பத்துமலை பந்தம் | 34 | காலச்சக்கரம் நரசிம்மா

 பத்துமலை பந்தம் | 34 | காலச்சக்கரம் நரசிம்மா

34. ஆபத்துக்கு அடைக்கலம்

கோலாலம்பூர் மில்லினியம் ஹோட்டலினுள் நுழைந்து, பார்க்கிங் ஏரியாவில் நின்ற கேப்-பில் இருந்து இறங்கிய மயூரி, ரிசப்ஷனுக்கு விரைந்தாள். சோபா ஒன்றில் அமர்ந்தபடி அவளுக்காகக் காத்திருந்தாள், கனிஷ்கா.

“ஹாய் மயூரி..!” –என்றபடி எழுந்து நின்ற கனிஷ்கா அவளைத் தாவி அணைத்துக்கொண்டு முகத்தை அவளது தோளினில் புதைத்துக் கொண்டாள். மயூரியின் தோள்கள் தாமரையைப் போன்று விரிந்து, விலாப் பகுதியில் குறுகி, மீண்டும் இடையில் சற்றே விரிந்து, பாதங்களை நோக்கி மீண்டும் குறுகி, வளைவு நெளிவுகளோடு காணப்படும். கனிஷ்காவுக்கு ஒரே நேர்கோடாக, விலா மற்றும் இடை காணப்படும். முக அழகை மட்டும் வைத்து சினிமாவில் குப்பை கொட்டிக்கொண்டிருந்தாள்

தேவசேனாவின் அத்தை பையன் கார்த்திக்கிற்கு மயூரி மீதுதான் கண். ஒரு முறை நண்பர்களிடம், “மயூரியின் மேனி மவுண்ட் ரோடு மாதிரி வளைந்து நெளிந்து செல்லும். கனிஷ்காவின் உடல் பீச் ரோடு மாதிரி ஒரே நேர்கோட்டில் போகும்.” என்று கிண்டல் செய்துகொண்டிருக்க, அதைக் கேட்டுவிட்டு, கனிஷ்கா, அவனைத் தோட்டத்தில் விரட்டி பாத்ரூம் செருப்பால் விளாசி விட்டாள். தனது மேனியை நண்பர்களிடம் விமர்சித்ததுகூட அவளுக்கு கோபம் வரவில்லை. மயூரியின் மேனிதான் வளைவு நெளிவுகளுடன் இருக்கிறது என்று கூறி விட்டதாலேயே அந்த அடிகளை அவனுக்கு வழங்கியிருந்தாள்.

மயூரியின் தோளினில் அவள் தனது முகத்தைப் புதைத்த போதே, கனிஷ்காவின் மனதில் வன்மமும், வெறியும் தாண்டவமாடியது. தன்னைவிடத் தனது மாமாவின் பெண் அழகு என்கிற எரிச்சல் நெஞ்சைத் தகிக்க, சிரமப்பட்டு குரோதத்தை அடக்கினாள்.

“நீ எப்ப கோலாலம்பூர் வந்தே, கனிஷ்கா..?” –வியப்புடன் கேட்டாள், மயூரி.

“உனக்குத்தான் என்னோட லவ்வர் மிதுன் ரெட்டியைத் தெரியுமே..! ஒரு நட்சத்திர இரவு விழாவுக்காக இங்கே வந்திருக்கான். என்னையும் கூட வாயேன்னு கூப்பிட்டான். அதைக் காரணமா வச்சு உன்னைச் சந்திச்சு நம்ம குடும்பப் பிரச்சனைகளை பேசி சுமூகமாத் தீர்க்கலாம்னுதான் வந்தேன். என்கூட தேஜஸ் வந்திருக்கான். ஆனால் அவனை அமீர் ஆட்கள் கடத்தி தங்களோட கஸ்டடியில வச்சிருக்காங்க. இன்னொரு விஷயமும் நடந்திருக்கு. நீ மனசைக் கொஞ்சம் தைரியப்படுத்திக்க..!” –என்று சிறிது இடைவெளி விட்டாள், கனிஷ்கா.

“என்னாச்சு..?” –மயூரி பரபரப்புடன் கேட்டாள்.

