பேய் ரெஸ்டாரெண்ட் – 22 | முகில் தினகரன்

 பேய் ரெஸ்டாரெண்ட் – 22 | முகில் தினகரன்

இருக்கையில் வந்து அமர்ந்தவளுக்கு தன் ஆவி நண்பன் மேல் அபரிமிதமான மதிப்பு உண்டானது. அதே நேரம், நடப்பதெல்லாம் நிஜம்தானா?…இந்தக் கம்ப்யூட்டர் யுகத்தில்….இப்படியெல்லாம் கூட நடக்குமா?” என்று பிரமிப்பாயிருந்தது.

அடுத்து வந்து மூன்று தினங்கள் “அந்த” தினங்களானதால், சுமதி தன் அறைக்கு வெளியே, ஹாலில் படுத்துறங்கினாள். அதன் காரணமாய் ஆவி நண்பனைத் தொடர்பு கொள்ள முடியாமல் போனது அவளுக்கு.

அதுவே பெரிய இழப்பாய்த் தோன்றியது. தினம் தினம் பார்த்துப் பேசிப் பழகும் நண்பரொருவரை தொடர்ந்து நான்கைந்து தினங்கள் பார்க்க முடியாமல் போய் விட்டால் மனம் வெறுமை படர்ந்தாற் போலிருக்குமே?…அப்படியிருந்தது சுமதிக்கு.

நான்காம் நாள், சில சம்பிரதாயக் கேள்விகளைத் தயார் செய்து வைத்துக் கொண்டு, லட்சுமி நரசிம்மன் ஆவியை அழைத்தாள்.

அரை மணி நேரமாகியும் ஆவி வர மறுத்தது.

அவளுக்கோ, தூக்கம் கண்களின் விளிம்பில் வந்து நின்று கொண்டு, அவளைக் கீழே சாய்ப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தது.

“அய்யய்ய…என்னாச்சு இந்த ஆவிக்கு?…ஒரு வேளை ரொம்ப தூரத்துல எங்காவது வெளிநாட்டுல போயி உலாவிட்டிருக்கோ என்னமோ?”

மீண்டும் முயற்சித்தாள்.

பிளாஸ்டிக் துண்டில் லேசாய் சலனம் ஏற்பட்டது.

ஆனால், இன்று வழக்கத்திற்கு மாறாக சில வினோதங்கள் தென்பட்டன.

ஜன்னலில் தொங்கிக் கொண்டிருந்த திரைச்சீலை கண்டபடி திருகப்பட்டு, தாறுமாறாய்க் கிழிந்து தொங்கியது.

மேஜை மேலிருந்த பொருட்கள் “தட…தட”வென ஆடி கவிழ்ந்தன. அலமாரியிலிருந்த புத்தகங்கள் தாமாக கீழே விழுந்து ஊதக் காற்றில் சிறகடித்தன.

“ஹூ….ஊஊஊஊ….ஹூ….ஊஊஊஊ” என்று ரத்த்த்தை உறைய வைக்கும் விதத்தில் ஊளைச் சத்தம் அறையெங்கும் ஒலித்துக் கொண்டேயிருந்தது.

அறைக்குள் எரிந்து கொண்டிருந்த மின் விளக்கு திடீரென அணைந்தது.

கண்களை மூடி அமர்ந்திருந்த சுமதிக்கோ அறைக்குள் நடப்பது எதுவுமே தெரியவில்லை. இருட்டில் அவள் இடது கை காகிதத்தில் “கன்னா…பின்னா”வென்று கிறுக்கித் தள்ளியது.

மற்ற தினங்களில் ஊடகராயிருக்கும் போது, ஒரு வித மயான அமைதியைத்தான் அவள் உணர்வாள். பிரபஞ்ச வீதியில் கோள்களுடன் உலாப் போகும் நிலையைத்தான் கொண்டிருப்பாள். ஆனால், இன்று ஏனோ மண்டைக்குள் “ஹா…ஹா”என்ற ராட்சதச் சிரிப்புக்களும், “நற….நற”வென பற்களைக் கடிக்கும் ஓசைகளுமே கேட்டன.

அவளையேயறியாமல் அவளது தலை அந்தப் பேய்ச் சிரிப்பிற்கு ஏற்ப இப்படியும் அப்படியும் ஆடியது.

