வாகினி – 34| மோ. ரவிந்தர்
அந்த மருந்து பாட்டிலுக்குள் என்ன இருக்கிறது என்று யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை!.
வாகினி சிறு குழந்தை என்பதினாலும், தாய்-தகப்பனை இழந்தவள் என்பதாலும் நீதிமன்றம் அவளுக்குப் பெரிதாகத் தண்டனை எதுவும் கொடுக்கவில்லை. ஒரு பெண் இந்தச் சமூகத்தை எதிர்கொள்ளும் வயது, காலம் வரும் வரை வாகினியை ‘ஆதரவற்ற அரசுக் பெண் குழந்தைகள் காப்பகத்தில்’ இருக்க வேண்டும் என்று வாகினிக்குத் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
அதன்படி வாகினி காப்பகத்தில் சேர்க்கப்பட்டாள்.
பள்ளிக்கூடத்தை விடவும் அந்த ஆதரவற்ற பெண் குழந்தைகள் அரசுக் காப்பகம் சற்று வித்தியாசமாகத் தெரிந்தது, அவளுக்கு. நீண்டதோர் மதில் சுவர் அமைத்து ஆங்காங்கே காற்று வசதிக்காக மரம், செடி, கொடிகள் மற்றும் உயர்ந்த கட்டடங்களாவும், பெரிய பெரிய அறைகளுடன் காணப்பட்டது. நூறு முதல் இருநூறுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்தக் காப்பகத்திற்குள் பாதுகாக்கப்பட்டுக் கொண்டிருந்தனர். வெள்ளைச் சீருடை அணிந்த ஆண் பாதுகாவலர்கள் மற்றும் பெண் பாதுகாவலர்கள் என அந்தக் குழந்தைகளைக் கவனித்துக் கொண்டிருந்தனர்.
அந்தக் காப்பகத்திற்குள் நுழைந்தவுடன் வாகினிக்கு தடபுடலான வரவேற்பு கிடைத்தது.
வார்டன் ரோஸி காப்பகத்தில் குழந்தைகளை வரிசையில் நிற்க வைத்து மதிய உணவு கொடுத்துக் கொண்டிருந்தாள்.
“ஏக்கா, நான் சொல்லல… ஆத்தால விஷம் கொடுத்து சாகடித்ததுன்னு, அது இதுதான் அக்கா!” என்றாள், நிர்மலா.
“என்னடி சொல்ற? இவள பார்த்தா ரொம்பச் சின்னப் புள்ளை மாதிரி தெரியுது. இவளா அதப் பண்ணியிருப்பா?” என்று கேள்வி கேட்டாள், ரோஸி.
“என்னத்த சொல்றது, இதுதான் அந்த வேலையைப் பண்ணிருக்குன்னு கோர்ட்டு இங்க தள்ளிவிட்டுருக்கு? என்றாள், நிர்மலா.
“சரி, நீ போ, நான் பார்த்துக்கிறேன்” என்று நிர்மலாவிடம் கூறிவிட்டு, “ஏய்… இப்படி வா” என்று அதட்டும் குரலில் வாகினியைப் பக்கத்தில் அழைத்தாள், ரோஸி.
வாகினி, அந்தக் கணீர் குரலுக்கு நடுநடுங்கிப் போனாள். மெதுவாகத் தயங்கிக் கொண்டே மனதில் பயத்தை வைத்துக் கொண்டு ரோஸி பக்கத்தில் தயங்கித் தயங்கி கொண்டு வந்து நின்றாள்.
“இங்க பாரு, உங்க அப்பா-அம்மா ஊட்டி வளர்த்து சோறு போட்டது மாதிரி எல்லாம் இங்க இருக்காது. சோத்துக்கு நேரமாச்சுனா பெல்ல அடிப்போம், வந்து வரிசையில் நின்னு சோற வாங்கிட்டுப் போய்ச் சாப்பிடனும். காலையில அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்து குளிச்சிட்டு, உன்னோட துணியெல்லாம் துவச்சி முடிச்சு தல சீவி ரெடியா இருக்கனும். எட்டரை மணிக்கெல்லாம் டீச்சரம்மா வந்து உங்களுக்கெல்லாம் பாடம் நடத்த தொடங்கிடுவாங்க, சரியா?” என்று வாகினியை அதட்டினாள், ரோஸி.
வாகினி பயந்துகொண்டே அத்தனைக்கும் மெதுவாகத் தலையாட்டினாள்.
