களை எடுக்கும் கலை – 4 | கோகுல பிரகாஷ்

 களை எடுக்கும் கலை – 4 | கோகுல பிரகாஷ்

அத்தியாயம் – 4

“என்ன கதிர் சொன்னீங்க…? சிசிடிவியை ஹேக் பண்ணிட்டாங்களா…?” ராம்குமாரின் குரலில் அதிர்ச்சி அப்பட்டமாக தெரிந்தது.

“ஆமாம் சார்…” கேஸ் இப்போதைக்கு முடியப் போவதில்லை என்னும் வருத்தத்தோடு ஒலித்தது கதிரவனின் குரல்.

“ஹேக் பண்ணியிருக்காங்கன்னு எப்படி சொல்லுறீங்க…?”

“சிசிடிவி வேலை செய்யலைன்னு சொன்னதால, என்னோட ஃபிரண்ட் ஒருத்தர் இந்த ஹேக்கிங், சைபர் அட்டாக், இது சம்பந்தமா படிச்சிருக்கார். அவரையும் கூப்பிட்டு போயிருந்தேன். அவர்தான் செக் பண்ணி சொன்னார்.”

“என்ன கதிர், கேமரா வேலை செய்யலைனா, அந்த கம்பெனிக்கு ஃபோன் பண்ணா, அவங்க வந்து சரி பண்ணிட போறாங்க… நீங்க வேற தேவையில்லாம, இப்போ ஹேக்கிங், அது இதுன்னு புதுசா ஏதோ சொல்லிட்டு இருக்கீங்க…?”

“இல்லை சார். என் ஃபிரண்ட் இதுமாதிரி விஷயத்துல எல்லாம் எக்ஸ்பெர்ட். அவர் சொன்னா கரெக்ட்டாதான் இருக்கும்.”

“சரி, நீங்க சொல்லுற மாதிரி ஹேக் பண்ணிட்டதாவே இருக்கட்டும். இப்போ சரி பண்ணியாச்சா இல்லையா…?”

“ரெகவர் பண்ணியாச்சி சார். ஆனா, கடந்த இரண்டு நாட்கள்ல நடந்த விஷயங்கள் மட்டும் கிடைக்கல…”

“உங்க ஃபிரண்ட்தான் இதுல எக்ஸ்பெர்ட்னு சொன்னீங்களே… அவராலயே ரெகவர் பண்ண முடியலையா?” ராம்குமார் கேலி செய்வதை உணர்ந்து கதிரவனின் முகம் சுருங்கியது.

“அவர் எக்ஸ்பெர்ட்தான் சார். ஆனா, செக்யூரிட்டி சிஸ்டத்தை ஹேக் பண்ணி ஆஃப் பண்ணியிருக்காங்க… அதனாலதான் கடந்த இரண்டு நாட்கள்ல நடந்த விஷயங்கள் மட்டும் கிடைக்கல.” சரியான பதிலடி கொடுத்த திருப்தி கதிரவனின் முகத்தில் தெரிந்தது.

“என்ன கதிர்… ஏதோ நகை, பணத்துக்காக கொலை நடந்திருக்கும்னு பார்த்தால், கேஸு வேற பக்கம் திரும்புதே…?”

“நானும் அதையேதான் சார் நினைச்சேன்…”

“இந்த மாதிரி ஹேக்கிங்லாம் இதுவரைக்கும் நம்ம ஏரியால நடந்ததே இல்லையே…? இது ஏதோ பெரிய கும்பலோட கைவரிசையா இருக்கும்னு நினைக்கிறேன்.”

“எனக்கும் அப்படித்தான் சார் தோணுது.”

“என்ன கதிர், நான் என்ன சொன்னாலும், ‘நானும் அதையேதான் சார் நினைச்சேன்’, ‘எனக்கும் அப்படித்தான் சார் தோணுது’னு, ‘ஆமாம் சாமி…’ போட்டுட்டு இருக்கீங்க…”

“அப்படி இல்லை சார். நீங்க சொல்லுற பாயிண்ட்ஸ் எல்லாமே கரெக்டா இருக்கு சார்.”

“இதுவும் ‘ஆமாம் சாமி…’ தான்” சொல்லிவிட்டு ராம்குமார் சிரிக்க, கதிரவனுக்கும் குபீரென சிரிப்பு வந்தது.

