பேய் ரெஸ்டாரெண்ட் – 25 | முகில் தினகரன்
அன்றே சிவகாமி பெரியம்மாவைச் சந்தித்து, தன் தாயிடம் சொன்ன அனைத்து விபரங்களையும் அட்சரம் பிசகாமல் சொல்லி முடித்த சுமதி, “எனக்கென்னமோ நிச்சயம் இந்த மெத்தேடு ஒர்க் அவுட் ஆகும்!ன்னு தோணுது பெரியம்மா” என்றாள்.
பொறுமையாக எல்லாவற்றையும் கேட்டு விட்டு, “சுமதி…என் பொண்ணு குணமடையணும் என்பதற்காக நீ எடுக்கற முயற்சிகளைப் பார்க்கும் போது எனக்கு ஒரு பக்கம் சந்தோஷமாயிருந்தாலும்.,..இன்னொரு பக்கம் சிரிப்பாயிருக்கும்மா…” என்றாள் சிவகாமி பெரியம்மா.
“ஏன் பெரியம்மா அப்படிச் சொல்றீங்க?”
“பின்னே என்னம்மா?…ஆவி நட்பு…அதுஇதுன்னு எதையோ பண்ணி…பேய் பிடிச்சு வந்து நிற்பவளிடம் போய்…பாடங்களை நல்லாப் படி.,.நிறைய மார்க் வாங்கு…எல்லாம் சரியாய்ப் போகும்!னு சொல்றது…கொஞ்சம் தமாஷாகவும் இருக்கு”
“பெரியம்மா…இந்த விஷயத்தில் மட்டும் என்னை நம்புங்க பெரியம்மா…நிச்சயம் பாடத்தில் அவள் கவனம் திரும்பும் போது…அவள் சரியாயிடுவா..”. உண்மையில் அந்தக் கல்பனாவின் உடம்பிற்குள் தூக்குப் போட்டு இறந்து போன ஒரு பெண்ணின் ஆவி இருக்கு…அது இவளைப் படிக்கச் சொல்லி வற்புறுத்திக்கிட்டிருக்கு” என்று சொன்னால் பெரியம்மா பெரிய களேபரத்தையே உண்டு பண்ணி விடுவாள் என்பதை அதை மறைத்தே பேசினாள் சுமதி.
“இங்க பாரு சுமதிக்கண்ணு…நாளைக்கு மந்திரவாதி கிட்டே கூட்டிட்டுப் போகப் போறோம்…அந்த மந்திரவாதி பயங்கர சாகஸக்காரர்…நிச்சயம் அவளுக்குள் இருக்கற ஆவியை ஓட்டிடுவார்” என்றாள் சிவகாமி பெரியம்மா.
கோபமான சுமதி, “பெரியம்மா உங்களுக்கு மண்டைல மூளை இருக்கா…இல்லையா?” பெரிய குரலில் கேட்டே விட்டாள்.
அதிர்ந்து போனாள் சிவகாமி பெரியம்மா.
“ஏய்…சுமதி…என்ன பேச்செல்லாம் ஒரு மாதிரிப் போகுது?”
சட்டென குரலைத் தணித்துக் கொண்ட சுமதி, “பெரியம்மா…அவ கல்யாணமாக வேண்டிய பொண்ணு…நாளைக்கு அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கும் போது…யாராவது, “இந்தப் பொண்ணுக்கு பேய் பிடிச்சிருந்திச்சு…மந்திரவாதி கிட்டே கூட்டிட்டுப் போய்த்தான் சரி பண்ணினாங்க….”ன்னு ஊரெல்லாம் பரப்பி வெச்சாங்கன்னா…அது அவ கல்யாணத்தையே பாதிச்சிடுமல்லவா?…நான்தான் முப்பத்துயஞ்சு வயசுக்கு மேலாகியும் கல்யாணம் ஆகாமல் கிடக்கிறேன்னா..என் தங்கைக்கும் அதே நிலைமை வரணுமா?” சென்டிமெண்டாகப் பேசினாள் சுமதி. அந்த கணத்தில் அவள் கண்களில் சுரந்து நின்ற கண்ணீர் உண்மையின் வெளிப்பாடு.
அந்தப் பேச்சில் நெகிழந்து போன சிவகாமி பெரியம்மா, “சரிம்மா…நாங்க என்ன பண்ணணும்…அதைச் சொல்லு” என்றாள்.
