அஷ்ட நாகன் – 17| பெண்ணாகடம் பா. பிரதாப்

 அஷ்ட நாகன் – 17| பெண்ணாகடம் பா. பிரதாப்

-அமானுஷ்ய தொடர்-

சித்தர் என்ற வார்த்தையின் பொருள் ‘விஞ்ஞானி’ ஆகும்‌.சித்தர்களை மக்கள் ஜாலங்கள் செய்யும் மாயாவிகளாகவே பார்க்கின்றனர்‌.சித்தர்கள் மக்களோடு மக்களாக ஸ்தூல தேகத்தோடு வாழும் காலத்தில்,போராசை கொண்ட மனிதர்கள் பலர் சித்தர்களை தங்களின் வறுமையை போக்கவும் மற்றும் தங்களின் நோயை குணப்படுத்தவும் மட்டுமே பயன்படுத்திக் கொண்டனர்.அதில் தவறும் இல்லை.ஆனால்,யாரும் இந்த மாய வாழ்க்கையை வென்று முக்தி அடையும் நோக்கத்தோடு சித்தர்களை அணுகவில்லை என்பது தான் வருத்தத்திற்குரிய விஷயம்.எனவே,சித்தர்கள் தனிமையை நாடி கானகங்களையும் மலைகளையும் தஞ்சம் புகுந்தனர்.சித்தர்களில் ‘போகர்’ தனித்துவம் வாய்ந்தவர் மற்றும் சமூக அக்கறை மிகுந்த காணப்படுபவர்‌.அவரின் சமூக அக்கறைக்கு சாட்சி ‘பொதினி’ என்கிற பழனி மலையில் நவபாஷாணங்களைக் கொண்டு அவர் உருவாக்கி பிரதிஷ்டை செய்த ‘பால தண்டாயுதபாணி’ சிலை ஆகும்.போகர் பிரான் எதை செய்வதானாலும் சித்தர்களின் ஆதி குருவான சிவபெருமானை வணங்கிய பிறகே செய்யும் வழக்கம் உடையவர்‌.சித்தர்களைப் போலவே நாகங்களும் சிவபெருமானை பூஜை செய்து வணங்கி வருவதாக போகர் பிரான் தன் நூலில் கூறியுள்ளார்.நாக தோஷத்தை நிவர்த்தி செய்வதுப் பற்றி தன் ‘போகர் 12000’ என்ற நூலில் போகர் கூறியுள்ளார்.நாக தோஷத்தை நிவர்த்தி செய்யும் அந்த பரிகாரம் என்ன?

– நாக சாஸ்திர ஏடுகளிலிருந்து.-

 

அரவிந்தன் திடீரென மயக்கம் அடைந்ததும் நந்தன், யோகினி மற்றும் முருகேசன் மூவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

“அரவிந்தா…அரவிந்தா” என்று அரவிந்தனை உலுக்கினான் நந்தன்.

அரவிந்தன் அசைவற்றுக் கிடந்தான்.

நந்தனுக்கு அச்ச உணர்வு தலை உச்சிக்கு ஏறியது.

முருகேசன் அரவிந்தனின் கையை பிடித்து பார்த்தான்.நாடித்துடிப்பு சீராக இருந்தது.

“பயப்படறதுக்கு ஒண்ணுமில்ல” என்று முருகேசன்,நந்தனிடம் கூறினான்.

யோகினி, தன் வசமிருந்த தண்ணீர் பாட்டிலை திறந்து, அரவிந்தனின் முகத்தில் தெளித்தாள்.

அரவிந்தன் மெல்ல தன் நேத்திரங்களை(கண்கள்) தேய்த்துக் கொண்டு கண் விழித்தான்.

“டேய் ! அரவிந்தா என்னடா ஆச்சு? ஏன் திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துட்ட?” என்று நந்தன் கணிசமாக கேட்டான்‌.

“நந்தா ! எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலடா…இந்த இடத்தையெல்லாம் நான் முன்னவே பார்த்த மாதிரி இருக்குதுடா” என்றான் அரவிந்தன்.

அரவிந்தனின் வார்த்தைகளைக் கேட்ட நந்தன் குழப்பத்தில் தன் தாடை ரோமங்களை தேய்த்துக் கொண்டான்.

முருகேசனுக்கு அரவிந்தன் இச்சாதாரி நாகமாக இருப்பானோ என்ற எண்ணம் வலுக்கத் துவங்கியது.

“அதுவெல்லாம் ஒண்ணுமில்லடா.உனக்கு ஏதாவது ஸ்டெரெஸ்ஸா இருக்கும்.சரி வா ! நம்ம ரூமுக்கு போகலாம்”

யோகினியும் தன் பங்கிற்கு,

“அரவிந்த்,ஆர் யூ ஆல் ரைட்?” என்று அரவிந்தை வினவினாள்‌‌.