“சியர் லீடர்ஸ் பொண்ணுங்க ரேப் அண்ட் மர்டர்ல உங்க அம்மா கைது செய்யப்பட்டிருக்காங்க..! கேரளா அரசியல்வாதி ஒருவரோட உங்கம்மா பேசிய பேச்சு ரெகார்ட் ஆகியிருக்கு. உங்க அம்மா ‘நான் மூணு பொண்ணுங்களை உங்க கெஸ்ட் ஹவுஸுக்கு அனுப்பறேன்னு சொல்லியிருக்காங்க. அந்தத் கெஸ்ட் ஹவுஸ்ல பல பெரிய புள்ளிங்க தங்கியிருந்தாங்களாம்..!’ –கனிஷ்கா கூற, தனது உடல் கூனிக்குறுக நின்றாள், மயூரி.

“சே..! என் அம்மாவா இப்படி..?” –கண்களில் பொலபொலவென்று கண்ணீர் வழிய, இடிந்து போய் அப்படியே சோபாவில் விழுந்தாள்.

“உன் அம்மா மட்டும் இல்லே… எல்லார் கிட்டேயும் பயங்கரமான மறு பக்கம் இருக்கு மயூரி..! நீ ஒருத்திதான், அவ்வையாருக்கு அத்தை பொண்ணு மாதிரி பேசிட்டு திரியறே..! உன்னுள்ளேயும் ஒரு பயங்கரமான மறுபக்கம் இருக்கும். அதை நீ எழுப்ப மாட்டேங்கறே..!” –கனிஷ்காவின் குரலில் கேலி தொனித்தது.

“தேவையே இல்லை..! எனது மறுபக்கத்தைக் காட்டி நான் வாழ்க்கையில பெரிய ஆளா இருக்கவே வேண்டாம். ஏர் ஹோஸ்டஸ் பதவியில எனக்குக் கிடைக்கிற சம்பளம் போதும். எங்க அப்பா அம்மா எனக்குச் சேர்த்து வச்ச எந்த ஆஸ்தியும் தேவையில்லை.” –மயூரி கூறினாள்.

“அரசியல்வாதியான உங்கப்பா பள்ளங்கியில பாதி நிலங்களை வளைச்சுப் போட்டிருக்காரு. ஏன்… நம்ம தாத்தாவோட மறுபக்கத்தைத்தான் அவரே சொல்லியிருக்கார். நவபாஷாணச் சிலையையே அபகரிச்சவர்தானே. இப்ப நான் சொல்றதைக் கவனமாக் கேளு, மயூரி. உங்க அம்மாவை கேரளாவுக்கு விசாரணைக்கு போலீஸ் அழைச்சுக்கிட்டு போயிருக்காங்க. என்னோட பிரச்சனை தேஜஸை உயிரோட மீட்கணும். அப்பா கார் ஷோ ரூம் தீ பிடிச்சு எரிஞ்சு போச்சு. அம்மா பத்திரிகை மேல வழக்கு நடக்குது. தேவசேனை அத்தை கோமாவுல இருக்கா. எல்லாருக்கும் பிரச்சனை. நாம மூணாவது சிலையைக் கண்டுபிடிச்சு, போகர் பாசறையில் பிரதிஷ்டை செஞ்சு, பழையபடி அபிஷேகத் தீர்த்தத்தை குடிச்சாத்தான் நம்ம பிரச்சனைகள் தீரும். உங்க அம்மா நடத்தற ஸ்கூலையே அரசு எடுத்துக்கணும்னு பேசி வராங்க. நம்ம குடும்பமே சிறுமைப்பட்டு கிடக்கிற இந்த நேரத்துல, நீதி, நேர்மை, பக்தின்னு சொல்லி டைமை வேஸ்ட் செய்யாதே..! எப்படியாவது, நாம அந்த மூணாவது நவபாஷாணச் சிலையைத் தேடிக் கண்டுபிடிக்கணும்.” –கனிஷ்கா சொல்ல, மயூரி தலையசைத்தாள்.

“அது நடக்காத காரியம். மலேஷியாவில் எங்கேன்னு போயி தேடறது. மேலும். அது சக்தி வாய்ஞ்சவங்களால காக்கப்பட்டு வருது..!” –சட்டென்று தன்னையும் மீறிக் கூறிவிட்டாள் மயூரி.

