இன்முகத்தோடு இறுதிக்கடன் செய்யும் இளைஞர்கள்

பெண்கள், ஆண்கள் என 500 தன்னார்வல இளைஞர்கள் ஒருங்கிணைந்து கொரோனாவால் இறந்த ஆதரவற்ற 1,684 உடல்கள் உள்பட 3,800 ஆதரவற்ற உடல்களை நல்லடக்கம் செய்துள்ளனர் உறவு கள் டிரஸ்ட் மூலமாக. சென்னை சூளைமேட்டில் உள்ள அலுவலகத்தில் அதன் நிறுவனர் காலித் அகமத்திடம் பேசினோம்.

காலித் அகமத்

இந்த எண்ணம் எப்படி வந்தது?

சாலையோரம் வாழும் மக்களிடம் ‘உங்கள் ஆசை என்ன?’ என்று கேட்டபோது அவர்கள் சொன்னது, ‘கடைசி காலத்தில் என்னை நாலு பேர் தூக்கிச் சென்று நல்லடக்கம் செய்யவேண்டும்’ என்றார்கள். அதேமாதிரி என் குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு மரணம்… எல்லாமே சேர்ந்துதான் உறவுகள் இல்லாத வர்களுக்கு உறவுகள் டிரஸ்ட் நிறுவத் தோன்றியது.

இந்த அமைப்பு எப்போது தொடங்கப்பட்டது? உடல்களை எப்படி நல்லடக்கம் செய்கிறீர்கள்?

2017ல் தொடங்கப்பட்டது. அரசு மருத்துவமனைகளில் உள்ள ஆதரவற்ற உடல்கள் மற்றும் அரசு வீதிகளில் உள்ளவர்களை மீட்டெடுத்து முதியோர் இல்லங்களில் வைத்திருக்கும். அவர்கள் இறந்த பின் அந்த உடல்களை டாக்டரின் சான்றிதழோடு நல்லடக்கம் செய்கிறோம். சென்னை, செங்கல் பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் எங்கிருந்தாலும் எங்களுக்குத் தகவல் தெரிந்ததும் எங்கள் குழுவிலிருந்து அந்தந்தப் பகுதியில் உள்ள தன்னார்வலர்கள் வந்திருந்து நல்லடக்கம் செய்வோம்.

எந்த முறையில் ஈமக்காரியங்களைச் செய்கிறீர்கள்?

ஆதரவற்றவர்கள் என்றால் பெயர், விலாசம் எதுவும் தெரியாது. இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர் என்று பெயரை வைத்து அந்தந்த முறைப்படி அவர்களுக்குரிய கல்லறையில் நல்லடக்கம் செய்வோம். பெயரும் சரியாகத் தெரியவில்லை என்றால் மாநகராட்சிக்கு உட்பட்ட பொதுவான மயானங் களில் நல்லடக்கம் செய்வோம்.

சாங்கியங்கள், சாஸ்திர சம்பிரதாயம் ஏதாவது செய்கிறீர்களா?

அப்படி எதுவும் செய்வதில்லை. போஸ்ட்மார்ட்டம் செய்த 15 நாட்களிலிருந்து 30 நாட்கள் வரை அமரர் அறையில் வைத்திருந்த உடல்களைத்தான் வாங்கி வருகிறோம். அதைப் பிரிக்கக்கூடாது. தண்ணீர் ஊற்றக்கூடாது என்பதால் நாங்களே தூக்கிச்சென்று குழி வெட்டி, உடலைக் குழிக்குள் இறக்கி மனதுக்குள் ஆத்மா சாந்தியடைய வேண்டிக்கொள்வோம். ஆதரவற்ற உடல்கள் எதுவாக இருந்தாலும் எரிக்கக்கூடாது என்பதால் எல்லா உடல்களையும் புதைத்து விடுவோம்.

இதுவரை எவ்வளவு உடல்களை நல்லடக்கம் செய்துள்ளீர்கள்?

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து 3,800 மேற்பட்ட உடல்களை எடுத்து வந்து நல்லடக்கம் செய்திருக்கிறோம். கொரோனாவால் இறந்த ஆதரவற்ற 1684 உடல்களை நல்லடக்கம் செய்துள்ளோம்.

வேறு என்ன மாதிரியான நல்லடக்க உதவிகளைச் செய்கிறீர்கள்?

பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்கள் எங்களிடம் கேட்டுக்கொண்டால் அவர்கள் வீட்டிலிருந்து உடல்களை எடுப்பதில்லை. முறையாக மருத்துவ மனையிலிருந்து இயற்கையான மரணம் என்கிற சான்றிதழோடு மருத்துவ மனையிலிருந்துதான் எடுத்து நல்லடக்கம் செய்வோம். உறவினர்கள் முன்னி லையில் அவர்களின் கல்லறையில், அவர்களின் முறைப்படி நல்லடக்கம் செய்கிறோம்.

