துரோகங்களால் வீழ்ந்த டிராட்ஸ்கி

-வைகோ

இந்த நாட்களில்தான் மனிதகுல வரலாற்றில் மறக்கமுடியாத மனிதராக நான் கருதுகிற லியான் டிராட்ஸ்கியின் சுயசரிதையான ‘என் வாழ்க்கை’ எனும் அற்புதமான நூலைத் திரும்பவும் படித்துக் கொண்டு இருந்தேன். முப்பது ஆண்டுகளாக என் இல்ல நூலகத்தை அழகு செய்யும் அற்புதமான, உன்னதமான நூல் இது.

“மாகாளி கடைக்கண் வைத்தாள்… ஆகா என்று எழுந்தது யுகப் புரட்சி” என எரிமலைக் கவிஞன் பாரதி பாடிய சோவியத் ருஷ்யப் புரட்சியை முன்னின்று நடத்தியவர்கள் இருவர். ஒருவர் மாமேதை லெனின், இன்னொருவர் புரட்சியின் கதாநாயகன் லியான் டிராட்ஸ்கி.

கொள்கைப் புரட்டர்களாலும், எதிர்ப்புரட்சியாளர்களாலும் புரட்சியின் அறுவடையை அனுபவித்த பின், உண்மைப் போராளிகளுக்குத் துரோகம் செய்து, தலைமைப் பதவியைக் கைப்பற்றிக் கொண்ட வர்களாலும் விவரிக்க இயலாத துன்பங்களையும் வேதனைகளையும் தாங்கியவர் டிராட்ஸ்கி.

பல ஆண்டுகளாக டிராட்ஸ்கியிசம் என்றாலே ‘திரிபுவாதம்’ என்றும், டிராட்ஸ்கியிசம் என்றாலே ‘துரோகத் தனம்’ என்றும் கம்யூனிஸ்ட்கள் விமர்சித்து வந்தார்கள்.

மாமேதை லெனினின் இறுதி நாள்களில், அவரது மனதில் ஆறாத இரணத்தை ஏற்படுத்தியவர் ஜோசப் ஸ்டாலின். இதை லெனின் துணைவியாரான ‘குரூப்ஸ்கயா’ ஆதாரத்தோடு குறிப்பிட்டு இருக்கிறார்.

யூத குலத்திலே பிறந்த லியான் டிராட்ஸ்கி எழுதிய ‘என் வாழ்க்கை’ என்ற நூலில் இருந்து, அரசியலைப் போராட்டக் களமாக்கிக் கொண்டவர்கள் பல படிப்பினைகளைத் தெரிந்து கொள்ளலாம்.

முப்பது நூல்களுக்கு மேல் எழுதிய வித்தகரான டிராட்ஸ்கி இணையற்ற எழுத்தாளர். புரட்சியின் படைக் கலன்களான ஏடுகள் பலவற்றின் ஆசிரியராகத் திகழ்ந்தவர்.

அகிலத்தின் ‘நிரந்தரப் புரட்சி’ என்ற சித்தாந்தத்தை உருவாக்கி ஆயுதப் புரட்சியில் களத்தில் நின்று ஆயுதம் ஏந்திப் போராடியவர்.

உலகமே திகைக்கும் விதத்தில் 1917க்குப்பின் பிரமிக்கத்தக்க இராணுவத்தை இரஷ்யாவில் ஒரே ஆண்டில் கட்டி எழுப்பிய இராணுவ மேதை.

எதிரி நாடுகளின் படையெடுப்பை முறியடித்து, உள்நாட்டுப் போரில் போல்ஷ்விக்குகளுக்கு வெற்றி தந்தவர். நிகரற்ற சொல்வன்மை மிக்க மேடைப் பேச்சாளர். ‘ஸ்டாலினிஸம்’ என்ற எதேச்சதிகாரத் தன்மையை, கொள்கையற்ற பொய்மையை உலகத்திற்கு அம்பலப்படுத்தியவர்.

மாமேதை லெனின் திடீரெனப் பக்கவாதத்தால் நடமாடும் சக்தியையும் பேசும் திறனையும் இழந்த துயரத்தை, டிராட்ஸ்கியின் காதுகளுக்கு மூன்று நாட்கள் வரை சேரவிடாமல் தடுத்தனர். லெனின் உடல் நலம் ஓரளவிற்குத் தேறி பேசவும் நடக்கவும் மீண்டும் திறன் பெற்றதற்குப் பின்னரும் திரை மறைவுத் துரோகச் செயல்கள் தொடர்ந்தன.

