பத்துமலை பந்தம் | 30 | காலச்சக்கரம் நரசிம்மா

 பத்துமலை பந்தம் | 30 | காலச்சக்கரம் நரசிம்மா

30. விமானப்படிகளில் விபரீத செய்தி 

“தகையோன்-னா தகுதி உடையவன். தகுதி உடையவர்களால மட்டுமே ஏற முடிஞ்ச மலை..! இப்ப அந்த மலையோட பெயர் என்ன தெரியுமா..?” –குகன்மணி கேட்க, மயூரி ஆவலுடன் அவன்  முகத்தைப் பார்த்தாள். மலேசியா ஏர்லைன்ஸ்ஸில் பணிபுரிவதால், மலேசியாவின் முக்கிய இடங்களைப் பற்றி அறிந்திருந்தாளே தவிர அதன் இயற்கை மர்மங்களைப் பற்றி இதுவரை ஒன்றும் அறிந்திருக்கவில்லை. 

“இப்ப அந்த மலைக்கு குனுங் தகான்-னு பெயர். குனுங்-னா மலை. மலேசியாவோட உயரமான மலை. மலை முழுக்க அடர்ந்த காடுகள் இருக்கு.  மலேசியாவுல இருக்கிற 239 மலைகளுள் இந்த மலையில ஏறிப் போறதுதான் மிகவும் சிரமம். காடுகள் வழியா 100 கிமீ. தொலைவு மலைத்தொடர் வழியா நடந்து, மலை உச்சியை அடையணும். ஆபத்தான வழுக்குப்பாறைகளும், அதுல பொங்கிப் பாய்கிற காட்டாறுகளும், உண்டு. தனியாப் போனால், தொலைந்து போயிட வேண்டியதுதான்.  அனுபவசாலிகளும், இந்த இடத்தை நல்லாத் தெரிஞ்சவங்களோடதான் போகணும்.  துஷ்ட மிருகங்கள், மாட்டையே தூக்கிப் போற கழுகுகள் எல்லாம் இருக்கு. இங்கே இருக்கிற அட்டைப்பூச்சி எல்லாம்,  குடிக்காது.  ஸ்ட்ராவ் போட்டு சர் சர்னு    கொக்கோகோலாவை  மாதிரி ஒரே இழுதான். இந்த மலையிலதான் போகர் வாசம்  பண்ணினாரு.  அங்கேதான் போகர்  வடிச்ச  மூன்றாவது சிலை இருக்கு.” –குகன்மணி சொன்னான்.

“நாம எப்ப அங்கே போகப் போறோம்..?” –மூன்றாவது சிலையைக் காணும் ஆவலில், உற்சாகத்துடன் கேட்டாள், மயூரி. 

அவளது ஆர்வத்தை ரசித்தபடி, வடக்குப் பக்கமாகக் கையை நீட்டினான், குகன். 

“சரியா இங்கே இருந்து 167 கிமீ. வடக்கே, தகான் மலை இருக்கு. மலேசியாவுலேயே மிகவும் பழமையான பகுதி அதுதான். தகான் மலைக்கு அருகில் இருக்கிற நகரமே 76 கிமீ. தொலைவுல இருக்குன்னா பார்த்துக்கோ… அந்த காடு எவ்வளவு விஸ்தாரமானதுன்னு..! அந்த சிட்டியோட பெயர் பகாங் ஜெராண்டுட்.  நாம அங்கே போயிட்டு, பிறகுதான், தகான் மலைக்கு போகப்போறோம்.  இந்த வௌவால் குகையில இருக்கிற நீலி வேல், நேரா  தகான் மலையைப் பார்த்து நிக்குது.” –என்றவன் மீண்டும் குகையைப் பார்த்து  நின்றான்.

