படைத்திறல் பல்லவர்கோன் |15| பத்மா சந்திரசேகர்
15. இணைந்த கரங்கள்..!
ஆரூர் ஐயாறப்பர் சன்னதியில், ஈசன் முன் கைகுவித்து நின்றிருந்தார் பல்லவ மன்னர் நந்திவர்மர். தெள்ளாற்றில் போர்க்களத்தில் பாண்டிய மன்னர் ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபரை வென்று, பாண்டியப்படையைத் தொடர்ந்து சென்று, பழையாறை, நள்ளாறு ஆகிய இடங்களிலும் தாக்குதல் நடத்தி, வைகையாற்றைக் கடந்து பாண்டியப்படையை விரட்டி, பெருவெற்றி பெற்ற மகிழ்ச்சியுடன், பாண்டியர்களிடம் இழந்த தங்கள் பிரதேசங்களை மீட்டெடுத்த மகிழ்ச்சியும் சேர்ந்து கொள்ள, அப்போதுதான் பூத்த மலரைப்போல முகிழ்ந்திருந்தது அவரது முகம். பக்கத்தில் மலரே உயிர் பெற்று வந்தது போல மலர்ந்த முகத்துடன் நின்றிருந்தாள் சங்கா.
இறைவனுக்கு சோடச உபசாரங்கள் செய்யப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது. நந்திவர்மரும், சங்காவும் மிகுந்த பக்தியுடன் இறைவன் பிரசாதங்களைச் சுவீகரித்துக்கொண்டனர். பின்னர் தம்பதி சமேதராக ஈசனை வலம் வந்து, வெளி மண்டபத்தில் வந்து அமர்ந்தனர்.
சற்று தொலைவிலிருந்த ஒரு தூணின் பின்னால் யாரோ நிற்பது போலத் தோன்றியது. நந்திவர்மர் அந்த தூணுக்கு முதுகைக்காட்டி அமர்ந்திருந்தார். எனவே அவரால் அவருக்கு பின்னாலிருந்த தூணுக்கு அருகில் இருந்த உருவத்தைப் பார்க்க இயலவில்லை. சங்கா அந்த உருவத்தைப் பார்த்து, என்ன செய்வதெனத் தெரியாமல் திகைத்திருந்தாள்.
‘நந்திவர்மரிடம் சொல்லலாமா?’ மனதில் ஓடியதை மனதிலேயே மறைத்தாள். அவரிடம் சொல்வதைவிட, தானே சென்று அந்த உருவத்திடம் பேசிவிடலாமென முடிவெடுத்தாள். பல்லவ மன்னர் அறியாமல் அதைச் செய்ய உபாயம் தேடினாள்.
“ஐயனே. நான் ஆலய நந்தவனத்தைப் பார்த்துவர தங்கள் அனுமதி கிடைக்குமா..?”
“வா சங்கா, போகலாம்.” சொன்ன நந்திவர்மர் தானும் எழுந்தார். பதறி போன சங்கா, சட்டென யோசித்து, தொடந்து பேசினாள்.
“இல்லை ஐயனே. அங்கு சில நெமிலிகள் உள்ளன. அவை தங்களைக் கண்டால் அச்சம் கொண்டு ஓடிவிடலாம். தாங்கள் இங்கேயே அமர்ந்திருங்கள். நான் விரைந்து வந்துவிடுகிறேன்” சொல்லிவிட்டு பதிலுக்குக் காத்திராமல் நந்தவனத்தை நோக்கி விரைந்து நடந்தாள்.
சங்கா நந்தவனம் நோக்கிச் செல்வதைக் கண்ட தூணுக்குப் பின்னிருந்த அந்த உருவம், பல்லவ அரசியின் குறிப்பை உணர்ந்து தானும் நந்தவனம் நோக்கி நடந்தது.
சங்கா கூறியது போல, நந்தவனம் முழுவதும் மயில்கள் இங்குமங்கும் நடைபோட்டுக் கொண்டிருந்தன. ஆண் மயில்கள் தனது தோகையை விரித்து பெட்டையைக் கவர முயற்சி செய்து கொண்டிருந்தன. பெண் மயில்கள், ஆண் மயில்களுக்குப் போக்குக் காட்டி, பெருமையுடன் திரிந்து கொண்டிருந்தன. நந்தவனத்திற்குச் சென்ற சங்கா, அந்த உருவம் வரக் காத்திருந்தாள். உள்ளே வந்த அந்த உருவம், நேராக சங்காவை நெருங்கியது. அருகில் வரும்வரை பார்த்துக்கொண்டிருந்த சங்கா, அந்த உருவம் செய்த காரியத்தில் சற்று அதிர்ச்சியடைந்தாள்.