கற்பூர மூளையை கொண்ட, கனிஷ்கா, அவள் கூறியதைக் கேட்டு விட்டாள்.

“சக்தி வாய்ஞ்சவங்களால அது காக்கப்படறதுனு சொல்றேன்னா, அந்தச் சிலை இருக்கிற இடம் உனக்கு தெரிஞ்சிருக்கும் இல்லே..! உன்கிட்டே தானே பள்ளங்கி போகர் பாசறையில, நம்ம ரெண்டாவது சிலைக்குக் கீழே இருந்த ரகசியச் சுவடி இருக்கணும்..? ஸோ… யு நோ எவ்ரிதிங்..!” –கனிஷ்கா அவளைச் சந்தேகத்துடன் பார்த்தாள்.

மயூரி சமாளித்தாள். “எனக்குத் தெரியாது மயூரி..! எனக்கு அடைக்கலம் கொடுத்திருப்பவர் பேசினதை நான் ஒட்டுக்கேட்டேன். அவ்வளவுதான்.”

கனிஷ்கா, மயூரியின் புஜத்தைப் பற்றி அவளை எழுப்பினாள்.

“இதோ பாரு மயூரி..! நம்ம குடும்பத்தோட மானம் கப்பல் ஏறிட்டு இருக்கு. இப்ப நாம கட்டுக்கோப்பா இருக்கணும். நமக்குத் தேவை மூணாவது நவபாஷாணச் சிலை. தாத்தா திருப்பி பூஜையை ஆரம்பிச்சாதான் குடும்பத்தைக் காப்பாத்த முடியும்னு புலம்பிகிட்டு இருக்காரு..! நீயும், நானும் சேர்ந்து அந்தச் சிலையை எப்படியாவது கண்டுபிடிச்சு பள்ளங்கிக்கு எடுத்துச் செல்லணும். அடலீஸ்ட் அது இருக்கிற இடம் தெரிஞ்சா, நம்ம பிரச்சனைகள் தீருகிற வரைக்குமாவது வச்சுக்கிறோம்னுசொல்லி, வாங்கிட்டு போகலாம். கொஞ்ச காலம், பூஜை செஞ்சுட்டு, உரியவர்களுக்குத் திருப்பிக் கொடுத்திடலாம்.”

கனிஷ்கா கூறியதும், மயூரியின் சிந்தனை குகன்மணியிடம் தாவியது. இதுவும் நல்ல யோசனைதானே..! குடும்பத்தினர் சிலையைக் களவாட முயற்சிக்கிறார்கள் என்கிற அவப்பெயரும் நீங்கும். குகன்மணியிடம் சொல்லி பிரச்சனைகள் தீரும் வரையில், மூன்றாவது சிலையை ஆராதித்துவிட்டு, பிறகு திருப்பிக் கொடுத்து விடுகிறோம் என்று கூறினால், அது களவு இல்லை அல்லவா.! தகையோன் மலையில் இருக்கும் அந்தச் சிலையைக் குகன்மணியிடம் கடன் வாங்கினால் என்ன..?

தனது யோசனை மயூரியின் மனதில் சலனங்களை ஏற்படுத்திவிட்டதைப் பார்த்த கனிஷ்கா தனக்குள் சிரித்துக்கொண்டாள். மயூரியின் பலவீனமே, அவளது குடும்ப பாசம், பக்தி மற்றும் நேர்மை. அந்த பலவீனத்தைப் பயன்படுத்தித்தான் சிலையை அடைய வேண்டும்.

“மயூரி..! தேஜஸ் எனக்கு எப்படித் தம்பியோ, உனக்கும் தம்பிதான். அவனை உயிரோட முதலைக்குத் தீனியாப் போட்டுடுவேன்னு அபி மிரட்டறான். நீதான் அவனைக் காப்பாத்த உதவணும். அபி ஆட்கள் என்னை விரட்டிகிட்டே இருக்காங்க. நான் கொஞ்ச நாளைக்குத் தலைமறைவா இருக்கணும்.” –கனிஷ்கா மீண்டும் கண்ணீர் உகுக்க, அவளை ஆதூரத்துடன் தட்டிக்கொடுத்தாள், மயூரி.

“கவலைப்படாதே..! குகன்மணிகிட்ட சொல்லி, தேஜஸைக் காப்பாத்தலாம்.” –மயூரி கூற, கனிஷ்கா புருவத்தை உயர்த்தினாள்.