“மயூரி..! நாம  பத்து மலையில நிற்கிறோம்..!  மேற்கே பள்ளங்கி மலை.!  வடக்கே தகான் மலை..! தகான் மலையில தான் நவ பாஷாணங்களைத் திரட்டினார்.  சாதிலிங்கம், மனோசிலை, தாரம், வீரம், கந்தகம், பூரம், வெள்ளை பாஷாணம், கௌரி பாஷாணம், தொட்டி பாஷாணம்ன்னு இந்தப் பாஷாணங்கள் தகான் மலையிலதான் மண்டிக் கிடந்தது. இங்கே வந்து அதைத் திரட்டிக்கிட்டு, பத்து மலையில சுண்ணாம்பு குகையில், வௌவால் சாணத்துக்கு நடுவுல சேகரிச்சு வச்சார்.  சுண்ணாம்புக் குகையில் வச்சா, தட்பவெப்ப நிலை பாஷாணங்களை பாதிக்காது. பிறகு எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு, பள்ளங்கியில இருக்கிற, கன்னிவாடில, போய் மூணு நவபாஷாணங்களை வடிச்சாரு.  மக்களுக்குப் பயன்படட்டும்னு  போகர் பாசறை  அடிவாரத்துல இருக்கிற  பழனியில் ஒரு சிலையை பிரதிஷ்டை பண்ணாரு.  (கொடைக்கானலில் இருந்து பழனிக்கு 60 கிமீ ). அடுத்த சிலையைப் பள்ளங்கியிலேயே தனது சீடர்கள் வசம் கொடுத்து மூணாவது சிலையை மட்டும், யார் கண்ணுக்கும் படாம, மலேசியாவுல ஒளிச்சு வச்சாரு..!” –குகன்மணி கூற, பிரமித்துப் போய் அவன் கூறுவதைக் கேட்டுக்கொண்டிருந்தாள், மயூரி..!

“எனக்கு இப்பவே தகான் மலைக்குப் போகணும் போல இருக்கு..!” –இமைகள் படபடக்க, மயூரி கூறினாள்.

“ஈஸியா சொல்லிடலாம், மயூரி..! ஆனா இங்கே இருக்கிறவங்களே, அங்கே போறதில்லை. போனவர்களும், பாதியிலேயே திரும்பி வந்துடறாங்க..! ட்ரெக்கிங் போனவங்க நிறைய பேரைக் காணலை..!  நிச்சயமா, லேடீஸ்க்கு ரொம்பக் கஷ்டம். ஆனா.. உனக்கு மட்டும் அந்த அங்கே போற பாக்கியம் இருக்கு. ஐ வில் டேக் யு..!  ரொம்ப சீக்கிரத்துலயே அங்கே போலாம். அதுவரைக்கும், நீ என் வீட்டுல இருக்கேன்னு உத்தரவாதம் கொடுத்தா, நான் உன்னை அழைச்சுக்கிட்டுப் போறேன்.”

‘சரி’ என்கிற பாவனையில் தலையசைத்தாள் – மயூரி..!

“குட்..! அப்போ நாம் புறப்படலாமா..?” –குகன்மணி கேட்க,  யோசனையுடன் மயூரி திரும்பி குகையினுள் நோக்கினாள்.

“இங்கே இருக்கிற நீலி வேல் மாதிரி எங்க பள்ளங்கி பவனத்துலயும் இருக்கு. இது, மூணாவது சிலையோட வேல்ன்னா ! எங்க பவனத்துல இருக்கிற வேல் ரெண்டாவது சிலையோட வேல். அப்ப, பழனி மலையில இருக்கிற மூர்த்திக்கும் நீலி வேல் இருக்கும் இல்லையா..?” –மயூரி கேட்க தலையசைத்தான். 

“எஸ்..! நீலி வேல் செல்ஃபோன் டவர் மாதிரி..! நீலி வேல்லேர்ந்து புறப்படற கதிர்வீச்சு  பாஷாணங்களோட சேர்க்கையைக் கட்டுப்படுத்தி, கட்டுகளைத் தளராமல் வைக்கும்.. போகர் சொன்ன குறிப்பு தெரியுமா..?”

