அவ(ள்)தாரம் | 1 | தேவிபாலா

 அவ(ள்)தாரம் | 1 | தேவிபாலா

பாரதி, வாசுகி, மேகலா என்ற மூன்று சகோதரிகளின் கதை இது!

நம் கதாநாயகி பாரதி, தப்பு நடந்தால் உடனே தட்டிக்கேட்பாள்! யாருக்கும் பயப்பட மாட்டாள். என்ன எதிர்ப்பு வந்தாலும் போராடி அதற்கொரு தீர்வு காணாமல் விட மாட்டாள். இதனால் நண்பர்களை விட பாரதிக்கு, எதிரிகள் அதிகம்! அப்பா சிதம்பரத்துக்கு பாரதியின் இந்த குணம் ரொம்ப பிடிக்கும்! அம்மா கௌசல்யா, இதற்காக பாரதியை பல முறை கண்டித்திருக்கிறாள்.

“ ஆயிரம் தான் ஆனாலும் நீ ஒரு பொண்ணு! அதை நீ மறக்கக்கூடாது! உனக்கு மனசுல உள்ள பலம், ஒடம்புல இருக்காது!”

“ யார் சொன்னது? நிச்சயமா பிரச்னைனு வந்தா, ஒரு பொண்ணால எதையும் சமாளிக்க முடியும்! இதுல ஆணென்ன? பெண்ணென்ன? அநீதியை தட்டிக்கேக்கற உரிமை எல்லாருக்கும் உண்டு! புரிஞ்சுகோ!”

“ சப்பாஷ்டா! கௌசல்யா! மூணையும் பொண்ணா பெத்துட்டமேனு நீ வருத்தப்பட்டியே! அதுல இவ நமக்கு ஆம்பளை பையனுக்கும் மேலே!”

அதே போல சில குற்றங்களுக்கு பாரதி வழங்கும் தீர்ப்பு, அலாதியாக எந்த நீதி மன்றமும் யோசிக்கக்கூட தயங்கும் தீர்ப்பாக இருக்கும்! சட்ட புத்தகத்தில் சேர்க்கப்பட வேண்டிய புதிய தீர்ப்பாக இருக்கும்! அப்படி ஒரு தீர்ப்பை பாரதி வழங்கியது தான் இந்த கதை!

மற்ற இரு சகோதரிகளில் மூத்தவள் வாசுகி! இவள் கணவன் சொல் தாண்டாத வள்ளுவர் வாசுகி அல்ல! கணவனையே நடுங்க வைக்கும் வாசுகி! நாலு வயதில் ஒரு பெண் குழந்தை! கண்டிப்பு கறாரில் ராணுவத்தை மிஞ்சும் கெடு பிடியான பெண்!

மூன்றாவது மேகலா! கல்லூரி மாணவி! அழகான, அம்சமான குடும்பத்தின் கடைக்குட்டி! செல்ல மகள், பிடிவாதக்காரி!”

இனி கதைக்கு வரலாம்!

ந்த திங்கள் காலை விடிந்தது! மேகலாவை படுக்கையில் வந்து எழுப்பி, முத்தமிட்டு “ ஹேப்பி பர்த் டே” சொன்னாள் பாரதி.

“ போய் பல் தேச்சிட்டு, குளிச்சிட்டு வா! உனக்கு புது ட்ரஸ் வாங்கி வச்சிருக்கேன்! போட்டுக்கலாம்! அம்மா ஸ்வீட் பண்றாங்க! சாப்டுட்டு காலேஜூக்கு புறப்படு!”

“ அக்கா! நான் உங்கிட்ட ஒண்ணு கேக்கணும்!”

“ முதல்ல குளிச்சிட்டு, புது ட்ரஸ் போட்டுட்டு வந்து சாமி கும்பிடு! அம்மா தர்ற ஸ்வீட்டை சாப்பிடு! அப்புறமா பேசலாம்!”

மேகலா குளித்து விட்டு வர, புது ட்ரஸ்ஸை பாரதி தர,

“ அதை இப்படி கொண்டா பாரதி! என்ன விலை இது?”

“ ரெண்டாயிரம் ஆச்சும்மா! மேக்ஸ்ல அவளை கூட்டிட்டு போய் வாங்கினேன்!”