பத்து நிமிடக் களேபரத்திற்குப் பிறகு,

படீரென்ற ஓசையோடு ஜன்னல் சாத்திக் கொள்ள, அறைக்குள்ளிருந்த மின் விளக்கு உயிர் பெற்றது.

கண் விழித்துப் பார்த்த சுமதிக்கு, தலை மேல் பெரிய பறாங்கல்லை வைத்தது போலிருந்தது. பாரம் தாங்க முடியாமல் கைகளால் இரு காதையும் பொத்திக் கொண்டாள்.

கண்களிரண்டும் ரத்தப் பழங்களாய்ச் சிவந்திருக்க, முகத்தில் அனலடித்தது.

ஏற்கனவே தூக்கக் கலக்கத்திலிருந்தவள், தலை பாரம் தாங்க முடியாமல் அப்படியே படுத்து உறங்கலானாள்.

அப்போது,

கணுக்காலை யாரோ சுரண்டுவது போலிருக்க, திடுக்கிட்டு விழித்து, காலை உதறினாள்.

எழுந்தமர்ந்து நாலாப்புறமும் தேடினாள்.

யாருமேயில்லை.

பிரமையோ?

கடிகாரத்தைப் பார்த்தாள்.

மணி 2.45. பின்னிரவு.

மெல்ல எழுந்து ஜன்னலருகே சென்று வெளியே பார்த்தாள். இதமான தென்றல் காற்று சம்மன் இல்லாமல் ஆஜராகியது. கண் எரிச்சலுக்கு அது பாந்தமாயிருந்தது.

வானத்தில் தேய் பிறை நிலவு, அழைத்துப் போக யாரும் வராததால் கண்ணைக் கசக்கிக் கொண்டு நிற்கும் பள்ளிச் சிறுவனைப் போல், அழுது வடிந்து கொண்டிருந்தது.

காம்பௌண்டு சுவற்றின் மேல் தாவிக் குதித்த பூனையொன்று, அங்கிருந்தே தலையைத் தூக்கி இவளைப் பார்த்து முறைத்தது.

அந்த இருட்டிலும் அதன் கண்களிரண்டும் மாணிக்கக் கற்களாய் “தக….தக”த்தன.

பக்கத்து மரத்திலிருந்து பெயர் தெரியாத பறவியொன்று “பட…பட”வெனச் சிறகடித்துக் கொண்டு பறக்க, அதன் இறகுகளில் சில கழன்று காற்றில் மிதக்க,
பூனை மிரண்டு எட்டிக் குதித்து ஓடியது.

திரும்ப வந்து கட்டிலில் அமர்ந்தவள் கண்களில் தூக்கம் தொலைந்து போய் விட்டிருந்தது. என்ன செய்வதென்று புரியாமல் தரையையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தவளுக்கு திடீரென்று அந்த யோசனை வந்தது. “ஆவி ஏதோ தகவல் எழுதி வெச்ச மாதிரி இருந்ததே?”

எழுந்து லைட்டைப் போட்டுக் கொண்டு, ஆவியின் கிறுக்கல் தகவல்களைப் படிக்க ஆரம்பித்தாள்.

படிக்கப் படிக்க அவள் முகம் கொஞ்சம் கொஞ்சமாய் மாற ஆரம்பித்தது.

“கண்மணி…உன் அழகு என்னை உசுப்பி விட்டதடி!…உன்னை இறுக அணைத்து இதழ் கடிக்க என் நாடி நரம்புகள் துடிக்குதடி!…நாள் முழுதும் கட்டிக் கிடக்க நெஞ்சம்தான் ஏங்குதடி!…முன்னழகில் நீ காமினி!…பின்னழகில் நீ மோகினி!…என் உணர்ச்சிக் கொப்புளங்களை உடைத்தெறிய என்று வருவாய் என் ராகினி?”

முழுவதையும் படித்து முடித்தவள் சுத்தமாய் அதிர்ந்து போனாள். “த்தூ….நீயுமா ஆவி?….மனுஷன்தான் காமச் சேற்றில் விழுந்து கண்டபடி புரளுகின்றான் என்றால்…ஆவியான நீயுமா?…ச்சே…உன்னைப் போய் நல்ல நண்பன் என்று நினைத்தேன் பாரு…என்னைச் சொல்லணும்”

தொண்டையில் துக்கம் அடைத்து, அழுகையாய் வெடித்தது.

“யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்?…அம்மம்மா…பூமியிலே யாவும் வஞ்சம்…” பாடல் வரிகள் ஞாபகத்தில் வர, “இந்த பூமியில் மட்டுமல்ல…ஈரேழு பதினாலு உலகத்திலும் வஞ்சம்..வஞ்சம்..வஞ்சம்தான்” பற்கள் வலிக்கும் அளவிற்கு கடித்தாள். அதுதானே ஆத்திரத்தின் மலிவான வெளிப்பாடு?

அடுத்த நாள் முழுவதும் அவளுக்கு வேலையே ஓடவில்லை. நம்பிக்கை துரோகத்தைத் தாங்கிக் கொள்ளும் பக்குவம் இல்லாததால் நினைத்து நினைத்து மனம் குமைந்தாள்.

“ஹும்…அறுபத்தியெட்டு வயசுல செத்துப் போன ஆவிக்கு எத்தனை ஒரு வக்கிரப்புத்தி?…நேரில் பார்த்துப் பேசற மாதிரியிருந்தா… “நறுக்”குன்னு நாலு வார்த்தை நாக்கைப் பிடுங்கிக்கற மாதிரி கேட்டு விடலாம்!..ஆனா அதுவே அரூபமா ஆவி உலகத்துல சுத்திக்கிட்டிருக்கு…அது கிட்டப் போய் என்னத்தைப் பேசறது?”
சிரமப்பட்டு கவனத்தை வேலையில் திருப்பினாலும் ஆவி கிறுக்கிச் சென்ற அந்த வார்த்தைகள் மீண்டும் மீண்டும் ஞாபகத்தில் வந்து அருவருப்பை ஊட்டின. “இறுக அணைத்து இதழ் கடிக்க நாடி நரம்புகள் துடிக்குதாம்!…நாள் முழுதும் கட்டிக் கிடக்க நெஞ்சம்தான் ஏங்குதாம்!”…ஹும்…எப்பேர்ப்பட்ட விரசமான வார்த்தைகள்?…பேரைப் பாரு லட்சுமி நரசிம்மன்..ராஸ்கல்…உயிரோரு இருந்த காலத்தில் சரியான பொம்பளைப் பொறுக்கியா இருந்திருப்பான் போல?”

வெறுப்பின் உச்சிக்கே போய் விட்ட சுமதி தன்னிடமிருந்த ஒய்ஜா போர்டு, பிளாஸ்டிக் துண்டு…இன்னபிற ஆவி ஐட்டங்களையெல்லாம் ஒட்டு மொத்த்மாய்த் தூக்கி பீரோவின் மீது கடாசி விட்டு, தன் வழக்கமான இயல்பு வாழ்க்கைக்கே திரும்பினாள்.

இரவு,

ஏதோ உறுமல் சத்தம் கேட்க, திடுக்கிட்டு கண் விழித்த சுமதி படுக்கையில் படுத்தவாறே, காதுகளைத் தீட்டிக் கொண்டு அந்த ஒலியைக் கூர்ந்து கேட்டாள்.

“ர்ர்ர்….ரூரூரூ….ம்ம்ம்ம்ம்”

“இதென்ன சப்தம் இது?…குறட்டை ஒலி போலவும் இல்லாமல், முனகல் போலவும் இல்லாமல் வித்தியாசமாய்?…ஒருவேளை ஹாலில் படுத்திருக்கும் அப்பாதான் இன்னிக்கு புது மாதிரியா குறட்டை விடுறாரா?”

சத்தமில்லாமல் எழுந்து கதவருகே சென்று, தலையை மட்டும் வெளியே நீட்டி ஹாலில் படுத்திருந்த அப்பாவைப் பார்த்தாள்.

அவரோ, அமைதியான ஏரி நீர் போல் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தார்.

“ஒரு வேளை அம்மாவின் குறட்டையோ?”

திரும்பி தாயைப் பார்த்தாள்.

அவளும் சத்தமேயில்லாமல் உறங்கிக் கொண்டிருந்தாள்.

“அப்படியென்றால்…இந்தச் சத்தம் எங்கிருந்து வருது?” குழப்பத்தோடு வந்து படுக்கையில் அமர்ந்தாள்.

இப்போது அந்தச் சத்தம் மாயமாகியிருந்தது.

