திராவிடப் பூங்கா – ஆர்னிகா நாசர்

 திராவிடப் பூங்கா – ஆர்னிகா நாசர்

10.05.2020 கட்சி தலைமையகம் மாலை 3,00மணி

அன்னை பண்பு மாளிகை

முதலமைச்சர் மழப்பாடி மயில்சாமியும் துணை முதலமைச்சர் எஸ்.பி.வைரசெல்வமும் மற்ற அமைச்சர்களும் கூடியிருந்தனர்.

“ஜெய் ஸ்ரீராம்! மயில்சாமி அண்ணே… பப்ளிக்ல யாரை பார்த்தாலும் ஒரு மாதிரி ஈன்னு இளிச்சு கும்புடுறீங்களாம் கொஞ்சம் இளிப்பை குறைங்க…”

“ஹிஹி… குறைச்சிட்டா போச்சு” என வாய்விட்டு கூறியவர் மனதிற்குள், ‘சரியான வயித்தெரிச்சல் பார்ட்டி… வெளிலயிருந்து குருச்சேவ் பண்ற பிரச்சனைகளை விட இந்தாள் பண்றது அதிகம்’ புகைந்தார்

“நாம ஏன் இன்னைக்கு கூடியிருக்கம் தெரிமா? 2021 சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சரியா ஒரு வருஷம் அவகாசம்தான் இருக்கு. அதுக்குள்ள நம்ம சரிஞ்சிருக்ற செல்வாக்கை தூக்கி நிறுத்தனும்”

“ஆயிரக்கணக்கான மூங்கில்களை முட்டுக்கொடுத்து சரிவை நிறுத்திரலாமா?” என வினவினார் மேலூர் சாஜு

“நம்மை தூக்கி நிறுத்த நம்ம அப்பன் மேல இருக்கிறான்” கஜேந்திர மாலாஜி.

“இனியும் நாம அடுத்தவங்களை சார்ந்து இருக்காம சொந்தக்காலில் நிக்கனும். இருபத்திரெண்டு சதவீதமாய் இருக்கும் நம்ம ஓட்டுவங்கியை இரட்டிப்பாக்கனும்… 2021சட்டசபை தேர்தல்ல தனி மெஜாரிட்டியோட ஆட்சியை பிடிக்கனும்”

“என்ன செய்யலாம்?”

“ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் மாதம் அய்யாயிரம் பரிசு கொடுப்போமா?”

“சட்டசபை தேர்தலை 2026வரைக்கும் தள்ளிப்போட நம்ம அப்பன்கிட்ட சொல்வோம்?”

“கீபாவையும் பணகரனையும் நம்ம கூட சேத்துக்குவமா?”

வலதுகையை உயர்த்தினார் வைரசெல்வம்,

“இந்த யோசனைகள் எல்லாம் தற்காலிக வெற்றியைதான் தரும். அடுத்த 50வருடங்களுக்கு நம்ம செல்வாக்கை பலமடங்கு உயர்த்த கைவசம் ஒரு திட்டம் வச்சிருக்கேன்”

‘உன்னை முதலமைச்சர் வேட்பாளரா அறிவிக்கனும்னு சொல்லப் போறியா?’

“சொல்லுங்க வைரசெல்வம் அண்ணே”

“சிலை அரசியல்தான் என் கைவசம் இருக்கும் அலாவுதீனின் அற்புதவிளக்கு, திராவிட தலைவர்களுக்கு நாம தமிழ்நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் சிலை வச்சம். சிலை அரசியலை நம்மகிட்டயிருந்து தான் வடநாட்டு கட்சிகள் கத்துக்கிச்சு, சிலையை மார்பு வரைக்கும் வைக்கலாம் அல்லது ஆளுயர சிலையாக வைக்கலாம் ஆனா அதெல்லாம் ஓல்டு ஸ்டைல் இப்ப சிலை அரசியல் பேய்தனமா வளந்திருக்கு”

“சொல்லுங்கண்ணே”

