பேய் ரெஸ்டாரெண்ட் – 11 | முகில் தினகரன்
“ஆவி சொல்லிச்சு” என்ற பதிலை மற்ற நாட்களில் திருமுருகன் சொல்லியிருந்தால் நிச்சயம் ஆனந்தராஜ் கோபத்தில் “காச்…மூச்” சென்று கத்தியிருப்பான். ஆனால், இன்று ரெஸ்டாரெண்டில் நடந்த நிகழ்ச்சியையும், அதை திருமுருகன் ஹேண்டில் பண்ணிய விதத்தையும், அந்த சங்கரனின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றிய சாதூர்யத்தையும் கண்டு அசந்து போயிருந்த காரணத்தால் திருமுருனிடம் பொறுமையாகவே கேட்டான்..
“த பாருடா… இன்னிக்கு உன்னாலதான் நம்ம ரெஸ்டாரெண்ட்டோட மானம்…மரியாதையெல்லாம் காப்பாற்றப்பட்டிருக்கு!…ஸோ…உன்னை நான் ஹண்ட்ரட் பர்ஸண்ட் நம்பறேன்!…சொல்லு…எப்படி நீ அதையெல்லாம் கண்டுபிடிச்சே?….”
சில நிமிடங்கள் யோசித்த திருமுருகன், “நீ நம்பறியோ…நம்பலையோ…நான் ஒரு உண்மையைச் சொல்றேன்!….எனக்கு அந்த சங்கரனோட ஃபிராடுத்தனத்தையும், சுந்தராபுரத்துல அவன் நகைகளை பதுக்கி வெச்சிருக்கற விஷயத்தையும்…என் காதருகே வந்து சொன்னதே அந்த ஆவிதான்”
வேகமாய் சென்று கொண்டிருந்த காரை “க்ரீச்ச்ச்ச்ச்ச்”சென்று பிரேக்கிட்டு நிறுத்தினான் ஆனந்தராஜ்.
“என்னடா சொல்றே?…அந்த ஆவிதான் சொல்லுச்சா?…அப்ப….நீ சொன்னதெல்லாம் நிஜமா?….உன் தலைக்கு மேலே ஆவி சுத்துதா?” நடுங்கும் குரலில் கேட்டான் ஆனந்தராஜ்.
“ஆமாம்…ஆமாம்” என்று பூம்பூம் மாடு போல் தலையை ஆட்டிக் காட்டினான் திருமுருகன்.
“டேய்…டேய்…நான் ஏற்கனவே நீ சொன்னதைக் கேட்டு மெரண்டு போயிருக்கேன்… இதுல தலையை வேற மாடு மாதிரி ஆட்டி பயமுறுத்தறியே… நியாயமாடா” ஆனந்தராஜ் கெஞ்சலாய்க் கேட்க,
“காரை “திடு…திப்”புன்னு நடு ரோட்டுல நிறுத்தியிருக்கே…பின்னாடி வந்த வண்டிக்காரனுகெல்லாம் ‘கன்னாபின்னா’ன்னு ஹார்ன் அடிக்கறானுக…மொதல்ல காரை நகர்த்து” கத்தினான் திருமுருகன்.
சட்டென்று ஞாபகம் வந்தவனாய் காரைக் கிளப்பினான் ஆனந்தராஜ்.
சிறிது தூரம் சென்ற பின், “நிஜம்மாவே உன் கூட ஆவி சுத்துதா?” மறக்காமல் கேட்டான் ஆனந்தராஜ்.