“நீங்க ஒண்ணும் பண்ண வேண்டாம்…அவகிட்ட நான் பேசிக்கறேன்”
“அதோ அந்த ரூம்லதான் உட்கார்ந்திட்டிருக்கா…உன்னோட நல்ல நேரம் இப்ப அவ நல்ல விதமாய்த்தான் இருக்கா…போய்ச் பேசு!…எதுக்கும் கொஞ்சம் தள்ளியே நின்னுக்கோ…எந்த நிமிஷம் மாறுவாள்னு சொல்ல முடியாது” என்றாள் சிவகாமி பெரியம்மா.
“அதை நான் பார்த்துக்கறேன்…நீங்க கவலைப் படாதீங்க!” என்று சொல்லி விட்டு அந்தக் கல்பனா இருக்கும் அறையை நோக்கிச் சென்றாள்.
உள்ளே, கட்டிலில் அமர்ந்து மேலே சுழலும் மின் விசிறியையே வெறித்துப் பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தாள் கல்பனா.
“க…ல்…ப..னா….” மெல்ல அழைத்தாள் சுமதி.
அவளிடம் எந்த அசைவுமில்லை.
“கலபனா…” லேசாக குரலை உயர்த்தினாள் சுமதி.
அப்போதும் அவளிடம் எந்தவொரு சலனமும் இல்லாதிருக்க, “ஏய்…கல்பனா” என்று உரத்த குரலில் கத்தினாள் சுமதி.
திடுக்கிட்டு, சுய நினைவிற்கு வந்த கல்பனா, சுமதியைப் பார்த்து, “அக்கா…எப்ப வந்தீங்க அக்கா?” கேட்டாள்.
“நான்..இந்த ரூமுக்குள்ளார வந்து சுத்தமா பத்து நிமிஷமாச்சு…நீதான் என்னைக் கவனிக்கலை” என்றாள் சுமதி.
“அய்யோ…ஸாரிக்கா…நான் வேற ஏதோ சிந்தனைல இருந்திட்டேன்…அதான்” உண்மையிலேயே வருத்தப்பட்டாள் அந்தக் கல்பனா.
“சரி…சரி…பரவாயில்லை!” என்ற சுமதி மெல்ல அவளருகே வந்து நின்று, தன் குரலைத் தணித்துக் கொண்டு, “ஆமாம்…உனக்கு என்னம்மா பிரச்சினை?…ஏன் உன்னைக் காலேஜிலிருந்து துரத்தி விட்டுட்டாங்க?” கேட்டாள்.
“அதான் எனக்கே தெரியலைக்கா…நான் திடீர்…திடீர்னு புத்தி மாறி வேற மாதிரியெல்லாம் நடந்துக்கறேனாம்!…சொல்றாங்க” சொல்லும் போது கல்பனாவின் முகத்தில் பரிதாபம் மிகுந்திருந்தது.
“ஓ…நீ அப்படி நடந்துக்கறது உனக்கே தெரியலையா?”
“ஆமாம்க்கா…திடீர்னு எனக்கு எல்லாம் மறந்து போகுது…என்ன பேசறோம்?…என்ன செய்யறோம்?ன்னே தெரிய மாட்டேங்குது…நான் திரும்பவும் சுயநினைவுக்கு வரும் போது…நான் இது செஞ்சேன்…அது செஞ்சேன்!னு மத்தவங்க சொல்லும் போதுதான் எனக்கே அது தெரியுது”
“ம்ம்ம்ம்…இதிலிருந்து மீள நான் ஒரு வழி சொல்லித் தர்றேன்…அதன்படி செய்வியா?” தலையைச் சாய்த்துக் கொண்டு கேட்டாள் சுமதி.
“சொல்லுக்கா” ஆர்வமாய்க் கேட்டாள் கல்பனா.
“இப்ப….நீ நல்லா படிக்கற ஸ்டூடண்டா…இல்லை ஆவ்ரேஜ் ஸ்டூடண்டா?” சுமதி கேட்க,
“ம்ம்ம்…ஆவ்ரேஜ் கூட இல்லை…அதுக்கும் கீழே…சுத்தமா நாலு பேப்பர் அரியர்ஸ் வெச்சிருக்கேன்!…என்னைப் பொறுத்தவரையில்…நான் மூணு வருஷம் படிப்பு முடிச்சு வெளிய போகும் போது டிகிரி வாங்க மாட்டேன்!…வெளிய போய்..அரியர்ஸ் எழுதி பாஸ் பண்ணிட்டுத்தான்…டிகிரி வாங்குவேன்” தன் நிலைமையை அப்படியே சொன்னாள்.
“அப்படின்னு யார் சொன்னது?”
“நான்தான் சொல்றேன்!…” உடனே சொன்னாள் கல்பனா.
