பெண்கள் தினம் | கவிதாயினி அமுதா பொற்கொடி

 பெண்கள் தினம் | கவிதாயினி அமுதா பொற்கொடி

● உங்களைப் பற்றிய சிறு குறிப்பு

பிறந்தது நெல்லை…
வளர்ந்தது சென்னை…
பொன் கூண்டில் சொல்லக்கிளியாய் இருபதாண்டு இளமைக் காலம்…
அன்பான வழித்துணை,
உயிராய் இரண்டு வழித்தோன்றல்கள்…
முப்பதாண்டுகள் ஆசிரியர் பணி… அதில் இருபதாண்டு காலமாய் தலைமை ஆசிரியர் மற்றும் தாளாளராய் கூடுதல் பொறுப்பு… காலத்தின் கட்டளையோ?
கருவில் இருந்தே உடன் வளர்ந்த கவி உணர்வோ?
அறியேன் யான்… ஆனால் கடந்த ஆறு ஆண்டுகளாய் கவிதாயினி. 13 நூல்களின் படைப்பாளி.

மிகை நிறை படைப்பாளி
சக்தி விருது
2020 சிறந்த பெண் கவிஞர் விருது
2018 working women achievers award
என் சிரசில் பதிந்த சிறகுகள்

● கொரோனா காலத்தில் பிள்ளைகளின் மனநிலை பாதிக்கப் பட்டிருக்கிறது அதை தீர்க்க என்ன வழிகள் செய்யலாம்?

இதுவரை உலகம் காணா பெரும் தொற்று காரணமாய் இறுக்கமான சூழல். கூண்டுக்குள் அடைக்கப்பட்ட பறவைகளாய் ஆகிப்போனது சிட்டாய் பறக்க வேண்டிய பிள்ளைகள் வாழ்க்கை. மீண்டுவர பெரும் பிரயத்தனம் தேவை. அதில் பெற்றோர் ஆசிரியர் சமுதாயமும் இணைந்தக் கரங்களாய் செயல்படுதல் அவசியம். இணையவழிக் கல்வியால், உள்ளச் சோர்வுடன் உடலின் இயக்கமும் வெகுவாய் குறைந்துபோனது… இது பெரும் மன அழுத்தம்தையும், பல நோய்கள் பிற்காலத்தில் ஏற்படவும் வழிவகுக்கும்… மனச்சோர்வை போக்கி உடலில் புத்துணர்ச்சி ஏற்பட, மாணவர்களுக்கு முதலில் மனநல ஆலோசனை மிக மிக அவசியம்… ஆரம்பப் பள்ளி குழந்தைகளுக்கு அடிப்படையான கல்வியை மட்டும் திருப்புதல் செய்தால் போதுமானது. அதையும் வழக்கமான வகுப்பறை சூழலை மாற்றி புதிய செயல்பாடுகளுடன், விளையாட்டு முறையில் கற்பித்தல் வேண்டும். உடற்பயிற்சி மற்றும் யோகாவை பாடத்திட்டத்தில் கட்டாயமாக இணைத்தல் அவசியம். மீண்டும் இதுபோன்ற அசதாரண சூழல் ஏற்படாத நிலை உருவாக, சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும்.

● பெண்களின் திடம் இப்போது குறைந்து வருகிறதா? முடிவுகளை எடுக்க அவர்கள் குழ்ம்புகிறார்களா?

நிச்சயமாக இல்லை. என்னைப் பொறுத்தமட்டில், ஆண்களைவிட பெண்களே தீர்க்கமான முடிவுகளை எடுக்கிறார்கள்.. உதைபட்டப் பந்து மீண்டும் அதே வேகத்தில் துள்ளி திரும்புவது போல, பலமுறை உதைப்பட்டதன் விளைவோ என்னவோ, இப்போது துணிந்து நிமிர்ந்து நடக்கத் தொடங்கியுள்ளனர் பெண்கள்.

● வாழ்க்கையை அதன் போக்கில் வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் பற்றிய உங்கள் கருத்து?