“போ… அங்க இருக்குற தட்டை எடுத்துக்கிட்டுப் போய்ச் சோறு வாங்கிக்க” என்று கூறிவிட்டு, வாகினிக்குத் தட்டு இருக்கும் திசையைக் காட்டினாள், ரோஸி.
ரோஸி மீதிருந்த பயத்தால் மெதுவாக விம்மி விம்மி அழுதுக்கொண்டே தட்டிருக்கும் இடத்திற்குச் சென்று, ஒரு தட்டை கையில் எடுத்துக்கொண்டு சாப்பாடு வாங்கிக் கொள்ளும் வரிசையில் வந்து நின்றாள், வாகினி.
“ஏம்மா, அவளுக்குச் சோற போட்டு அனுப்பு” என்று பிள்ளைகளுக்குச் சாப்பாடு கொடுத்துக் கொண்டிருந்த பெண்ணிடம், ரோஸி குரல் கொடுத்தாள். வாகினி முன்னுக்கு வந்து தனக்கான சோற்றைத் தட்டில் வாங்கிக் கொண்டு நடந்தாள்.
அந்தச் சோற்றில் அனல் மூட்டம் குறையாமல் ஆவி பறந்து கொண்டிருந்தது. அவளால், அந்தத் தட்டை இரு கையால் அழுத்தமாகப் பிடிக்க முடியவில்லை. இரண்டு கைகளும் மாறி மாறி தாளம் போட ஆரம்பித்தது. அப்படியே சாப்பாட்டு தட்டைச் கீழே தவறவிட்டாள்.
“சனியனே! வந்த மொத நாளே இப்படியா பண்ணுவ? போய் அப்படி உட்காரு” என்று கூறிக்கொண்டே வாகினியின் தலையில் ஓங்கி ஒன்று வைத்தாள், ரோஸி.
குழந்தையால் அந்த வலியைத் தாங்க முடியவில்லை. வலியால் துடிதுடித்துப் போனாள். தேம்பித் தேம்பி அழுது கொண்டே சூடுபட்ட கைகளிரண்டையும் உதறிக் கொண்டே, அந்த இல்லத்தில் நீண்டதொரு பாதையில் ஓரமாகச் சம்மணமிட்டு அமர்ந்தாள், வாகினி.
விதியின் விளையாட்டை என்ன சொல்ல ? கனவிலும் இப்படி ஒரு காட்சி யாருக்கும் தோன்றியிருக்காது. கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் முட்டியது. பாசத்தோடு வளர்த்த தன் பெற்றோரின் நினைவுகள் அவளைக் கைது செய்தது. ஒருநாள் தனக்கும், தன் தங்கை வனிதாவிற்கும் தாய் சொன்ன அன்பு கதையும் கண்ணீராய் கலந்து விட்டது.
“அம்மா, தலையை வருடியது போதும். ஏதாவது ஒரு கதை சொல்லேன்” என்றாள், வாகினி.
“அதற்கு என்னடா செல்லம், கதைதானே சொல்லிட்டா போச்சு!” என்று கூறிவிட்டு, கதை சொல்ல ஆரம்பித்தாள், கஸ்தூரி.
“ஒரு சாமியார் தன்னோடு குடிலுக்குள் தவம் செய்து கொண்டிருந்தார்.”
“அம்மா, குடில்னா என்னம்மா?” என்று ஒரு கேள்வி கேட்டாள், வனிதா.
“மக்கு, அது கூடவா உனக்குத் தெரியாது. குடில்னா, வீடுடி!” என்று சொல்லிவிட்டுத் தாயிடம் “சரிதானாம்மா?” என்று கேள்வி எழுப்பினாள், வாகினி.
“சரி தாண்டி செல்லம்! அக்காவைப் பாரு, சரியா சொல்றா” என்று வாகினியின் கன்னத்தைக் கிள்ளிக் கொண்டே கதை சொல்ல ஆரம்பித்தாள், கஸ்தூரி.
திடீரென ஒரு சத்தம்…
“ஏய்…உன்னைத்தான்… இப்போ திரும்பப் போறியா, இல்லியா?’’
சாமியார் தவம் செய்வதை விட்டுவிட்டு நிமிர்ந்து அந்தத் திருடனைப் பார்த்தார்.