அரவிந்தும் “ம்” என்று ஒற்றை எழுத்தை கூறிவிட்டு மெளனம் காத்தான்.

சில நொடிகள் நிசப்தம் நிலவியது.

அப்போது அவர்களின் மெளனத்தை கலைக்கும் ஒரு இனிமையான புல்லாங்குழல் ஓசை கேட்டது.

அந்த புல்லாங்குழல் ஓசையைக் கேட்ட முருகேசன், “புல்லாங்குழல் சித்தர்…” என்று கூறினான்.

புல்லாங்குழல் சித்தர், எங்கிருந்து கொல்லிமலைக்கு வந்தார்? எப்போது வந்தார்?ஏன் வந்தார்?கொல்லிமலையில் என்ன செய்கிறார்?அவரின் வயது என்ன? போன்ற விபரம் யாருக்கும் தெரியாது. ஆனால்,அவர் புல்லாங்குழல் வாசிக்க ஆரம்பித்துவிட்டால் கொல்லிமலை வாசிகள் அலறத் தொடங்கிவிடுவார்கள்.

புல்லாங்குழல் சித்தருக்கு எண்பது வயதிருக்கும், கையில் ஒரு புல்லாங்குழல்,ஒற்றை நாடி சரீரம்,நீல நயனங்கள்,நீண்ட நகங்கள், ஜடாமுடி மற்றும் இடுப்பில் ஒரு கோவணம்.

புல்லாங்குழல் சித்தர் கொல்லிமலையின் அடர்வனத்தில் வசித்து வருகிறார்.ஆனால், எதையோ…யாரையோ தேடுவது போல் எப்போதும் பரபரப்பாக காணப்படவார்‌.

புல்லாங்குழல் சப்தம் மிக அருகாமையில் கேட்டது.அடுத்த சில நொடிகளில் புல்லாங்குழல் சித்தரும் அவர்கள் கண்ணில் பட்டார்‌.

அவர்கள் நால்வரையும் ஆழமாக ஊடுறுவி பார்த்த புல்லாங்குழல் சித்தர் தன் குழலின் மூலம் ‘புன்னாக வராளி’ ராகத்தை வாசித்தார்.

புல்லாங்குழல் சித்தர் என்ன ராகம் வாசிக்கிறார் என்று அவர்களால் புரிந்துக் கொள்ள முடியவில்லை‌.ஆனால், நால்வரும் அந்த புல்லாங்குழலின் ராகத்தைக் கேட்டு மெய்மறந்த நிலையில் தலையசைக்க ஆரம்பித்தனர்.

அரவிந்தனும் நந்தனும் தங்களையறியாமலே புல்லாங்குழல் சித்தரின் காலில் விழுந்து வணங்கினர்.

புல்லாங்குழல் சித்தரின் வாசிப்பைக் கேட்டு அருகாமையில் இருந்த நூற்றுக்கணக்கான நாகங்கள் அவர் முன் படமெடுத்து ஆட ஆரம்பித்தன.

அந்த காட்சியைக் கண்ட யோகினியும் முருகேசனும் பிரமித்து விட்டனர்.

யோகினியையும் முருகேசனையும் ஆசிர்வதித்து விட்டு, அரவிந்தனையும் நந்தனையும் பார்த்து புன்முறுவல் பூத்து விட்டு புல்லாங்குழல் சித்தர் தன் பாதையில் பயணிக்க ஆரம்பித்தார்.

அவரைத் தொடர்ந்து நாகங்களின் கூட்டமும் அணிவகுத்து அவர் பின்னே செல்ல ஆரம்பித்தது.

அந்த காட்சியைக் கண்ட அவர்கள் நால்வரும் பேச்சு மூச்சின்றி காணப்பட்டனர்.

சூரியன் அஸ்தமிக்கும் நேரம்.அவர்கள் ஏலக்காய் சித்தரின் பெளர்ணமி பூஜையில் கலந்துக் கொள்வதற்கு ஆயத்தமாகினர்.

 

– தொடரும்…

< பதினாறாம் பாகம் | பதினேழாம் பாகம் >

கமலகண்ணன்

4 Comments

  • please be increase the size of the part

    • Yes.sure.Thanks

  • தொடர் மிகவும் விறுவிறுப்பாக செல்கிறது பிரபு அதிகமாகிக்கொண்டே இருக்கிறது வாழ்த்துக்கள்

    • மிக்க நன்றி நண்பரே…மகிழ்ச்சி ‌.

Leave a Reply

Your email address will not be published.