வாகினி – 30| மோ. ரவிந்தர்
‘புயலுக்குப் பின் அமைதி’ என்ற பழமொழி இந்த ஊருக்கு இப்போது பொருந்தும்.
ஒரே நேரத்தில் மூன்று பேருடைய இறப்புக்கான பதிலை இந்த இரண்டு நாள்களாக ஆவடி பெருமக்கள் அனைவரும் வெந்து தணிந்த காடாய் அலசி ஆராய்ந்து, அசை போட்டுக் கொண்டிருந்தனர்.
ஆனால், மரணத்தைக் கண்ட அந்த இரண்டு இழவு வீடும் நெருப்பு ஜுவாலையின் மூட்டத்தில் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது.
‘அப்பவே சொன்னேன். இந்த அரசியல் எல்லாம் வேண்டாம். நீ கெட்டதும் இல்லாம என்னுடைய குடியையும் கெடுத்துட்டியே பாவி. இரண்டு பிள்ளைகளையும் எப்படி நான் தனியா கரைசேர்க்க போறேன்? இனி எங்களுக்குன்னு யார் இருக்கா? நீ செஞ்சிட்டுப் போன பாவம் எல்லாம் என் இரண்டு பிள்ளைங்க மேலையும் இப்படி வந்து விடியுது.
நீ செஞ்ச தப்பை எல்லாம் என்னோட மனசுக்குள்ளயே மறச்சுக்கிட்டது எவ்வளவு தப்புனு இப்ப பார்த்தியா. உன்னோட விஷயமெல்லாம் அன்னைக்கே வெளிச்சத்திற்கு வந்திருந்த என்னோட சொந்தங்களே உன்ன ரெண்டு துண்டா வெட்டி வீசி இருப்பாங்க. என்னோட பிள்ளைகளுக்காக எல்லாத்தையும் மறைச்சிட்டேனே’ என்ற பெரும் சிந்தனையுடன் கண்ணீர் மல்க, தன் குழந்தை இலக்கியாவை தன் மடி மீது கிடத்திக் கொண்டு தனஞ்செழியனை நினைத்து அழுது புலம்பிக் கொண்டிருந்தாள், மீனா.
என்ன தான் உற்றார், உறவினர் அனைவரும் தன்னுடைய சோகத்தில் பக்கத்தில் இருந்தாலும், சோகம் என்பது தனி மனிதனுக்குச் சொந்தம் அல்லவா? மீனாவிற்கு என்ன பதில் கூறுவது என்று தெரியாத வண்ணம் உறவினர்கள் அனைவரும் அவளுடைய முகத்தைப் பார்த்து அல்லாடிக் கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில் மீனாவின் வீட்டு வாசலில் ஆவடி இன்ஸ்பெக்டர் வானதியும், ஏட்டு ராஜாவும் ஜீப்பில் வந்து இறங்கினர்.
ஜீப் சத்தத்தைக் கேட்டு தனது கண்ணீரை வலது கையால் துடைத்துக்கொண்டே, அவசரத்துடன் மீனா வெளியே ஓடிவந்தாள்.
“சொல்லுங்க இன்ஸ்பெக்டர், ஏதாவது தெரிஞ்சுதா?” என்று கேள்வி மீனாவின் சொல்லிலிருந்து கண்ணீர் குரலாக ஒலித்தது.
“இல்லம்மா, இன்னும் விசாரணை நடந்துகிட்டுதான் இருக்கு. உங்க வீட்டுக்காரர் ஒரு அரசியல்வாதி. வெளியிலேயும் நிறைய எதிரிங்க இருக்கலாம். இவருக்குச் சீட்டு கொடுக்கிற விஷயம் வெளியே தெரிஞ்சி, பிடிக்காதவங்க யாராவது இந்தக் கொலை செஞ்சி இருக்காங்களான்னு விசாரிச்சுட்டு இருக்கோம். அதே சமயம், இன்னொரு சந்தேகமும் எங்களுக்கு இருக்கு. உங்க வீட்டுக்கு பக்கத்திலேயும் ஒருத்தர் அதே நேரத்தில் தூக்குப்போட்டு இறந்து இருக்காரு, அவருக்கும் உங்க வீட்டுக்காரருக்கும் ஏதாவது பிரச்சனை இருக்கான்னு, விசாரணை பண்ணிட்டு இருக்கோம்” என்றார் இன்ஸ்பெக்டர் வானதி.
ஏதோ ஒரு விஷயத்தை இன்ஸ்பெக்டர் வானதி மறைமுகமாகக் கூறியதும் மீனாவின் மனதுக்குள் ஒரு விஷயம் சுருக்கென ஒலித்தது.