பாங்கான பாடாணம் ஒன்பதினும் , கெந்திச்சீலைமால் தேவி கொடு வீரம்கச்சால் வெள்ளை பகர்கின்ற தொட்டினொடு சூதம்சங்கு பூரணமாய் நிறைந்த சிவசக்தி நலமான மனோம்மணி கடாட்சத்தாலே நண்ணிநீ ஒன்பதையும் கட்டுகட்டு” –  ! இது போகர் சொன்ன குறிப்பு. நம்ம chemistry படி பார்த்தால், கௌரிப் பாஷாணம்: Arsenic Penta sulphite, கெந்தகப் பாஷாணம்: Sulphur, சீலைப் பாஷாணம்: Arsenic Di sulphite, வீரப் பாஷாணம்: Mercuric Chloride, வெள்ளைப் பாஷாணம்: Arcenic Tri Oxide, சூதப் பாஷாணம்: Mercury! 

மத்த மூணு பாசனத்துக்கு Chemistry-யால விடை கண்டுபிடிக்க முடியலை. இந்த ஒன்பது பாஷாணங்களைத் திரவமாக்கி மீண்டும், திடமாக்க, ஒன்பது வகை எரிபொருள் (Fuel ), ஒன்பது வகை வடிகட்டி (Filter ) உபயோகப்படுத்தினார், போகர்.  நவபாஷாணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்தின் தன்மையை கொண்டிருக்கு. கிரகப் பெயர்ச்சியின் போது அந்தந்தக் கிரகத்துக்கு உரிய பாஷாணத்தோட வீர்யம் அதிகரிக்கும். கிரகணம் நீச்சம் அடையும் போது அந்தந்தப் பாஷாணத்தோட வீர்யம் தளரும். அதை சமநிலை படுத்ததான நீலி வேல் வைக்கிறாங்க.” –குகன்மணி கூறியதும், அசந்து போய் நின்றாள் மயூரி. 

“எவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன, நமது சித்தர் உலகில். வெள்ளைக்காரர்கள்  ஏசி ரூமில் அமர்ந்து கூறுவதை  நம்மவர்கள் கேட்கிறார்கள்,. எல்லாமே  மூடநம்பிக்கை என்று நம்மிடம் பிரச்சாரம் செய்துவிட்டு,  நமது செல்வங்களை பறித்து வெள்ளையர்களுக்குத் தாரை வார்க்கிறார்கள், ! வேப்பிலை தொடங்கி எல்லா மூலிகைகளையும் வெள்ளைக்காரன் patent போட்டு  வருகிறான்.! இதையெல்லாம் பாமர மக்களுக்குப் புரிய விடாமல், சினிமா, கிரிக்கெட், டிவி, முகநூல் என்று மக்களின் சிந்தையை  வசியம் செய்து வைத்திருக்கிறார்கள். — மனதினுள் நொந்துகொண்டாள் மயூரி. 

“சரி, போகலாம் வா..!” —குகன்மணி அழைக்க, அவன் பின்பாக நடந்தாள் மயூரி. 

மீண்டும் பத்துமலையின் உச்சிக்குச் செல்லும் படிகளில் வந்து நின்றதும், குகன்மணி கீழே இறங்க தொடங்கினான். 

“குகன்..!  நாம மலை உச்சிக்குப் போகலையே..? 172 படிகள்தானே ஏறியிருக்கோம்.  மேலே போய் பார்க்கலாமே..!” –என்றதும் சட்டென்று  திரும்பி அவளை அர்த்தத்துடன் பார்த்தான்.

“உடனே நாம் வீட்டுக்கு போகலாம்.” என்றவன் தொடர்ந்து படிகளில் இறங்கினான். அவளை திரும்பிப் பாராமல் திடீரென்று பேசினான். 

“ஜாக்கிரதை மயூரி..! உன்னை நோக்கிப் பெரிய ஆபத்து வந்துகிட்டு இருக்கு. என்னோட அனுமதி இல்லாம நீ எங்கேயும் போகக்கூடாது.” –குகன்மணி கூற, பதற்றத்துடன் அவன் பின்பாக இறங்கத் தொடங்கினாள். தோழி நான்சி கூறியது நினைவுக்கு வந்தது. 