லெனின் உயிர் நீத்த நாளில் ரஷ்ய நாட்டின் வேறொரு பகுதியில் இருந்த டிராட்ஸ்கியிடம், ‘உடனடி யாக லெனின் அடக்கம் செய்யப்பட்டு விடுவார் எனறும், அவரது ஈமச் சடங்குகளுக்கு முன்னர் வர ட்ராட்ஸ்கிக்கு வாய்ப்பு இல்லை’ என்றும் தகவல் தரப்பட்டது. ஆனால், மூன்று நாட்களுக்குப் பின்னர் தான் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டு, பதனப்படுத்தப்பட்ட பெட்டியில் சடலம் வைக்கப்பட்டது.

உண்மைகளை உரக்கப் பேசியதால் டிராட்ஸ்கி நாடு கடத்தப்பட்டார். அவரும் அவரது மனைவியும், மகளும் யாருக்கும் தெரியாமல் கைது செய்யப்பட்டு, பனிப் பிரதேசங்கள் வழியாக வெளியேற்றப் பட்ட கொடுமை சொல்லும் தரமன்று.

இக்காலத்தில்தான், டிராட்ஸ்கியின் இளைய மகள் நீனா நோய்வாய்ப்பட்டு இறந்தார். தந்தையிடம் இருந்து பதில் கடிதம் வரும் என மரணப் படுக்கையில் ஏங்கியவாறு உயிர் நீத்த நீனா, தந்தைக்கு எழுதிய கடைசிக் கடிதத்தை டிராட்ஸ்கியிடம் கொடுக்காமலே மறைத்தனர். அவள் இறந்தபிறகே கொடுத்தனர். மரணப்படுக்கையில் இருந்த அவளைப் பார்க்கவும் டிராட்ஸ்கியை அனுமதிக்க வில்லை.

1928 ஜனவரி 20 ஆம் தேதி, சீனாவை ஒட்டிய  ரஷ்யா எல்லைப் பகுதியில் ஒரு பாழடைந்த ‘அல்மா கட்டா’ என்ற சிறிய நகரத்திற்குக் கொண்டுசெல்லப்பட்ட டிராட்ஸ்கி, அங்கே சிறையில் வைக்கப் பட்டது போல முடக்கப்பட்டார்.

1929 ஜனவரி 20 இல் சோவியத் நாட்டில் இருந்தே டிராட்ஸ்கியை நாடு கடத்தும் உத்தரவு பிறப்பிக் கப்பட்டது. துருக்கி நாட்டின் கான்ஸ்டாண்டிநோபிளுக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

1929 ஜூன் மாதத்தில் பிரிட்டனில் குடியேற விரும்பி விசா கோரி விண்ணப்பித்தார். பிரிட்டிஷ் பிரதமர் மெக்னால்டுக்கும் தந்தி அனுப்பினார். ஆனால், தொழிற்கட்சி அரசு டிராட்ஸ்கியின் வருகையை விரும்ப வில்லை.

ஜார்ஜ் பெர்னாட்ஷா, ஹெச்.ஜி.வெல்ஸ், பேராசிரியர் ஹெரால்டு லாஸ்கி, பர்மிங்ஹம் மேற்றி ராணியார் ஆகியோர், அரசாங்கத்தைக் கண்டித்தும், ட்ராட்ஸ்ஸிக்கு அனுமதி தரக் கோரியும் அறிக்கை விட்டனர்.

பெர்னாட்ஷா தனது கடிதத்தில் குறிப்பிட்டதாவது:-

“மிகமிகப் பிற்போக்கான எதிரிகளுக்குக்கூட பிரிட்டன் புகலிடம் அளிக்கும்போது, உலகப் புகழ்பெற்ற ஒரு தலை சிறந்த சோசலிஸ்டுக்குப் புகலிடம் அளிக்க மறுப்பது ஓர் இக்கட்டான நிலையை உருவாக்கியுள்ளது. இந்த அரசாங்கத்தின் மறுப்பால் டிராட்ஸ்கியின் வாயை மூட முடியாது. அவர் உலக நாடுகளின் தீவிரவாதிகள் அனைவரும் போற்றிப் புகழும் மாவீரர். அவர்களுக்கு உணர்ச்சி ஊட்டுகிறவர். உந்து சக்தியாக விளங்குகிறவர். கூண்டில் அடைத்த சிங்கத்தைக் கண்டு பயப்படுகிற வர்கள், அந்தக் கூண்டின் சாவி தங்கள் கையில் இருக்க வேண்டும் என்று விரும்பினால் டிராட்ஸ்கியைப் பிரிட்டனுக்கு வர அனுமதிக்க வேண்டும்” என்றார்.