“எழுந்திரு பெண்ணே” அதிர்ச்சியுடன் தனது பாதத்தில் விழுந்த மாறன்பாவையின் தோளில் கை வைத்துத் தூக்கினாள் சங்கா.
“அக்கா” சொல்லியபடி எழுந்த மாறன்பாவையின் விழிகளில் கண்ணீர் ததும்பி நின்றது. சற்றுமுன் அழுத அழுகையின் சுவடு கன்னங்களில் தெரிந்தது. மீண்டும் எந்நேரமும் உடையத் தயாராக இருக்கும் வைகையின் கரை போல, கண்ணீர் மழை பெருகியிருந்தது.
“அக்கா. எனக்கொரு மார்க்கம் சொல்லுங்கள் அக்கா” கண்களில் தேங்கியிருந்த கண்ணீர், கரை உடைந்துப் பாய்ந்தது.
“என்ன மார்க்கம் சொல்லச் சொல்கிறாய் பெண்ணே..? நீ கேட்கப்போகும் உதவியை என்னால் செய்ய இயலாது”
“அக்கா, பல்லவ மன்னரிடம் எனது மனதைப் பறிகொடுத்து விட்டேன். அவரின்றி என்னால் உயிர் வாழ இயலாது. தாங்கள் எனக்கு உதவி புரிந்து, எனக்கு வாழ்வுதர வேண்டும்”
“மாறன்பாவை, இதில் நான் என்ன செய்ய இயலும்? மன்னர் உன் தந்தையின் பேச்சினால் சங்கடப்பட்டுள்ளார். இந்த நிலையில் நான் என்ன கூறி அவரை சமாதானப்படுத்தி, உங்கள் விவாகத்திற்கு ஏற்பாடு செய்ய இயலுமென எண்ணுகிறாய்..? அத்துடன், அவருக்கே விருப்பமில்லாத போது, என் வாழ்க்கையில் உன்னைக் கொண்டுவர வேண்டிய அவசியம் என்ன உள்ளது?”
“அக்கா… என் உள்ளம் பல்லவ மன்னரிடம் சென்றுவிட்டதை அறியாமல் என் தந்தை பேசியதை மன்னித்துவிடுங்கள் அக்கா. அத்துடன் எனது தந்தை இப்போது தனது பேச்சிற்கு வருந்துகிறார். அத்துடன் என்னைப் பல்லவ மன்னருக்கு விவாகம் செய்து தரவும் தயாராக உள்ளார். தாங்கள் தான் உதவி செய்யவேண்டும்”
“மாறன்பாவை, நீ சொல்வது சரியாகவே இருக்கலாம். எனினும், பல்லவ மன்னருக்கு இப்போது உன்னை விவாகம் செய்ய விருப்பமில்லையே…”
“அக்கா, அவர் யாரென்றே தெரியாத காலம் ஒன்று இருந்தது. அப்போது அவர் என்னை அணைத்து, எனது இதழ்களை சாட்சியாகக் கொண்டு எனக்கு வாக்களித்தார். கொடுத்த வாக்கை நம்பித்தானே நான் அவர் மேல் ஆசையை வளர்த்தேன்” தழுதழுத்த படி பேசினாள் மாறன்பாவை. எதுவும் பதில் கூறாமல் அமைதியாக நின்றிருந்தாள் சங்கா.
“அக்கா, கடைசி முறையாகக் கேட்கிறேன். பல்லவ மன்னரிடம் பேசி என்னை அவருக்கு விவாகம் செய்து வைப்பீரா, மாட்டீரா?”
“எத்தனை முறை கேட்டாலும் எனது பதில் ஒன்று தான் பெண்ணே. மன்னருக்கே விருப்பமில்லாத ஒரு விஷயத்தை நான் வலியுறுத்த இயலாது”
“நன்றி அக்கா” சொல்லிவிட்டு மெல்லத் திரும்பி நடந்தாள் மாறன்பாவை. சில அடி தூரங்கள் நடந்தவள், வேகமாக ஓடத் தொடங்கினாள். நந்தவனத்தை அடுத்திருந்த தரைக் கேணியை நோக்கி வேகமாக ஓடியவள், அதே வேகத்தில் கிணற்றில் குதித்தாள்.
