பேய் ரெஸ்டாரெண்ட் – 21 | முகில் தினகரன்

 பேய் ரெஸ்டாரெண்ட் – 21 | முகில் தினகரன்

“சுமதீ…ஏய் சுமதீ” அம்மா ராஜேஸ்வரி உசுப்ப, திடுக்கிட்டு விழித்தாள். கண்கள் தீயாய் எரிந்தன.

“ஏண்டி இப்படித் தரைல படுத்துக் கிடக்கறே?…என்னாச்சு உனக்கு?…உன் கண்கள் ஏன் இப்படி ரத்தச் சிவப்பாய் இருக்கு?” கேட்டவாறே அங்கே தரையில் கிடந்த ஒய்ஜா போர்டையும், மற்றவற்றையும் பார்த்து, “இதெல்லாம் என்ன கர்மம்டி?” முகத்தை அசூசையாய் வைத்துக் கொண்டு கேட்டாள்.

“அம்மா…அது வந்து….”

சுமதி பதில் சொல்லுவதற்குள் குனிந்து அந்தக் காகிதத்தை எடுத்தாள் ராஜேஸ்வரி. “இதென்ன இது?…என்னென்னமோ கிறுக்கியிருக்கு?…ம்ஹும்…உனக்கு என்னமோ ஆகிப் போச்சு”

“அய்யா…அது நான் எழுதலை!” என்று வாய் தவறி சொல்லி விட்டு, உடனே நாக்கைக் கடித்துக் கொண்டு, தலையை இட, வலமாய் ஆட்டி மறுத்தாள் சுமதி.

“என்னது…நீ எழுதலையா?…அப்புறம் யார் எழுதினாங்க?…இந்த ரூம்ல நீ மட்டும்தானே இருக்கே?…வேற யாரு வந்து எழுதினாங்க?” ராஜேஸ்வரி முகத்தில் சந்தேக ரேகைகள்.

“இல்லையில்லை…நாந்தான்…நாந்தான் எழுதினேன்” என்றாள் சுமதி அவசரமாய்.

கண்களைச் சுருக்கிக் கொண்டு மகளைப் பார்த்த ராஜேஸ்வரி, “இல்லையே இது உன் எழுத்தில்லையே?…உன் எழுத்து மணிமணியாய் இருக்குமே?” கேட்டாள்.

“அம்மா…அது தூக்க்க் கலக்கத்துல எழுதினது!…அதனாலதான் அப்படிக் “கசா…முசா”ன்னு இருக்கு!…அதெல்லாம் உனக்குப் புரியாது” சொல்லியவாறே தாயிடமிருந்து அந்தக் காகிதத்தை “வெடுக்”கென்று பறித்துக் கொண்டாள்.

ராஜேஸ்வரி அவளை வினோதமாய்ப் பார்த்துக் கொண்டே வெளியேறினாள்.

— — — — — — –

அம்மா சென்றவுடன் அவசர அவசரமாய் அதைப் படித்தாள் சுமதி. தன் எழுத்து தனக்கே புரியாத நிலையில் இருக்க, நிதானமாய்க் கூர்ந்து பார்த்துப் படிக்கலானாள்.

“நான் பழனியைச் சேர்ந்த கல்யாண புரோக்கர்…என் வாழ்க்கையில் பல ஜோடிகளை திருமண பந்தத்தில் இணைத்துள்ளேன்…ஹார்ட் அட்டாக்கில் நாலு வருஷத்துக்கு முன்னாடி என்னுடைய அறுபத்திஎட்டாவது வயதில்தான் இறந்தேன்…என்னைப் பற்றி நீங்கள் பயப்பட வேண்டாம்…நான் உங்களுக்கு நன்மை செய்வதற்காகத்தான் வந்துள்ளேன்…நான் என் முக்திக்குத் தேவையான எல்லாவித நல்ல செயல்களையும்…இயல்புகளையும் வளர்த்துக்கிட்டு முழு இறையுணர்வோடு இருக்கேன்…என்னைப் போல் முக்தி நாடும் ஆவிகள் இது போல் ஊடகத்துக்குள்ளே வராது…ஏன்னா…அப்படி வந்தால் முக்தி நாடும் திறன் வளர்ச்சி குறைஞ்சிடும்…ஆனாலும் நீங்கள் ஆவியுலக மரணமடைந்த ஒரு பெண்ணோட ஆவிக்காக முயற்சி பண்ணிட்டு இருப்பதைப் பார்த்தேன்…அதை உங்களுக்குத் தெரிவிச்சிட்டுப் போகலாம்!ன்னு வந்தேன்…ஆவிகளுக்கும் ஆவியுலகில் மரணமுண்டு….என்னுடைய உதவி எப்போது தேவைப்பட்டாலும் உங்கள் தோழியை நினைத்து என்னை அழையுங்கள்…நான் வருவேன்!…அம்மா…”