அதைக் கேட்டு வாய் விட்டுச் சிரித்த சுமதி, “நான் சொல்றேன்…நீ எல்லா சப்ஜெக்டிலும் தொண்ணூறுக்கும் மேலே வாங்கி…பாஸ் பண்ணிடுவே!…யுனிவர்ஸிடி ஃபர்ஸ்ட் நீதான் வருவே!…உன்னை காலேஜ்ல இருந்து விரட்டி விட்ட அதே ப்ரின்ஸிபால் உன்னைப் பாராட்டிப் பேசுவார்…” என்றாள்.
“அடப் போக்கா…நடக்கற விஷயத்தைப் பத்திப் பேசுங்க…இப்படியெல்லாம் காமெடி பண்ணாதிங்க”
“எது நடக்காத விஷயம்?…நான் சொன்னதா?…நிச்சயம் நடக்கும்…ஆனா அதுக்கு நீ மனசு வைக்கணும்” சுமதி கொக்கி போட்டாள்.
“நானா?…எப்படி?”
“இன்னையிலிருந்து இதை ஒரு சேலன்ஞ்சா எடுத்து முயற்சி பண்ணு…நடக்கும்”
சில நிமிடங்கள் அமைதியாய் யோசித்த கல்பனா, “ஆமாம்…எனக்கு குணமாகறதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்?” தெளிவாய்க் கேட்டாள்.
“உன் மனசை நீ படிப்பில் மட்டுமே செலுத்து!….எல்லா நேரமும்…எல்லா நிமிஷமும்..எல்லா வினாடியும் உன் மனசு படிப்பை மட்டுமே நினைக்கட்டும்…அப்படி செஞ்சா திடீர்னு உனக்கு ஏற்படற அந்த நிலை மாறும்…மறையும்…” சுமதி ஆணித்தரமாய் சொல்ல,
“நிஜம்மாவா?” கண்களை விரித்துக் கொண்டு கேட்ட கல்பனாவின் குரலில் ஒரு மாற்றம் தெரிந்தது.
நெற்றியைச் சுருக்கிக் கொண்டு அவளையே கூர்ந்து பார்த்தாள் சுமதி.
“படிக்கறேன்…நல்லா படிக்கறேன்…எல்லோரும் பாராட்டும் அளவுக்கு மார்க் வாங்கிக் காட்டாறேன்” கல்பனாவின் வாயிலிருந்து வந்து விழுந்த வார்த்தைகள் வேறொரு குரலில் ஒலிக்க,
சுமதி புரிந்து கொண்டாள். “இப்ப பேசறது கல்பனா இல்லை…மார்க் வாங்க முடியாம தற்கொலை பண்ணி இறந்து போன அந்தப் பெண்ணோட ஆவிதான் பேசுது…”
“அப்ப நான் வர்றேன் கல்பனா….சொன்ன வார்த்தை மாறாதே…நல்லா படி…யுனிவர்ஸிடி லெவல்ல ரேங்க் உனக்காக காத்திட்டிருக்கு” சொல்லி விட்டுச் சென்றாள் சுமதி.
அவள் சென்ற சில நிமிடங்களில் சுயநினைவிற்கு வந்த கல்பனா யோசித்தாள், “பாஸ் பண்ணவே படாத பாடு படற நான்…நான் யுனிவர்ஸிடி ஃபர்ஸ்ட் வர முடியுமா?….”
“ஏன் முடியாது?…வருவே…வருவே” அவள் தலை மேலிருந்து குரல் வர, திடுக்கிட்டு தலையைத் தூக்கிப் பார்த்தாள்.
அங்கே யாருமேயில்லை. “என்னது?..யாரோ பேசின மாதிரி இருந்திச்சே?” யோசித்தாள்.
“சரி…முயற்சி செய்துதான் பார்ப்போமே?”
துணிந்தாள்.
அன்று வியாழக்கிழமை. சுப முகூர்த்த தினம்.
மருதமலை செல்லும் அனைத்து பஸ்களும் காந்திபுரத்திலேயே ஃபுல்லாகி, பிரயாணிகளை அடைத்துக் கொண்டு, நிறைமாத கர்ப்பிணியாய் நகர, வேறு வழியில்லாமல் அந்தக் கூட்ட நெரிசலுக்குள் தன்னையும் நுழைத்துக் கொண்டான் குணா.
கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் மூச்சுத் திணறலில் சிக்கித் தவித்தவன், பஸ் மருத மலையை அடைந்ததும் சக்கையாய் வெளியே தள்ளப்பட்டான்.
