அஷ்ட நாகன் – 16| பெண்ணாகடம் பா. பிரதாப்

 அஷ்ட நாகன் – 16| பெண்ணாகடம் பா. பிரதாப்

-அமானுஷ்ய தொடர்-

பாம்புகளில் நாக வழிபாடு உலகம் முழுவதும் பரவியிருந்தது.தமிழகத்தில் கொங்கு நாட்டுப்புறப் பகுதிகளில் நாக வழிபாடு தொன்றுத்தொட்டே சிறப்பு பெற்றிருந்தது‌. அப்பகுதிகளில் வாழ்ந்த வேட்டுவர் இனத்தவர்கள் நாக வழிபாட்டினை போற்றி பாதுகாத்தனர்.கோயில்களில் நாகர்களுக்கு சிலை வடித்து பூஜித்து வந்தனர். அதுமட்டுமின்றி, சில கிராமங்களில் இன்றளவும் புற்றுக்கோயில்கள் மூலம் நாக வழிபாடு பொலிவு குறையாமல் நடைபெற்று வருகிறது.திருச்செங்கோடு புராணங்களில் ‘நாக மலை’ என்று வழங்கப்படுகிறது. திருச்செங்கோடு மலை கோயிலில் சுமார் 60 அடி நீளத்திற்கு ஒரு ராட்சச நாகத்தின் உருவத்தை பாறையில் செதுக்கி வழிபட்டு வருகின்றனர்.இந்த சிலைக்கு அப்பகுதி வாழ் மக்கள் பிரத்யேக வழிபாடுகளும் நடத்தி வருகின்றனர்.பாம்புகள் புணர்வதை பார்த்தால் நன்மை ஏற்படும்(பாம்புகள் புணர்வதை பார்ப்பது ஆபத்தானது).

– நாக சாஸ்திர ஏடுகளிலிருந்து.-

 

மாசில்லா அருவி !

 

அறப்பளீஸ்வரர் கோயிலில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் தான் ‘மாசில்லா அருவி’ என்ற மூலிகை அருவி உள்ளது.மலைக்கு மேலே மனிதர்கள் செல்லமுடியாத இடத்திலிருந்து மாசில்லா அருவி உருவாகிறது‌‌. கொல்லிமலையில் மனிதர்களின் கால்தடம் படாத இடம் இன்னும் எவ்வளவோ இருக்கிறது.அதனால் தான் கொல்லிமலை இன்றளவும் இயற்கை எழிலோடு திகழ்கிறது.

 

மாசில்லா அருவி என்பதன் பொருள் ‘தூய்மையான அருவி’ என்பதாகும்.அதாவது குற்றமில்லாத அருவி என்றும் கூறலாம்.ஆகாய கங்கை அருவியில் குளிக்க முடியாதவர்கள் கூட, மாசில்லா அருவியில் குளித்து மகிழ்ச்சி மனநிறைவும் மகிழ்ச்சியும் அடைகின்றனர்.மாசில்லா அருவியில் குளிப்பதால் தேக ஆரோக்கியம் கிடைப்பதோடு

முனமும் புத்துணர்ச்சி அடைகிறது.

 

மாசில்லா அருவியில் குளித்துவிட்டு ‘வாசலூர் பட்டி’க்குக்கு அரவிந்தன்,நந்தன்,யோகினி மற்றும் முருகேசன் என நால்வரும் சென்றுக் கொண்டிருந்தனர்.

 

“முருகேசன் இப்போ எதுக்கு வாசலூர்பட்டிக்கு போறோம்?” என்று யோகினி கேட்டாள்.

 

“வாசலூர் பட்டியில ‘பரிசல் துறை’ இருக்கு.அங்க படகு சவாரி செய்யலாம்” என்று முருகேசன் பதிலளித்தான்.

“இந்த ரெண்டு நாள் போனதே தெரியல.ஏலக்காய் சித்தர் சொன்ன பெளர்ணமி பூஜை இன்னைக்கு இராத்திரி தானே?” என்று அரவிந்தன் தன் பங்கிற்கு பேசத் தொடங்கினான்.

 

“ஆமா அரவிந்த்” என்றான் முருகேசன்.

 

“அப்போ, இன்னைக்கு இராத்திரி எல்லா புதிருக்கும் விடை கிடைக்குமுன்னு சொல்லுங்க” என்றான் நந்தன்.

 

நந்தனின் கேள்விக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் முருகேசன் மெளன மொழியில் பேசினான்.

 

நால்வரும் வாசலூர்பட்டியின் பரிசல் துறையை அடைந்தனர்.

 

பரிசல் துறையை சுற்றி நான்கு பக்கமும் மலைகள் சூழ்ந்து பார்க்கவே மிக அழகாக காட்சியளித்தது.

 

பெடல் செய்து இயக்கும் படகில் நந்தன்-யோகினி, அரவிந்தன்-முருகேசன் என நால்வரும் ஜோடியாக தங்கள் கவலைகளை மறந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

 

படகு சவாரி செய்யும் இடத்திற்கு சற்று அருகில் உள்ள ஒரு பழமையான கோயிலுக்கு முருகேசன் அவர்கள் மூவரையும் அழைத்து சென்றான்‌.

 

“இது என்ன கோயில்? ரொம்ப பாழடைஞ்சி அதர பழசாக இருக்கே என்று வியப்புடன் அரவிந்தன் கேட்டான்.

 

“இந்த கோயிலை, பழைய கோயில் கட்டிடங்களை ஆராய்ச்சி செய்றவங்க இப்ப தான் சில மாசங்களுக்கு முன்னாடி கண்டு பிடிச்சாங்க.இது ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்த சிவன் கோயிலாம்‌.ஆனால், கருவறையில சிவலிங்கம் கிடைக்கல” என்று தனக்கு தெரிந்த தகவல்களை முருகேசன் கூறினான்.

 

முருகேசன் சொல்வதை குழந்தைகள் கதை கேட்பது போல மூவரும் ஆர்வமுடன் கேட்டறிந்தனர்.பின்னர் நால்வரும் கோயிலை சுற்றி பார்த்தனர்.

 

கிழக்குப் பார்த்த கோயில்.மகா மண்டபம்,அர்த்த மண்டபம் மற்றும் கருவறை ஆகிய கட்டிடங்களின் இடிபாடுகளை காண முடிந்தது. கருவறைக்குள் மிக பிரமாண்டமாக ஒரு மரம் வளர்ந்து நின்றுக் கொண்டிருந்தது.அது கருவறையையே இரண்டாக பிளந்து வைத்திருந்தது.

 

அதுமட்டுமின்றி, அவ்விடத்தில் தொல் பொருள் ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சி மூலம் பல அரிய பழைய பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டதாகவும் முருகேசன் கூடுதல் தகவல் கூறினான்.

 

கோயிலை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த அரவிந்தன் திடீரென மயக்கமடைந்த நிலையில் ஒரு ஆலமரம் மாதிரி தரையில் சரிந்து விழுந்ததான்‌.

 

அரவிந்தன் மயக்கம் அடைந்ததும் நந்தன்,யோகினி மற்றும் முருகேசன் என மூவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

 

– தொடரும்…

< பதினைந்தாம் பாகம் | பதினேழாம் பாகம் >

கமலகண்ணன்

1 Comment

  • வாசணையைக் கொண்டே கண்டுபிடித்த ஏலக்காய் சித்தருக்கு நான்கு பேர் சென்றதும் இச்சாதாரி நாகம் யாரென்று தெரிந்திருக்கும். ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லையே. ஏன். மர்மமாக இருக்கிறது. பொருந்திருந்து பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...