை கடவுள்களோடயும் பேசி முடிச்சு ஏகப்பட்ட கோரிக்கைகளையெல்லாம் டிஸ்கஸ் பண்ணிட்டுத்தான் வருவாங்க.”
எதிர்முனையில் சிரித்தாள் முத்துலெட்சுமி.
“ஏகப்பட்ட கோரிக்கையெல்லாம் எதுவும் இல்லைப்பா அவளுக்கு. ஒரே ஒரு கோரிக்கைத்தான். அதுவும் உன்னைப் பத்தித்தான்.”
“என்னைப் பத்தியா? எனக்கென்ன?”
“ஒண்டியா சுத்தறியே அதுக்குத்தான். ஒருத்தியை கட்டி வச்சுட்டா அவ கடமை முடிஞ்சுடும் இல்லையா?”
“எனக்கென்னமோ எனக்கு ஒருத்தியை கட்டிவைக்கிற மாதிரி தெரியலை ரெண்டு பேரை கட்டிவச்சுடுவாங்களோன்னு பயமாயிருக்கு”
“ஐய்யய்யோ…என்னப்பா சொல்றே?”
“பின்ன என்ன ஆன்ட்டி? ரெண்டு பொண்டாட்டி உள்ள சாமியாவே கும்பிடறாங்க. முருகன், கிருஷ்ணன், சிவன்..இப்படி…”
முத்துலெட்சுமி முத்துக்களை குலுக்குவதைப்போல் சிரித்தாள். அதே நேரம் பூஜையறையிலிருந்து அம்சவேணி வந்தாள்.
பருத்த சரீரம். கருத்த கேசத்தில் வெளுத்த முடிகள் இடையூறு ஏற்படுத்தி இன்னும் சில வருடங்களில் மொத்தமாக வெள்ளைப் பெயிண்ட் அடித்துவிடுவேன் என கேலி செய்துக் கொண்டிருந்தது.
“யாருப்பா ஃபோன்ல?” கேட்டபடியே அருகே வந்தாள்.
“முத்துலெட்சுமி ஆன்ட்டி.” சொன்னவாறே அலைபேசியை அவளுடைய கையில் கொடுத்து விட்டு எழுந்து குளியலறை நோக்கிப் போனான்.
“சொல்லு முத்து எப்படி இருக்கே?”
“ம்…நல்லாயிருக்கேன். என்ன பூஜையெல்லாம் முடிஞ்சுதா?”
“ம்…முடிஞ்சது. நானே ஃபோன் பண்ணனும்னு இருந்தேன். நீயே ஃபோன் பண்ணிட்டே. உன் பொண்ணை பார்க்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர்றாங்கன்னு சொன்னியே. வந்தாங்களா? பார்த்தாங்களா? பிடிச்சிருந்ததா? என்ன சொன்னாங்க?”
“ம்…அவங்களுக்கு பிடிச்சிருக்கு. நாங்க போய் பார்த்துட்டு நிச்சயத்துக்கு நாள் குறிக்க வேண்டியதுதான்.”
“ம்…உன் கடமையெல்லாம் முடிஞ்சுட்டமாதிரி தான். பையனுக்கும் கல்யாணம் பண்ணிட்ட. பொண்ணுக்கும் கல்யாணம் கூடிவந்துட்டு. இவனுக்குத்தான் எதுவுமே சரியா அமைய மாட்டேங்குது. அதான் எனக்கு கவலையா இருக்கு.”
“அது சம்பந்தமா பேசத்தான் நான் உனக்கு ஃபோன் பண்ணினேன். நீ காலை டிபனை முடிசுட்டு கிளம்பி என் வீட்டுக்கு வாயேன். நாமும் சந்திச்சு பேசி எவ்வளவு நாளாகுது. உன்கிட்ட நிறைய பேசனும். “
“எனக்கும் உன்னைப் பார்க்கனும் பேசனும்னு ஆசைதான். எங்கே நேரம் கிடைக்குது. மதியம் சமைக்கனும்”
“ஏன்…என் வீட்ல உனக்கு சோறு போட மாட்டேனா?”
“ஒரு மணிக்கெல்லாம் டாண்ணு குமணனோட ஆஃபிஸ் ப்யூன் வந்து நிப்பான். குமணனுக்கு சாப்பாடு கொடுத்து அனுப்பனும். சமைக்க வேண்டாம?”
“அவனை நேரா என் வீட்டுக்கு அனுப்ப சொல்லு. இங்கிருந்து கேரியர் கொடுத்து அனுப்பிடலாம்”
“சரிபார்க்கிறேன்.”
“பார்க்கிறேன்னு சாய்ச்சாப்ல சொல்லக் கூடாது. நீ வர்றே. நான் வெயிட் பண்றேன்”
முத்துலெட்சுமி ஃபோனை வைத்துவிட்டாள்.
குமணன் குளித்துவிட்டு வருவதற்குள் தயாராக அவனுக்கு சிற்றுண்டியை எடுத்து வைத்துக்கொண்டிருந்தாள்.
உடை மாற்றிக்கொண்டு வந்து அமர்ந்தவன் சுட சுட இருந்த இட்லியை சட்னியில் தோய்த்து ருசித்தவாறு கேட்டான்.
“ஆன்ட்டி எதுக்கு ஃபோன் பண்ணியிருந்தாங்க?”
“அவ பொண்ணை மாப்பிள்ளை வீட்லயிருந்து வந்து பார்த்துட்டுப் போனாங்கள்ல அதைப் பத்தி சொல்லிட்டிருந்தா.”