கையில் மின்னும் கத்தியுடன் அவரை முறைத்துப் பார்த்துக்கொண்டே, அந்த வீட்டுக்குள் சாமியாரைத் தவிர வேறு யாராவது இருக்கிறார்களா? என்று சுற்றும் முற்றும் பார்த்தான், திருடன்.
“நீ யாரப்பா… உனக்கு என்ன வேண்டும்?’’
`நானா… இன்னுமா உனக்குப் புரியலை? உன் வீட்ல திருட வந்திருக்கேன். ம்… உன்கிட்ட இருக்குற பணம் எல்லாத்தையும் கொடு. இல்லைனா என்ன நடக்கும் தெரியுமா?’’
“என்ன நடக்கும்?”
“ம்… என் கையில என்ன இருக்குனு பார்த்தேல்ல..? பணம் வேணுமா… உயிர் வேணுமா?’’
“சரி, சரி… உனக்குப் பணம்தானே வேணும்? என்னைத் தொந்தரவு செய்யாதே! நீயே போய் எடுத்துக்கோ. அதோ… அந்த மேசை இழுப்பறையில் கொஞ்சம் பணம் வச்சிருக்கேன்’’ என்று கூறிவிட்டு மீண்டும் சாமியார் தவத்தில் ஆழ்ந்தார்.
திருடன் அசந்துபோனான்.
‘இப்படியும் ஒரு மனுசனா? என் கையில கத்தி இருக்கு. இந்த ஆளுக்குப் பயம் வரலையே! ஒருவேளை வேற யாராவது பின்னாடி இருந்து நம்மை அடிச்சுப் போட திட்டம் போட்டிருக்காங்களா? சே…சே… இருக்காது. ஆளைப் பார்த்தாலே சாது மாதிரி தெரியுது. அப்படியே யாராவது இருந்திருந்தாலும், இந்நேரம் என்னைப் பிடிக்க வந்திருக்கணுமே..!’ என்று யோசித்துக்கொண்டு மேசையருகே போனான்.
மேசையைத் திறந்தான். அதிலிருந்த மொத்தப் பணத்தையும் அப்படியே எடுத்தான். அப்போது சாமியாரின் குரல் கேட்டது.
“என்னப்பா பணத்தை எடுத்துக்கிட்டியா? நான் சொன்னேன் என்பதற்காக மொத்தப் பணத்தையும் எடுத்துட்டுப் போயிடாதே. எனது தேவைக்காகக் கொஞ்சம் பணத்தை மட்டும் வச்சிடு. என்ன… சரியா?’’
திருடன் யோசனையுடன் அவரைப் பார்த்தான். அந்தத் சாமியாரின் குரல் அவனை ஏதோ செய்வதைப் போல் இருந்தது. அவனால், அதை அலட்சியம் செய்ய முடியவில்லை. எடுத்த மொத்தத் தொகையிலிருந்து சிறிது பணத்தை எடுத்து மேசை இழுப்பறையில் வைத்துவிட்டுக் கிளம்பினான். அவன் வாசல் கதவை அடைந்தபோது சாமியாரின் குரல் அவனைத் தடுத்தது.
“ஏனப்பா… வந்தாய், என் பணத்தை எடுத்தாய். ஒரு நன்றி கூடச் சொல்லாமல் போகிறாயே… இது உனக்கே நியாயம் எனப்படுகிறதா?’’
திருடன் அதிர்ந்தான் ‘என்னிடம் இவ்வளவு அன்பாக யாரும் பேசியதே இல்லை’ என்ற யோசனையுடன் சாமியாரின் அருகே வந்தான் திருடன்.
“எனக்குப் பணம் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி ஐயா…’’ என்று கூறிவிட்டு வெளியேறினான்.
சாமியார் மறுபடியும் தியானத்தில் ஆழ்ந்துபோனார்.
அந்தத் திருடன் வெகுநாள்களாக, பல வழக்குகளுக்காக உள்ளூர் காவலர்களால் தேடப்பட்டு வந்தவன். சாமியாரின் வீட்டிற்குள் திருடன் வந்து கைவரிசைக் காட்டிய செய்தி வெளியே வேகமாகப் பரவியது. காவலர்கள் தங்கள் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தினார்கள். ஒரு நாள் அவன் மாட்டிக்கொண்டான். விசாரணை நடந்தது. சாமியாரின் ஆசிரமத்தில் திருடியதற்குச் சாட்சி சொல்லும்படி அவருக்கு அழைப்புப் போனது. அவரும் வந்தார். அவரிடம் காவலர்கள் விசாரித்தார்கள்.
