சிவகங்கையின் வீரமங்கை | 15 | ஜெயஸ்ரீ அனந்த்
சிகப்பியும் சலீம் மாலிக்கும் குதிரையில் அதிவேகமாகச் சென்றனர். உப்பூர் அருகே இருவரும் கடற்கரையை ஒட்டியபடி சென்றதும் சிகப்பி குதிரையின் வேகத்தைக் குறைத்தாள். கடல் அன்னை தனது கைகளால் சிப்பிகளையும் முத்துகளையும் கரைதனில் ஒதுக்கிக் கொண்டும், பிறகு அள்ளிக் கொண்டும் சென்றாள். தூரத்தில் தெரிந்த படகுகள் கலங்கரை விளக்கின் உதவியால் கரைகளை நோக்கி வந்து கொண்டிருந்தன. “நாம் உப்பூர் வந்தாகிவிட்டது.” என்றவள் குதிரையை ஊருக்குள் திருப்பினாள்.
ஊருக்குள்ளே இருந்த வைணவ மடத்தில் உரத்த குரலில் பாகவதர் ஒருவர் பஜனைப் பாட்டுகள், கீர்த்தனைகளுக்கிடையே சுந்தர காண்டத்தை விளக்கிக் கொண்டிருந்தார்.
“மதிற்சுவரைத் தாண்டிய ஹனுமன், அங்கு நிறைந்திருந்த மலர்களையும் ஆச்சா, சம்பகம், நறுவிலி, நாககேஸரம், மா , கபிமுகம் முதலிய மரங்களையும் கண்டார். மதிற்சுவரின் மேல் இருந்த அவர் நாணிலிருந்து விடுபட்ட அம்பு போல், ‘சர்..’ என்று தாவினார்.” என்றதும் அங்கு குழுமியிருந்தவர்கள், ஹனுமனை மனத்தால் வரித்துக் கொண்டு அவரின் வீரதீரச் செயல்களை எண்ணி, நடுநடுவே ஆச்சரியப்பட்டும் ‘க்ளுக்’ என்று சிரித்தும், ‘அடடா’ என்று கவலைப்பட்டும் தங்களது உணர்ச்சிகளை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர்.
இவற்றை கேட்டபடி வந்த சிகப்பி “சலீம் அவர்களே, இப்பொழுது நள்ளிரவு ஆகிவிட்டது. நமக்கும் குதிரைக்கும் சற்று ஒய்வு தேவைப்படுகிறது. ஆகவே இவற்றை இங்கேயே நிறுந்தி விட்டு வாருங்கள்” என்றபடி வைணவ மடத்தை நோக்கி நடந்தாள். மாலிக்கும் குதிரைகளை அருகில் இருந்த மரத்தில் கட்டி விட்டு சிகப்பியைப் பின்தொடர்ந்தார்.
மாலிக்கிற்கு உபன்யாசம் புதிது. ஆகவே அதை உன்னிப்பாக கேட்டவர், ‘ஒரு குரங்கால் இவற்றை எல்லாம் தனியாகச் செய்ய இயலுமா..?’ என்று எண்ணியவர் பிறகு அதில் லயித்து விட்டார். பாகவதரும் தனது உபன்யாசத்தை முடிக்கும் தருவாயில் கீழ் வானம் சற்றே வெளுக்கத் துவங்கியது. அச்சமயம், “க்கூக்…. க்கூக்….” என்று குயிலின் குரலையொத்த கட்டைக் குரல் ஒன்று ஒலித்தது. அமர்ந்திருந்த ஒரு சிலருக்கு அந்தக் குரல் வித்யாசமான குரல் என்று தோன்றிருக்க வேண்டும். ஒரு வினாடி குரல் வந்த திசையைத் திரும்பிப் பார்த்து விட்டு, பின் உபன்யாசத்தில் லயித்தனர். சிகப்பி ஓசைப்படாமல் மாலிக்கைத் தன் பின்னால் வருமாறு கூறிவிட்டு மடத்தை விட்டு வெளியே வந்தாள்.