அதைப் படித்து முடித்ததும் ஏதோவொரு நெருங்கிய நண்பரோடு பேசிக் கொண்டிருந்த உணர்வுதான் அவளுக்கு ஏற்பட்டது.

“என்னைச் சுற்றியுள்ள மனிதர்கள் என்னுடைய உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் என்னைக் காயப்படுத்தும் விதமாய் பேசித் திரியும் போது…உருவமேயில்லாத ஒரு அருவம் “நான் உன்னுடைய நண்பன், உனக்கு உதவி செய்யவே வந்திருக்கேன்”னு சொல்லுதே?…இதையெல்லாம் பார்க்கும் போது மனித உறவுகளை விட ஆவி உறவே தேவலாம் போலிருக்கே?”

மறுபடியும் அறைக்குள் வந்து எட்டிப் பார்த்த ராஜேஸ்வரி, “என்ன சுமதி?…ஆபீஸுக்குப் போகணும்!கற நினைப்பே இல்லையா?…மணி ஏழே முக்காலாயிடுச்சு!…போ…போய்க் குளிச்சு ரெடியாகு” கத்தி விட்டுச் சென்றாள்.

— — — — — — –

ஆபீஸ் காலை நேரச் சுறுசுறுப்பில் கலகலத்துக் கொண்டிருந்தது. போன்களின் சிணுங்கல்களும், அதைத் தொடர்ந்து பல வித குரல்களில் “ஹலோ”க்களும் அந்த இடத்தை ஆக்கிரமிப்புச் செய்திருந்தன.

“ஹாய் சுமதி?” சிரித்த முகத்துடன் வந்து சுமதியும் மேஜைக்கு எதிரே அமர்ந்தாள் ராதா. மார்க்கெட்டிங் அசிஸ்டெண்ட்.

“வா ராதா…என்ன திடீர்னு…அதுவும் வேலை நேரத்துல?”

“எல்லாம் விசேஷம்தான்” என்றபடி கையிலிருந்த பேக்கின் ஜிப்பைத் திறந்து ஓரங்களில் மஞ்சள் தடவிய திருமணப் பத்திரிக்கையை வெளியே எடுத்தாள்.

“அடுத்த மாதம் ஏழாம் தேதி கல்யாணம்!…உள்ளூரிலேயேதான்!…கண்டிப்பா வரணும்!…வீட்டுல அம்மா…அப்பா எல்லொரையும் கூட்டிட்டு வரணும்!” அன்புக் கட்டளையிட்டாள்.

“வாவ்!…அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!…கண்டிப்பா வர்றோம்” சுமதியின் முகம் சந்தோஷத்தில் விரிந்தது.

ஆனால், ராதா சொன்ன அடுத்த வார்த்தையில் அந்த மொத்தச் சந்தோஷமும் வடிந்து போனது.

“சீனியர்களெல்லாம் “பத்திரிக்கை குடுப்பீங்க…குடுப்பீங்க!”ன்னு பார்த்துப் பார்த்து…குடுக்காததால்…நாங்க ஜூனியர்ஸ் கிளம்பிட்டோம்” என்றாள்.

அவஸ்தையாய்ச் சிரித்தாள் சுமதி. வேறென்ன செய்ய முடியும்?

“பின்னே?…எத்தனை நாளைக்குத்தான் நாங்க பொறுத்திட்டிருக்க முடியும்?…அதான் ஓவர் டேக் பண்ணிட்டோம்!” என்றாள் ராதா மீண்டும் வாயெல்லாம் பல்லாக.

