‘ஹே சினாமிகா’ படத்தின்மூலம் இயக்குநராகிறார் மாஸ்டர் பிருந்தா
இந்தியத் திரையுலகின் முன்னணி நடன இயக்குநரான பிருந்தா இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். நடன இயக்குநர்களாகத் திரையுலகில் நுழைந்து இயக்குநரான ராஜு சுந்தரம், பிரபுதேவா, ராகவா லாரன்ஸ் ஆகியோர் வரிசையில் இப்போது பிருந்தாவும் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நடன குடும்பத்தைச் சேர்ந்தவர் பிருந்தா. நடன இயக்குநர்கள் கலா, கிரிஜா ஆகியோரின் சகோதரி. நூறுக்கும் மேற்பட்ட படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார். தற்போது இயக்குநராகியிருக்கிறார். தமிழ், மலையாளத்தில் தயாராகும் ஒரு படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்கிறார். அந்தப் படத்தில் நடனம் அமைத்துவரும் பிருந்தா அவரிடம் ‘ஹே சினாமிகா’ கதையைச் சொல்லி ஓகே வாங்கிவிட்டார்.
இந்தியத் திரையுலகில் அனைத்து முக்கியமான படங்களிலும் ஏதாவது ஒரு பாடலுக்கு பிருந்தா நடனம் அமைத்திருப்பார் பிருந்தா. அந்த அளவுக்கு அவர் பிஸி. அதிலும், மணிரத்னம் படங்கள் என்றாலே நடன இயக்குநர் பிருந்தாவாகத்தான் இருப்பார்.
தான் நடனம் அமைப்பதாக ஒப்புக்கொண்ட படங்கள் அனைத்தையும் முடித்து விட்டு, தமிழில் படம் இயக்கவுள்ளார் பிருந்தா. படத்தின் கதையை மதன் கார்க்கி எழுதி யிருக்கிறார். காதல் கலந்த காமெடிப் படமாக உருவாகும் இதில் துல்கர் சல்மான் நாயகனாக நடிக்கவுள்ளார். அதிதி ராவ் மற்றும் காஜல் அகர்வால் என இரண்டு நாயகிகள் நடிக்கவுள்ளனர். ரிலையன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கவுள்ள இந்தப் படத்துக்கு ‘ஹே சினாமிகா’ எனப் பெயர் வைத்துள்ளனர். இந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது.
மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் துல்கர் சல்மான், தமிழிலும் கணிசமான ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார். இவர் கடைசியாக இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற நேரடித் தமிழ்ப் படத்தில் நடித்தார். இப்படம் ரசிகர்கள் மத்தி யில் பெரும் வரவேற்பை பெற்றது.
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக ‘ஹே சினாமிகா’ படத்தில் நடித்துள்ளார்.
பிருந்தா பேசும்போது, “புதுச்சேரியில் படப்பிடிப்பு நடக்கும் நேரத்தில் கொரோனா ரெட் அலர்ட் இருந்தது. கடுமையான புயல், மழை நேரத்தில் ஒரு பாடல் காட்சியை எடுத்தது மறக்கமுடியாத அனுபவம். எந்தவித மறுப்பும் சொல்லாமல் அந்தப் பாடலில் துல்கர் சல்மானும் காஜலும் நடித்துக் கொடுத்தார்கள். காஜல் அகர்வால் எனக்காகப் பல விஷயங்களில் விட்டுக்கொடுத்து நடித்தார். இந்தப் படத்தை இயக்க நான் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. இவர்கள் கொடுத்த ஒத்துழைப்பால்தான் என்னால் படத்தை விரைவாக எடுக்க முடிந்தது. 64 நாட்கள் திட்டமிட்டு 42 நாட்களில் முடித்துவிட்டேன்” என்றார்.