கீழே வந்து விழுந்ததும், “அப்பாடா” என்றபடி பெரிதாய் வாயைத் திறந்து வெளிக் காற்றை சுதந்திரமாய்ச் சுவாசித்தான். சட்டையின் நெஞ்சுப் பகுதி பட்டனைக் கழற்றி, உட்புறம் காற்றை ஊதிக் கொண்டான்.
மருதமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
மலையின் படிக்கட்டை நோக்கி நடந்தவனை இருபுறமுமிருந்த கடைக்காரர்கள் பாய்ந்து வந்து மொய்த்தனர்.
“சார்….பிரசாதக் கூடை வாங்கிட்டுப் போங்க சார்”
எதையும் சட்டை செய்யாமல் நேரே நடந்தான்.
மலை உச்சியில் திருமணத்தை முடித்துக் கொண்டு, சந்தோஷமாய்ச் சிரித்துப் பேசியபடி எதிரில் வரும் புதுமண ஜோடிகளை ஓரக் கண்ணால் பார்த்தபடியே நடந்தான்.
“பச்சைக் கலர் பட்டுப் புடவை என்கிற ஒரே அடையாளத்தை வைத்துக் கொண்டு இந்தக் கூட்டத்தில் எப்படி அந்தப் பெண்ணை அடையாளம் கண்டு பிடிக்கப் போறேனோ தெரியலை”
நடையின் வேகத்தை மட்டுப்படுத்திக் கொண்டு, ”இங்கே காலனிகளை விடவும்” என்ற போர்டுக்குக் கீழே நின்று தன் செருப்புக்களை தந்து டோக்கன் பெற்றுக் கொண்டு, மலைப் படிகளில் ஏறத் துவங்கினான்.
பத்து நிமிடத்திற்கு ஒரு புதுமணத் தம்பதிகள் என எதிரில் ஜோடிகள் வந்து கொண்டேயிருக்க, குணாவின் மனதில் இனம் புரியாத ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது.
மேலிருந்து பச்சை நிறப் பட்டுப் புடவையில் கீழிறங்கி வந்து கொண்டிருந்த ஒரு இளம் பெண், வரும் போதே யாரையோ தேடுவது போல் சுற்றும்முற்றும் பார்த்துக் கொண்டே வந்தாள்.
“இவளாயிருக்குமோ?…கரெக்ட் இவளேதான்.என்னைத்தான் தேடுகிறாள் போலிருக்கு!… பக்கத்தில் வரட்டும் கேட்டே விடலாம்”
குணாவின் கால்கள் வேகமாய் படிகளில் ஏற, அந்தப் பெண்ணின் கால்கள் நிதானமாய் படிகளில் இறங்க,
அவளை நெருங்க நெருங்க மனம் “திக்…திக்”கென்று அடித்துக் கொண்டது.
பக்கத்தில் அவள் வந்ததும், அவள் கழுத்தைப் பார்த்து அதிர்ந்தான் குணா. புத்தம் புது தாலிக்கயிறு பளபளத்தது.
“நல்லவேளை…கேட்காமல் விட்டோம்…கேட்டிருந்தால் தர்ம அடிதான்”
தொடர்ந்து படிகளில் ஏறினான்.
கால்கள் தன்னிச்சையாய் படிக்கட்டுகளைக் கடந்து கொண்டிருக்க, கண்கள் கடந்து செல்லும் கூட்டத்தில் உள்ள பச்சைப் புடவைப் பெண்களை அனிச்சையாய் கவனித்துக் கொண்டே சென்றது.
“சாமீ…தர்மம் போடு சாமீ…உனக்கு சீக்கிரமே மகாலட்சுமி மாதிரி ஒரு மனையாள் வந்து வாய்ப்பாள் சாமீ”
படிக்கட்டின் ஓரத்தில் அமர்ந்திருந்த ஒரு பிச்சைக்காரியின் வார்த்தைகள் அவன் காதுகளில் விழ, விருட்டென்று திரும்பி அவள் முகத்தைப் பார்த்தான் குணா.
அவள் கையேந்த, பாக்கெட்டினுள் கையை விட்டு நூறு ரூபாய்த்தாளை எடுத்து அவள் கைகளில் வைத்தான். விழிகளைப் பெரிதாய்த் திறந்து வியப்பைக் காட்டினாள் அந்தப் பிச்சைக்காரி.
நீண்ட நேர நடைக்குப் பின், கால்கள் வலிக்க, “ஆவி நண்பரே!….எனக்கு இது தேவையா?…இல்லாத ஒரு கரும்பூனையை…இருட்டு அறையில்…தேடுற குருடனாக்கிட்டியே என்னை?” திருவிளையாடல் தருமி போல் தனக்குத் தானே வாய் விட்டுப் புலம்பினான் குணா.
