தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 3 | தனுஜா ஜெயராமன்

 தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 3 | தனுஜா ஜெயராமன்

“சந்தோஷமா இருக்க போல” என்ற வார்த்தை முகேஷின் மனதை நெருஞ்சி முள்ளாக நெருடியது.

யாராயிருக்கும் என மனதைத் துளைத்தது கேள்விகள்.. தற்போது எல்லாம் தன்னை யாரோ தொடர்வது துரத்துவது போல் தோன்றுகிறதே! நிஜமாக இருக்குமா அல்லது மனப்பிரமையா?

சுதாவிடம் எதையும் காட்டி கொள்ளாமல் இயல்பாக இருக்க முயன்றாலும் முகத்தில் கவலை ரேகைகள் ஓடியது.

சுதா..ஆர்வமாக, “ஏங்க எனக்கொரு ஆசை..கல்யாணத்துக்கு முன்பே இருந்தது தான்…உங்ககிட்ட சொன்னா என்ன நினைப்பீங்களோன்னு…” என்றாள் தயங்கியவாறு.

“நீ இதுவரையில் எதுவுமே ஆசைப்பட்டு கேட்டதில்லை எதுவாயிருந்தாலும் செய்யுறேன்.. சொல்லு சுதா.” என்றான் நெகிழ்வாக…

“கல்யாணத்திற்கு முன்பு என் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் ஆசிரமம் போய் சாப்பாடு இனிப்புன்னு தருவேன். அப்போதெல்லாம் ஆதரவில்லாமல் விடப்பட்ட குழந்தைகள் மேல் ஒரு இரக்கம் வரும்… பிற்காலத்தில் வளர்ந்து பெரியவளானதும் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளக்கணும்னு ஆசைங்க..” என்றாள் தயக்கத்துடன்..

“நல்ல விஷயம் தானே! நமக்கு தான் ஒரு குழந்தை பிறந்துவிட்டதே… இன்னொரு குழந்தையை தத்து எடுத்து வளர்த்தா போகிறது…” என்றான் ஆதரவுடன்.

“தாங்ஸ்ங்க. என்ன சொல்லுவீங்களோன்னு பயந்தேன்.. அத்த, மாமா இதுக்கு ஒத்துக்குவாங்களா?”

“இதுக்கு எதுக்கு சுதா பயப்படணும்..? இது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா..? உன் நல்ல மனசுக்கும் கருணைக்கும் கையடுத்துக் கும்பிடணும்.. உன்னை மாதிரி பெண் அமைய நானும் என் குடும்பமும் பெருமைப்படறோம் சுதா. அம்மாவும் அப்பாவும் நிச்சயமா இதுக்கு சந்தோஷந்தான் படுவாங்க… நீ கவலையேபடாத. கூடிய சீக்கிரம் அதுக்கான வேலையை ஆரம்பிக்கலாம்..”

“ரொம்ப சந்தோஷங்க..” என்றாள் அவன் கைகளின் மேல் தன் கைகளை அழுத்தினாள் கண்கலங்க…

ரெஸ்டாரண்டிலிருந்து கிளம்பியதும் காரை வலதுபுறம் திருப்பியவன், ரோடைக் கவனமாகப் பார்த்து யோசனையுடன் காரை செலுத்தினான். மனதுக்குள் குறுஞ்செய்தி குறித்த கவலை வாட்டியது.

வீட்டின் உள்ளே நுழைந்ததும் “என்னடா சாப்டியா?…ஏன் டல்லாயிருக்கே..?” என்று துளைத்தெடுத்த தனலட்சுமியை…

“காலையில் போனவங்க இப்பத்தான் வராங்க… வெளியே சுத்திட்டு வந்துருக்காங்க டயர்டா இருக்காதா?  சும்மா நைநைங்காத” என மனைவியை அதட்டினார் வேதமூர்த்தி.

“குட்நைட்ப்பா…” என்றவன் வேறு எதுவும் பேசாமல் தியாவைப் படுக்கையில்  கிடத்தி போர்வையைக் கழுத்துவரை போர்த்தியவன் அப்படியே குழந்தையை அணைத்தவாறு கட்டிலில் சரிந்தான்.

இரவெல்லாம் யோசனையும் குழப்பமுமாக ஓடியது.. காலை முதல்வேலையாக அந்த நம்பருக்கு போன் செய்து நேரிடையாகக் கேட்டுவிட வேண்டும் என மனதுக்குள் தீர்மானம் செய்தவாறு உறங்கிப் போனான்.