“நீங்களும், அங்க இறந்து போனவருடைய மனைவியும் ஃபிரண்டுன்னு சொல்கிறாங்களே அது உண்மையா?” என்று இன்ஸ்பெக்டர் வானதி கேள்வி எழுப்பினார்.
“ஆமாங்க, நாங்க ரெண்டு பேரும் ஃபிரண்டுங்க தான். அடிக்கடி அவர்களும் என் வீட்டுக்கு வருவாங்க, நானும் அவர்கள் வீட்டுக்குப் போறதுண்டு, மற்றபடி எங்களுக்குள் எதுவும் இல்லை” என்ற ஒரே வார்த்தையில் முடித்தாள் மீனா.
“ராஜா, இப்படியே எங்க ரெண்டு பேரையும் பார்த்துட்டு இருந்தா எப்படி? சீக்கிரம் அவங்ககிட்ட ஒரு ஸ்டேட்மெண்ட் வாங்குயா” என்று ஏட்டு ராஜாவிடம் அதிகார தோரணையுடன் கூறினார் இன்ஸ்பெக்டர், வானதி.
“ஏம்மா, அந்த அம்மா உங்க வீட்டுக்கு அடிக்கடி வருவாங்கன்னு சொல்றாங்களே. அவங்க என்ன உனக்குச் சொந்தக்காரங்களா?” என்று ஒரு கேள்வியை எழுப்பினார், ராஜா.
அதேநேரம் இந்த விஷயம் காட்டுத்தீ போல் பக்கத்திலிருந்த எல்லாருக்கும் பரவத் தொடங்கியது.
“கோகிலா, பார்த்தியாடி ஊர் முழுக்கச் சும்மா புகைஞ்சிட்டு இருந்துச்சு. இன்னைக்கு உண்மையாக ஆயிடுச்சு, கஸ்தூரி அடிக்கடி மீனா வீட்டுக்குப் போறதுமா… வந்ததுமா இருப்பாளே. எனக்கு என்னமோ இவ மேல ஏதோவொரு சந்தேகமா இருக்குடி” என்று கோகிலாவிடம் துதி பாடினாள், சகுந்தலா.
“இருக்கலாண்டி, எந்தப் புத்துல எந்தப் பாம்பு இருக்குமோ? யாருக்குத் தெரியும் ! எல்லாம் கடவுளுக்குத்தான் வெளிச்சம். போலீஸ்காரங்க வேற இவ மேல சந்தேகப் பட்டுட்டுப் போறாங்க. கண்டிப்பா எதுனா இருக்கும்” என்றாள், கோகிலா.
அந்த நேரம், கழனி பாதைக்குச் சென்று விட்டு அந்தப் பாதையில் வந்து கொண்டிருந்த கஸ்தூரியின் காதில் இந்த விஷயம் பளீரென ஒலித்தது.
இருவரையும் வெளுத்து வாங்கி விடலாமா? என்று நினைத்தாள். ஏற்கெனவே, கணவனை இழந்த பெரிய சோகத்தில் மனம் புழுங்கிக் கொண்டிருக்க இதில் இவர்கள் என்னைக் கிள்ளுக்கீரைகள் என்று எண்ணிக் கொண்டு, அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள். அவள் கண்ணில் மட்டும் கடல் நீர் புகுந்து விளையாடியது. அதே வேகத்தோடு வேகமாக வீடு வந்தும் சேர்ந்தாள், கஸ்தூரி.
சிறு பிள்ளைகளான வனிதாவும், பாபுவும், மரகதம் வீட்டில் இருந்தனர். சோகம் அறியாத வாகினி, வீட்டுக்கு வெளியில் சில பிள்ளைகளோடு விளையாடிக் கொண்டிருந்தாள்.
வேகமாகத் தன் வீட்டுக் கதவைத் மூடிவிட்டு, அந்தக் கதவுக்குத் தன் முதுகைக் கொடுத்துக் கொண்டே குலுங்கி குலுங்கிப் பெரிதாக அழ ஆரம்பித்தாள், கஸ்தூரி.