அவர்களின் சிரிப்பில் இன்னொரு குரலும் சேர்ந்து ஒலிக்கவே, ஆச்சர்யத்தோடு இருவரும் திரும்பிப் பார்க்க, ஒரு மூலையில் அமர்ந்தவாறு, காத்தவராயனும் சிரித்துக் கொண்டு இருந்தான்.

“அட, உன்னை மறந்துட்டேன் பாரு… ஆமாம் உனக்கு சிசிடிவியை ஹேக் பண்ணத் தெரியுமா…?” என்றார் ராம்குமார் சிரித்துக் கொண்டே.

“என்ன டிவி சார்…? நான் கேள்விப்பட்டதே இல்லையே…” என்றான் காத்தவராயன்.

“இதுக்கு மேல உன்னை ஸ்டேஷன்ல வச்சிருக்கிறது தப்பு. சரி, நீ போகலாம்.”

“ரொம்ப நன்றி சார். குற்றவாளியை கண்டுபுடிச்சிட்டீங்களா…?”

“அதெல்லாம் உனக்கு தேவை இல்லாத விஷயம். எனக்கு மனசு மாறி திரும்ப உன்னை லாக்கப்ல வைக்குறதுக்கு முன்னாடி ஓடிப் போயிடு…” என்றதும் விட்டால் போதும் என்று, கும்பிட்டுவிட்டு கிளம்பினான் காத்தவராயன்.

அவன் ஸ்டேஷன் வாசலை தாண்டுவதற்குள், “ஒரு நிமிஷம் உள்ள வந்துட்டு போ…” என்றார் ராம்குமார்.

“என்ன சார், அதுக்குள்ளே உங்க மனசு மாறிடுச்சா…?” என்றவாறே மீண்டும் உள்ளே வந்தான் காத்தவராயன்.

“உன்னை அவ்ளோ சீக்கிரம் வெளிய விட மனசு வர மாட்டுது…” என்றவாறே, அவன் கையில் ஒரு ஆயிரம் ரூபாயைத் திணித்தவர், “முதல்ல ஒரு நல்ல ஹாஸ்பிடலுக்கு போய், உன் காயத்தை கவனி. திரும்ப தண்ணிப் போட்டுட்டு எங்கயாவது போய் முட்டிட்டு நிக்காதே…” என்றார்.

மீண்டும் ஒரு கும்பிடு போட்டுவிட்டு வெளியேறப் போனவனை, இந்தமுறை கதிரவன் இடைமறித்தார். “உன்னை விட்டுட்டோம்னு எங்கயாவது வெளியூர் போயிடாதே… எப்போ கூப்பிட்டாலும், உடனே வரனும்.”

“நான் எங்க சார், போகப் போறேன். கழுதைக் கெட்டா குட்டிச் சுவரு. இங்கேதான் இருப்பேன்.” என்றவாறு, எங்கே மீண்டும் அழைப்பார்களோ என்னும் எண்ணத்தில் விறுவிறுவென ஸ்டேஷனை விட்டு வெளியேறினான் காத்தவராயன்.

“என்ன கதிர், காத்தவராயனை வெளியே விட்டது தப்பில்லையே…?”

“தப்பே இல்லை சார்… இப்போ கேஸ் அவன் ரேன்ஞ்சைத் தாண்டிப் போயிடுச்சி…”

“சரி, வெளியே கொஞ்சம் வேலை இருக்கு. வாங்க போயிட்டு வந்துடலாம்.”

“ஓகே சார்.”

காரின் சக்கரங்கள் சாலையில் வழுக்கிக் கொண்டு செல்ல, அருகில் இருந்த கதிரவன் பக்கம் திரும்பிய ராம்குமார், “கதிர், சிசிடிவி ஹேக்கிங்லாம் ஆன்லைன் மோசடியில வரும் இல்லையா…?” என்று கேட்டார்.

“ஆமாம் சார்…”

“அப்போ கேஸ் சைபர்கிரைம்-க்கு ட்ரான்ஸ்பர் ஆகிடும் இல்லையா…?”