“சத்தியமா என் கூடவே இருக்கு…ஆனா அது நீங்கெல்லாம் பயப்படற மாதிரியான கெட்ட ஆவி இல்லை!…நல்ல ஆவி!…என்னை நேசிச்ச ஒரு பெண்ணின் ஆவி!…”
ரோட்டின் மீது பதித்திருந்த கண்களைத் திருப்பி திருமுருகனை உற்றுப் பார்த்த ஆனந்தராஜ், “உன்னை நேசிச்ச ஆவியா?…என்னடா சொல்றே?……எனக்குத் தெரிஞ்சு…உன் வாழ்க்கைல காதல்…கத்திரிக்காய்!ன்னு எதுவுமே வரலையே?…நீ கொஞ்சம் நாள் அந்த பெட்டிக்கடை ரஞ்சிதாவை ரூட் போட்டுட்டிருந்தே ஆனா அவன் உன்னைத் திரும்பிக் கூடப் பார்க்கலை!…அதுக்கப்புறம் வேற எந்தப் பொண்ணும் உன் வாழ்க்கைல வரவே இல்லையே?…அப்புறம் எப்படி உன்னை நேசிச்ச பொண்ணு?” கேட்க,
“காதலிச்சால்தான் ஒரு பெண் ஒரு ஆணை நேசிப்பாளா?…கல்யாணம் பண்ணிக்கிட்டால்தான் ஒரு பெண் ஆணை நேசிப்பாளா?…பெண் பார்க்க வந்த மாப்பிள்ளைப் பையனையும் கூட ஒரு பெண் நேசிப்பாள்”
“அடேய்…ஏண்டா இப்படி விசு படத்துல வர்ற மாதிரி….குழப்பமாய்ப் பேசறே…நேரடியா விஷயத்தைச் சொல்லுடா…ஏற்கனவே நான் பயத்தோட காரை ஓட்டிட்டிருக்கேன்” சலித்துக் கொண்டான் ஆனந்தராஜ்.
“ஓ.கே!…ஓ.கே!…நேரடியாவே சொல்லிடறேன்!…. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி…நான் கிணத்துக்கடவுல ஒரு தமிழ் வாத்தியாரோட பெண்ணைப் பார்க்கப் போயிருந்தேனல்ல?” கேட்டான் திருமுருகன்.
ஒரு கையால் ஸ்டீயரிங்கைப் பிடித்துக் கொண்டு, இன்னொரு கையால் “ம்ம்ம்…” என்று தாடையைத் தட்டிக் கொண்டு யோசித்த ஆனந்தராஜ், “கரெக்ட்…ஞாபகம் வந்திடுச்சு….அன்னிக்கு…நான் உன் கூட வரலை…விஜயசந்தர் மட்டும்தான் வந்தான்” என்று சொல்ல,
“ஆமாம்….அப்ப நான் பார்த்திட்டு வந்த அந்தப் பெண்ணோட ஆவிதான் இப்ப என் கூட இருக்கறது”
“அப்படின்னா…அந்தப் பொண்ணு…இறந்திடுச்சா?” சன்னக் குரலில் கேட்டான் ஆனந்தராஜ்.
அப்போது சாலையின் குறுக்கே ஒரு மாடு நிதானமாய் நடந்து செல்ல, காரின் வேகத்தை மட்டுப்படுத்தி சில நிமிடங்கள் நின்று, பின்னர் அது சென்றதும் காரைக் கிளப்பினான் ஆனந்தராஜ்.
“ஆமாம்…தற்கொலை பண்ணிக்கிச்சு”
“அடப் பாவமே?…ஏன்?” தலையைத் திருப்பி திருமுருகனைப் பார்த்துக் கேட்டான் ஆனந்தராஜ்.
“அதை யாரோ முன்று பேர் கடத்திட்டுப் போய், புதுசா கட்டப்பட்டுக் கொண்டிருந்த ஒரு கட்டிடத்திற்குள்ளே வெச்சு….கற்பழிச்சிட்டானுக!…அவமானம் தாங்க அது ஒரு கட்டிடத்தின் மேலிருந்து கீழே குதிச்சு தற்கொலை பண்ணிக்கிச்சு!…அந்தக் கட்டிடம் எது தெரியுமா?”
“எது?”
“நாம் இப்ப பேய் ரெஸ்டாரெண்ட் வெச்சிருக்கோமே?…அதே கட்டிடம்தான்” என்றான் திருமுருகன்.
அரண்டு போனான் ஆனந்தராஜ். “டேய்…என்னடா?…குண்டு மேலே குண்டு போடறே?…அப்ப அந்தப் பெண்ணோட ஆவி நம்ம ரெஸ்டாரெண்ட்டுலதான் இருக்கா?” அச்சத்தோடு கேட்டான் ஆனந்தராஜ்.
“அங்கேதான் இருக்கு…ஆனா அது நம்ம யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யாது!…உண்மையைச் சொல்லணும்ன்னா..நமக்கு நிறைய உதவிகள்தான் செய்யப் போகுது”
சில நிமிடங்கள் எதையோ யோசித்தபடி காரை டிரைவ் செய்த ஆனந்தராஜ், மெல்லக் கேட்டான். “அது செரி…அது எப்படி உன்னை அடையாளம் கண்டுபிடிச்சுது?”