வெளியே மரத்தில் கட்டியிருந்த குதிரைகள் இரண்டும் தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டிருந்தன. சிகப்பி ஒருமுறை அதைத் தன் கண்களால் பார்த்தவள், பின் அவ்விடத்தைச் சுற்றும்முற்றும் பார்வையால் அளந்தாள். சற்றுத் தள்ளி மரத்தின் இரண்டு கிளைகளுக்கு இடையில் இருந்த கருப்பு உருவம் ஒன்று அனுமனைப்போல் தாவிக் கொண்டு கீழே குதித்தது. அது வேறு யாரும் இல்லை உதிரன் தான்.
“என்ன சிகப்பி… பயந்து விட்டாயா..?” என்றான்.
“பயமா …. எனக்கா? அதுவும் உன்னைக் கண்டா? க்கூம்…” என்றவள், “சரி…. விஷயத்தை கூறு. நம் காரியம் என்னவாயிற்று?” என்றாள்.
“நாம் திட்டமிட்டபடி இதுவரை எதுவும் நடக்கவில்லை என்பதே உண்மை. அதே சமயம் நம் அரசர் பவானிதேவரின் கணக்கு பொய்த்து விடவில்லை. மராட்டிய மன்னர் ஏகோஜி விரைவில் இராமராதபுரத்தைக் கைப்பற்ற படைகளுடன் வரவிருக்கிறார். ஆனால் குவிரனின் நிலை தான் என்னவாயிற்று என்று தெரியவில்லை. யார் அவனை தீர்த்துக் கட்ட முயற்சி செய்திருப்பார்கள் என்பதும் எனக்கு குழப்பமாகவே இருக்கிறது.”
“என்ன..? குவிரனுக்கு ஆபத்தா..?”
“ஆம் சிகப்பி. பாகனேரி செல்லும் சாலையில் குவிரன் கத்திக்குத்துப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சமயம் அங்கு எதேச்சயாக வந்த இளவரசர் அவனை காப்பாற்றி இருக்கிறார். பிறகு அவன் யாரென்று தெரிந்தபின் கைது செய்து அவனை சிவகங்கைக்குக் கொண்டு சென்றதை நான் பார்த்தேன். பின் என்னவானான் என்று எனக்குத் தெரியவில்லை” என்றான்.
“மூடனே…. ஒரு தேசத்துரோகியை நாலு பேர் தெரிந்து கொள்ளும் படியாகவா சிறைக்கு அழைத்துச் செல்வார்கள்..? அவனுக்குத் தரும் தண்டனையே வேறாக இருக்கும். அதனால் அவனது இருப்பிடம் ரகசியமாக்கப்படும். ஆகவே நிச்சயமாக அவன் சிவகங்கைச் சிறையில் இருப்பதற்கு வாய்பில்லை.”
“ஆம்… உன் கூற்றுகூட எனக்கு சரியாகத் தான் படுகிறது. நான் தஞ்சை சென்ற சமயம் வழியில் ஒரு பல்லக்கைக் கண்டேன். ஒருவேளை அதில் குவிரன் இருந்திருக்கலாம் அல்லவா..?”
“இருக்கலாம். அதிருக்கட்டும்… இளவரசியாரைப் பற்றிய செய்தி ஏதேனும் உண்டா?”
“அனைவரும் ப்ரான்மலை செல்வது போல் தெரிந்தது. நான் போகும் வழியில் அவர்களையும் பார்த்தேன். அங்கேயே கயவன் சசிவர்ணத் தேவரை தீர்த்துக் கட்டியிருப்பேன். ஆனால் நம் அரசர் ஏற்றுக் கொண்ட காரியம் என்னால் தடைப்பட கூடாது என்ற எண்ணத்தில் என் நோக்கத்தை மாற்றிக் கொண்டு தஞ்சை சென்றுவிட்டேன். சரி…. நம் ரகசியம் தெரிந்த இவர் யார்..?”
“இவர் சலீம் மாலிக். அரபு நாட்டைச் சேர்ந்தவர்.” என்றவள், மாலிக் பக்கம் திரும்பி, “ம்…” என்றாள் கண்களால்.
“சதக்….” மாலிக் தன் இடையினிற் செருகியிருந்த சுருள் வடிவக் கத்தியை எடுத்து உதிரனின் கழுத்தில் செருகினான். சுருள் வடிவக் கத்தி அவன் கழுத்தை ஆழம் பார்த்தது. உதிரன் நொடியில் சரிந்தான். உதிரனின் கழுத்திலிருந்து உதிரம் வெளிப்பட்டது.