“கடவுளே… எந்த ஒரு தப்பும் செய்யாத எனக்கு இவ்வளவு பெரிய தண்டனையைக் கொடுத்துட்டியே! இது உனக்கே நியாயமா? இந்தச் சின்னஞ்சிறு பிள்ளைகளை வச்சிக்கிட்டு நான் என்ன பண்ணப் போறேன்? தப்பு தப்பா என்னப் புரிஞ்சுக்கிட்ட இந்த ஊரு சனம் இன்னும் என்னென்ன கண்ணு, காது, மூக்கு எல்லாம் வச்சி என்னவெல்லம் பேசப் போறாங்களோ?ஐயோ…கடவுளே! இதுக்கு மேல நான் இந்தப் பூமியில் வாழ்றது எனக்கே பாவமாக இருக்கு. இந்தச் சமூகம் எப்படிப்பட்ட பொல்லாப்பு நிறைந்ததுன்னு என் பிள்ளைங்க தெரிஞ்சிட்டு வாழட்டும்’ என்ற பெரும் கோபத்தில், எப்போது எங்கேயோ வைத்திருந்த டைரியைத் தேடி அலமாரி இருந்த திசை பக்கம் தேடி ஓடினாள், கஸ்தூரி.
அந்த நேரம் மீனா, கஸ்தூரி வீட்டுக்குள் ஏதோ ஒரு பெரும் குற்ற உணர்ச்சியுடன் தயங்கித் தயங்கி உள்ளே நுழைந்தாள்.
கஸ்தூரி, அலமாரி பக்கத்தில் நின்று டைரியைத் தேடிக் கொண்டிருந்தாள்.
“அக்கா, என்ன மன்னிச்சிடுங்க. உங்களை இந்தக் கதிக்கு மாத்தினது இந்தப் பாவிதான்” என்று கூறிக்கொண்டே கஸ்தூரியின் காலில் சடாலென விழுந்தாள், மீனா.
‘வந்த கோபத்தை என்ன செய்வது என்று நினைத்துக் கொண்டிருக்க, இவள் இப்படி வந்து என் காலில் விழுகிறாளே என்று நினைத்துக் கொண்டு,
“என் கால்ல எதுக்குமா விழுகிற. அழாத எழுந்திரும்மா” என்று மீனாவைப் பக்குவப்படுத்தினாள், கஸ்தூரி.
“அக்கா, என் வீட்டுக்காரன் ஒரு பொம்பளப் பொறுக்கி. அவனுக்கு வாய்ப்பு கிடைச்சா என்ன வேணும்னாலும் செய்வான்னு எனக்கு நல்லாவே தெரியும். அதனாலதான், என் பிள்ளைகளுக்குக் கூட அவன் புத்தி தெரியாம வளர்த்து வந்தேன். நான் இல்லாத சமயத்தில், நீ எங்க வீட்டுக்கு வந்து ஏதோ ஆயிருக்கு. அண்ணனும் கொஞ்சம் அவசரப்பட்டு இருக்காருன்னு எனக்கு நல்லவே புரியுதுக்கா” என்று கூறிவிட்டு தேம்பித் தேம்பி அழுதாள், மீனா.
கஸ்தூரியின் மனம் பகீரென்றது.
‘நடந்த விஷயத்தை நடந்ததைப் போலவே சொல்லுகிறாளே’ -என்று பேரதிர்ச்சியில் உறைந்தாள். எதையும் சொல்லி வெடிக்க வைக்க வேண்டாம் என்று மனம் சொல்லியது.
“அப்படியெல்லாம் எதுவும் இல்ல, மீனா. நீ கண்டத நினைச்சு உன்னை வருத்திக்காத. இது நான் வாங்கி வந்த சாபம். உனக்கும் இதுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை” என்று கஸ்தூரியும் கண்ணீருடன் தன் கவலையை மீனாவிடம் பதிவு செய்தாள்.
“எனக்குத் தெரியும் அக்கா, என் வீட்டுக்குள்ள ஏதோ நடந்து இருக்குன்னு” என்று கூறிக்கொண்டே, கஸ்தூரி கையில் அணிந்திருந்த சில கண்ணாடி வளையலின் மாதிரி வளையல் துண்டுகள் தன் வீட்டில் கிடைத்ததாகக் கஸ்தூரியின் பார்வைக்கு நீட்டினாள், மீனா.
கஸ்தூரி கையிலும் வளையல் கிழித்து உடைந்த தடயங்கள் சில இருந்தன. இதை மீனாவும் நன்றாகக் கவனித்தாள்.
இதற்குமேல் மீனாவிடம் எதையும் மறைக்க முடியாது என்று எண்ணிக் கொண்டு மீனாவை பெரும் சோகத்துடன் கட்டித் தழுவிக்கொண்டே கண்ணீர் வடித்தாள், கஸ்தூரி.
தொடரும்…
1 Comment
Waiting for continue