“ ஒரு பொறந்த நாளுக்கு ரெண்டாயிரம் ரூபாய்க்கு துணியா? இதெல்லாம் அநியாயமா இல்லை? உங்கப்பாவோட ஒரு சம்பளத்துல, உங்க மூணு பேரையும் ஆளாக்க நான் பட்ட பாடு உங்களுக்கு தெரியுமாடீ? நீ வேலைக்கு வந்து முழுசா ஒரு வருஷம் ஆகலை! இப்படியா செலவழிப்பே?”

“ ஏன் நீ இப்படி புலம்பற? அப்படி என்ன செய்யக்கூடாத காரியத்தை நாங்க செஞ்சிட்டோம்? அப்பா சம்பளத்துல நான் வாங்கினா, நீ கோவப்படலாம்! அவ கடைக்குட்டி! ஒரு பொறந்த நாளை கொண்டாடறது தப்பா?”

“ உங்க மூணு பேரை படிக்க வச்சது மட்டும் போதாது! வாசுகி கல்யாணம் முடிஞ்சு, சீமந்தம் நடந்து, பிரசவமும் ஆயாச்சு! உங்க ரெண்டு பேருக்கும் அதெல்லாம் நடக்க வேண்டாமா?”

“ விடும்மா! மேகலா! புது ட்ரஸ்ஸை போட்டுட்டு வா! அம்மா! புலம்பறதை விட்டு, அவளுக்கு இனிப்பு ஊட்டி விட்டு அவளை ஆசிர்வாதம் பண்ணு!”

சகலமும் நடந்தது!

“ மேகலா! நீ என்ன சொல்ல வந்தே?”

“ அம்மா இதுக்கே இந்த காட்டு காட்டறாங்க! நான் சொன்னா என்னை கொன்னே போடுவாங்க!”

“ தைரியமா சொல்லுடி! என்ன? உன் ஃப்ரெண்ட்ஸை கூப்பிட்டு கேக் வெட்டி இதை செலிப்ரேட் பண்ணணுமா?”

“ எப்படீக்கா கண்டு புடிச்சே?”

“ நான் உன் வயசு தாண்டி வந்தவ தானே? எனக்கு அதெல்லாம் நிறைவேறலை! போகட்டும்! உனக்கு செஞ்சிடலாம்! நீ காலேஜ் விட்டு நாலரை மணிக்கு வருவேயில்லை? நான் அஞ்சு மணிக்கு இன்னிக்கு பர்மிஷன் போட்டுட்டு வர்றேன்! எல்லாரும் வந்து, நீ கேக் கட் பண்ணின பிறகு டின்னர் வெளில ஆர்டர் பண்ணி, வீட்டுக்கு வரவழைச்சு சாப்பிடலாம்! சரியா?”

“ என் செல்ல அக்கா!”

பாரதியை மேகலா கட்டி முத்தமிட,

“ அந்த மாதிரி கூத்தெல்லாம் அடிக்க நான் விட மாட்டேன்! அதென்ன கேக் வெட்டற பழக்கம்? நம்ம வீட்ல அதெல்லாம் கூடாது! அப்பா வேற ஊர்ல இல்லை!”

“ இதுக்கு அப்பா ஏன்மா ஊர்ல இருக்கணும்?”

ஃபோன் அடித்தது! ஆஃபீஸ் வேலையாக மதுரை போயிருக்கும் அப்பா சிதம்பரம், மேகலாவை அழைத்து, பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்ல,

பாரதி, அப்பாவிடம் வீட்டில் வைத்து தோழிகளுடன் பிறந்த நாள் கொண்டாட ஏற்பாடு செய்ததை சொல்ல,

“ஸ்பீக்கர்ல போடும்மா! கௌசல்யா! குழந்தைங்க ஆசைப்பட்டா செய்யட்டும்! தடுக்காதே! இதுல ஒண்ணும் தப்பில்லை! நாம கண்டிப்பா வளர்த்ததுல இப்ப வரைக்கும் மூணு பேரும் நல்லாத்தான் வளர்ந்திருக்காங்க! விட்ரு! பாரதி என்ன செஞ்சாலும் அது சரியாத்தான் இருக்கும்! வாசுகியை வரச்சொல்லுங்க!”

“ஹே! அப்பாவே சரினு சொல்லியாச்சு! எங்க பாரதி அக்காவோட பவர் இது!”