காலையில் அடுத்தடுத்த வேலைகளில், ஆபிஸ் கிளம்பும் அவசரத்தில் குறுச்செய்தி குறித்து மறந்து போனான் முகேஷ். அதன் பிறகு புதிய குறுந்தகவலும் ஏதும் வரவில்லை.

ஹரிஷ் – முகேஷின்நெருங்கிய நண்பன் – இன்று போன் செய்திருந்தான்.

“என்னடா மச்சான்..!  நேத்து பொறந்தநாளுக்கு பார்ட்டி ஏதும் கிடையாதா..? கல்யாணம் ஆனதும் நண்பனை மறந்துருங்கடா.” எனக் கலாய்த்தான்..

“சே, அதெல்லாம் கிடையாதுடா.. நேத்து சுதாவையும் கொழந்தையையும் கூட்டிகிட்டு வெளியே போயிருந்தேன்.. அதான் பேசமுடியலை. இன்னைக்கு வாயேன்டா மச்சி…சாயங்காலம் மீட் பண்ணுவோம். நானே உன்கிட்ட பேசணும்னு நினைச்சேன். நீயே போன் பண்ணிட்ட… ஈவினிங் நம்ம வழக்கமான இடத்துக்கு வந்துடுடா” என  போனை வைத்தான்.

ஹரிஷ் ஸ்கூலிலிருந்து காலேஜ் வரை ஒன்றாகர் படித்தவன். ஒரே தெருவில் குடியிருந்தவன் வேறு.. அதனால் இருவருக்கும் நெருங்கிய பழக்கம். சுகம் துக்கம் என சகலத்தையும் பரிமாறிக் கொள்ளும் இளவயது நட்பாயிற்றே..!

மாலை ஆபிஸில் வேலை முடிந்து கிளம்பியவன் நேராக மெரினா பீச்சிற்குக் காரை செலுத்தினான்.

போனில் சுதா.. “என்னங்க… எப்ப வருவீங்க..?” என்றாள் ஆர்வமுடன்.

“என்ன விஷயம் சுதா..?”

“கோவிலுக்கு போகலாம்னு…”

“அம்மாவோட போய்ட்டு வந்துரு சுதா. இன்னைக்கு ஹரிஷை மீட் பண்ணிட்டு லேட்டா தான் வருவேன்.. நீ சாப்பிட்டு தூங்கு சுதா.. அம்மாகிட்டயும் சொல்லிடு…”

“சரிங்க…” என்றாள்.

எவ்வளவு அணுசரனையாக இருக்கிறாள்.. ஏதற்குமே ஏன், எதற்கு..? எனத் தொணதொணக்காமல்.. இப்படி ஒரு மனைவி இக்காலத்தில் அமைவது என்பது தான் செய்த பூர்வஜென்ம புண்ணியம் என நினைத்தான்.

போனை கட் செய்து பாக்கெட்டில் வைக்கப்போனவன் அப்போது தான் கவனித்தான்..

“என்னை மறந்துட்டியா..?” என்ற  குறுந்தகவல் கண்ணை சிமிட்டியது.

பகீரென்றது… அவளாக இருக்குமோ..? நினைக்கையிலே நெஞ்சம் படபடத்தது. முகம் வேர்த்துக் கொட்டியது.

படபடக்கும் நெஞ்சுடன் காரை வேகமாக ஓட்டியவன்.. பார்க்கிங்கில் பார்க் செய்துவிட்டு ஹரிஷை வழக்கமாகச் சந்திக்கும் இடத்திற்கு வந்தான். ஹரிஷ் இன்னும் வந்திருக்கவில்லை.

கடல் அலைகளை வெறித்து நோக்கியபடி… சிலையாக அமர்ந்திருந்தான். நினைவுகள் பின்னோக்கி செல்ல தன்னை நினைத்து தனக்கே அவமானமாக இருந்தது.

திடீரென தோளில் கைவிழ… பதறியடித்து அதிர்ந்தான்.

“ஏண்டா மச்சான்..! ஏண்டா இப்படி அலர்ற..? என்னைத் தவிர வேற யாருடா உன் தோளில் தைரியமா கைவைப்பாங்க..?”  எனச் சிரித்தபடி அருகில் அமர்ந்தான் ஹரிஷ்.

“இல்லைடா..! ஏதோ யோசிச்சிக்கிட்டிருந்தேன். திடீரெனக் கை வைக்கவே பயந்துட்டேன்..” எனச் சிரிக்க முயன்றான்.

“அது சரி..! ஆனாலும் ஏண்டா பேய் அறைஞ்ச மாதிரி இருக்க..? முகம் வேற வெளிறி போய்ருக்கு.”

