சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்/மாஞ்சோலை எஸ்டேட்..

 சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்/மாஞ்சோலை எஸ்டேட்..

மாஞ்சோலை எஸ்டேட்.. ஆர்டியில் அம்பலமான உண்மை.. சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்

திருநெல்வேலி மாவட்டம் அம்பை மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலைக்கு அரசு பஸ்ஸில் சுற்றுலா பயணிகள் செல்ல எந்த தடையும் இல்லை என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் போக்குவரத்துக் கழகம் கூறியுள்ளது. எனவே இனி அரசு பேருந்தில் சென்று தாராளமாக பொதுமக்கள் மாஞ்சோலை எஸ்டேட்டை சுற்றி பார்க்க சென்று வரலாம்.

திருநெல்வேலியில் இருந்து கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு அணை, மணிமுத்தாறு அருவி வழியாக, குறுகலான மலைப்பாதையின் வழியாக சுமார் 3 மணி நேரம் பயணித்தால் மாஞ்சோலை எஸ்டேட் வந்துவிடும். 3500 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த பகுதி சுற்றுலாதளம் அல்ல என்றாலும் சுற்றுலா பயணிகள் சென்றுவர தடையில்லை

தற்போது மாஞ்சோலை, ஊத்து, நாலு முக்கு, காக்காச்சி ஆகிய தேயிலை தோட்ட பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆனால் இந்த அரசு பஸ்களில் சுற்றுலா பயணிகள் மற்றும் தொழிலாளர்களின் உறவினர்கள் செல்ல வனத்துறையினர் அனுமதி மறுத்து வருகின்றனர்.

கடந்த மே மாதம் 26 -ந் தேதி மாஞ்சோலைக்கு அரசு பஸ்சில் சென்ற பயணிகளை மணிமுத்தாறு வனச்சோதனை சாவடியில் வனத்துறையினர் இறக்கி விட்டார்கள். இது பெரும் சர்ச்சையானது. இந்நிலையில் மாஞ்சோலை, நாலுமுக்கு தேயிலை தோட்ட பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் ராபர்ட் சந்திரகுமார் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அரசு பேருந்துகளில் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறதா, வனத்துறையினர் வாகனம் மூலம் எவ்வளவு வருமானம் கிடைக்கின்றது என சுமார் 32 கேள்விகள் கேட்டிருந்தார்.இந்த கேள்விகளுக்கு வனத்துறை சார்பில் முறையான மழுப்பலான பதில்கள் தந்ததாக கூறப்படுகிறது

மேலும் இதேபோல் போக்குவரத்து கழகத்திற்கு அனுப்பிய தகவல் அறியும் உரிமை சட்ட பதில் மனுவில், போக்குவரத்து கழகம் சார்பாக தெரிவிக்கையில், நெல்லை மண்டலத்தில் இருந்து மாஞ்சோலைக்கு அரசு பஸ்சில் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி ஏதும் மறுக்கப்படவில்லை. மேலும் மணிமுத்தாறு சோதனை சாவடியில் பயணிகள் யாரும் கட்டாயப்படுத்தி இறக்கப்படுவதில்லை என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இனிமேல் அம்பை வனச் சரகத்தில் உள்ள அதிகாரிகள் சுற்றுலா பயணிகள் அரசு பேருந்துகளில் செல்ல தடை விதிக்க கூடாது என்றும் அப்படி இறக்கிவிட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் வலியுறுத்தி உள்ளனர். மாஞ்சோலையில் என்ன இருக்கிறது? காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரை வெட்டி, கோதையாறு (மேல் அணை) போன்ற இடங்களில் தேயிலைத் தோட்டங்கள், பசுமை மாறாக் காடுகள் காணப்படுகின்றன. இங்கு இதமான காலநிலை நிலவும். மேகமலையை போல் தேயிலை தோட்டங்கள் உள்ள பகுதியாகும். மேகமலை சுற்றுலா தளமாக மாற்றப்பட்டுவிட்டது. அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி உண்டு.

ஆனால் மாஞ்சோலை சுற்றுலா தலம் அல்ல, முண்டந்துறை புலிகள் காப்பகத்தோடு இணைத்து பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு விடுதி வசதிகள் எதுவும் கிடையாது. காலையில் சென்று பார்த்துவிட்டு மாலையில் திரும்பி விட வேண்டும் என்பது உத்தரவு. அரசு பேருந்துகளில் சென்று திரும்ப அனுமதி தேவையில்லை. ஆனால் சொந்தக் காரில், வாடகைக் காரில் செல்ல வேண்டுமானால் அம்பாசமுத்திரத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் அனுமதி பெற்றாக வேண்டும்.

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து சிறிய ரக அரசுப் பேருந்து ஒரு நாளைக்கு நான்கு முறையும், பாபநாசத்திலிருந்து 4 முறையும் இயக்கப்பட்டு வருகிறது. கல்லிடைக்குறிச்சியில் இருந்தும் பேருந்து இயக்கப்படுகிறது. மாஞ்சோலை சென்றால் அங்குள்ள வாட்ச் டவரில் ஏறி நின்று இயற்கை எழில் கொஞ்சும் மலை காட்சிகளை நீங்கள் ரசிக்கலாம்.

மாஞ்சோலைக்கும் மேல் ஊத்து வழியாக குதிரைவெட்டிக்கு செல்லலாம். குதிரைவெட்டியை சுற்றிலும் அடர்ந்த காடுகள் காணப்படுகின்றன. இங்கு வனத்துறைக்கு சொந்தமான விருந்தினர் மாளிகை உள்ளது. அங்கு தங்குவதற்கு வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டும். விடுதியில் தங்க வரும்புபவர்கள் முன்னதாக http://kmtr.co.in/home/bookroom என்ற தளத்தில்ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யலாம். தங்குமிடத்தில் மூன்று வேளை உணவு வழங்கப்படும். இந்த விடுதி அருகில் காட்சி கோபுரம் (வாட்ச் டவர்) மற்றும் வயர்லெஸ் கோபுரமும் உள்ளது. இந்த காட்சி கோபுரம் மூலம் இங்கிருந்து கயத்தாறு வரை பார்க்கலாம். மேலும் காரையார், மணிமுத்தாறு ஆகிய அணைகளும் தெரியும்.

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...