“எப்படியோ போங்கடி! வெளில செலவழிக்காதீங்க! வீட்ல நானே செஞ்சிர்றேன்!”

“ அம்மா! உனக்கு சாட் அயிட்டங்கள் செய்ய வராது! நீ வத்தக்குழம்பு க்ரூப்!”

“நானும் வாசுகியும் பண்றோம்டி! சரி, நேரமாச்சு! நான் கோயிலுக்கு போயிட்டு ஆஃபீசுக்கு போறேன்! நீயும் காலேஜூக்கு புறப்படு!”

இரண்டு பேரும் காலை டிபனை சாப்பிட்டு கையில் டப்பாவுடன் புறப்பட்டார்கள்.

பாரதி, தனியார் நிறுவனமொன்றில் வேலை பார்க்கிறாள்! எம்.காம். படிப்பை முடித்து விட்டு கடந்த ஒரு வருஷ காலமாக வேலை! நல்ல பெரிய கம்பெனி அது! பாரதிக்கும் அங்கு நல்ல பெயர்! சிரித்த முகத்துடன் கலகலப்பாக இருப்பாள்! ஆனால் வேலையில் கண்டிப்பான பெண்! தேவையில்லாத எந்த பேச்சுக்கும் இடம் தர மாட்டாள்! காலையில் தினசரி கோயிலுக்கு போய் விட்டுத்தான் அலுவலகம் போவாள்! அன்று தங்கை பிறந்த நாள் என்பதால் ஒரு அர்ச்சனையை செய்து விட்டு போகலாம் என அம்மன் கோயிலுக்கு தன் ஸ்கூட்டரை செலுத்தினாள்! கோயில் வாசலுக்கு வந்ததும் ஒரே பரபரப்பாக இருந்தது! பரவலாக ஒரு கூட்டமும் இருந்தது! ஏராளமானஆட்கள் நடமாடிக்கொண்டிருக்க, பாரதி உள்ளே நுழைந்தாள்!

“என்ன இன்னிக்கு கூட்டமா இருக்கு?”

“ராஜலஷ்மி அம்மாவோட பிறந்த நாள் இன்னிக்கு!”

“யாரது?”

“என்னம்மா இப்படி கேட்டுட்டே? பிரபல தொழிலதிபர் மாத்ருபூதம் சாரோட மனைவி ராஜலஷ்மி அம்மா! அவங்க இப்ப உயிரோட இல்லை! இறந்து சில வருஷங்களாச்சு! ஆனாலும் அவங்க பிறந்த நாளை கம்பெனில விமரிசையா கொண்டாடுவாங்க! முதல்ல கோயில்ல விசேஷ பூஜைகளை செஞ்சிட்டு, கம்பெனில வேலை பாக்கற எல்லாருக்கும் சாப்பாடு, ஒரு மாச போனஸ் எல்லாம் உண்டு!”

“அப்படியா? எங்கப்பா கூட இந்த கம்பெனில தான் வேலை பாக்கறார்! ஆனா எனக்கு இதெல்லாம் அப்பா சொன்னதில்லை! நாங்க முதலாளியை பார்த்ததும் இல்லை! சரி! என் தங்கச்சி பேர்ல ஒரு அர்ச்சனையை பண்ணிடுங்க சாமி! எனக்கு நேரமாச்சு!”

“இல்லைம்மா! இன்னிக்கு கோயில்ல அவங்க குடும்ப பூஜை முடியாம வேற யாருக்கும் செய்யறதில்லை!”

“அவங்க இன்னும் வரலியே! இப்ப நீங்க சும்மாத்தானே இருக்கீங்க? என்னுதை முடிக்க, பத்து நிமிஷம் தானே?”

“இல்லைம்மா! முதலாளியும், அவர் புள்ளைங்களும் வர்ற நேரம்!”

“குருக்களே! தெய்வத்துக்கு முதலாளி, தொழிலாளி பாகுபாடெல்லாம் கிடையாது! கோயில்ல என்ன பாரபட்சம்? பிடிங்க தட்டை!”

“இல்லைம்மா! நான் அவரை பகைச்சு வாழ முடியாது!”