வாழ்க்கை அதன் போக்கில் போகாது என்பதே என் கருத்து… நம் வாழ்க்கை நம் கையில்… எண்ணம் போல் செயல், செயலே நம் வாழ்க்கையை நிர்ணயிக்கிறது… வாழ்க்கையை அதன் போக்கில் வாழவேண்டும் என்று நினைப்பவர்கள் அடிப்படையில் சோம்பேறிகள். ஒரு இலக்கு இல்லாதவர்கள். முயற்சி என்ற சொல்லுக்கே பொருள் தெரியாதவர்கள் போராட திறமை அற்றவர்கள் என்பதே என் கருத்து.

ஒரு கவிதாயினியாய் நான் பிரசவிக்கும் ஒவ்வொரு கவிதையுமே, என் உள்ள உணர்கள் சுமந்தவையே… அதில் இது சிறந்தது என்று என்னால் குறிப்பிட்டுக் கூற இயலாது…அத்தனையும் என் ரசனையின் வெளிப்பாடே… மக்களின் கவனத்தை அதிகம் ஈர்த்தக் கவிதைகள் உண்டு.

● எது தீட்டு? யார் குற்றம்?

பாதையில் கிடக்கும் பாறை நானே…
அங்கீகரிக்கப்பட்ட கற்பழிப்பு..
அவள் கற்பு இன்னும் களவு போகவில்லை
இப்படி பலக் கவிதைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

“நான் காலாவதியான கலாவதி பேசுகிறேன்”… திருநங்கையர் பற்றிய எனது இந்தக் கவிதை முகநூலில் ஆயிரக்கணக்கில் விருப்பக் குறிகளைப் பெற்றது.

●தினசரி அலுவல்களில் மனம் சோர்ந்து போகும்போது கடைபிடிக்க வேண்டியவைகள் என்று நீங்கள் கருதுவது?

உடலில் பலவீனம் ஏற்படும்போது, சற்று மனம் சோர்வதுண்டு. அப்போது உள்ளிருந்து ஒரு குரல் அசரீரியாய் ஒலிக்கும்.

.“இந்த வாழ்க்கை மண்ணில் ஒருமுறைதான். உன் இலக்கை அடைய இன்னும் பலகாதம் நீ கடக்க வேண்டும், நீ ஓட மறுத்தாலும் காலச் சக்கரம் ஓடிக்கொண்டேதான் இருக்கும்…. ம்ம்ம் எழுந்து ஓடு… அதோ உன் வெற்றி எட்டும் தொலைவில்” என்று என்னை அது தட்டி எழுப்பும்… என் உடலும் உள்ளமும் இயைந்து தானாய் நகரும்.

இது நமது வாழ்க்கை. இது நமது பயணம். ஒவ்வொரு அடியும் நம்மை முன்னோக்கி நகர்த்தும்.. ஒவ்வொரு நொடி தாமதமும் நம் வெற்றியை பின் தள்ளும். இதை மனதில் அடிக்கடி புத்துயிர்த்துக் கொண்டே இருக்கவேண்டும்.

● பெண்கள் தினம் பற்றி தங்கள் கருத்து?
உலகின் மாபெரும் சக்தி பெண்கள்… தினம் தினம் இவ்வுலகத்தை இயங்குவதே இந்த சக்தி தான்… தினம் தினம் கொண்டாடப்பட வேண்டியவர்கள் பெண்கள்…
அதை ஒருநாள் நிர்ணயித்துக் கொண்டாடுவது என்பது, ஏதோ அடர்ந்த காட்டுக்குள் உள்ள குலதெய்வத்தை ஆண்டுக்கு ஒருமுறை தேடிச் சென்று அர்ச்சனை ஆராதனை செய்வதற்குச் சமம்.

கமலகண்ணன்

1 Comment

  • வழக்கம் போல், நீங்கள் முத்திரை பதித்துவிட்டீர்கள் அமுதா.வாழ்த்துக்கள்.எனது நண்பியாக ஒரு நல்ல உள்ளத்தைப் பெற்றதில் பெருமிதம் கொள்கிறேன்.

    As usual you nailed it Amudha.Congratulations.Im proud and blessed to have a good soul as my friend.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...