சாய்ந்து படுத்து சுழலும் பின் விசிறியையே பார்த்துக் கிடந்தவள், கொஞ்சம் கொஞ்சமாய் நழுவி உறக்கத்தின் விளிம்பைத் தொட்ட போது…

மறுபடியும்,

“ர்ர்ர்….ரூரூரூ…..ம்ம்ம்ம்ம்”

இந்த முறை வால்யூம் சற்று அதிகமாய்க் கேட்டது.

துள்ளியெழுந்து, விழிகளைப் பெரிதாக்கிக் கொண்டு அறை முழுவதும் பரபரவென்று தேடினாள்.

“சத்தம் இந்த ரூமுக்குள்ளாரதான் கேட்குது” அறைக்குள்ளிருக்கும் ஒவ்வொரு பொருளின் மீதும் வரிசையாய் பார்வையை ஓட்டினாள். “எங்கிருந்து வருது?…எங்கிருந்து வருது?” மூளைக்குள் அந்தக் கேள்வி ஒலித்துக் கொண்டேயிருந்தது.

நெஞ்சிக் கூடு ஏறி ஏறி இறங்கியது.
இருதயம் துடிக்கும் ஓசை செவிக்குக் கேட்டது.
அவளது பார்வை மெல்ல பீரோவை நெருங்கும் போது, பீரோவும் அதன் மீது வைக்கப்பட்டிருந்த ஒய்ஜா போர்டும், அதனருகிலிருந்த பிளாஸ்டிக் துண்டும் “தட…தட”வென ஆடிக் கொண்டிருந்தன.

மிரண்டு போனாள் சுமதி. தொண்டை வறண்டு நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது. “அய்யோ…என்ன நடக்குது இந்த ரூமுக்குள்ளார?” கை கால்களெல்லாம் நடுங்க, படுக்கையிலிருந்து குதித்திறங்கி, அறைக் கதவை நோக்கி ஓட எத்தனித்த போது,

சடன் பிரேக் போட்டது போல் அந்த பீரோவின் ஆட்டம் நின்று விட, ஜன்னலின் திரைச்சீலை மட்டும் ஒரு முறை பேய்த்தனமாய்த் துடித்து விட்டு அடங்கியது.

அங்கு மயான அமைதி குடியேறியது.

மின் விசிறியின் இறக்கைகள் காற்றைக் கிழிக்கும் சப்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருக்க, நெஞ்சின் மீது கையை வைத்துக் கொண்டு, “அப்பாடா” என்ற சுமதி, மீண்டும் படுக்கைக்கே திரும்பினாள்.

“ஏன் இப்படியெல்லாம் நடக்குது?…நான் ஆவித் தொடர்பில் ஈடுபட்டது தப்போ?…கொள்ளைக் கும்பலில் சேர்ந்து விட்ட ஒருவன் மனம் திருந்தி “வேண்டாம்”ன்னு திரும்பி வந்தாலும் அந்தக் கும்பல் அவனை விடாமல் தொந்தரவு பண்ணுவது போல், இந்த ஆவியுலகத் தொடர்புல ஒரு தடவை ஈடுபட்டவங்க “வேண்டாம்”ன்னு நினைச்சாலும் ஆவிகள் விடாமல் துரத்தும்களோ?…அய்யய்யோ…இதென்ன வம்பாய்ப் போச்சு?” பயந்தாள்.

கலக்கமாய் யோசித்தாள். “என்ன பண்றது?…எப்படி இதிலிருந்து விடுபடறது?” தலைதான் “விண்…விண்”ணென்று வலிக்க ஆரம்பித்ததே தவிர எந்தவொரு முடிவுக்கும் அவளால் வர முடியவில்லை.

அதே நேரம், தன்னுடைய தோழியான சுமதியுடன் பேசுவதற்காக ஆர்வமாய் வந்து, அவள் தன்னுடன் பேசப் பிரியப்படாததை புரிந்து கொண்டு, ஏமாற்றத்தோடு திரும்பிச் சென்றது அந்த லட்சுமி நரசிம்மன் ஆவி.

தொடர்ந்து நான்கு நாட்கள் லட்சுமி நரசிம்மன் ஆவி விடாமல் அங்கு வந்து, அவள் அழைப்பிற்காக ஏங்கி, அந்த அறைக்குள்ளேயே சுற்றிச் சுற்றி வந்தது. அதன் விளைவாய் நிம்மதியான உறக்கத்தைத் தொலைத்த சுமதி ஒரு நோயாளி போலானாள். கண்கள் இடுங்கி, உடல் இளைத்து, பார்ப்போரெல்லாம், “என்னாச்சும்மா?…ஏன் திடீர்னு இப்படி ஆயிட்டே?…உடம்புகிடம்பு சரியில்லையா?” என்று துக்கம் விசாரிக்கும் நிலைமைக்குப் போனாள்.