“இவன் என்னிடம் எதையும் திருடவில்லை. என்னிடமிருந்து சிறிது பணத்தைப் பெற்றுக்கொண்டான். அதற்கு நன்றிக்கூடச் சொல்லிச் சென்றான்” என்றார், சாமியார்.
அப்படி அவர் சொன்னதும், அந்தத் திருடன் உள்ளத்தில் அன்பும், சாமியாரின் மேல் இருந்த மரியாதையும் கூடிவிட்டது. ஆனாலும், பிற குற்றங்களுக்காக அந்தத் திருடன் சிறையில் அடைக்கப்பட்டான். வெளியே வந்ததும், அவன் சாமியாரிடம் சீடனாகச் சேர்ந்தான். பல ஆண்டுகள் அவருடன் இருந்து நல்ல மனிதனாக ஞானமும் பெற்றான்.
“நீங்க ரெண்டு பேரும் கூட வாழ்க்கையில் யாருக்கும் தீங்கு செய்யாமல் இருந்தால், நமக்கு எந்தப் பிரச்சனையும் வராது. நம்மால் பிறருக்கும் பிரச்சனை வராது.
அன்பே கடவுள், சரியா?” என்று வனிதாவிற்கு முத்தம் கொடுத்தாள், கஸ்தூரி.
சரிம்மா” என்றாள் வனிதா.
“அம்மா, கதை நல்லா இருக்கு. கதையில் இருக்குற சாமியார் மாதிரியே நாம எல்லாரும் அன்பா இருந்துட்டா எவ்வளவு நல்லா இருக்கும்” என்றாள், வாகினி.
“ஆமாண்டி செல்லம். இந்த உலகத்தில் யாருமே அந்தச் சாமியார் மாதிரி நல்லவங்களா இருக்கிறதில்லை. இருந்துட்டா, நீ சொல்ற மாதிரி நல்லா தான் இருக்கும்” என்று கஸ்தூரி பதிலளித்தாள்.
“ஆமாம்மா, நீ கூட அப்பாவ அடிக்கடி திட்டிட்டே இருக்க. எதுக்கும்மா, அப்பாவைத் திட்டிட்டு இருக்க? அந்தச் சாமியார் மாதிரி நீ கூட நல்லவங்களா இருக்கலாமில்ல ?” என்று சடாரென ஒரு கேள்வி எழுப்பினாள், வாகினி.
கஸ்தூரிக்கு மனம் சுருக்கென்று குத்தியது. அதை வெளியில் காட்டவில்லை.
இருந்தும் குழந்தைகள் முன்பு இது போன்று இனி நடக்கக் கூடாது என்று தோன்றியது.
“அப்பாவுக்கு நம்மள பத்தி கவலையே இல்லடி செல்லம்? யார் யாருக்கோ என்னென்னமோ செய்றாரு. அதனாலதான், அப்பாவ திட்டித் திட்டி நம்ம வழிக்குக் கொண்டு வரேன்” என்று மன வலியுடன் வாகினிக்குப் பதிலளித்தாள், கஸ்தூரி.
வாகினி, தன் தாய் சொன்னதைப் போல் ஒரு நல்லவளாக இந்தப் பாதுகாப்பு இல்லத்தில் மெல்ல வளர்ந்தாள்.
ஒருநாள் அப்படித்தான். தனது கைக்குள் அகப்படாத பெரிய சோப்புக் கட்டியை வைத்துக் கொண்டு துணியைத் துவைக்கக் கற்றுக்கொண்டு இருந்தாள், வாகினி. இவளுக்கு ஒரு துணிக்கு எவ்வளவு சோப்பு கரைய வேண்டும் என்ற அளவு தெரியவில்லை. நீண்ட நேரமாக ஒரே துணிக்குச் சோப்புக் கட்டியை வைத்துக் கொண்டு தேய் தேய் என்று தேய்த்துக் கொண்டிருந்தாள்.
இதைத் தூரத்திலிருந்து கவனித்துக் கொண்டிருந்த ரோஸி “சனியனே! உங்க அப்பா-ஆத்தாளுமா தினமும் சோப்பு கட்டிய வாங்கித் தராங்க. ஒரு துணிக்கு இவ்வளவு சோப்பப் போட்டு தேச்சுட்டு இருக்க” என்று கையில் வைத்திருந்த பிரம்பு கம்பால் வாகினியின் முதுகில் பளீரென ஒரு அடி போட்டாள்.
