செருப்பு தைக்கும் தொழிலாளியின்  மகள் சாதனை

 செருப்பு தைக்கும் தொழிலாளியின்  மகள் சாதனை

மாநில அளவிலான  போட்டித் தேர்வில் வெற்றி பெற்று சாதனை. தேசிய வருவாய் வழிதிறன் தேர்வில்  வெற்றி பெற்றதால் ரூபாய் 48,000 கிடைக்கும்.

தேசிய  வருவாய் வழி மற்றும் திறன் தேர்வில் தேவக்கோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவிகள் வெற்றி பெற்று சாதனை  படைத்தார்கள். மாநில அளவில் நடைபெற்ற இப்போட்டித் தேர்வில் இப்பள்ளி மாணவர்கள் தொடர்ந்து  வெற்றி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வு தமிழ்நாடு முழுவதும் உள்ள மேல்நிலை, உயர்நிலை, நடுநிலைப் பள்ளிகளில் கடந்த மார்ச்   மாதம் நடந்தது. தேர்வில் வெற்றி பெறும் மாணவ, மாணவியர்க்கு அவர்களின் பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்புக் கணக்கு தொடங்கி அதன் வாயிலாக ஒவ்வொரு மாதமும் ஆயிரம்  ரூபாய் வீதம் நான்கு ஆண்டுகளுக்கு 48 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகையாக மத்திய அரசின் நிதியிலிருந்து மாநில அரசு செலுத்துகிறது. தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்தேர்வில் பங்கேற்றனர்.

மாநில அளவில் நடைபெற்ற இந்தத் தேர்வில் 5,900  மாணவர்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.   சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலை பள்ளியின் மாணவிகள் மெர்சி, தேவதர்ஷினி ஆகியோர்  வெற்றி பெற்று   தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்கள் .

வெற்றி பெற்ற மாணவிகளைப்  பள்ளித் தலைமை ஆசிரியர் லெ.சொக்க லிங்கம் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் செல்வமீனாள், ஸ்ரீதர், கருப்பையா  மற்றும் மாணவிகளின் பெற்றோர்கள் பரிசுகள்  வழங்கிப்  பாராட்டினார்.

இது குறித்து வெற்றி பெற்ற மாணவி தேவதர்ஷினி   கூறுகையில், “நான் வெற்றி பெற்றது மிகவும் பெருமையாக இருக்கிறது. எனது  வெற்றிக்குப் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மதுரை  ரயில்வே பள்ளி ஆசிரியர் துரைபாண்டியன், எனது பெற்றோர்கள் விடாமுயற்சியே காரணம். அவர்களுக்கு நான்  நன்றி தெரிவிக்கிறேன்.  எனது அப்பா செருப்பு தைக்கும் தொழில் செய்து என்னையையும், என் அண்ணனையும்  படிக்க வைத்து வருகின்றார்.

பள்ளி விடுமுறையிலும் கொரோனா நேரத்திலும் எனது வீட்டுக்கே வந்து பள்ளி ஆசிரியர்கள் வழங்கிய தொடர் சிறப்புப் பயிற்சியின் காரணமாகவே நான் வெற்றி பெற்றுள்ளேன்.” என்றார்.

இந்த மாணவி படிப்பில் திறமையாக இருப்பதுடன் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று இதுவரை எண்ணற்ற சான்றிதழ்களும், பல ஆயிரம் ரூபாய் பரிசும் பெற்றுளளனர். 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாவது போன்று 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் இந்தத் தேர்வு முடிவுகள் முக்கியமானது.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...