அவளை அப்படியே பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தி விடலாம் போலிருந்த்து சுமதிக்கு. “திமிர்…அத்தனையும் திமிர்… “பாத்தியாடி…உனக்கு இன்னும் எவனும் சிக்கலை…நான் பிடிச்சிட்டேன் பாத்தியா?”ன்னு சொல்லாமச் சொல்ற அகம்பாவம்” தொண்டை வரை வந்து விட்ட வார்த்தைகள் வெளியே வரத் துடிக்க, சிரமப்பட்டு அடக்கிக் கொண்டாள் சுமதி.

“ஓ.கே…சுமதி…நான் வர்றேன்!…இன்னும் நிறையப் பேருக்கு இன்விடேஷன் குடுக்க வேண்டியது பாக்கியிருக்கு” எழுந்தாள் ராதா.

“மொதல்ல இடத்தைக் காலி பண்ணு” என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டு, “சரி ராதா” என்றாள் வெளியில்.

அவள் சென்றதும் “ஹும்…என்னைய விட சுத்தமா பனிரெண்டு வயசு சின்னவ!…இவளுக்கெல்லாம்…ஹு……..ம்”

பெருமூச்சுதான் வந்தது.

ஆபீஸ் லன்ச் டைம்.

டைனிங் ஹாலில் ராதாவின் கல்யாணம் பற்றிய பேச்சு எழுந்த போதே சுமதிக்கு பகீரென்றானது. அந்தப் பேச்சு கடைசியில் திசை மாறி தன் தலையைத்தான் உருட்டுமென்பது அவளுக்குத் தெரியும்.

“ராதாவுக்கு நல்லதான் ஒரு கிப்ட் வாங்கித் தரணும்” என்றாள் பர்ச்சேஸ் டிப்பார்ட்மெண்ட் சுகன்யா.

“வழக்கம் போல் ஆபீஸ் ஸ்டாப்ஸ் கிட்டே கலெக்ஷன் பண்ணிடுவோம்!…அவகிட்டேயே என்ன கிப்ட் வேணும்?னு கேட்டுட்டு அதையே வாங்கித் தருவோம்” இது டெலிபோன் ஆபரேட்டர் கீதா.

“ஹூம்…அடுத்த மாசம் ஏகப்பட்ட கல்யாணத்துக்குப் போக வேண்டியிருக்கு…மொய் வெச்சே வறுமைக் கோட்டுக்குக் கீழே போயிடுவோம் போலிருக்கு” என்றாள் ரங்கநாயகி. பாவம், ஏழ்மைக் குடும்பத்தின் பிரதிநிதி அவள்.

“அந்த விஷயத்துல நாமெல்லாம் சுமதியக்காவுக்கு நன்றி சொல்லியே தீரணும்!…ஏன்னா இதுவரைக்கும் அவங்க நமக்கு மொய் செலவே வைக்கலை பாருங்க?” என்றாள் சுகன்யா.

“எனக்கென்னமோ இனிமேலும் அப்படியொரு செலவு நமக்கு வர்றதுக்கு சான்ஸே இல்லை!ன்னுதான் தோணுது” தயிர் சாதத்தில் தண்ணீர் ஊற்றியபடியே சுமதியின் இதயத்திற்குள் வென்னீர் ஊற்றினாள் கீதா.

இதற்கு மேலும் அங்கிருந்தால் அழுதாலும், அழுது விடுவோம், என்று அரக்க பரக்க சாப்பிட்டு விட்டுத் தன் இருக்கைக்கு ஓடினாள் சுமதி.

“ச்சை…இவங்கெல்லாம் மனுஷ ஜென்மங்கள் தானா?….அடுத்தவங்களோட மன வேதனையைக் கூடப் புரிஞ்சுக்க முடியாத அற்ப ஜந்துக்கள்!…நாகரீகமாக உடை உடுத்திக்கிட்டு வந்தா மட்டும் போதுமா?…பேச்சுல…செயல்ல ஒரு நாகரீகம் இருக்க வேண்டாமா?…மத்தவங்க ரணத்தைக் கிளறிப் பார்க்கற அநாகரீகத்தை இந்தச் சாக்கடைப் புழுக்கள் என்னிக்குத்தான் விடுதுகளோ?….அன்னிக்குத்தான் இந்தச் சமூகம் உருப்படும்”