“அது ஒரு பெரிய சோகம் ஆனந்து!….நான் பெண் பார்க்கப் போனப்ப…அந்த ஸ்பாட்டிலேயே “எனக்குப் பெண்ணைப் பிடித்து விட்டது…அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணத்தை வெச்சுக்கலாம்”ன்னு ஓப்பனா சொல்லிட்டேன்…அந்த நிமிஷத்திலிருந்தே அந்தப் பெண் சங்கீதா என்னை மானசீகமா லவ் பண்ண ஆரம்பிச்சிட்டா!…ஆனா விதி வேற மாதிரி விளையாடிட்டுது!” சோகமானான் திருமுருகன்.
“ரிலாக்ஸ்….ரிலாக்ஸ்”
சில நிமிட அமைதிக்குப் பின், “அதுக்கப்புறம் ஒரு நாள்…ஏதோ வேலையா அந்த சங்கீதா கோயமுத்தூர் வந்திருக்கா!….அவளோட கெட்ட நேரம்…..இங்க திடீர்னு ஏதோ கலவரமாகி….பஸ்ஸெல்லாம் ஓடாமல் போச்சு!…படாதபாடுபட்டு ஒரு ஆட்டோ பிடிச்சு…ஆட்டோவிலேயே கிணத்துக்கடவு போயிருக்கா..அந்த ஆட்டோ டிரைவர்…போற வழில…மலுமிச்சம்பட்டி பக்கத்துல ஒரு இருட்டு வழில ஆட்டோவை ஓட்டிட்டுப் போய் அங்க வெச்சு அவளை சிதைச்சிருக்கான், அவன் அப்படியே விட்டுப் போன பின்னாடி, கோவையிலிருந்தே அந்த ஆட்டோவை ஃபாலோ பண்ணிட்டு வந்த வேற ரெண்டு பசங்களும் அவளை சீரழிச்சிருக்கானுக!…இப்படி மூணு பேரால் கெடுக்கப்பட்டவள்…வேற வழியே தெரியாம நம்ம கட்டிடத்து மேலே ஏறி…கீழ குதித்து தற்கொலை பண்ணியிருக்கா” விளக்கமாய்ச் சொன்னான் திருமுருகன்.
“சரி…இதெல்லாம் உனக்கெப்படித் தெரியும்…?”
“எல்லாம் அந்த சங்கீதாவோட ஆவி சொல்லித்தான் தெரியும்” என்றான் திருமுருகன்.
தலையை மேலும் கீழும் ஆட்டியவாறே காரை ஓட்டிய ஆனந்தராஜ், “அந்த மூணு பேர் யார்?ன்னு அந்த ஆவி சொல்லிச்சா?” கேட்க,
“யார்?ன்னு விபரம் தெரியலை…ஆனா…என்னிக்காச்சும் அவனுகளை எங்காவது பார்த்தா கண்டிப்பா என் கிட்டே சொல்றேன்!னு சொல்லியிருக்கு”
“ஹும்…நீ சொல்றதையெல்லாம் கேட்கும் போது…ராகவா லாரன்ஸ் படம் பார்க்கிற மாதிரியிருக்கு!…டேய்…இதெல்லாம் நிஜம்தானா?” நம்ப முடியாமல் மீண்டும் கேட்டான் ஆனந்தராஜ்.
“டேய்…இன்னிக்கு ரெஸ்டாரெண்ட்டுல நடந்ததையெல்லாம் நேர்ல பார்த்த பிறகும் உனக்கு என் மேல் நம்பிக்கை வரலையா?” பரிதாபமாய்க் கேட்டான் திருமுருகன்.
“சேச்சே…நம்பிக்கை இல்லாமல் இல்லை!…எல்லாமே வியப்பாயிருக்கு” என்றான் ஆனந்தராஜ்.
இதற்குள் திருமுருகனின் வீடு வந்து விட, காரை நிறுத்தினான் ஆனந்தராஜ்.
காரை விட்டு இறங்கிய திருமுருகன், கார் ஜன்னல் வழியே குனிந்து, “ஆனந்து…நான் இனிமேல் ரெஸ்டாரெண்ட்ல ஃபர்ஸ்ட் ஃபுளோர்ல இருக்கற நம்ம கெஸ்ட் ரூமிலேயே ராத்திரி தங்கிக்கலாம்!னு நெனைக்கறேன்” என்றான்.
“டேய்…ஏண்டா?…என்னாச்சு உனக்கு?…இங்கே உன் அம்மா மட்டும் எப்படித் தனியா இருப்பாங்க?” ஆனந்தராஜ் கேட்டான்.