ஏனைய ஐரோப்பிய நாடுகளும் இக்கூண்டுச் சிங்கத்திற்கு விசா வழங்க மறுத்தன. ஜெர்மனிக்குச் செல்ல விரும்பிய டிராட்ஸ்கியை ஹிட்லர் வசை பாடினார்.

ஹிட்லரின் பத்திரிகையான ‘பெயோபச்சட்டர்’ 1929 பிப்ரவரி 9 இல் எழுதியதாவது, “சோவியத் யூத வேட்டை நாயான டிராட்ஸ்கி பெர்லினில் குடியேற விரும்புகிறான். இந்த யூதக் கொலைகாரன் மீது நாம் ஒரு கண் வைத்து இருப்போம்’ என்று எழுதியது.

‘ஜெர்மனியில் நாஜிகள் செல்வாக்குப் பெறுவது சோசலிசத்திற்குப் பேராபத்தாக முடியும்’ என்று ஹிட்லரைக் குறித்து தொடக்கத்திலேயே எச்சரிக்கை தந்தார் டிராட்ஸ்கி.

1932 பிப்ரவரி 20 ஆம் நாள், சோவியத் ரஷ்யாவின் அறிவிக்கப்படாத சர்வாதிகாரி ஸ்டாலின், டிராட்ஸ்கியின் குடி உரிமையைப் பறித்தார்.

டென்மார்க்கின் முற்போக்குவாதிகள் டிராட்ஸ்கியை அழைத்தனர். ஆனால், டென்மார்க் அரசு அனுமதிக்க வில்லை. சுவீடனும் மறுத்தது. பின்னர் பிரான்ஸ் நாட்டில் பாரஸ் பட்டணத்தை அடுத்த பார்பிசன் என்ற சிறிய நகரில் குடியேறினார்.

பின்னர் பிரான்சில் இருந்தும் நாடு கடத்தப்பட்டார். நார்வே நாட்டுக்குச் சென்றார். ஸ்டாலினின் ஆதிக்கக் கரங்கள் நார்வேயில் இருந்தும் டிராட்ஸ்கியை விரட்டியது. அங்கிருந்து அட்லாண்டிக் கடல் தாண்டி மெக்சிகோ போய்ச் சேர்ந்தார் டிராட்ஸ்கி.

டிராட்ஸ்கி தனது மரண சாசனத்தை 1940 பிப்ரவரி 27 இல் எழுதினார். அதே ஆண்டு ஆகஸ்ட் 21 ஆம் தேதி அவர் படுகொலை செய்யப்பட்டார்.

நயவஞ்சகமாகத் திட்டமிட்டு நண்பனைப் போலவே நடித்த அக்கொலைகாரன் தந்த கட்டுரையைச் சரிபார்த்துக் கொண்டு இருக்கும்போதே, கண்ட கோடரியில் டிராட்ஸ்கியின் தலையைப் பிளந்தான் கொலைகாரன் ஜக்சன்.

தலை வெட்டுண்ட நிலையிலும் கொலைகாரன் மீது பாய்ந்து டிராட்ஸ்கி போராடினார். உயிர் பிரியும் தறுவாயில், வாய் குழற அவர் கூறியது:

“ஒரு கொலைகாரனின் தாக்குதலால் நான் மரணத்தை நெருங்கிக் கொண்டு இருக்கிறேன்… எனது அறையில் என்னைத் தாக்கினான்… நான் அவனுடன் போராடினேன்…. தயவு செய்து நமது நண்பர் களிடம் சொல்லுங்கள்… நான்காவது அகிலத்தின்  வெற்றி  நிச்சயம்….. முன்னோக்கிச் செல்லுங்கள்…”

தொடர்ந்து பேச முயன்றார். முடியவில்லை.

காலம் மாறியது. 1988 நவம்பர் 7 ஆம் தேதி, மாஸ்கோவில் டிராட்ஸ்கியின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

என் நெஞ்சில் அதிர்வு அலைகளை ஏற்படுத்திய ஒரு மாவீரனின் மறைக்கப்பட்ட வரலாறை நான் உள்வாங்கிக் கொண்டதால் இதை எழுதி இருக்கிறேன்.

|| வைகோ ||

பதிவு : தோழர் Zarathustra

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!