“இல்லை சார். இந்த கேஸ்ல ஜஸ்ட் ஹேக் பண்ணி ஆஃப் பண்ணிட்டு, நேர்ல வந்துதான் கொலை பண்ணியிருக்காங்க… அதனால, ஏதாவது உதவி வேணும்னா அவங்களைத் தொடர்பு கொள்ளலாம். மத்தப்படி நாமதான் சார் விசாரணை பண்ணனும்.”

“குட். உங்க ஒப்பினியன் என்னன்னு தெரிஞ்சிக்கத்தான் கேட்டேன். இந்த கேஸ்ல வேற ஏதாவது முன்னேற்றம் இருக்கா…?”

“சதாசிவம், பரிமளம், காத்தவராயனைத் தாண்டி நாம இன்னும் ரொம்ப தூரம் போகணும் சார்.”

“ஏன் அப்படி சொல்லுறீங்க…?”

“கிடைச்சிருக்குற தகவல்கள்தான் அப்படி சொல்லுது…”

“அப்படி என்ன தகவல்கள் கிடைச்சிருக்கு…?”

“ஆரம்பத்துல ஏதாவது கோபத்துல ஆத்திரப்பட்டு கொலை பண்ணியிருக்கணும், இல்லேன்னா நகை, பணத்துக்காக இந்தக் கொலை நடந்திருக்கலாம்னு நினைச்சோம்…”

“ஆமாம்.”

“ஆனா, இப்போ, இந்தக் கொலைல டெக்னாலஜியை பயன்படுத்தி, பக்காவா பிளான் போட்டு பண்ணியிருக்காங்க..”

“ஆமாம். அதனால…?”

“நம்ம சந்தேக வட்டத்துக்குள்ள இருக்குற யாரும், ஹேக் பண்ணியிருக்க வாய்ப்பே இல்லை.”

“ஓகே… அப்புறம்…?”

“பரந்தாமனோட கால் ஹிஸ்டரிய பார்க்கும்போது, நிறைய சந்தேகங்கள் வருது.”

“ஹ்ம்ம். என்னென்ன சந்தேகங்கள் சொல்லுங்க…”

“அவர் ராணுவத்துல இருந்து ஓய்வு பெற்று ரொம்ப வருஷம் ஆகுது. ஆனா, கடைசி வரைக்கும் ராணுவத்துல இருக்குற நிறையப் பேர் கூட தொடர்புல இருந்திருக்காரு.”

“இதுல சந்தேகப்பட என்ன இருக்கு? அவர் சர்வீஸ்ல இருக்கும்போது ஏற்பட்ட பழக்கமா இருக்கும். அவங்கக் கூட பேசுனதை வைத்து சந்தேகப் படுறது சரியில்லை…”

“இரவு நேரங்கள்ல நிறையப் பேர் கூட ரொம்ப நேரம் பேசியிருக்கார்.”

“வயசான மனுஷன். இரவு நேரங்கள்ல தூக்கம் வராம இருக்கும். அவரோட நண்பர்கள்கிட்ட பேசிட்டு இருந்திருக்கலாம்.”

“அவ்வளவு நேரம் பேசியிருக்கார், ஆனா, அந்த நம்பர்ஸ் எதுவுமே அவரோட காண்டக்ட் லிஸ்டில் இல்லை. ஒவ்வொரு தடவையும் வெவ்வேறு நம்பர்ஸ்-க்கு பேசி இருக்காரு.”

“கவனிக்க வேண்டிய விஷயம்தான். அந்த நம்பர்ஸ்-க்கு எல்லாம் ஃபோன் பண்ணி செக் பண்ணீங்களா…?”

“ஒருசிலர் கூட பேசினேன். எல்லாமே மிலிட்டரி ஆபீசர்ஸ். அப்பப்போ பேசுவார். ‘இப்போ எப்படி போய்ட்டு இருக்கு, எப்படி இருக்கீங்க…?’ அப்படின்னு நார்மலாத் தான் பேசுவார்னு சொன்னாங்க… புதுசா எந்த விஷயமும் கிடைக்கலை.”

“ஓகே… மத்த நம்பர்ஸ் எல்லாம்…?”