“மாறன்பாவை” உரக்க கத்தியபடி கிணற்றை நோக்கி ஓடினாள் சங்கா. அதற்குள் சங்காவின் குரல் கேட்ட நந்திவர்மர், என்ன நடந்ததெனத் தெரியாமல், கிணற்றருகே ஓடி வந்தார்.
“என்னவானது சங்கா..?” பதற்றமாக கிணற்றினுள் பார்த்தபடி நின்ற சங்காவிடம் கேட்டார்.
“ஐயனே, மாறன்பாவையை காப்பாற்றுங்கள்” திக்கிய குரலில் சங்கா கூற, அடுத்த கணம் கிணற்றினில் பாய்ந்தார் நந்திவர்மர். அதற்குள் கோவிலுக்கு வந்திருந்த மக்களும், நந்திவர்மருடன் வந்திருந்த வீரர்களும் ஓடி வந்தனர். அனைவரும் கிணற்றுக்குள் குதிக்க, சில கண நேரங்களில் நீரிலிருந்து வெளியே தூக்கப்பட்டாள் மாறன்பாவை.
நந்திவர்மர், மாறன்பாவையை தனது மடியில் கிடத்தியிருந்தார். முழுக்க நனைந்திருந்த அவரது உடல் மெல்ல நடுங்கியது. விழிகள் கலங்கியிருந்தன. எதிரிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த சங்காவின் மனதில் பலவித யோசனைகள் ஓடின. விழிகளை இமைக்காமல் தனது பதி நந்திவர்மரின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
சற்று நேரத்தில் கண்விழித்தாள் மாறன்பாவை. கண் விழித்ததும் அவள் விழிகள் நந்திவர்மரின் மீது பரவியது. பின்னர் மெல்லத் திரும்பி சங்காவின் மீது பதிந்தது.
“அக்கா” மெல்ல முணுமுணுத்தாள். கண்ணீருடன் அவள் முகத்தருகே குனிந்தாள் சங்கா.
“என்ன காரியம் செய்தாய் பெண்ணே..? உனக்கு எதாவது நேர்ந்திருந்தால், பல்லவ மன்னரின் முகத்தில் எப்படி விழிப்பேன்..?” சொன்ன சங்கா தனது கண்ணீரைத் துடைத்தாள். ஏதோ முடிவு செய்து விட்டது போல இறுகி கிடந்தது அவள் முகம்.
மாறன்பாவையின் வலக்கரத்தை எடுத்தாள். திகைத்து அமர்ந்திருந்த நந்திவர்மரின் வலக்கரத்தைப் பற்றி, அவரது கரத்தில் பாண்டிய இளவரசியின் கரத்தை வைத்தாள்.
“ஐயனே… இவள் தந்தை சிந்திய வார்த்தைகளுக்கு இவள் எப்படிப் பொறுப்பாவாள்..? தாங்கள் தானே இவளுக்கு வாக்குத் தந்தீர்..? இன்று பேச்சு மாறிப் பேசுவது எப்படி நியாயமாகும்..?”
எதுவும் பதில் சொல்லாமல் அமர்ந்திருந்தார் நந்திவர்மர்.
“ஐயனே, கொடுத்த வாக்கைத் தாங்கள் காப்பாற்றியே ஆகவேண்டும். பாண்டிய இளவரசியைத் தாங்கள் விவாகம் புரிந்தே ஆகவேண்டும். இல்லையேல், மாறன்பாவை குதித்த இதே கிணற்றில் நானும் குதித்து எனது உயிரை மாய்த்துக்கொள்வேன்” சங்கா உறுதியுடன் கூற, தனது கரத்தை நீட்டி அவளை அணைத்து தனது தோளில் சாய்த்துக்கொண்டார் நந்திவர்மர்.
எழுந்து ஈசன் சன்னதி நோக்கி நடந்த நந்திவர்மர் தனது வலக்கரத்தில் சங்காவை பற்றியிருந்தார். இடக்கையில் மாறன்பாவையின் கரத்தை பிணைத்திருந்தார். சன்னதியை அடைந்த மூவரும், இறைவனை வணங்கினர். ஈசனின் மீதிருந்த மலர் மாலைகளில் இரண்டை அந்தணர் எடுத்து வர, அவற்றைத் தனது கரத்தில் வாங்கினாள் சங்கா.
