வித்தியாசமான குணச்சித்திர நடிகர் ஆடுகளம் நரேன்

 வித்தியாசமான குணச்சித்திர நடிகர் ஆடுகளம் நரேன்

ஒரு கதையை நகர்த்திச் செல்வது நாயகனோ, நாயகியோ, வில்லனோ அல்ல, வலுவான குணச்சித்திர கதாபாத்திரங்கள்தான். ஒரு கதையின் திருப்புமுனையைக் குணச்சித்திரக் கதாபாத்திரங்களே தீர்மானிக்கின்றன. படத்தில் குணச்சித்திர கதாபாத்திரங்களின் காட்சிகள் குறைவாக இருக்கலாம். ஆனால் அவற்றின் பங்களிப்பு படத்தின் வெற்றிக்கு ரொம்ப முக்கியம். அப்படிப்பட்ட காட்சிகளில் ரகுவரன், நாசர், பிரகாஷ்ராஜ் போன்றவர்கள் நடித்து பிறகு மிகப் பெரிய வில்லன்களாக உயர்ந்தவர்கள். அந்த வழியில்  தன் சிறந்த நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவில் சிறந்த குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ஆடுகளம் நரேன். இவர் ஆடுகளம், சுந்தர பாண்டியன், நண்பன், அசுரன் போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல பெயர் எடுத்தவர்.

1997ல் ‘ராமன் அப்துல்லா’ திரைப்படத்தில் அறிமுகமான இவர் 1970ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி  பிறந்தவர். தஞ்சாவூர் மாவட்டம் திருவாரூரைச் சேர்ந்த இவரது இயற்பெயர் நாராயணன். தற்போது சென்னையில் வசிக்கிறார். இவரது தந்தை ராணுவ வீரர். அவரது வேலைக்காகக் குடும்பம் சென்னை வந்தது.

பள்ளிப் பருவத்திலிருந்தே சினிமா மீது ஆர்வமாக இருந்தார் நரேன். சினிமாவிற்குள் முழுதாய் வருவதற்கு முன்பு சேல்ஸ் ரெப், பிசினஸ் என்று பல வேலைகள் செய்துவிட்டு திருப்தியில்லாமல் சினிமாவில் முன்னேற முயன்றார்.

நடிப்பின் மேல் கொண்ட ஆர்வத்தால் நடன இயக்குநர் கலா நடத்திவந்த நடிப்புப் பள்ளியில் பயிற்சி பெற்றார். பிறகு அங்கேயே நடிப்புச் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியராகப் பணிபுரிந்தார்

முழுமையாகக் கற்றபின் பின், ஆசிரியரானார். பிறகு உதவி இயக்குநராக பணிபுரிந்துவிட்டு நடிக்க முயற்சி செய்தார்.

இயக்குநர் பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த ‘ராமன் அப்துல்லா’ படத்தில் நடிகராக அறிமுகமானார். மற்றும் பாலுமகேந்திரா இயக்கத்தில் தொலைக்காட்சித் தொடராக வெளிவந்த ‘கதை நேரம்’ தொடர், கிருஷ்ணதாசி, சிவமயம், கனாகாணும் காலங்கள் போன்ற தொடர்களிலும் நடித்துள்ளார்.  இயக்குநர் மிஷ்கின் அழைத்து ‘அஞ்சாதே’ என்ற படத்தில் ஒரு பெண்ணுக்குத் தந்தையாக நடிக்க வைத்தார். அதன் பிறகு பல படங்களில் நடித்தார். 2011ல் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ‘ஆடுகளம்’  திரைப்படம் மூலமாகப் புகழ்பெற்றார், அதனால் ‘ஆடுகளம் நரேன்’ என்று அறியப்படுகிறார்

அதன் பிறகு தாயின் மணிக்கொடி, சூரிய பார்வை, இன்று, அறை எண் 305ல் கடவுள், வண்ணத்துப் பூச்சி, ஆடுகளம், யுத்தம் செய், நஞ்சுண்டபுரம், ஒஸ்தி, நண்பன், மனங்கொத்திப் பறவை, சகுனி, பீட்சா, ஆல் இன் ஆல் அழகு ராஜா, சரபம், தேசிங்கு ராஜா, ஆரம்பம், அசுரன், உடன்பிறப்பே, தள்ளிப்போகாதே, மகான், மாறன், ஐங்கரன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் நாசரின் பாதிப்பில் அவரைப்போலவே நடிக்க வேண்டும் என சினிமாவுக்கு வந்தவர். வெற்றி மாறனும் ஆடுகளம் நரேனும் பாலுமகேந்திராவிடம் பணியாற்றியவர்கள். அதனால் வெற்றி மாறன் படங்களில் கண்டிப்பாக ஆடுகளம் நரேன் முக்கிய பாத்திரத்தில் நடிப்பார்.

தற்போது இவர் இல்லாத படங்களே இல்லை என்கிற அளவுக்கு பிரியாக வளர்ந்து வரும் முக்கிய நடிகர் ஆடுகளம் நரேன்.

இன்னும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துகிறோம்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...