அதற்குள் சரக் சரக்கென கார்கள் வந்து நிற்க, மாத்ருபூதமும் அவரது மகள் அஞ்சுவும் இறங்க, அல்லக்கைகள் ஓடிப்போய் வெண்சாமரம் வீச, அவர் நடந்து வர, பின்னால் பவ்யமாக ஒரு படையே வர,

கோயிலுக்கு வந்த மற்ற பக்தர்களை அவசரமாக இவரது ஆட்கள் விலக்க, அப்போது தான் அந்த இளைஞன் பைக்கில் வந்து இறங்கினான்! பைக்கை நிறுத்தி விட்டு மெதுவாக கோயில் படிகளை அவன் ஏற, பாரதியின் குரல் ஓங்கி ஒலித்தது!

“இவங்க பூஜை தொடங்கின பிறகு நாம வந்தா, நாம காத்துக்கிட்டுத்தான் இருக்கணும்! அது நியாயமும் கூட! ஆனா அவங்க வர்றதுக்கு முன்னாலயே நம்ம அத்தனை பேரையும் தடுத்து நிறுத்தறது என்ன நியாயம்? உங்க யாருக்குமே இது தன்மான பிரச்னையா தெரியலியா? பணத்துக்கு சல்யூட் அடிக்கற பழக்கம், கோயிலையும் விட்டு வைக்கலியா?”

உரத்த குரலில் அவள் நியாயம் கேட்க, அது வரை பயந்து ஒதுங்கி நின்ற பலரும் இவள் பக்கம் சேர்ந்து குரல் கொடுக்க,

“இதப்பாரம்மா! நீ யாரை எதிர்த்து குரல் குடுக்கறேன்னு தெரியுதா? உன்னை வாழ விட மாட்டாங்க!”

“அப்படியா? அப்ப ஒண்ணு செய்ங்க! கடவுளை வெளியே வரச்சொல்லிட்டு உங்க முதலாளியை கர்ப்ப கிரகத்துல உட்கார வச்சு ஆறு கால பூஜை நடத்துங்க!”

படபடவென கை தட்டல் வர, அனைவரும் திரும்ப, பைக்கில் வந்த இளைஞன் கை தட்டிக்கொண்டிருந்தான்!

மாத்ருபூதம் முகம் சிவந்து போக,

“என்னப்பா இது? கோயில்ல வச்சு அம்மா பிறந்த நாள்ள, இந்த அவமானம் நமக்கு தேவையா?”

மகள் அஞ்சு கேட்க, அவர் மெதுவாக தலையாட்டினார்! மீடியா ஆட்கள் நிறையப்பேர் காமிராக்களுடன் அங்கே இருக்க,

“குருக்களே! இப்படி வாங்க! பப்ளிக்கை தடுக்கணும்னு நான் சொன்னேனா? எதுக்கு இந்த மாதிரி பண்றீங்க? எங்க ஆட்களோட வேலையா இது? நான் கண்டிக்கறேன்! அந்த பொண்ணு கேக்கறது நியாயம் தானே? ஆண்டவன் சன்னதில என்ன பாகுபாடு? அது தப்பில்லையா? இப்படி வாம்மா! உன் பேரென்ன?”

“பாரதி சார்!”

“பாரதி கண்ட புதுமைப்பெண்ணா நீ? ரொம்ப சந்தோஷம்மா! பொண்ணுனா இப்படித்தான் இருக்கணும்! யாருக்கும் பயப்படக்கூடாது! தைரியமா உன் மனசுல உள்ளதை நீ சொன்னே பாரு! எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு! என் ஆட்கள் செஞ்ச தப்புக்கு நான் உங்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன்மா!”

“அய்யோ சார்! நீங்க பெரியவங்க! நான் அதையெல்லாம் எதிர்பாக்கலை!”

இவர்கள் இருவரையும் மீடியா கவர் செய்ய,

“சார்! வேண்டாம்! காமிராவை ஆஃப் பண்ண சொல்லுங்க! எனக்கு விளம்பரம் புடிக்காது! நியாயங்களை பேசறதை புகைப்பட வெளிச்சத்துல பேசணும்னு இல்லை!”

“குருக்களே! முதல்ல இந்த பொண்ணோட வழிபாட்டை நிறைவேற்றுங்க! அப்புறமா எனக்கு முன்னால வந்த யாரையும் காக்க வைக்காதீங்க! நான் ஒரு மணி நேரம் கழிச்சு வர்றேன்! அவசரமே இல்லை! பாரதி! உன் பிரார்த்தனையை முடிச்சிட்டு நீ போம்மா!”