புண்ணாகிப் போன உள்ளத்துடன் அமர்ந்திருந்தவளுக்கு திடீரென்று அந்த லட்சுமி நரசிம்மன் ஆவி ஞாபகத்தில் வந்தது. “அரூபமான அந்த ஜீவன் கூட அன்பாய்ப் பேசுது…ஆறுதலா நடந்துக்குது”

அவளையும் மீறி அவளுக்குள் அந்த ஆவியுடன் பேச வேண்டுமென்ற ஆவல் பிறந்தது. “இன்னிக்கு மறுபடியும் அந்த ஆவியை வர வைத்துப் பேசணும்”. தீர்மானித்தாள்.

தீர்மானித்த நிமிடத்திலிருந்து, “எப்படா…இரவு வரும்?” என்று காத்திருக்கலாயிற்று அவள் மனது.

இரவு.

“ஆகாயத்தில் தொட்டில் கட்டும்…மங்கை உன்னைக் கண்டால்…ஆசைத் தேரில் ஏறிக் கொண்டு நேரில் இங்கே வந்தாள்…இந்நேரத்தில் வந்தேன் என்று ஏதோ எண்ண வேண்டாம்!…பெண்ணாகத்தான் வந்தேன் இங்கு!…கண்ணா உன் மேல் எண்ணம் உண்டு”

வானொலியில் பாட்டுக் கேட்டவாறே பிளவுஸ் அயர்ன் செய்து கொண்டிருந்தாள் சுமதி.

“சுமதிம்மா…என்னடா பண்ணிட்டிருக்கே?” மிகவும் அன்பொழுகக் கேட்டபடியே உள்ளே நுழைந்தார் வேணுகோபால்.

அப்பா அவ்வளவு பவ்யமாகப் பேசுகிறார் என்றாலே ஏதோவொரு காரியத்திற்கு அடி போடுகிறார் என்பது சுமதிக்குத் தெரியும்.

“சொல்லுங்கப்பா…என்ன வேணும்?” சிரித்தவாறே கேட்டாள்.

“ஒண்ணுமில்லைம்மா…நாளைக்கு….சாயந்திரம்….” வார்த்தைகளை மென்று விழுங்கினார்.

“கொஞ்சம் சீக்கிரமே வந்திடும்மா…உன்னைப் பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர்றாங்க!”…இதைத்தானே சொல்ல வந்தீங்க?” சற்றுக் காட்டமாகவே கேட்டாள்.

“ஆமாம்மா…ஆமாம்மா…அதேதான்” அசடு வழியச் சிரித்தார்.

அவரை எரித்து விடுவது போல் பார்த்தவள், “அப்பா…போதும்ப்பா…இந்தப் பொண்ணுப் பார்க்கிற நாடகம்…இனியாவது என்னை நிம்மதியா இருக்க விடுங்கப்பா…ப்ளீஸ்” கெஞ்சினாள்.

“அம்மா…சுமதி…நீ சொல்றது எனக்குப் புரியுதும்மா…உன்னோட உணர்ச்சிகளைப் புரிஞ்சுக்க முடியாத அளவுக்கு ஜடமில்லைம்மா உங்கப்பன்!…உன்னோட நிலைமைல எந்தப் பொண்ணு இருந்தாலும் இப்படித்தான் பேசுவா!…அதே சமயம் என்னையும் கொஞ்சம் நினைச்சுப் பாரும்மா!…ஒரு தந்தையா…நான் செய்ய வேண்டிய கடமையை நான் செய்யாம் விட முடியுமா?…ஏற்கனவே ரொம்ப காலத்தைப் பொறுப்பில்லாமல் விரயம் பண்ணிட்டேன்மா…ஏதோ இந்தக் கட்டை காடு போறதுக்குள்ளார உன்னைக் கல்யாணக் கோலத்துல பார்க்கத் துடிக்குதும்மா இந்தப் பாவி மனசு”

பரிதாபமாய்ச் சொன்னவரைப் பார்க்கவே பாவமாயிருந்தது சுமதிக்கு.