“ந்யூயார்க் துறைமுகத்ல முன்னூறு அடி உயர சுதந்திராதேவி சிலை இருக்கு. பிரான்ஸின் பாரிஸில் ஆயிரம் அடி உயர ஈபில் டவர் இருக்கு. சீனால 502அடி உயர புத்தர் சிலை இருக்கு. மியான்மாரில் புத்தருக்கு 381அடிஉயர சிலை வச்சிருக்காங்க. ஜப்பானில் புத்தருக்கு 400அடி உயர சிலை. ஹாங்காங்கில் புத்தருக்கு 112அடி உயர சிலை. ஆப்கானிஸ்தானில் புத்தருக்கு 182அடி உயரசிலை. கன்னியாகுமரில திருவள்ளுவருக்கு 133அடிசிலை. லக்னோ அம்பேத்கார் நினைவு பூங்காவில் சாயாயவதி அவங்க கட்சி சின்னமான யானை சிலைகள் நூற்றுக்கணக்கானவற்றை எழுப்பியிருக்காங்க. ஸ்ரவணபெலகோலாவில் கோமடேஸ்வராவுக்கு 57அடி உயர சிலை. எல்லாத்துக்கும் சிகரமா சோடி குஜராத்தில சர்தார் சரோவர் அணை முகப்பில் சர்தார் வல்லபாய் படேலுக்கு 600அடி உயர சிலையை உருவாக்கியிருக்காரு, பட்டேல் சிலைக்கு மூவாயிரம் கோடி செலவான்னு எதிர்கட்சிகள் கேக்கிராங்க. இருந்தாலும் அது நாட்டின் மிகப்பெரிய சுற்றுலாதளம் ஆய்ருச்சு. அரசாங்கத்துக்கு கோடிக்கணக்கில் வருமானம். சோடிக்கும் வாக்குவங்கியில் கணிசமான முன்னேற்றம்”

“இதனால் என்ன சொல்ல வரீங்கண்ணே”

“சாயாவதியின் அம்பேத்கார் நினைவு பூங்காவையும் சோடியின் பட்டேல் சிலையையும் இணைச்சு நாம் புதுவிதமா ஒரு சிலை அரசியல் பண்ண வேண்டியதுதான்”

“கொஞ்சம் புரியுதுண்ணே”

“நாம திராவிடப்பூங்கா பத்தாயிரம் கோடி செலவுல நிர்மாணிக்கப் போறோம்… திராவிட கட்சிகளின் தாய் யார்? நியாயக்கட்சி. பி.ரங்க நாத செட்டி, என் எம் பாபர், வி.கடேச முதலியார்தான் நிறுவனர்கள். இவர்களுக்கு ஐம்பதடி உயரத்தில் சிலை வைப்போம். இவர்களிடமிருந்து பிரிந்து தனிக்கட்சி தொடங்கிய கி.ரா.ரங்கசாமிக்கு 200அடி உயரசிலை. ரங்கசாமியிடமிருந்து கட்சி தொடங்கிய தங்கதுரைக்கு 300அடி உயரசிலை. நம் கட்சி நிறுவனர் ஆர்.ஜி.யவனசந்திரனுக்கு 500அடி உயர சிலை. நம் தங்கத்தலைவி தெய்வநாயகிக்கு தங்கத்தில் 1000அடி உயரசிலை. முதலமைச்சருக்கு 40அடி உயர சிலை. துணை முதலமைச்சராகிய எனக்கும் 40அடிஉயரசிலை. அமைச்சர்களுக்கு 20அடிஉயரசிலை அத்தனை சிலைகளும் திராவிட பூங்காவிற்குள் அமைந்திருக்கும்…”

“திராவிடப்பூங்கா சூப்பர் அய்டியா”

“திராவிடப்பூங்காவில் சிலைகள் மட்டும்தான் இருக்குமா-”

“நம் கட்சி சின்னம் பத்தாயிரம் இடங்களில் ஸ்தூபிகளாக வைக்கப்பட்டிருக்கும். தெய்வநாயகியும் யவனசந்திரனும் நடித்த அனைத்து படங்களின் புரஜக்ஷன் இருக்கும். இரண்டு தலைவர்கள் பயன்படுத்திய பொருட்களை கண்காட்சியாக்கும் ம்யூசியம் இருக்கும். இருதலைவர்களின் மேடைபேச்சுகளின் அனைத்து ஆடியோ டேப்புகளும் இருக்கும். தினம் மாலை 7மணிக்கு லைட்ஷோ நடக்கும். திராவிட பூங்காவிற்குள் நுழைந்தால் குறைந்தபட்சம் மூன்றுமணிநேரம் பொழுதுபோக்குகள் இருக்கும் விதமாய் திராவிடபூங்கா அமைக்கப்படும்”

“திராவிடப்பூங்காவை எங்கு அமைக்கப் போகிறோம்-”

