கொலு வைபவம் : நவராத்திரி சிறப்புகள்

 கொலு வைபவம் : நவராத்திரி சிறப்புகள்

புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசைக்குப் பிறகு வரும் பிரதமை திதி யில் தொடங்கி, அடுத்த 9 நாட்களும் நவராத்திரி விழாவாகக் கொண்டாடப் படுகிறது. 9 இரவுகள், 10 நாட்கள் என்ற அடிப்படையில் நவராத்திரி விழா நாடு முழுவதும் கோலாகலமாக 2022 செப்டம்பர் 26ஆம் தேதி தொடங் கியது.

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் முப்பெரும் தேவியரின் வழிபாடாக இருக் கிறது. முதல் மூன்று நாட்கள் துர்க்கையை வேண்டியும், இடை மூன்று நாட்கள் லட்சுமி தேவியை வேண்டியும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியைப் போற்றியும் வழிபாடு செய்ய வேண்டும்.

முதல் மூன்று நாட்களில் துர்க்கையை மகேஸ்வரி, கவுமாரி, வராகியாக வும், இடை மூன்று தினங்களில் லட்சுமி தேவியை மகாலட்சுமி, வைஷ் ணவி, இந்திராணியாகவும், கடைசி மூன்று நாட்களில் சரஸ்வதி தேவியை சரஸ்வதி, நரசிம்கி, சாமுண்டியாகவும் முறையாக வழிபாடு செய்ய வேண்டும்.

நவராத்திரி ஒன்பது நாட்களும், பராசக்தி, ஒவ்வொரு தேவியின் வடிவில், ஒரு வயது முதல் 10 வயது கன்னிப்பெண் வடிவில் அவதாரம் செய்கிறாள். கன்னியின் வயதிற்கேற்ப, ஒவ்வொரு நாளும் ஒரு கன்னிகையாக ஒன்பது நாள் ஒன்பது கன்னிகைகளையும், ஒன்பது சுமங்கலிகளையும் பூஜை செய் வது, அளவிட முடியாத புண்ணியம் உண்டாகும்.

குமாரி, திருமூர்த்தி, கல்யாணி, ரோகிணி, காளி, சாண்டிகா, சாம்பவி, துர்க்கா, சுபத்திரா என்ற பெயர்களால் ஒன்பது நாட்களும் பூஜிக்கப்பட வேண்டும். அனைத்திலும் தேவியே உள்ளாள் என்பதை, உலகுக்கு உணர்த் தவே நவராத் திரி நாட்களில் கொலு வைக்கப்படுகிறது.

பராசக்தி, அசுரர்களுடன் சண்டையிட்டபோது, தேவர்கள், பொம்மை மாதிரி நின்று கொண்டிருந்ததைக் காட்டத்தான், பொம்மை கொலு வைப்பதாகவும் சொல்வதுண்டு.

இந்த ஒன்பது நாட்களில், தினமும், பகலில் சிவ பூஜையும், இரவில் அம்பிகை பூஜையும் செய்வது சிறந்த வழிபாடாகும்.

அசுரனை அழிப்பதற்காக 9 இரவுகள் தவமிருந்து, 10வது நாளில் வதம் செய்ததையே நவராத்திரி விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

மூன்று லோகங்களையும் தன்வசப்படுத்திய மகிஷாசுரன் என்ற அரக்கன், தேவர்கள், முனிவர்கள், மனிதர்கள் என அனைவரையும் துன்புறுத்தினான். இவனிடம் இருந்து மூன்று உலகங்களையும் காப்பதற்கு என்ன வழி என்று கேட்டபோது, மகிஷாசுரன் ஒரு பெண்ணால் மட்டுமே தனக்கு அழிவு நிகழ வேண்டும் என வரம் பெற்றவன் என்ற விவரத்தைக் கூறினார் பிரம்மா. இதனால் பிரம்மா, சிவன், விஷ்ணு மூவமும் தங்களின் சக்திகளை ஒன்று திரட்டி, அன்னை துர்க்கா தேவியை உருவாக்கினர். இப்படி 9 நாட்கள் துர்க்கை உருவாக்கப்பட்டு, 10வது நாளில் அசுரனை வதம் செய்து 3 உலகங் களை காத்தாள் அம்பிகை.

நவராத்திரி விழாவின் முக்கிய அம்சமாக வீடுகளில் கொலு படிகள் வைத்து கொண்டாடுவது. அதாவது கீழே உள்ள படியில் ஓரறிவு உயிரினங்கள், அடுத்துள்ள படியில் இரண்டு அறிவு ஜீவன்கள், 3வது படியில் விலங்குகள், 4வது படியில் மனிதர்கள், 5வது படியில் முனிவர்கள், மகான்கள், சித்தர்கள் உள்ளிட்ட குருமார்கள், 6வது படியில் தெய்வச் சிலைகள் அடுக்கி வைக்கப் பட்டிருக்கும்.