சொல்லிவிடலாமா!.. என யோசித்தான். வேறு யாரிடமும் சொல்ல முடியாது. ஹரிஷ் நெருங்கிய நண்பன்..தன் இரகசியங்களை காப்பவன்..அவ்வப்போது தேவையான உதவிகளைச் செய்பவன் என பலகட்ட யோசனைக்கு பிறகு ஹரிஷிடம் சொல்வதென முடிவெடுத்தான்.

“ஹரிஷ்…” என தொண்டையைச் சொருமியவாறு… குறுஞ்செய்தி குறித்த தகவலைச் சொல்ல…

“ப்பூ… இவ்வளவு தானா..? போன் பண்ணி யார்னு கேளேன்டா. அதுல என்ன பயம்..? அப்படி என்ன சொல்லிடப்போறாங்க..? யாரோ உன்னை நல்லாக் கலாய்க்குறாங்க…” என கலகலவென்று சிரித்தான்.

‘எவ்வளவு சீரியஸாக சொல்கிறோம்? இவன் ஜோக்கைக் கேட்டது போல சிரிக்கிறானே..!’ என முகேஷ் டென்ஷனாகி விட்டான்.

“டேய்.. டென்ஷனாகாத.. நம்பரைக் குடு… யார்னு பேசிப் பாத்துடலாம்” என கேஷுவலாகக் கேட்க…

“சரிடா, நானே அப்புறமாக் கேட்டுக்கிறேன்.”..என்றான் முகேஷ் பதறியபடி.

அதன்பிறகு வழக்கமான பேச்சுகள்.. சிரிப்புக்கள் என பேச்சு தடம்மாற.. இறுதியாகக் கிளம்பும்  போது…. “மச்சி..!…அந்த நம்பருக்குக் கால் பண்ணி பேசிட்டுச் சொல்லுடா..! ஒண்ணும் பிரச்சினை இருக்காது.  எதுன்னாலும் எனக்கு  கால் பண்ணு.”

“ம்ம்…” எனத் தலையாட்டினான் சுரத்தேயில்லாமல்.

“டேய்… மூஞ்சியை இப்படி வைச்சுக்காதேடா..!   பாக்கச் சகிக்கலை. சுதாவும் அம்மாவும் ஏதாவது நினைக்கப் போறாங்க. ஃப்ரீயா இருடா..!”

“சரிடா..!” என இருவரும் காரைக் கிளப்பி வெவ்வேறு திசைகளில் கிளம்பினார்கள்.

ஹரிஷ் சுலபமாக சொல்லிவிட்டான்.. “பயப்படாத” என்று. “மடியில் கனமிருந்தால் தான் வழியில் பயமிருக்கும்னு…” ஆனால் முகேஷின் மடியில் பாறாங்கலே இருக்கிறதே…. பயந்து தானே ஆகவேண்டும்..?

காரைச் செலுத்துவதில் கவனமாக இருந்தவன்.. மொபைலில் ‘ட்ரிங்’ சத்தத்தில் கலைந்து மொபைலைத் திறக்க….

“பீச் காத்து நல்லாயிருந்ததா..? ஹரிஷ் என்ன சொன்னார்..?”  என்ற செய்தியில் நிலைகுலைந்து போனான்..

ஆத்திரமாக வந்தது. யாரோ தன்னை இப்படித் தொடர்வது.. வேவு பார்ப்பது…

கோபத்துடன்… “ஹூ ஆர் யூ..?” எனக் கேட்டான்..

ஏதும் பதிலில்லை… முகேஷ் தவிப்புடன் மொபைலையே பார்க்க..

ஐந்து நிமிடக் காத்திருப்பிற்கு பின்…

“ஐயம் வர்ஷினி..!” என்ற பதிலில் சர்வ நாடியும் ஒடுங்கிப் போனான்.

அவளே தான்..!

‘கிராதகி…  ராட்சசி…’ என்று முனகியபடி வெளிறிய முகத்துடன் நிலைகுலைந்தபடி காரை செலுத்தினான்.

மனதுக்குள் பயரேகை ஓடியது. சுதாவும் அம்மாவும் கண்முன்னே வந்து போனார்கள். அப்பா “ஏண்டா?” என முறைத்துவிட்டுப் போனார். விதி தன் வாழ்க்கையில் வர்ஷினி ரூபத்தில் விளையாடப் போவதை மனது முன்னறிவிப்பு செய்து விட்டு போனது.

-தொடரும்

ganesh

2 Comments

  • Suspense continues

  • ஆகா.. இப்படி ஒரு ட்விஸ்டா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...