அவர் போய் காரில் ஏற, மீடியா ஆட்கள் துரத்த, அவர்களை தடுத்து விட்டு, காருக்குள் ஏறிய அவர், தன் உதவியாளரை மட்டும் அழைத்தார்!

“அந்த பாரதி தொடர்பான சகல தகவல்களும் இன்னும் இருபத்தி நாலு மணி நேரத்துல என் டேபிள்ள இருக்கணும்! வண்டியை எடு!”

“ஏன்பா யாரோ ஒருத்தி கிட்ட மன்னிப்பு கேட்டீங்க?”

அவர் சிரித்தார்!

“அம்மாடி! இந்த மாத்ருபூதத்துக்கு எல்லாமே பிசினஸ் தான்!”

கார் புறப்பட்டு போனது! உள்ளே முதலில் பாரதியிடம் அர்ச்சனை தட்டை வாங்கி குருக்கள் அவள் சொன்ன மேகலா பேரில் அர்ச்சனை செய்ய, அங்கு வந்திருந்த மற்றவர்கள், பாரதியை ஒரு கதாநாயகி போல பார்க்க, எல்லாம் முடித்து பாரதி வெளியே வந்தாள்! ஓரிரு மீடியா ஆட்கள் காமிராவுடன் பாரதியை அணுக,

“வேண்டாங்க! இதை நான் விளம்பரத்துக்காக செய்யலை! நான் எதுவும் பேசி அந்த நல்ல மனுஷனை அது புண்படுத்தக்கூடாது! ஹீ ஈஸ் எ ஜென்டில்மென்!”

அவள் வெளியே வந்து தன் ஸ்கூட்டரை இயக்க,

“மேம்! ஒரு நிமிஷம்!”

குரல் கேட்டு பாரதி திரும்ப, அந்த பைக் இளைஞன் பாரதியிடம் வந்தான்!

“உங்களை பாராட்ட நான் வரலை! நான் மீடியா ஆள் இல்லை! தனி மனுஷன்! நீங்க செஞ்சது நியாயமான ஒரு செயல்! ஆனா நீங்க நினைக்கற மாதிரி மிஸ்டர் மாத்ருபூதம் ஒரு ஜென்டில்மென் இல்லை!”

“என்ன சொல்றீங்க?”

“அடுத்த இருபத்தி நாலு மணி நேரத்துல உங்களுக்கு என்ன வேணும்னாலும் நடக்கலாம்! அதுக்கு உங்களை நீங்க தயார் படுத்திக்குங்க மேம்!”

சொல்லி விட்டு எந்த பதிலையும் எதிர்பாராமல் அவன் பைக்கை உதைத்து வேகம் பிடித்தான்.

“யார் இவன்? நான் குரல் கொடுத்ததும் முதல்ல கை தட்டி அத்தனை பேரையும் திரும்ப வச்சவன் இவன்தான்! என்னை விட அவருக்கு அதிக அவமானத்தை உண்டாக்கியதும் இவன்தான்! இப்போது எச்சரித்து போகிறான்!”

பாரதி தன் ஸ்கூட்டரை எடுத்த நேரம், கல்லூரி பேருந்தை விட்டு இறங்கிய மேகலா, கல்லூரி வளாகத்தை நோக்கி நடக்க, சரக்கென ஒரு கார் அவளை உரசியபடி வந்து நின்றது!

“நீதானே மேகலா? உங்கக்கா பாரதி உன்னை உடனே கூட்டிட்டு வரச்சொன்னா! உங்கம்மா பாத்ரூம்ல மயங்கி விழுந்து, மண்டை உடைஞ்சு உங்கக்கா பாரதி அவங்களை ஆஸ்பத்திரில சேர்த்தாச்சு! உங்கம்மா சீரியஸ்!”

அழுதபடி காரில் ஏறினாள் மேகலா!

ஆட்டம் ஆரம்பமாகி விட்டது!

–தொடரும்…

2 வது அத்தியாயம் >

ganesh

2 Comments

  • Jet speed sir

  • ஆரம்பமே அமர்க்களம். தீபாவளி விருந்துக்கு நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...