“அதொண்ணும் பிரச்சினையில்லை!…அம்மா…சேலத்துல இருக்கற அண்ணா வீட்டுக்குப் போறாங்க!…எங்க ரெண்டு பேருக்குள்ளும் இருக்கற ஒப்பந்தப்படி அம்மா அடுத்த ஆறுமாசம் அண்ணா வீட்டுலதான் இருக்கணும்”
“ம்ம்ம்…அப்படின்னா சரி!…நீ ரெஸ்டாரெண்ட்ல இருக்கறது நமக்கும் ஒரு விதத்துல நல்லதுதான்!…அண்டர்கிரவுண்ட் ஏரியாவுல தங்கி இருக்கற நம்ம வேலையாட்கள் கொஞ்ச நாளா கண்ட்ரோல் இல்லாமப் போயிட்டிருக்காங்க!ன்னு கேள்விப்பட்டேன்!…அதனால…நம்மாளு ஒருத்தர் ராத்திரில அங்க இருக்கறது…நல்லதுதான்” என்றான் ஆனந்தராஜ்.
“ஓ.கே..பை…”ஆனந்தராஜுவுக்கு “டாட்டா” காட்டி விட்டு கேட்டைத் திறந்தான் திருமுருகன்.
வீட்டு முன் ஹாலில் இரண்டு சூட்கேஸ்களோடு உட்கார்ந்திருந்தாள் அவன் தாய்.
“என்னம்மா…பெரிய மகன் வீட்டுக்குப் போக ரெடியாயிடே போலிருக்கு?” உள்ளே வரும் போதே கேட்டான் திருமுருகன்.
“ஆமாண்டா…நாளைக்குக் காலைல நீதான் என்னை காந்திபுரம் பஸ் ஸ்டாண்டுக்கு கூட்டிட்டுப் போய் பஸ் ஏத்தி விடணும்…மறந்திடாதே”
“ஓ.கே!…ஓ.கே!” என்றபடி தன் அறையை நோக்கிச் சென்றவனை, “டேய்…ஒரு நிமிஷம் இங்க வந்து என் பக்கத்துல உட்காருடா” அழைத்தாள் தாய்.
“என்னம்மா…என்ன விஷயம்?” கேட்டவாறே தாயின் அருகில் வந்தமர்ந்தான் திருமுருகன்.
“உன் அண்ணன்…உன்கிட்டே ஒரு விஷயம் கேட்டுட்டு வரச் சொன்னான்” பீடிகையோடு ஆரம்பித்தாள் தாய்.
“என்ன கேட்டுட்டு வரச் சொன்னான் உன் மூத்த மகன்?” சிரித்தவாறே கேட்டான்.
“வந்து…உங்க அண்ணியோட சொந்தத்துல ஒரு பொண்ணு இருக்காம்!…டிகிரி படிச்சிருக்காம்!….ஓரளவுக்கு வசதியும் இருக்காம்!…நீ “ஓ.கே” சொன்னா பொண்ணு வீட்டுல பேசுவானாம்!…என்ன சொல்றே நீ?” திருமுருகனின் தாய் கேட்க,
அவன் மனத்திரையில் சங்கீதாவின் உருவம் வந்தமர்ந்தது. “இல்லைம்மா…எனக்கு இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம்மா” மறுத்தான்.
“இப்போதைக்கு வேண்டாமா?”…டேய் உனக்கு வயசு முப்பது…இதுக்கு மேலே போனா நீ முத்தின கத்தரிக்காய் ஆயிடுவே”
“கத்திரிக்காயோ…வெண்டைக்காயோ…எனக்கு வேண்டாம்!…அவ்வளவுதான்”
“ஏன்?…ஏன் வேண்டாங்கறே?…கிணத்துக்கடவுல நீ பார்த்திட்டு வந்த பொண்ணு செத்துப் போனதிலிருந்து நீ கல்யாணப் பேச்சை எடுத்தாலே எரிஞ்சு விழறே!…” அவன் தாய் சத்தமாய்ப் பேசினாள்.
அப்போது சாத்தப்படாத வாசற் கதவு மெல்லத் திறக்க நிதானமாய் உள்ளே வந்து சுவரோரமாய் நின்றது சங்கீதா ஆவி. அதன் பார்வை திருமுருகன் மீதே படிந்திருந்தது. தன்னைப் பார்த்தபின் அவன் வேறு பெண்ணையே பார்க்காமல் இருக்கிறான் என்பதை அவன் தாய் வாய் மூலம் தெரிந்து கொண்ட சங்கீதா ஆவி மனம் நெகிழந்து கண் கலங்கியது.
