மண்பாண்டக் கலைஞருக்குக் கிடைத்த கௌரவம் பத்மஸ்ரீ விருது

 மண்பாண்டக் கலைஞருக்குக் கிடைத்த கௌரவம் பத்மஸ்ரீ விருது
மண்பாண்டக் கலைஞருக்கு குடியரசுத் தலைவர் பத்மஸ்ரீ விருது வழங்கும்போது

மத்திய அரசு பல்வேறு துறைகளைச் சார்ந்த சிறப்பான பணிகளில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு 2019ஆம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருதுகளைக் கடந்த 2020 ஜனவரியில் அறிவித்தது. இதில் கலைப் பிரிவில் புதுச்சேரி வில்லியனூர் அடுத்த கணுவாப்பேட்டை யில் வசிக்கும் வி.கே.முனுசாமிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருந்தது. பத்மஸ்ரீ விருதை அளித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். அவர் அப்படி என்ன செய்தார்? பார்க்கலாம்

புதுச்சேரி அடுத்த வில்லியனூரில் 1967-ல் பிறந்த முனுசாமி, அவரது தந்தையார் காலத்திலிருந்து அதாவது 1977ஆம் ஆண்டு முதல் சுமார் 44 ஆண்டுகளாக மட்பாண்டத் தொழில் செய்து வருகிறார். இவர், உருவாக்கிய மட்பாண்டப் பொருள்களுக்கு வெளிநாடு களில் பெரும் வரவேற்பு உள்ளது. வீட்டிற்குத் தேவையான மண்பாண்டப் பொருள்கள், தசரா கொலு பொம்மை கள், மற்றும் சிலைகள் செய்வது இவரின் வழக்கமாகும்.

இவர் களிமண்ணில் உருவாக்கிய 1.2 சென்டிமீட்டர் மட்பாண்டப் பொருளுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. அதேபோல் 1.2 சென்டிமீட்டர் முதல் 50 அடி உயரம் வரை சிற்பம் செய்ததற்கு சர்வதேச விருதான ஜியோகிராபிக் இண்டிகேஷன் என்ற விருதை 2001ஆம் ஆண்டு முதன் முதலாகப் பெற்றார். வெளிநாட்டு கைவினைக் கலைஞர்களுக்கு மண் பாண்டப் பொருட்கள் செய்வது குறித்து பயிற்சி அளித்துள்ள இவரை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்தது. இதையடுத்து டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் பத்மஸ்ரீ விருதை முனுசாமிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

அழிவின் விழிம்பில் இருக்கும் இந்தச் சுடுகளிமண் கலையை இன்றைய தலைமுறையினரும் தெரிந்துகொள்ளும் வகையில் மாவட்டத் தொழில் மையத்துடன் இணைந்து வேலையில்லா பட்டதாரிகள் மற்றும் மாணவர் களுக்குக் கற்றுத் தந்தவர் முனுசாமி. கலையைப் பாதுகாக்க முயற்சி எடுத்த அவருக்கு புதுச்சேரி அரசின் பரிந்துரையின் பேரில் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கும் நிகழ்வு குடியரசுத் தலைவர் மாளிகையில் தர்பார் அரங்கில் நடந்தது

குடியரசுத் தலைவர் தனது ட்விட்டர் பதிவில், “நன்கு அறியப்பட்ட டெரகோட்டா சிற்பி முனுசாமி. இந்தப் பூர்வீக இந்தியக் கலை வடிவத்தைப் பாதுகாத்ததற்காகப் புகழ் பெற்றார். இந்தக் கலை வடிவத்தைப் பயன்படுத்தி புதுமையான முறையில் சிறு உருவங்களை உருவாக்கியதற்காக அவர் சர்வதேச அளவில் கொண்டாடப்படுகிறார்” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

விருது நிகழ்வுக்குப் பிறகு நடந்த தேநீர் நிகழ்வில் பிரதமர் மோடியும், முனுசாமியைக் கட்டி அணைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். இவ்விருது என் வாழ்வில் மிக முக்கியமானது. இது பாரம்பரிய டெரகோட்டா கலையைப் பாதுகாக்க உதவும் என்று நெகிழ்வுடன் குறிப்பிட்டார் முனுசாமி.

வீட்டிற்குத் தேவையான மண்பாண்ட பொருள்கள் முதல் தசரா கொலு பொம்மைகள் மற்றும் சிலைகள் என இவரது குடும்பத்தினர் பலரும் மண் பாண்டத் தொழில் செய்து வருகின்றனர். முனுசாமி களிமண்ணில் உருவாக் கிய 1/2 சென்டிமீட்டர் மண்பாண்ட பொருளுக்கு பெரும் வரவேற்பு உள்ளது.

மேலும் 1/2 சென்டிமீட்டர் முதல் 50 அடி உயரம் வரை சிற்பம் செய்ததற்கு கடந்த 2001ம் ஆண்டு உலக புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. இந்த விருதை முதன்முதலாகப் பெற்றவர் முனுசாமிதான். வெளிநாடுகளிலும் வரவேற்பு பெற்ற முனுசாமி அங்கு கைவினை கலைஞர்களுக்கு மண்பாண்ட பொருட் கள் செய்வது குறித்து பயிற்சியும் அளித்து உள்ளார்.