“இவர் சொல்வதும் நியாயம்தான்!…இவரோட வியூல…இவர் செய்யறதுதான் சரிதான்…அதுதான் மானுட தர்மமும் கூட!…ஆனா எனக்குப் பிடிக்கலையே?…என்ன பண்றது?…எப்படி இதைத் தடுப்பது?” யோசித்தாள்.

“சுமதி…நீ இன்னும் என்னோட கேள்விக்கு பதிலே சொல்லலை!…”மிகவும் சன்னக் குரலில் கேட்டார்.

அதிகாரமாய்க் கேட்கப் போக, அவளும் அதிரடியாய் ஏதாவது எசகுபிசகாய்ச் சொல்லி விட்டால் மொத்த காரியமும் கெட்டு விடுமே?..என்கிற பயம் அவருக்கு. பாவம், அவரோட இயலாமை….அவரை பெத்த மகளிடம் கூட உரக்கப் பேச விடாமல் செய்தது.

“சரிப்பா…உங்க விருப்பம் போலச் செய்யுங்க!” வேண்டா வெறுப்பாய் சொல்லி விட்டு, அயர்ன் செய்த பிளவுஸை பீரோவிற்குள் வைத்து “ஆவ்” என்று வாயைப் பிளந்து கொட்டாவி விட்டாள் வேண்டுமென்றே.

“சரிம்மா…உனக்குத் தூக்கம் வந்து விட்டது போலிருக்கு…நீ தூங்கு!…நீ ஒப்புக்கிட்டியே…அதுக்கு ரொம்ப நன்றிம்மா!” சொல்லி விட்டு மலர்ந்த முகத்துடன் வெளியேறினார்.

அவர் சென்றதும் லைட்டை அணைத்து விட்டு பெட்ரூம் லைட்டை மட்டும் எரிய விட்டாள்.

படுக்கையில் விழுந்து, மேலே சுழலும் மின் விசிறியையே பார்த்தபடி படுத்திருந்தாள். “ஹும்…நாளைக்கு என்ன கூத்து நடக்கப் போகுதோ?…இந்தத் தடவை எந்த ராஜகுமாரன் வரப் போறானோ?…கிழவனோ?…குமரனோ?”

திடீரென அவளுக்கு அந்த எண்ணம் தோன்றியது, “ஆவி நண்பருடன் இது பற்றிப் பேசினால் என்ன?”

“விருட்”டென படுக்கையை விட்டு எழுந்து, வெள்ளைத் தாளை எடுத்து அந்த விபரங்களை எழுதினாள்.

பிறகு ஒய்ஜா போர்டை எடுத்து வைத்து அதன் முன் அமர்ந்தாள்.

கண்களை மூடிக் கொண்டு, இறந்த தோழியின் முகத்தை மனக் கண்ணில் கொண்டு வந்து நிறுத்தினாள்.

அவளின் அழைப்பு ஆவி உலகத்தை நெருங்கியதும், திரைச் சீலையின் சலசலப்பு லட்சுமி நரசிம்மன் ஆவி வந்து விட்டதை அறிவித்தது.

ஆவி சலன சாதனம் (பிளாஸ்டிக் துண்டு) நடனமாடத் துவங்கியதும் ஊடகரின் இடது கை “பர…பர”வென்று எழுதத் தொடங்கியது.

அந்த எழுத்துரையாடல் முடிந்ததும் ஆவி “டாட்டா” காட்டி விட்டுப் பறந்தது.

உடலைச் சிலிர்த்துக் கொண்டு சுய நினைவிற்கு வந்த சுமதி, ஆவி தந்த செய்தியைப் படித்தாள். “எப்படி இருக்கிறீர்கள்?…நலம்தானே?”

படித்து விட்டுப் புன்னகைத்தாள் சுமதி. “பரவாயில்லையே?…ஆவி கூட குசலம் விசாரிக்கின்றது?” மேலே படித்தாள்.

“நாளை உங்களைப் பெண் பார்க்க வருவதாய்ச் சொல்லியிருப்பவர்கள் நிச்சயம் வரமாட்டார்கள்…அவர்கள் குடும்பத்தில் ஒரு கெட்ட நிகழ்வு ஏற்படும்…அதையே அபசகுனமாய் எண்ணி அவர்கள் பெண் பார்க்கும் நிகழ்ச்சியை ரத்து செய்வார்கள்”

அவளுக்கு ஆச்சரியமாயிருந்தது.