தனது கரத்திலிருந்த மாலைகளில் ஒன்றை நந்திவர்மரிடமும், மற்றொன்றை மாறன்பாவையிடமும் கொடுக்க, இருவரும் ஈசன் சன்னதியில் மாலை மாற்றிக்கொள்ள, பல்லவ நாட்டின் இன்னொரு அரசியானாள் மாறன்பாவை.
“ஈசனே… நான் விரும்பிய வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தது தங்கள் கருணையே. இனி என் உயிருள்ளவரை உனக்கு நன்றியுடையவளாக இருப்பேன்” விழி மூடி ஈசனைப் பிரார்த்தித்தாள் மாறன்பாவை.
“ஈசனே… நான் விரும்பிய வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தது தங்கள் கருணையே. இனி என் உயிருள்ளவரை உனக்கு நன்றியுடையவனாக இருப்பேன்” விழி மூடி ஈசனைப் பிரார்த்தித்தார் பல்லவ மன்னர் தெள்ளாறு எறிந்த நந்திவர்மர்.
நடப்பவை அனைத்தும் ஈசன் நாடகமே எனக் கூறும் வண்ணம் கருவறையிலிருந்த தீபத்தின் சுடர் மெல்லச் சிரித்து அசைந்தது.
–நிறைந்தது–
ஒன்பதாம் நூற்றாண்டின் மத்தியில், அந்நாளில் பல்லவ நாட்டின் புகழ் பெற்ற அரசராயிருந்த மூன்றாம் நந்திவர்மருக்கும், பாண்டிய நாட்டில் புகழ் பெற்ற வேந்தரான ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபருக்கும் தெள்ளாறு என்ற இடத்தில் நடந்த போரை மையப்படுத்தி, கற்பனை கலந்து புனையப்பட்ட கதையே இந்த ‘படைத்திறல் பல்லவர் கோன்’.
இந்த கதையில் வரும் நந்திவர்மர், ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபர், (முதலாம்) அமோகவர்ஷர், (இரண்டாம்) கன்னரதேவர், சங்கா, வரகுணவர்மர், மாறன்பாவை, குமராங்குசர், கோட்புலியார், எட்டிச்சாத்தான் ஆகியோர் வரலாற்றில் வாழ்ந்தவர்கள். மற்றவர்கள் கதையோட்டத்திற்காகக் கற்பனையாக வாழ்ந்தவர்கள்.
6 Comments
என்னங்க… பொசுக்குனு முடிச்சிடீங்க…. விறுவிறுப்பாக இருந்தது…
நன்றி sir.. 🙂🙂
ஒரு வரலாற்று வெப் சீரிஸ் எடுக்கும்படி கச்சிதமான காட்டிகளோடு படைத்திறல் பல்லவர்கோன் இருந்தது.
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு பாகமும் பொருத்தமான இடத்தில் தொடங்கி முடிந்து இருந்தன.
முதல் வாரத்தில் பல்லவ அறிமுகம் அடுத்த வாரத்தில் பாண்டிய அறிமுகம் அதை தொடர்ந்து போரும் அதற்கான காரணம் பற்றிய முன்னுரை , பிறகு போரை தவிர்க்க ஒரு வாய்ப்பும், வாய்ப்பு தவறி போர் தான் ஒரே வழி என்ற முடிவு, அதை தொடர்ந்து பாண்டிய பல்லவ சேனைகளும் அவைகள் பற்றிய வர்ணனைகளும் அருமை, போரில் எதிரிகள் சண்டையிட்டு கொள்வதும் தந்தை மகன் காத்து எதிர் சண்டையிட்டு எதிரியை நிலைகுலைய செய்வதும், இறுதியாக பல்லவரின் சேனையும் வென்று அவன் காதலும் வெற்றி பெற்றது நலம்.
வாழ்த்துகள்!! எழுத்துலகில் தனித்தடம் பதித்திடுங்கள்!!
நன்றி ப்பா.. 🙂🙂
Didn’t expect the end so soon madam
It was short and sweet
Thanks Mam.. 🙂🙂