எவ்வளவு பேர் இந்தச் சேவையில் ஈடுபட்டிருக்கிறீர்கள்?

மூன்று மாவட்டங்களையும் சேர்த்து 500 தன்னார்வலர்கள் இருக்கிறார்கள். பெண்கள் 240 பேர், ஆண்கள் 260 பேர். இவர்கள் எல்லாமே ஒரு வேலையில் இருப்பவர்கள். அவர்களுக்கு எப்போதெல் லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போது வந்து பங்கெடுத்துக்கொள்வார்கள். தன்னார்வலர்களான கல்லூரி மாணவ, மாணவிகள் தொடர்ந்து முகநூல் மூலமாகவும் சமூக வலைதளங்கள் மூலமாக எங்கள் பதிவுகளைப் பார்த்துவிட்டு விருப்பப்பட்டு வருகிறார் கள்.

உடல்களை எடுத்துச்செல்ல எங்களிடம் ஒரு ஆம்புலன்ஸ், நான்கு அமரர் ஊர்திகள் இருக்கின்றன. ஒரு உடல் ஆதரவற்ற நிலையில் தெருவில் இருக்கிறது என்றாலும் எங்களிடம் சொன்னால் எங்கள் வாகனத்தில் எடுத்துச்சென்று காவல்துறை மூலம் மார்சுவரியில் சேர்க்கவும் செய்கிறோம். அந்த உடல்களை போலிஸ் கட்டுப்பாட்டில் வைத்திருந்து நாளிதழ்களில் தெரிவித்து ஆதாரங்களைத் தேடுவார்கள். கிட்டத்தட்ட 30 நாட்களுக்குப் பிறகு யாரும் உடலைக் கேட்டு வரவில்லை என்றால் காவல்துறையே அந்த உடல் களைப் புதைத்துவிடுவார்கள். இதுதான் நடைமுறை. ஆனால் நாங்களே அதைச் சிறப்பாகச் செய்வதால் எங்களிடமும் தெரிவிப்பார்கள். நாங்கள் உடல் களை எடுத்துச் சென்று நல்லடக்கம் செய்வோம். ஒரு சமூகக் கடமையாகவே இதை நாங்கள் செய்கிறோம்.

உடல்களை நல்லடக்கம் செய்ய எப்படித் தகவல் கொடுக்கிறீர்கள்?

காலையில் ஒரு இடத்தில் சேர்ந்து அன்றைய பணியைப் பகிர்ந்துகொண்டு பிரிந்து செல்வோம். எங்களுக்கென்று உறவுகள் டிரஸ்ட் வாட்ஸாப் குழு இருக்கிறது. அதில் அடிக்கடி பகிர்ந்துகொள் வோம். உடனே அந்தந்தப் பகுதிக்கு வண்டிகளைப் பிரித்துவிட்டு செயலில் இறங்கிவிடுவோம். இதில் இருப்பவர் கள் எல்லாமே எங்கள் குழுவில் பதிவு செய்யப்பட்ட தன்னார்வலர்கள்தான்.

ஒரு நாளைக்கு எத்தனை உடல்களை நல்லடக்கம் செய்கிறீர்கள்?

அதைச் சொல்லமுடியாது. ஒரு நாளைக்கு ஒன்று அல்லது பதின்மூன்று உடல்களை வரை நல்லடக்கம் செய்திருக்கிறோம்.

ஆதரவற்றவர்களின் மரணம் இவ்வளவு ஏற்படுகிறதா?

சாலையோரத்தில் வசிக்கிற மக்களும் அதிகமாகத்தான் இருக்கிறார்கள். கோயம்பேடு பஸ் ஸ்டான் டில் மட்டும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தெருவில் வசிப்பார்கள். அவர்களுக்குச் சொந்தக்காரர்கள் இருப்பார்கள். ஏதோ மனக்கசப்பு காரணமாக வெளியே வந்தவர்கள் அப்படியே இறந்துவிடுகிறார் கள். அப்படிப்பட்டவர்களை இன்முகத்தோடு உறவுகள் டிரஸ்ட் மூலமாக நல்லடக்கம் செய்கிறோம்.

உடலுழைப்பு செய்யலாம், பொருளுதவி எப்படி கிடைக்கிறது?

எல்லாமே மக்கள் வழங்குகிற உதவிகள்தான். எங்களுக்கு சென்னை சூளை மேட்டில் அலுவலகம் இயங்குகிறது. டிரைவர்கள், கணக்கு பார்க்க என ஐந்து பேர் முழு நேரப் பணியில் இருக்கிறார்கள். எங்கள் வங்கி விவரம், கணக்கு வழக்குகள் வெளிப்படையாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. மக்கள் ஆதரவு மகேசனே ஆதரவு தருவதுபோலத்தான்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...