“அம்மா…அன்னிக்கு அத்தனை பேர் நடுவுல “எனக்கு பெண்ணைப் பிடிச்சிருக்கு…அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணத்தை வெச்சுக்கலாம்”னு நான் சொன்னப்பவே நான் என் மனசுக்குள்ளார அவளை என் மனைவியா உட்கார வெச்சிட்டேன்!…அந்த இடத்துல இன்ன்னொருத்தியை நான் உட்கார வைக்க மாட்டேன்”
திருமுருகனைப் பார்த்துக் கை நீட்டி கண்ணீர் விட்டது சங்கீதாவின் ஆவி.
“டேய்…அது கிட்டே ஏதோ தப்பு இருந்திருக்கு…அதனால அது தற்கொலை பண்ணிக்கிச்சு…அதுக்காக நீ வாழ்க்கை பூராவும் இப்படியே இருப்பியா?” கோபமாய்க் கத்தினாள் தாய்.
“த பாரு…ஒரு பொண்ணு தற்கொலை பண்ணிக்கிட்டா…உடனே அதுகிட்டே ஏதோ தப்பிருக்கு!ன்னு ஏன் முட்டாள்தனமா புடிவு பண்றீங்க?”.
“சரிப்பா…நான் முட்டாள்தான்…ஒத்துக்கறேன்! நீ புத்திசாலியா இருந்தா அந்தக் கேடு கெட்டவளை மறந்திட்டு வேறொருத்தியைக் கட்டிக்கிட்டு சந்தோஷமா வாழு”
“ச்சீ!…வாயை மூடு!…செத்துப் போனவளைத் திட்டாதே…அப்புறம் நீ செத்துப் போனா இந்த உலகமே உன்னைத் திட்டும்”
சங்கீதாவின் ஆவி மெல்ல நகர்ந்து வந்து திருமுருகன் அருகில் நிற்க, அவன் மெல்லத் தலையைத் தூக்கிப் பார்த்து புன்னகைத்தான்.
சங்கீதாவின் ஆவி உருவம் அவன் தாய் கண்களுக்குத் தெரியாததால், வெற்றிடத்தைப் பார்த்து அவன் புன்னகைப்பதாய் எண்ணிக் கொண்டு, “ஏண்டா…உனக்கென்ன பைத்தியமா?…எங்கியோ பார்த்துச் சிரிக்கறே?” கேட்டாள்.
தொடர்ந்து அவளுடன் பேசினால் வீண் சண்ஐதான் வரும், என்பதால் உடனே எழுந்தவன், “எனக்கு டயர்டா இருக்கு…நான் போய்த் தூங்கறேன்” என்றான்.
“சாப்பிடலையா?”
“நான் ரெஸ்டாரெண்டிலேயே சாப்பிட்டுட்டேன்” என்று சொல்லி விட்டுத் தன் அறைக்குள் சென்றவன் பின்னாலேயே சென்றது சங்கீதாவின் ஆவி.
உள்ளே சென்றதும், “முருகா…என் மேல் உனக்கு இவ்வளவு காதலா?” ஆவி கேட்டது.
“இது காதலல்ல சங்கீதா…பக்தி”
கண் கலங்கிய ஆவி, “சாமி மேலதான் பக்தி வைப்பாங்க… நீ பேய் மேலே பக்தி வைக்கறியே… இது சரியா?” கேட்டது.
“எனக்குப் பிடிச்சது… வைக்கறேன்…”என்றவன் அந்தப் பேச்சை மாற்றும் விதமாய், “நான் நாளையிலிருந்து ரெஸ்டாரெண்ட்டுல தங்கப் போறேன்…தெரியுமா?” மகிழ்ச்சியோடு சொன்னான்.
ஆவியும் சத்தமே வராமல் கை தட்டி மகிழ்ந்தது.
அதே நேரம், கதவிற்கு வெளியே நின்று உள்ளிருந்து வரும் பேச்சுக் குரலைக் கேட்டு, கண் கலங்கினாள் திருமுருகனின் தாய். “பயல் தனியாவே பேசறான்… சிரிக்கறான்… என்ன ஆச்சு? ன்னே தெரியலை!…”
(தொடரும்)
2 Comments
After long time …..
ப்பா… நெடு நாளைக்கு பிறகு….