“என்ன பொண்ணு புடிச்சிருக்காமா?”
“புடிச்சிருக்காம். இவங்க ஒரு எட்டு போய் மாப்பிள்ளை வீட்டைப் பார்த்துட்டு வந்துட்டாங்கன்னா முடிச்சிட வேண்டியதுதானாம். உனக்கும் அவ வழியில பொண்ணு இருந்தா பார்க்க சொல்லியிருந்தேன். அது சம்பந்தமா பேசலாம் வான்னு கூப்பிட்டா. மதியான சாப்பாட்டுக்கு வந்திடுன்னா. நானும் அவளைப் பார்த்து ரொம்ப நாளாகுது. போய்ட்டு வரலாம்னு நினைக்கிறேன்.”
“ம்”
“உன் ப்யூனை அவ வீட்டுக்கு வர சொல்றா. அங்கயிருந்து மதியசாப்பாடு அனுப்பறதா சொல்றா.”
“அதெல்லாம் ஒண்ணும் தேவையில்லை. இன்னைக்கு ஒரு நாளாவது நான் ஹோட்டல்ல நல்லா சாப்பிடறேன்.”
“அடப்பாவி. அப்படின்னா இத்தனை நாளும் நான் சமைச்சுப் போட்டதெல்லாம்…?”
“நீ சமைச்சியா? வேலைக்காரி சமைக்கறதை நீ பரிமாறுறே.”
“அடப்பாவி. எப்படி எப்படி சமைக்கனும்னு நான் டைரக்ட் பண்றமாதிரிதனே அவ சமைக்கிறா.”
“இப்படி டைரக்ட் பண்றதோட நீயே சமைச்சுடலாம். உடையவர் பாராத வேலை ஒரு முழம் கட்டை.”
உண்மைதான். என்னால முடிஞ்சா நன் ஏன்டா சமையல்காரி வைக்கறேன்? இன்னும் எத்தனை நாளைக்கு?” சீக்கிரமா பொண்ணு கிடைச்சுட்டா கல்யாணம்தான். அவ வந்து உனக்கு ருசியா சமைச்சுப் போடப்போறா.”
“ம்…அது எந்த லெட்சணத்துல இருக்கப்போகுதோ” என்றபடி சாப்பிட்டு முடித்தான்.
அலுவலகம் போகும்போது “அம்மா நான் ஆஃபிஸ் போய்ட்டு காரை அனுப்பறேன். நீ ஆன்ட்டி வீட்டுக்குப் போ” சொல்லிவிட்டுப் போய்விட்டன்.
உள்ளே வந்த அம்சவேணி முத்துலெட்சுமியின் வீட்டிற்கு கிளம்ப தயாரானாள்.
அம்சவேணி முத்துலெட்சுமியின் வீட்டிற்கு வந்தபோது முத்துலெட்சுமி தன் பேத்தியை மடியில் வைத்துக் கொண்டு எழுத பழக்கிக் கொண்டிருந்தாள்.
“வா..வா..அம்சா” என வரவேற்றாள்.
“அட…என்ன பாப்புவுக்கு இன்னைக்கு ஸ்கூல் இல்லையா?”
“ஆமா…ஏதோ லோக்கல் ஹாலிடேவாம். உட்காரு அம்சா” எதிர் சோபாவைக் காட்டினாள்.
உட்கார்ந்த அம்சவேணி பாப்புவை அழைத்து தன் மடியில் இருத்திக்கொண்டு அவளுடைய கேசத்தை ஆசையாக நீவினாள்.
“பாப்பு இப்ப எப்படி படிக்கிறா முத்து?”
“ம்;;….முன்னைக்கு இப்ப பல மடங்கு பெட்டர்.”
“அப்படியா வெரிகுட்…வெரிகுட்.. நீ சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சுட்டியா?” முத்துலெட்சுமி புரட்டிக் கேட் திறக்கு
“ம்கும்… நான் சொல்லிக் கொடுத்தா இவ படிச்சுடுவாளா? அந்த அளவுக்கு எனக்கேது பொறுமை? புதுசா ஒரு டீச்சரை அவ அம்மா ஏற்பாடு பண்ணியிருக்கா. இவ படிக்கிற ஸ்கூல்லதான் அந்த டீச்சர் வேலைப் பார்க்கறா.”
“என்ன டீச்சரைப் போய் அவ இவங்கறே?”
“அவ ஒண்ணும் உன்னையும் என்னையும் மாதிரி கிழவி இல்லை. சின்ன பொண்ணு இப்ப வருவா பாரு…” முத்துலெட்சுமி சொன்ன அதே நிமிடம் வாசல் கேட்டைத் திறக்கும் சத்தம் கேட்டது. சில நிமிடங்களில் அவள் உள்ளே வந்தாள். “வணக்கம்மா” என்று முத்துலெட்சுமியைப் பார்த்து வணங்கியவள் அம்சவேணியையும் பார்த்து வணக்கம் தெரிவித்தாள்.
அவளைப் பார்த்த அம்சவேணியின் மனதில் இனம் புரியாத சிலிர்ப்பு உண்டானது.
(எதிர்பார்ப்புகள் தொடரும்…)
2 Comments
சிறப்பான ஆரம்பம். எதிர்பார்க்க வைக்கும் கதையோட்டம். எளிமையான நடையோட்டம். வாழ்த்துகள்
அழகான ஆரம்பம், சூப்பர் வாழ்த்துக்கள்