“உன்னைக் கொல்ல அமீர், அபின்னு ரெண்டு மலேசியா டான்-களை ஏவி விட்டிருக்காங்க உங்க குடும்பத்தினர்..!”

இப்போதைக்கு, குகன்மணியின் நிழலில் ஒடுங்குவதுதான், இவளுக்கு நல்லது என்று மனது உரைக்க, ஓடோடிச் சென்று, அவனுடன் சேர்ந்துகொண்டு, நடக்க ஆரம்பித்தாள். இவளது இடையும், தோளும், அவனது தேகத்தில் உரச, அவளுள் ஒரு பாதுகாப்பு உணர்வு தோன்றியது. அவளது ஆள்காட்டி விரலை தனது ஆள்காட்டி விரலுடன் கோர்த்துக்கொண்டு, படிகளில் இறங்கத் தொடங்கினான், குகன்மணி. 

தே சமயம்–

மிதுன் ரெடியின் ஆட்காட்டி விரலைக் கோர்த்துக்கொண்டு, கோலாலம்பூரில் தரையிறங்கிய விமானத்திலிருந்து வெளிப்பட்ட கனிஷ்கா, விமான படிகளில் இறங்க,  அவளை தொடர்ந்து இறங்கிக்கொண்டிருந்தான். தேஜஸ் சரவணபெருமாள். லிகமெண்ட் டேர்-ருக்காக போடப்பட்டிருந்த பெரிய கட்டு அவிழ்க்கப்பட்டு இப்போது, மிகச்சிறிய கட்டு மட்டுமே இருந்தது. சற்றே விந்தி விந்தி நடந்தாலும், அந்த நடை தேஜஸுக்கு கம்பீரம் கொடுத்தது. விமானத்தை விட்டு இறங்கும்போது, வழியனுப்ப நின்ற விமானப் பணிப்பெண்ணைப் பார்த்து ஏகத்திற்கு வழிந்தான். 

“’யுவர் சர்விஸ் வாஸ் பிலேசன்ட்..! யு லுக் கார்ஜியஸ்..!” –என்று தேஜஸ்  ஏகத்திற்கு வழிந்தான். 

“தேங்க் யு..! டேக் கேர் ஆப்  யுவர் ஃபுட்” –என்று புன்னகைத்தபடி  கூறினாள், விமானப்பணிப்பெண்.

“என்னைப் பார்த்து  வழிந்தது போதும் போதும்..! உன்  காலடியைப் பார்த்து  வை. விழுந்துவிடப் போகிறாய்” — என்கிற பொருள் பொதிந்த அவளது குரல் முன்னால் சென்று கொண்டிருந்த மிதுன்ரெட்டியின் காதில் விழ, தனக்குள் சிரித்துக்கொண்டான் மிதுன். 

விமானப் பயணத்தின் போது,  பணிப்பெண்களிடம் தேஜஸ் நடந்துகொண்ட விதமே மிதுனுக்கு பிடிக்கவில்லை. ஏர் ஹோஸ்டஸ் ஒருவளின்  கையை  வருடியபடி, சாண்டவிச் பாக்கெட்டை   வாங்க, அவள் முறைக்க, அதைக் கவனித்துவிட்ட, மிதுன் ரெட்டி தேஜஸை எச்சரித்தான். 

“தேஜஸ்..!  கொஞ்சம்   flirt பண்றதை நிறுத்திக்க..! உன் அக்கா மானம் மட்டும்  போகாது. நம்ம தேசத்தோட மானமே இதுல இன்வால்வ் ஆகியிருக்கு..!” — என்று கூறியிருந்தான்.