“மூடனே…. திறமையில்லாதவர்களுக்கு நம் கூட்டத்தில் இடமில்லை. இது அரசர் பவானியின் உத்தரவு” என்றவள் அவனைக் காலால் இடறினாள். பின் அவன் இடுப்பில் சொருகியிருந்த சுருக்குப் பையை உறுவினாள். அதில் ஏகோஜீ மன்னனிடமிருந்து பெற்ற தங்கக் காசுகள் நிறைந்திருந்தன. அதை எடுத்துக் கொண்டவள் மாலிக்குடன் அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.
•
குயிலியும் சுமனும் பட்டாச்சாரியார் கண்ணன் இல்லம் சென்றனர்.
“வர வேண்டும்.. நீங்கள் அரண்மனையில் வளர்ந்தவர்கள். எங்கள் வீடு மிகச் சிறிது தான். ஆனால் அதிக அன்பைக் கொண்டது.” என்ற பட்டர், “நளாயினி…” என்று உள்திரும்பிக் குரல் கொடுத்தார்.
ஒன்பது கஜம் புடவையில், மூக்கில் இரண்டு பேசரி மினுமினுக்க, லஷ்மிகரமான முகத்தில் புன்னகை தவழ்ந்தபடி வெளிவந்த நளாயினி மூவரைக் கண்டதும் புன்னகை மாறாமல் வரவேற்றாள்.
“வாருங்கள்.” என்று கூறி அருகில் இருந்த பட்டுப்பாயை உதறிக் கீழே விரித்தாள்.
“குயிலி… இளவரசி எப்படி இருக்கிறார்கள்?” என்றாள்.
“விவாக ஆசையில் உள்ளார். அனேகமாக விரைவில் நல்ல காரியம் நடக்கக்கூடும் என்று எதிர்பார்க்கிறேன்” என்றவள் தனது கடைக்கண்ணால் சுமனை பார்த்தாள். அதைக் கவனித்த நளாயினி, “இவர்….?”
“ம்… இவர்.. இவர்…” என்று குயிலி தடுமாறுவதைப் பார்த்த சுமன்,
“நான் ஆற்காடு தேசத்தை சேர்ந்தவன். சேதுபதி ராஜ்யத்தின் மேல் ஈர்ப்புக் கொண்டு இங்கு அடைக்கலம் கொண்டுள்ளேன். இளவரசியாரும் என் மேல் நம்பிக்கை கொண்டு ஆங்கில வகுப்பு ஆசிரியராக நியமனம் செய்து இருக்கிறார்கள்.” என்றான்.
“நல்லது. வாருங்கள், உணவு உண்ணலாம்.” என்றபடி மேல் தட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பூவரச இலையை மூவருக்கும் விரித்து அதில் தயிர் சாதத்தையும் பெருமாளுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட புளிசாதத்தையும் இட்டாள்.
“என் அன்னையின் நியாபகம் வருகிறது. மிக்க நன்றிம்மா” என்றான்.
“நானும் உன் அன்னையின் வயதை ஒத்தவள் தான். என் பிள்ளை இன்று உயிருடன் இருந்திருந்தால் உன் வயதை ஒத்தவனாகத் தான் இருந்திருப்பான். ” என்றவளின் முகம் சற்று இறுகியது. அதைக் கவனித்த பட்டர் உரையாடலை மாற்றும் விதமாக, “நளா… இன்று இரவு இவர்கள் இங்குதான் தங்குவார்கள். பொழுது புலர்ந்ததும் கிளம்பலாம் என்று கூறியுள்ளேன். ஆகையால் நீயும் குயிலியும் உள்ளே படுத்துக் கொள்ளுங்கள். நானும் சுமனும் திண்ணையில் படுத்துக் கொள்கிறோம்.” என்றவர் படுக்கை விரிப்புடன் சுமனைக் கூட்டிக் கொண்டு திண்ணை நோக்கிச் சென்றார்.
1 Comment
சுமனுக்கு ஒரு ப்ளாஷ் பேக் இருக்குமா? சுவாரஸ்யம் குறையாமல் செல்கிறது தொடர்! வாழ்த்துகள்!