“யாருமே ஒழுங்கா ரெஸ்பான்ஸ் பண்ணல சார். ஒருசிலர் போலீஸ்னு சொன்னதுமே கட் பண்ணிட்டாங்க…”

“ஓகே… ஏதோ தப்பா இருக்குன்னு தோணுது. அவங்க விலாசத்தை எல்லாம் கண்டுபுடிங்க…”

“எல்லாமே போலியான விலாசங்கள் கொடுத்து வாங்குன சிம் கார்ட்ஸ். அதுல ஒருசில நம்பர்ஸ்-க்கு கால் பண்ணும்போது அட்டென்ட் பண்ணாமலே கட் பண்ணிட்டாங்க…”

“யாரோட ஃபோன்ல இருந்து கால் பண்ணீங்க…?”

“என்னோட ஃபோன்ல இருந்துதான் சார்.”

“தப்பு பண்ணிட்டீங்களே கதிர்… பரந்தாமனோட ஃபோன்ல இருந்து கால் செய்து பார்த்திருக்கனும்.”

“எனக்குத் தோணாம போயிடுச்சி சார்…”

“சரி விடுங்க… இதுல இருந்து உங்களால ஏதாவது ஒரு முடிவுக்கு வர முடியுதா…?”

“எனக்குத் தோணுறதை சொல்லட்டுமா…?”

“சொல்லுங்க… அதுக்காகத்தானே கேட்குறேன்.”

தொண்டையைக் கனைத்துக் கொண்டு ஏதோ சொல்ல ஆரம்பித்த கதிரவன், திடீரென சாலையை கவனித்தவராய், “சார், நாம கிளம்பி ரொம்ப நேரம் ஆகிடுச்சி. ஆனா, இன்னும் டவுனுக்குள்ளேயே சுத்திக்கிட்டு இருக்கோம். இப்போ நாம எங்கே போறோம்…?” என்று கேட்டார்.

“அட இப்போதான் கவனிச்சிங்களா…? நாம எங்கேயும் போகலை கதிர். ஸ்டேஷன்ல இருந்தா ஏதாவது கேஸ் வந்துக்கிட்டே இருக்கும். இவ்வளவு ஃப்ரீயா டிஸ்கஸ் பண்ணியிருக்க முடியாது. அதுக்காகத்தான் சும்மா ஒரு ரௌண்ட்ஸ் போயிட்டு இருக்கோம். நீங்க சொல்ல வந்ததை சொல்லுங்க…”

“ஊருக்குள்ள நல்லவன் வேஷம் போட்டுக்கிட்டு, பரந்தாமன் ஏதோ ஒரு தவறான நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறார். அதுல ஏற்பட்ட பிரச்சனையினால அவர் கொல்லப்பட்டிருக்கலாம்னு நினைக்கிறேன் சார்.”

“எந்த மாதிரியான தவறான நடவடிக்கைன்னு ஏதாவது யூகிக்க முடியுதா…?”

“மிலிட்டரியில் இருக்குறவங்க கூட தொடர்புல இருந்திருக்காரு. அதேசமயம், நிறைய சந்தேகத்திற்கு இடமான அழைப்புகள் அவரோட மொபைல்ல இருந்து போயிருக்கு. அவருக்கும் நிறைய கால்ஸ் வந்துருக்கு. அதனால இவர் ஏதாவது இராணுவத் தகவல்களை தெரிஞ்சிகிட்டு, அதை அந்நிய சக்திகளுக்கு தெரியப்படுத்திக்கிட்டு இருந்திருக்கனும்னு தோணுது…”

“ஹ்ம்ம். நீங்க சந்தேகப்படுறதுல அர்த்தம் இருக்கு. நீங்க ஒன்னு பண்ணுங்க. இதுவரைக்கும் கிடைச்ச தகவல்கள் எல்லாத்தையும் ஒரு ரிப்போர்ட்டா தயார் செய்து கொடுங்க. இனிமே தாமதிக்குறதுல அர்த்தம் இல்லை. உடனடியாக எஸ்பி ஆபீஸ்-க்கு ரிப்போர்ட் செய்திடலாம்.”

“ஓகே சார்…”

ஒரு சின்ன நகரத்தில் நடந்த கொலையில், ஹேக்கிங் போன்ற டெக்னாலஜி விஷயங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதும், வழக்கின் முடிச்சுகள் மிலிட்டரி வரை நீண்டுக்கொண்டு செல்வதும், ராம்குமாருக்கு பெரிய தலைவலியை கொடுத்தது.