தரையில் துடிக்கும் மீனாய் துடிதுடித்துப் போனாள் வாகினி.
இப்படித்தான் அந்தச் சிறை வாசத்திற்குள் பல காலம் படிப்பு பாடத்தோடு சேர்த்து வாழ்க்கை என்னும் பாடத்தையும் சேர்த்து, கற்றுக் கொண்டாள், வாகினி.
உண்மைதான் குடும்பத்தார் கைவிடப்பட்ட பெரியவர்கள் அனாதை இல்லங்களிலும் தனது எண்ணத்தாலும், சூழலாலும் தவறு செய்த சிலர் காப்பகங்களிலும் வளர்வதும் அவர்களுக்கு மறைமுகமாக இன்னல்கள் ஏற்படுவது வாடிக்கையான ஒன்றுதானே.
இதையெல்லாம் நினைக்கும் பொழுது வாகினியின் நெஞ்சம் இருட்டுக்குள் தள்ளப்பட்டது. அன்பானவர்கள் சிலர் உடன் இருக்க, வனிதா, பாபுவின் வாழ்வில் ஒன்றும் கஷ்டம் இருந்திருக்காது என்று நினைக்கத் தோன்றியது.
வனிதாவின் வார்த்தைகளுக்கு என்ன கூறுவது என்று தெரியாமல், அவளின் முகத்தையே பெரும் சோகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் வாகினி.
“அக்கா, என்னத்த பெருசா யோசிச்சிட்டு இருக்க?” என்று கேள்வி எழுப்பினாள் வனிதா.
“ஒண்ணுமில்ல” என்று கூறிவிட்டு தன் அனுமதி இல்லாமல் வெளியேறிக் கொண்டிருந்த கண்ணீரை இடது கையால் துடைத்தாள், வாகினி.
“அத்தை, விடிஞ்சா சின்னப்பொண்ணு அக்கா ஊருக்குப் போறாங்களாம். என்கிட்ட தைக்கிறதக்குப் புடவையும், ஜாக்கெட் பிட்டும் கொடுத்திருந்தாங்க. நான் போயி அதைக் கொடுத்துட்டு வந்துடறேன்” என்றாள், வனிதா.
“ஏண்டி! காலையிலிருந்து என்ன பண்ணிட்டு இருந்த? பொழுது போன நேரத்துல ஜாக்கெட் துணியை எடுத்துட்டு வெளியே போற?” என்று கேள்வி எழுப்பினாள், திலகம்.
“இல்லம்மா, அக்காவ பார்த்ததுல்ல செய்யவேண்டிய வேலை எல்லாம் மறந்துட்டேன். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் சின்னப்பொண்ணு அக்காவிற்குத் தரவேண்டிய துணி ஞாபகத்திற்கு வந்தது. இப்பதான் தச்சு முடிச்சேன்.” என்று பதிலளித்தாள், வனிதா.
“நேரம் கெட்ட நேரம் ஆயிடுச்சு. வேணும்னா, பாபுவைக் கூடக் கூட்டிட்டு போ” என்றாள், மரகதம்.
“அவன் என்னைக்கு என்கூட வெளியே வந்து இருக்கான்? இப்போ வர்றதுக்கு” என்றாள், வனிதா.
பாபுவும், அவர்கள் சொல்லைக் கண்டுகொள்ளாதது போல் தனது பாக்கெட்டில் இருந்த ஏதோ ஒரு சீட்டை கையில் எடுத்து படிப்பதைப் போலப் பாசாங்கு செய்து கொண்டிருந்தான்.
“சரி போயிட்டு சீக்கிரமா வா” என்றாள், மரகதம்.
“சரிங்க அத்தை, பெரியம்மா நான் போயிட்டு வரேன்.” என்று கூறிக்கொண்டே வனிதா வாசப்படிக்கு வந்து கொண்டிருக்க…
“அந்த ஒயின்ஷாப் இருக்கிறப் பக்கம் போயிடாதடி, பொறுக்கிப் பசங்க குடிச்சிட்டுக் கிடப்பானுங்க” என்று கூக்குரலிட்டாள் மரகதம்.
வாகினி, ஏதோ பெரும் யோசனையுடன் வனிதா போய்க்கொண்டிருந்த வாசல்படியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.
தொடரும்…