“சென்னையிலிருந்து நாற்பதாவது கிலோமீட்டரில் 500ஏக்கர் பரப்பளவில் திராவிடப்பூங்கா கட்டப்படும்”

“அட்டகாசம்”

தெய்வநாயகியின் சிலையில் சுழலும் படிக்கட்டுகள் அமைக்கப்படும். தெய்வநாயகி சிலையின் உச்சிக்கு சென்றால் சென்னை நகரின் பறவை பார்வை கனகச்சிதமாக கிடைக்க வேண்டும்”

“திராவிடப்பூங்காவில் எங்கப்பன் சோடிக்கு சிலை இல்லையா?” கஜேந்திரா மாலாஜி

“நாமலே எங்கப்பன் குதிருக்குள்ளே இல்லன்னு சொல்ற மாதிரி ஆய்டும். சோடியை அவங்க அவங்க நெஞ்சுக்குள்ள 1000அடி சிலையா வச்சுக்கங்க”

“தலைவர்கள் சிலைகளை எல்லாம் யார் செய்யப்போறாங்க-”

“ஆறுமுகம் ஸ்தபதியும் செல்வா ஸ்தபதியும்தான் திராவிடப் பூங்காவின் சிலைகளை வடிவமைக்கப் போறாங்க”

“தலைவர் யவனசந்திரானின் மனைவி ஆர்.என்.மானவிக்கு சிலை கிடையாதா-”

“கிடையாது”

“தெய்வநாயகியின் உயிர்தோழி சந்திரகலாவுக்கு சிலை கிடையாதா-”

“கிடையாது”

“வைர செல்வம் அண்ணே… உங்க அரசியல் ஆலோசகர் ருத்ரமூர்த்திக்கும் உங்க பையன் மகேந்திரநாத்துக்கும் சிலை கிடையாதா?‘” கிண்டலாய் வினவினார் மேலூர் சாஜு

“உங்க மகனுக்கும் கூட சிலை வச்சிரலாம் விடுங்க”

“ஒரு யோசனை” பயக்குமார்

“சொல்லுங்க பாடகரே”

“நம்ம அகிமுக தொடங்கினதிலிருந்து கட்சில இருக்ற அபிமானிகள் அம்பது ஆண்கள் அம்பது பெண்களின் உருவச்சிலைகளை திராவிடப்பூங்கால அமைச்சா என்ன? அவங்களோட சிலைகள் பத்தடி உயரம் இருந்தால் போதும்”

“நல்ல யோசனை. ஒரு கோடி தொண்டர்களுக்கிடையே நமக்கு ஒரு நன்மதிப்பை ஏற்படுத்தும்… எண்ணிக்கையை நூறிலிருந்து சட்டசபை தொகுதிக்கு ஒருவரா 234 பேர் சிலைகள் வரை வைக்கலாம்”

“உண்மையான கட்சி உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து சிலை வைக்கும்போது யாருடைய குறுக்கீடும் இருக்கக்கூடாது காசு வாங்கிக் கொண்டு கண்டவன் சிலையை வைக்க சிபாரிசு செய்தல் கூடவே கூடாது”

“இந்த திராவிடப்பூங்கா எத்தனை நாட்களில் அமையும்?”

“இரண்டாயிரத்தி இருபத்தி ஒண்ணு சட்டசபை தேர்தல் அறிவிக்கிறதுக்கு இரண்டு மாசத்துக்கு முன்னாடி இந்த திராவிடப்பூங்காவை திறந்து வச்சிடனும்”

“நாட்டின் பொருளாதாரம் நசிந்திருக்கும் நிலையில் பத்தாயிரம் கோடியில் திராவிடப் பூங்கா தேவையா? திராவிட பூங்காவில் கிமுகதலைவருக்கும் சிலை இல்லையா? யவனசந்திரனுக்கும் தெய்வநாயகிக்கும் சிலை வைப்பதை கூட பொறுத்துக் கொள்ளலாம் முதலமைச்சர் துணை முதலமைச்சர் அமைச்சர்களுக்கு சிலை தேவையா? இப்படி பலகேள்விகளை குருச்சேவும் மெய்கோவும் கேட்பார்களே பரவாயில்லையா?”

“குருச்சேவ் பேச்சை உதாசீனப்படுத்த வேண்டும்”

“தேர்தல் நேரத்தில் இந்த திராவிடப்பூங்காவை திறந்து வைக்கப் போகிறோம், ஊதாரித்தனமான செலவா என்றெண்ணி மக்கள் தேர்தலில் மாற்றி குத்தி விட்டால்?”