“கதிர், ஒரு டீ சாப்பிடலாமா…?”

“சாப்பிடலாம் சார்…”

“ஒரு நல்லக் கடையாப் பார்த்து நிறுத்தச் சொல்லுங்க…”

இரண்டு நிமிடங்களில் கார் ஒரு பேக்கரிக்கு முன்பு சென்று நின்றது. டிரைவருடன் இருவரும் இறங்கி பேக்கரிக்குள் செல்ல, கல்லாவில் உட்கார்ந்திருந்தவரின் வயிற்றுக்குள் அமிலத்தின் உற்பத்தி அதிகரிக்கத் தொடங்கியது.

“வாங்க சார்… என்ன விஷயம்…? ஓனர் வெளியே போயிருக்கார்.” என்று சொல்லியவாறே அவர் ஓனருக்கு ஃபோன் செய்யத் தொடங்க, “ஒரு டீ சாப்பிடக் கூட நான் உங்க முதலாளிகிட்ட பெர்மிஷன் வாங்கனுமா…?” என்ற ராம்குமாரின் குரல், கல்லாவில் அமர்ந்திருந்தவரின் பதட்டத்தைத் தணித்தது.

“என்ன கதிர், இந்தக் கொலை வழக்குல இப்படியெல்லாம் ட்விஸ்ட் வரும்னு எதிர்பார்த்தீங்களா…?” என்று கேட்டார் ராம்குமார் சமோசாவை மென்றபடியே.

“இல்லை சார். எப்படியும் ஒரு வாரத்துக்குள்ள கொலையாளியை அமுக்கிடலாம்னு நினைச்சேன்…”

“சரி கதிர், நீங்க ஸ்டேஷன்-க்கு போனதுமே, சின்னதா ஒரு ரிப்போர்ட் ரெடி பண்ணிடுங்க. எஸ்பி ஆபீஸ்ல இருந்து என்ன சொல்லுறாங்களோ அதுக்கேத்த மாதிரி மூவ் பண்ணலாம்.”

“ஓகே சார்…” என்று கதிரவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, சாலையில் சென்றுக் கொண்டிருந்த ஆட்டோவைக் கண்ட ராம்குமார், “கதிர், சீக்கிரம் வாங்க…” என்றவாறே காரை நோக்கி ஓடினார்.

எதற்காக அழைக்கிறார் எனத் தெரியாமலேயே, கதிரவனும், டிரைவரும் வாங்கிய டீயை அப்படியே வைத்துவிட்டு ஓடினார்கள்.

“டிரைவர், முன்னால போற ஆட்டோவை ஃபாலோ பண்ணுங்க…” என்றவாறே ராம்குமார் காரில் ஏற, சற்றுத் தொலைவில் சென்றுக் கொண்டிருந்த ஆட்டோவை குறி வைத்து சீறியது கார்.

ஆட்டோவிற்கு பத்தடி தொலைவில் கார் சென்ற நேரத்தில், சிக்னலில் விழுந்த சிவப்புக்கு மதிப்பு கொடுத்து முன்னால் சென்ற வாகனங்கள் நிற்க, காரும் சிக்கிக் கொண்டது. ஆனால் ஆட்டோ சிக்னலைத் தாண்டி விர்ரென சென்று விட்டது.

கிரீன் சிக்னல் விழுந்ததும் சீறிப் பாய்ந்த காரின் பாய்ச்சலில், இரண்டே நிமிடங்களில் சாலையின் ஓரத்தில் சென்றுக் கொண்டிருந்த ஆட்டோ பார்வைக்கு கிடைத்தது.

ஆட்டோவை முந்திச் சென்று வழி மறித்து நின்றது கார்.

யார் மீது சந்தேகமாக இருக்கிறது என்று சொன்னாரோ, யாரை அருவெறுப்புடன் ஒதுக்கினாரோ, அதே காத்தவராயனுடன் ஆட்டோவிற்குள் இருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்தார் சதாசிவம்.

களை கலைவது தொடரும்

< 3 வது பாகம்

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...