“அது யாரு குகன்மணி..?”

“எனக்கு அடைக்கலம் கொடுத்திருப்பவர்..!” –மயூரியின் முகம் சற்றே சிவந்தது.

அவள் முகத்தில் செம்மை படருவதைப் பார்த்ததுமே, கனிஷ்கா யூகித்து விட்டாள்.

“நீ வெட்கப்படறதைப் பார்த்தால், அடைக்கலம் டெம்போரரி இல்லை . ! பெர்மனெண்ட் அடைக்கலம் போல இருக்கே..!” என்றதும், மயூரி வெட்கத்துடன் தலை குனிந்தாள்.

‘பலே..! இந்த ஷாந்த சக்குபாய்க்குக் காதல் வேற ஏற்பட்டிருக்கு போல இருக்கே..! முருக பக்திக்காரி காதலன் எப்படி இருப்பான்..? அரவிந்த் சாமி மாதிரியா இருப்பான்.! ஜில்பா தலையும், ஜிப்பாவும், நெற்றியிலே குன்னக்குடி வைத்யநாதன் மாதிரி குங்குமமும், வாய் நிறைய வெற்றிலையை குதப்பியபடி இருப்பானோ..?’

‘அவன் எப்படி இருந்தால் என்ன..! இவளுக்கு வேண்டியது நவபாஷாணச் சிலை..!’

“அந்த குகன்மணிகிட்டே சொல்லி, நீ தேஜஸை எப்படியாவது காப்பாத்தணும்..! Time is Running Out..!” –கனிஷ்கா கூறினாள். எரிக் அறைக்கு சென்று அவனுக்கு நன்றி கூறிவிட்டு, கனிஷ்காவுடன், சைனா டவுனுக்குப் புறப்பட்டாள் மயூரி.

*

“குமுதினி..! மயூரி எங்கே..?”

“தெரியலை முதலாளி..! தோட்டத்துல போன் பேசிக்கிட்டே இருந்தாங்க. நான் அடுக்களையில் வேலையா. இருந்தேன். அப்போ கிளம்பி எங்கேயோ வெளியே போயிருக்கணும்..!”

“நான் படிச்சுப் படிச்சுச் சொன்னேன்..! கேட்கலை..! குடும்பப் பாசம் கண்ணை மறைக்குது..! பட்டாதான் அவங்க குடும்பத்தாருங்களோட பவிசு அவளுக்கு தெரியவரும்..!” குகன்மணி சலித்துக்கொண்டான்.

“எப்படிங்க முதலாளி..? ஒரு குடும்பத்துல அத்தனை பெரும் கிராதகர்களா இருக்காங்க. ஆனால் மயூரி மட்டும் எப்படி சேற்றிலே முளைச்ச செந்தாமரையா இருக்காங்க..?” –குமுதினி வியந்தாள்.

“கடவுள் பக்திங்கிற தத்துவமே, நாம கோட்டைத் தாண்டி போகக்கூடாதுனு சொல்றதுக்குத்தான். பயம் இருக்கிற வரைக்கும், மனுஷன் பக்குவத்தோட நடந்துப்பான். எப்பக் கடவுள் இல்லனு சொல்லி பயத்தை போக்கிடறாங்களோ, அப்ப கொலை, கொள்ளை எல்லாம் தாண்டவமாடும். மயூரி குடும்பத்துல அவளை தவிர வேறு யாருக்குமே கடவுளிடம் பயம் இல்லை. கடவுள் பெயரைச் சொல்லி தங்களை முன்னிறுத்திக்கப் பார்க்கிறாங்க.” -குகன் கூறினான்.

“இதுக்கு முடிவுதான் என்ன..?” –குமுதினி கேட்டாள்.

“தகையோன் மலையில மூணாவது சிலை இருக்கு..! தகுதி உள்ளவங்களாலதான் அந்த மலையில ஏற முடியும். தகுதி இல்லாதவங்க ஏற முயன்றால்…. என்ன நடக்கும்னு உனக்கு நான் சொல்லித் தெரியணுமா..?” –குகன்மணி குமுதினியைப் பார்த்தான்.

–தொடரும்…

ganesh

1 Comment

  • Super

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...