“நல்லகேள்வி. முதல் ஒருவாரம் மக்கள் மனநிலை நெகடிவ்வாக இருக்கும். அதன்பின் கூட்டம் கூட்டமாக திராவிடப்பூங்கா பார்க்க படை எடுப்பார்கள். தினம் ஒரு இலட்சம் பேர் குவிவர். திராவிடப் பூங்காவைச் சுற்றி கடைகளும் நகர்களும் தோன்றும். தெய்வநாயகியின் சிலையை தொட்டு கும்பிட ஆரம்பித்து விடுவர். உருவ வழிபாடு விஸ்வரூபிக்கும். நம்முடைய கட்சி செல்வாக்கு வெங்காய விலை போல கிடுகிடுவென உயரும். சட்டசபை தேர்தல்ல 150சீட் பிடிப்போம். நம்ம வெற்றி பார்முலாவை பார்த்துவிட்டு குருச்சேவ் கூட அவர்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் இதே போல இன்னொரு திராவிடப பூங்கா அமைக்க வேண்டும் என அபிலாஷிப்பார்…”

“திராவிடப்பூங்கா அய்டியா உங்களின் சொந்த மூளைக்குழந்தையா?”

“நான் என்ன தருமியா… யாரோ எழுதிக்கொடுத்த பாடலை மன்னரிடம் பாடி பரிசு பெற முயற்சிக்க” சிரித்தார் வைரசெல்வம்,

‘என்னிடம் இன்னொரு யோசனை கூட இருக்கிறது. 2021 சட்டசபை தேர்தலில் அகிமுக ஜெயித்தால் முதல் இரண்டரை வருடம் நான் முதலமைச்சர் இரண்டாவது இரண்டரை வருடம் மயில்சாமி முதலமைச்சர் அதனை தேர்தல் முடிவுகள் வந்தவுடன் செயல்படுத்த முயற்சிப்பேன்’ வைரசெல்வத்தின் மனக்குரல் பேசியது,

-திட்டமிட்டபடி திராவிடப்பூங்கா அமைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டது..

தெய்வநாயகியின சிலையை பார்த்து அனைவரும் அதிர்ந்தனர் ஆயிரம் சதவீதம் சந்திரகலா சாயலில் சிலை பரப்பன அக்ரஹாரதனமாய் சிரித்தது.

12.12.2021 காலை 11மணி –தலைமை செயலகம்

முதலமைச்சர் தமிழ் குருச்சேவ் மூத்த அமைச்சர் தூள்முருகனிடம் திரும்பினார் “மயில்சாமியும் வைரசெல்வமும் திராவிடப்பூங்கா அமைச்சு தெய்வநாயகிக்கு சிலை வச்சாங்க சிலை சந்திரகலா சாயலில் அமைஞ்சு தேர்தல்ல அவங்களை கவிழ்ந்து விட்ருச்சு. இப்ப நாம திராவிட பெரும்தலைவர் முதுகிழாருக்கு 1000அடி உயர பிளாட்டின சிலை வைக்கப்போரம். இந்த சிலை வைக்றதை நாம மிக சிறப்பா செய்யனும்” மகரந்தகுரலில் பேசினார்,

காதுவரை நீண்ட வாய் கொண்டு சிரித்தார் தூள்முருகன் “ஆமா ஆமா…”

1000கோடி செலவில் முதுகிழாருக்கு பிளாட்டின் சிலை வைக்கப்பட்டது.

17.09.2022 காலை 10மணி

முதுகிழார் சிலை திறப்பு விழா பிரமாண்டமாய் நடந்தது. வடஇந்திய தலைவர்கள் சிறப்புரையாற்றினர். கிம்தா சேனர்ஜி சிலையை திறக்க முன் வந்தார்,

சிலை ஸ்ஸோமோஷனில் திறக்கப்பட்டது. சிலையின் முகம் அனைவரின் முன் பார்வையானது. மகாமூத்தவரின் முகத்துக்கு பதில் பிரதமர் சோடியின் முகம் பப்பரப்பா என சிரித்தது. எட்டுகோடி தமிழ்மக்கள் ‘ஞே’ என விழித்தனர். ‘அடப்போங்கடா நீங்களும் உங்க சிலை அரசியலும்’ அரசியல் நோக்கர்கள் அங்கலாய்த்தனர்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...