“ஒருவேளை…அந்த லட்சுமி நரசிம்மன் ஆவிதான் என்னை இம்சிக்குதோ?…” பொறுமையின் எல்லைக்குப் போய் விட்ட சுமதி, ஐந்தாம் நாள் அந்த ஆவி சமாச்சாரங்களை பீரோ மேலிருந்து கீழிறக்கி கடை விரித்தாள்.

“இன்னிக்கு அந்தப் பொறுக்கி ஆவியை ரெண்டுல ஒண்ணு கேட்டுட்டுத்தான் மறுவேலை” என்று வாய் விட்டுச் சொல்லியபடியே தன் கோபத்தை வார்த்தைகளாக்கி ஒரு வெள்ளைக் காகிதத்தில் கொட்டி விட்டு, ஆவியை அழைக்க அமர்ந்தாள்.

பல நாள் காத்திருந்த ஆவி “படக்”கென வந்திறங்கியது. அவளின் கோப வார்த்தைகளைப் படித்து மனம் நொந்து, தன் பதிலை அவசர அவசரமாக சுமதியின் இடது கை எழுத்துக்களாய்ப் பொறித்து விட்டு, வந்த சுவடே தெரியாமல் சென்று விட்டது.

“முதலில் ஒரு உண்மையைச் சொல்லி விடுகிறேன்…போன வாரம் உங்களுடன் பேசியது நான் அல்ல…அப்போது நான் ஈரோட்டில் உங்களைப் போன்ற ஒரு ஊடக நண்பருடன் உரையாடலில் ஈடுபட்டிருந்தேன்…நீங்க என்னை அழைக்கின்றீர்கள் என்பதி அப்போது என்னால் உணர முடிந்தது…ஆனாலும், அந்த உரையாடலை பாதியில் விட்டுவிட்டு வரவும் முடியவில்லை…அவசர அவசரமாய் முடித்து விட்டு வந்து பார்த்த போது, வேறு ஏதோவொரு ஆவி உங்கள் மேல் இறங்கி தகவல்கள் சொல்லிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்…அதிர்ந்தேன்….தொலைபேசியில் எப்படி கிராஸ்டாக் வருகின்றதோ…அதே போல் இங்கும் சில சமயங்களில் வேறு துஷ்ட ஆவிகள் உள்ளே புகுந்து தவறான தகவல்களைத் தந்து விடுவதும் உண்டு…உங்களுடைய கோபத்தைப் பார்க்கும் போது அநேகமாய் வந்து போனது ஒரு கெட்ட ஆவியாகத்தான் இருக்க வேண்டும்… அது கொடுத்து விட்டுப் போன தவறான தகவல்களுக்கு நான் பொறுப்பல்ல…நான் உங்கள் நண்பன்…உங்கள் நலம் விரும்பும் ஆவி…உங்கள் உள் மனதில் உறைந்து கிடக்கும் வேதனையை நான் அறிவேன்…அதை நிவர்த்தி செய்வதற்காகத்தான் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றேன்…என்னைத் தவறாக எண்ணாதீர்கள்”

சுமதிக்கு அந்தச் செய்தியினைப் படித்ததும் மனம் வேதனித்தது. “இது உண்மையா?…ஆவித் தொடர்பில் கிராஸ்டாக்கா?”

வெளிறிப் போன முகத்துடன் அமர்ந்திருந்தவளைத் தொட்டு உசுப்பினாள் ராஜேஸ்வரி, “சுமதி…உனக்கு என்னம்மா ஆச்சு?…ஏன் கொஞ்ச நாளாகவே ஒரு மாதிரியா இருக்கே?” பரிதாபமாய்க் கேட்டாள்.

“ப்ச்” என்றபடி எழுந்து சென்ற மகளை வேதனையுடன் பார்த்தாள் தாய் ராஜேஸ்வரி.

– தொடரும்…

< இருபத்தி ஒன்றாம் பாகம் | இருபத்தி மூன்றாம் பாகம் >

கமலகண்ணன்

1 Comment

  • அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகை.

Leave a Reply

Your email address will not be published.