அதற்கு மேலுள்ள படியில் தசாவதாரம், அஷ்டலட்சுமி போன்ற அவதா ரங்கள் வைக்கலாம். இறுதியாக 9வது படியில் முப்பெரும் தேவிகளின் உருவங்களை வைத்து, மத்தியில் கும்பம் வைத்து வழிபாடு செய்கிறோம்.

மனிதன் படிப்படியாக வாழ்வில் உயர்ந்து, இறுதியில் தெய்வ நிலையை அடைய வேண்டும் என்பதே இதன் அர்த்தம்.

நவராத்திரியின் முதல் 3 நாட்கள் பராசக்திக்கும், அடுத்த 3 நாட்கள் லட்சு மிக்கும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதி தேவிக்கும் பூஜைகள் நடத்தப்படு கிறது.

நவராத்திரி பண்டிகையின் 9 நாட்களும் ஒவ்வொருவிதமான பிரசாதங் களை வைத்துப் படைக்க வேண்டும். நவக்கிரக பலன்களைக் கருதி, அந்தந்த கிழமைக்கேற்ப நவதானியங்களில் ஏதேனும் ஒன்றைச் சுண்ட லாகச் செய்து, வெற்றிலைப் பாக்குடன் விநியோகிப்பது நல்லது.

முதல் நாள்: வெண்பொங்கல், மொச்சை சுண்டல் பிரசாதமாகக் கொடுப்பது உகந்தது. இதன்மூலம் வறுமை நீங்கி, வளம் பெருகும். ஆயுள் விருத்தி உண்டாகும்.

இரண்டாம் நாள்: புளியோதரை, வேர்க்கடலை சுண்டல் பிரசாதமாகக் கொடுக்கலாம். இதன்மூலம் நோய்கள் நீங்கும். உள்ளத்தில் அமைதி கிடைக் கும்.

மூன்றாம் நாள்:

கோதுமை சர்க்கரைப் பொங்கல், காராமணி சுண்டல். இதனால் தானிய விருத்தி உண்டாகும். வாழ்வு சிறப்படையும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.

நான்காம் நாள்:

பலவிதக் காய்களும், பருப்பும் கலந்த கதம்ப சாதம், பட்டாணி சுண்டல் பிரசாதமாக கொடுக்கலாம். இதனால் பகை விலகும். எதிர்ப்புகள் அகலும். இன்னல்கள் தீர்ந்து இன்பம் சேரும்.

ஐந்தாம் நாள்:

தயிர் சாதம், பூம்பருப்பு சுண்டல் பிரசாதமாக கொடுக்கலாம். இதன் மூலம் விரும்பிய செல்வங்களைப் பெறலாம்.

ஆறாம் நாள்:

தேங்காய் சாதம், பச்சைப்பயறு சுண்டல் பிரசாதமாக வழங்குவது சிறந்தது. இதனால் கவலைகள் நீங்கி தனம் பெருகும். எதிர்ப்புகள் விலகும்.

ஏழாம் நாள்:

எலுமிச்சை சாதம், கொண்டைக்கடலை சுண்டல் பிரசாதமாக அளிக்கி றோம். இதனால் கல்வி வளர்ச்சியும், ஞான விருத்தியும் உண்டாகும்.

எட்டாம் நாள்:

பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்த பருப்பு பாயசத்தை, வடையுடன் நிவேதனம் செய்ய வேண்டும். கேட்கும் வரங்கள் எளிதில் கிடைத்து நலம் பெறலாம்.

ஒன்பதாம் நாள்:

சர்க்கரைப் பொங்கலில் நெய் அதிகம் சேர்த்த அக்கார வடிசல், வேர்க் கடலை சுண்டல் நிவேதனம் செய்யலாம். இதனால் குழந்தை வரம் பெறலாம்.

பத்தாம் நாள்:

விஜயதசமி, மூன்று சக்திகளும் தீய சக்தியை அழித்து, வெற்றி கொண்ட அனைவருக்கும் நன்மைகளை அள்ளித் தந்து அருள்பாலிக்கும் சுபநாள். அன்று தொடங்கும் எல்லாக் காரியங்களும் வெற்றி மீது வெற்றி பெறும். பால் பாயசம், காராமணி சுண்டல் மற்றும் இனிப்பு வகைகளை நைவேத் தியம் செய்யலாம்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...