அதே நேரம்,
மலையடிவாரத்தில் வந்து நின்ற ஆட்டோவிலிருந்து மஞ்சள் நிறப் பட்டுப் புடவையில் ஜொலிப்புடன் இறங்கினாள் சுமதி.
“அடேங்கப்பா…இவ்வளவு கூட்டமா?…இதுல எப்படி அவரைக் கண்டுபிடிக்கறது?…ஆள் வேற குள்ளமாயிருப்பார்….கூட்டத்துக்கு நடுவுல போனால் கூட்த் தெரிய மாட்டாரே”
அவள் நம்பிக்கை தூள் தூளானது.
“ம்ஹூம்…இது ஆகற காரியமில்லை!…வந்தது வந்தாச்சு…மருதமலை முருகனையாவது தரிசனம் பண்ணிட்டுப் போவோம்”
மலைப்படிகளில் ஏறினாள்.
அவளுக்கு லட்சுமி நரசிம்மன் ஆவி மேல் மாளாத கோபம் வந்தது. “நல்லது செய்கிறேன் பேர்வழின்னு இப்படி மொட்டை வெயில்ல மலையேற வெச்சிட்டுதே…இந்த ஆவி!…ஹூம்…ஆவிக பேச்சுக்கெல்லாம் முக்கியத்துவம் குடுத்து வந்தேன் பாரு…அது என் தப்பு”
முக்கால் மணி நேரத்திற்குப் பிறகு சாமி தரிசனத்தை முடித்து விட்டு கீழிறங்கிய சுமதி, “இங்கிருந்து பிரயோஜனமில்லை…அந்த ஆளைக் கண்டுபிடிக்கவும் முடியாது…பேசவும் முடியாது” என்று முடிவு செய்தவளாய், பஸ் நிறுத்தத்தை நோக்கி நடந்தாள்.
வழியில் சிறு கும்பல்.
நாலைந்து பேர் சேர்ந்து யாரோ ஒரு ஆளை மிரட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்து நின்றாள்.
“இந்த மாதிரி நெறைய பேர் இந்தக் கூட்டத்துல திரியறானுக சார்!…நல்லவனாட்டம் போய் பொம்பளைக கிட்ட பேச்சுக் குடுப்பானுக…அப்புறம் கழுத்துல காதுல இருக்கறதை அறுத்துக்கிட்டு ஓடிடுவானுக” சொல்லியபடியே ஓங்கி அந்த ஆளின் கன்னத்தில் அறைந்தான்.
கூட்டத்தை விலக்கிக் கொண்டு முன்னே சென்ற சுமதி அங்கே அடி வாங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்ததும் ஆடிப் போனாள்.
மூன்றடி உயரத்தில் வெள்ளை சட்டையணிந்திருந்தான் அவன்.
மூளைக்குள் பளீரென்று ஒரு ஐடியா தோன்ற, “ம்ம்ம்…கரெக்ட்…அதான் ஒரே வழி” என்று தனக்குள் சொல்லிக் கொண்டு, “ஏங்க…எதுக்கு இங்க நின்னுட்டிருக்கீங்க?…இவங்கெல்லாம் யாரு?…எதுக்கு உங்களை மிரட்டறாங்க?” என்று நடிப்பாய்க் கேட்டாள்.
அவளது திடீர் வரவும், அந்தப் பேச்சும் புரியாத குணா “திரு…திரு”வென விழித்தான்.
அதற்குள் அந்த கும்பலில் ஒருத்தன், ”ஏம்மா…இவரு உங்க கூட வந்தவரா?” கேட்டான்.
“ஆமாம்…அதுக்கென்ன?” ‘வெடுக்’கென்று திருப்பிக் கேட்டாள் சுமதி.
அவளது மங்கலகரமான தோற்றத்தையும், குணாவின் அப்பாவித்தனமான முகத்தையும் பார்த்து விட்டு, “பார்த்துக் கூட்டிட்டுப் போம்மா..ஆள் குள்ளமா இருந்திட்டு…போற வர்ற பொம்பளைகளையெல்லாம் உத்து உத்துப் பார்த்துக்கிட்டு…சம்மந்தமில்லாமல் எதையெதையோ பேசிட்டிருக்கார்!…” என்றான்.
“சரி…சரி…அதை நான் பார்த்துக்கறேன்… நீங்கெல்லாம் கிளம்புங்க” விரட்டியடித்தாள் அந்த கும்பலை.