ஹைதராபாத்: உலகிலேயே மிக உயரமான ஹரே கிருஷ்ணா பாரம்பரிய டவர் ஹைதராபாத்தில் 430 அடி உயரத்தில் அமைய உள்ளது.
ஹைதராபாத் மெட்ரோபாலிடன் சிட்டியாக மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இங்கு கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நார்சிங்கி என்ற இடத்தில் ஹரே கிருஷ்ணா அறக்கட்டளையினர் 430 அடி உயரத்தில் ஹரே கிருஷ்ணா பாரம்பரிய டவர் கட்ட அடிக்கல் நாட்டினர். ஹரே கிருஷ்ணா எனும் தாரக மந்திரத்தை உலகெங்கிலும் கொண்டு செல்ல பாடுபட்ட ஏ.சி.பக்தி வேதாந்த சுவாமி பிரபு பாதாவுக்கு இதனை அறக்கட்டளையினர் சமர்ப்பணம் செய்ய உள்ளனர்.

இத்தாலியின் புகழ்பெற்ற பைசா கோபுரம் 187 அடி, டெல்லி குதுப் மினார் 240 அடி, நியூயார்க் சுதந்திர தேவி சிலை 305 அடி உயரம் கொண்டவை. இவற்றை விட ஹைதராபாத்தில் அமையவுள்ள இந்த ஆன்மிக பாரம்பரிய டவர் 430 அடி கொண்டது. இங்கு ஸ்ரீ ராதா சமேத கிருஷ்ணர், சீதா சமேத ஸ்ரீ ராமர், லட்சுமணர், அனுமன், வெங்கடேச பெருமாள் மற்றும் நிதாய் கவுரங்கா ஆகியோருக்கான கோயில் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட உள்ளன.
இக்கோயில் கோபுர உச்சியில் சுதர்சன சக்கரம் அமைக்கப்பட உள்ளது. புரி ஜெகன்நாதர் கோயிலில் இருப்பது போல் இது அமைக்கப்பட உள்ளது. 6 ஏக்கர் பரப்பளவில் கட்டப்படும் இந்த பாரம்பரிய டவரில் ஆசிரமங்கள், மல்டி விஷன் தியேட்டர், நூலகம், பகவத் கீதை அரங்கு, பூங்கா, பாரம்பரிய கல்வி நிலையம் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன.