“இதை நம்பலாமா?…ஆவி சொல்வது உண்மையா?” சந்தேகம் தோன்றிய அதே நேரம், நூலகத்தில் படித்த ஒரு புத்தகத்தில் தான் படித்த தகவலும் ஞாபகத்தில் வந்தது.

“உலகப் புகழ் பெற்ற அமெரிக்க குடியரசுத் தலைவர் ஆப்ரகாம் லிங்கன் கூட ஆவியுலகத் தொடர்பு வைத்துக் கொண்டு சில ஆவி நண்பர்களை கூட வைத்திருந்தாராம். ஆட்சி தொடர்பாக அவர் எடுத்த சில அடிப்படையான முடிவுகள் கூட சில நல்ல ஆவிகளுடன் அவர் தொடர்பு கொண்டு அவற்றிடமிருந்து பெறப்பட்ட முடிவுகள்தானாம்”

லட்சுமி நரசிம்மன் ஆவி தந்த செய்தியின் மேல் லேசாய் நம்பிக்கை வந்தது.

“ஓ.கே…பொறுத்திருந்து பார்ப்போம்” தூங்கப் போனாள்.

— — — — — — –

மறுநாள். ஆபீஸ் வேலையில் மூழ்கியிருந்தவளை அட்டெண்டர் முருகன் அழைத்தான். “மேடம் உங்களுக்குப் போன்!…அக்கௌண்ட்ஸ் ஆபீஸர் ரூம்ல”

எழுந்து போய் ஏ.ஓ.அறையின் கதவைத் தள்ளி, “எக்ஸ்க்யூஸ் மீ சார்” என்றாள்.

அவர் தலையை மேலும் கீழும் ஆட்டி, அவளை உள்ளே வர அனுமதித்து, மேஜை மேல் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த போனைக் காட்டினார்.

நிதானமாய் எடுத்தவள், “ஹலோ” என்றாள் சன்னக் குரலில்.

“ஹல்லோ…யாரு?…சுமதியா?” எதிர் முனையில் அப்பா.

“ம்…சொல்லுங்கப்பா…சுமதிதான் பேசறேன்!…என்ன விஷயம்?”

“அது ஒண்ணுமில்லைம்மா…இன்னிக்கு ஈவினிங் உன்னைய பொண்ணுப் பார்க்க வர்றதா சொல்லியிருந்தாங்களே?…அவங்க வரலையாம்!…”

சுமதிக்கு ஆச்சரியமாயிருந்தது. “ஏனாம்?” கேட்டாள்.

“வந்து…அவங்க குடும்பத்துல ஏதோ கெட்ட சமாச்சாரம் ஆயிட்டுதாம்…அதை அபசகுனம்ன்னு எடுத்துக்கிட்டு…இன்னொரு நாள் பார்க்கலாம்!னு சொல்லிட்டாங்கம்மா” சொல்லும் போது அவள் தந்தை வேணுகோபாலின் குரல் லேசாய்க் கரகரத்தது.

சுமதியின் முகம் பிரகாசமானது. “அப்ப…நான்…பர்மிஸன் போட்டுட்டு வர வேண்டியதில்லை!…அப்படித்தானே?”

“ஆமாம்மா…”

“சரிப்பா….நான் வெச்சிடறேன்”

போனை வைத்தவள் புன்னகையோடு திரும்ப, அதைக் கவனித்து விட்ட அக்கௌண்ட்ஸ் ஆபீஸர், “என்னம்மா?….ரொம்ப சந்தோஷமாயிருக்கே?…அலையன்ஸ் ஓ.கே.ஆயிட்டுதா?” கேட்டார்.

அடிவயிற்றிலிருந்து காறி அவர் முகத்தில் “சொத்”தென்று துப்பலாம் போலிருந்தது. அடக்கிக் கொண்டு ஒரு அக்கினிப் பார்வையை மட்டும் வீசி விட்டு அந்த அறையை விட்டு வெளியேறினாள்.

– தொடரும்…

< இருபதாம் பாகம்  |  இருபத்தி இரண்டாம் பாகம் >

கமலகண்ணன்

1 Comment

  • Very interesting. Eagerly waiting for next part

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...