விருது பெற்ற பிறகு புதுச்சேரி திரும்பிய முனுசாமிக்கு வில்லியனூர் ஏழை மாரியம்மன் கோவிலில் இருந்து அவரது குடும்பத்தினர் மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்கள் ஏராளமானோர் ஒன்றுகூடி மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சிற்ப கலைஞர் வி.கே.முனுசாமி பேசும்போது, “எனது குடும்பத்தினர் 22 தலைமுறைகளாக குலத்தொழிலான மண்பாண்டங்கள் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதுவரை 3 லட்சம் மாணவ, மாணவிகளுக்கும், 10 ஆயிரம் வேலையில்லா இளைஞர்களுக் கும், 3 ஆயிரம் ஆசிரியர்களுக்கும் இலவசமாகச் சுடு களிமண் சிற்பங்கள் குறித்து இலவச மாகப் பாடங்கள் மற்றும் செயல்முறை பயிற்சி கொடுத்துள்ளேன். இந்தச் சேவையைப் பாராட்டி மத்திய அரசு எனக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்துள்ளது.

இதுபோல சர்வதேச, தேசிய அளவில் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் வழங்கப்பட்ட 78 விருதுகளைப் பெற்றுள்ளேன். நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய 5 பூதங்களும் மாசுபட்டுள்ளன. ரசாயனப் பயன்பாட்டால் மண் வளம் பாதிக்கப்பட்டுள்ளது.

வங்காள விரிகுடா கடல் பகுதியில் நல்ல களிமண் கிடைக்கிறது. இந்த மண்ணை எடுத்து செய்வதால் கொலு பொம்மைகள் உள்பட மண்ணால் செய்யும் சிற்பக்கலை நன்றாக வருகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் மண் பாண்டக கலையைக் கற்றுத்தர வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். 

புதுச்சேரி ஆளுநர் அளித்த பாராட்டு

தொழிலாளர்களே இல்லாத நிலை உருவாக கிராமம்தோறும் கைவினை, கைத்தொழில் உருவாக்க வேண்டும். குலத்தொழிலை ஊக்குவிக்க வேண்டும். அரை நாள் ஏட்டுக்கல்வி, அரை நாள் தொழிற்கல்வி கொடுக்க வேண்டும்.  இதன்மூலம் ஒவ்வொரு வீட்டிலும் தொழில் முனைவோர் உருவாகுவார்கள்.

6ம் வகுப்பு முதல் கைத்தொழிலைக் கற்றுத் தர வேண்டும். மீனவர்கள், கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நல உதவிகள் கொடுப்பதுபோல ஒவ்வொரு ஊரிலும் உள்ள சட்டி, பானை தயாரிப்பாளர்களை ஒருங்கிணைத்து நிலங்கள் கொடுத்து, பொதுவான தொழிலில் உள்ள குறைகளை நீக்கி, ஊக்குவித்தால் தான் இந்தத் தொழில் முன்னேற்றம் அடையும்.

எட்டாவது வரை படித்த நான் குடும்ப சூழ்நிலை காரணமாகப் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டேன். எனது தந்தையிடம் இருந்து இத்தொழிலைக் கற்றுக்கொண்டேன். அதன் பிறகு புதுச்சேரி மாவட்டத் தொழில் மையம் சார்பாக இத்தொழிலைத் தொடர்ந்து செய்து வந்தேன். எங்கள் தொழிலில் இருந்தவர்கள் இதை விட்டுவிட்டு வேறு தொழில்கள் செய்து வருகின்றனர். ஆனால், நம்பிக்கையுடன் இந்தத் தொழிலை நான் விடாமல் தொடர்ந்து செய்து வருகிறேன்.

பத்மஸ்ரீ விருது பெற்றதும் மண்பாண்டத் தொழிலுக்கே பெருமை சேர்த்ததாக மகிழ்ச்சி அடைந்தேன். இந்த விருது என்னை மென்மேலும் ஊக்குவிக்கும். மண்பாண்டத் தொழில் நலிந்து வருவதால் என்னை போன்ற கைவினைக் கலைஞர்கள் பலர் தொழிலில் இருந்து வெளியேறுகின்றனர். எனவே, அரசு கைவினைக் கலைகளை ஐந்தாம் வகுப்பிலிருந்து பள்ளியில் பாடமாகக் கொண்டு வரவேண்டும் என்றார் முனுசாமி.

கைவினைக் கலைஞர்கள், அனுபவம் வாய்ந்தவர்களுக்கு கௌரவ ஆசிரியர் களாக அரசுப் பணி வழங்க வேண்டும். இதனால் கலைஞர்களின் வாழ்வாதார மும், கைவினைக் கலையும் மேம்படும். அழிவின் விளிம்பில் உள்ள மண் பாண்டத் தொழிலை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். 

முனுசாமி பல நாடுகளுக்குப் பயணப்பட்டவர். புதுச்சேரியில் புகையிலை அடுப்புகளை உருவாக்கி மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குப் பயிற்சி அளித்து அதற்கான விருது களையும் பெற்றவர். ஸ்பெயின், பிரான்ஸ், ருமேனியா, தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று மண்ணில் எப்படி சிலைகள் செய்வது என்று அங்கு உள்ளவர் களுக்குப் பயிற்சி அளித்துள்ளார்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...