நான்கைந்து படிகள்தான் இறங்கி இருப்பார்கள். திடீரென்று தேஜஸின் மொபைலில் ஒரு பீப்  ஒலி, கேட்க whaatsapp மெசேஜ்ஜை பார்த்தான். அம்மா  குணசுந்தரிதான் அனுப்பியிருந்தாள் !

“Sathyadevi arrested..! Paandimuthu Uncle expelled from ruling party.”

“ ஹேப்பி நியூஸ்..!” — தேஜஸ் கூறியவுடன். சட்டென்று  ,நின்று, பின்னால் வந்துகொண்டிருந்த அவனை  அண்ணாந்து பார்த்தாள் கனிஷ்கா. “கனிஷ்கா..! ஹேப்பி நியூஸ்..! நம்ம மாமியை அரெஸ்ட் பண்ணிட்டாங்களாம். மாமாவைக் கட்சியிலிருந்து   நீக்கிட்டாங்களாம்.”

கனிஷ்கா அதிர்ச்சி அடைவாள் என்று அவள் முகத்தை பார்த்தான் மிதுன். அவளோ பற்கள் தெரிய தம்பியை நோக்கிக் கட்டை விரலை உயர்த்தினாள்.

“மலேசியாவுல காலை வைக்கறப்பவே நல்ல சேதி கொடுக்கிறே. சூப்பர்..! அடுத்த ஆப்பு மயூரிக்கு..!” –கனிஷ்கா கூறியதை கேட்டு அதிர்ந்தான், மிதுன். 

‘என்ன பெண் இவள்..! மாமாவின் மனைவி கைதுக்கு மகிழ்ச்சி காட்டுகிறாளே..! சகோதரியான மயூரிக்கு அடுத்த ஆப்பு என்கிறாளே..!’

“எதுக்காக உங்க மாமியைக் கைது செஞ்சிருக்காங்க..?” –மிதுன் திகைத்தான். 

“அவங்க முதல்வரா இருக்கிற கொடைக்கானல் ஸ்கூல்ல இருந்து மூணு கேர்ள்ஸ்-சை புட் பால் மாட்சுக்கு சியர் லீடர்ஸா அனுப்பினாங்க. அந்த மூணு பெண்களையும் யாரோ ரேப் செஞ்சு மர்டர் செஞ்சிருக்காங்க. புதை குழில அவங்க பாடி கிடைச்சுதாம். அந்த வழக்குலத்தான், மயூரியோட அம்மாவைக் கைது செஞ்சிருக்காங்க.” –கனிஷ்கா விளக்க,  பின்னால் இருந்து பல குரல்கள் ஒலித்தன. 

“ஹலோ..! யு ஆர் பிளாக்கிங் தி வே..!” –என்று சக பயணிகள் குரல் கொடுக்க,  மூவரும் தொடர்ந்து இறங்கினார்கள்,. 

தொலைவில், ஏர்போர்ட்டின் முதல் தளத்தில் நின்றபடி தரையிறங்கிய விமானத்தையே வெறித்துக்கொண்டிருந்தான், அபி. சரவணப்பெருமாளின் பிள்ளைகள் வருகிறார்கள். நீ அவர்களுடன் தொடர்பு ஏற்படுத்தி கொள்.” –என்று சொல்லி, அவனை அனுப்பியுர்ந்தான், அமீர். 

‘பாவம் அந்த மயூரி..!’ –மனதிற்குள் நினைத்தான், மிதுன் ரெட்டி. 

மூன்றாவது சிலை உள்ள பூமியில் காலை வைத்திருக்கிறார்கள், நல்லமுத்து குடும்பத்தை சேர்ந்த கனிஷ்காவும், தேஜஸும். அவர்களது தேடுதல் வேட்டை ஆபத்துடன்தான்  தொடங்கியுள்ளது. ஆபத்து யாருக்கு என்பது போகப்போகத் தெரியும். 

-தொடரும்…

ganesh

4 Comments

  • Really interesting!!

  • சூப்பர்! கெட்டவர்களுக்குத்தான் ஆபத்தாய் இருக்கும்!

  • Super

  • Super

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...