எ.வீ.ரோ.உ.வீ.ஜ. |2| இந்துமதி

 எ.வீ.ரோ.உ.வீ.ஜ. |2| இந்துமதி

ரு வினாடி சித்ராவிற்குப் பேச்சு வரவில்லை. மனத்திற்குள் நிறைய வார்த்தைகள் ஓடி ஒன்றும் வெளியில் வராமல் போயிற்று. நெஞ்சு விம்மித் தணிந்தது. ‘என்ன சொல்கிறாள் இவள்…?’ என்ற கேள்வியில் நிறைய சந்தேகங்கள் தோன்றின.

“அப்படி அவர் உன் பக்கம் திரும்பினால் அவரை நீயே கல்யாணம் பண்ணிக்க…..?”

‘இதற்கு என்ன அர்த்தம்… கோபத்தில் வந்த பேச்சா…? இல்லாவிட்டால் வருத்தமா? எதற்காகக் கோபமும், வருத்தமும் பட வேண்டும்? மது மீது நம்பிக்கை இருக்கிற பட்சத்தில் இந்தக் கோபத்திற்கும், வருத்தத்திற்கும் அவசியமே அவசியமே இல்லையே… உள்ளுக்குள் பயப்படுகிறாள், தன் நம்பிக்கை இல்லாத தனத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இப்படிச் சொல்கிறாள். ஆக மொத்தத்தில் இவளும் ஆண்களை நம்பவில்லை. மதுவை நம்பவில்லை. அதைச் சொல்லி ஒப்புக் கொண்டு விட்டால் இந்தப் பந்தயமே தேவை இல்லை.’

சித்ரா யோசித்துக் கொண்டிருந்த போதே ஷைலஜா கேட்டாள்.
“என்ன சித்ரு….அப்படிப் பார்க்கற…?”

“ஒண்ணுமில்லை… நீ தோற்றுப் போய்விட்டதாக ஒத்துக்க, நான் பந்தயத்தைக் கைவிட்டுடறேன்.”

“இல்ல…. வேண்டாம். ஐயம் ஃபார்தி கேம்…”

“இப்படிச் சொல்லிவிட்டு மனசுக்குள் வருத்தப்படக் கூடாது. சோகமாக, இழப்பாகவெல்லாம் ஃபீல் பண்ணக் கூடாது.”

“ஏய்… கமான்… நான் பந்தயத்துல தோற்றுப் போனால் தானே சோகம், இழப்பு எல்லாம் எட்டிப் பார்க்கிறதுக்கு..?”

“வெற்றி தோல்வி இல்ல பேச்சு. ஒரு நிரூபணம். அதுல வெற்றி ஏற்பட்டாலும் தோற்றுப் போனாலும் சமமாக எடுத்துக்கணும். மனசு சந்தோஷப் படவோ, சங்கடப்படவோ கூடாது.”

“என்ன கீதோபதேசமா…?”

“இல்ல…சித்ரோபதேசம்…”‘

“சரி… வா கிளாசுக்குப் போகலாம்.”

“இரு… ஆரம்பிச்சதை முடிக்காமல் அரைகுறையாக விட்டுட்டுப் போகக்கூடாது.”

“என்ன செய்யணும்ன்னு சொல்ற…?”

“நீ கஷ்டப்படுவாயானால் மனசு சங்கடப்படும்னால் இந்தப் போட்டி, பந்தயம் ரெண்டையும் விட்டுடலாம். என் அபிப்பிராயம் உன் கிட்டன்னு போயிடலாம்.”

“இல்ல வேணாம்.”

“எது வேணாம்னு சொல்ற…?”

“போட்டியை ஆரம்பிச்சாச்சு. முடிவு என்னன்னு பார்த்துடலாம்..”

“அசட்டுத் தைரியத்துல சொல்லாதே, ஈகோவுல பேசாதே….”

“இது ஈகோவா, அசட்டுத் தைரியமா இல்லைன்னால் மது என்னன்னு பார்க்கிற ஆசையான்னு தெரியல. ஆனால் நான் பந்தயத்துக்குத் தயார்.”

”ஓ.கே. அப்படியானால் நானும் தயார். ஒரு விளையாட்டு வீரன் மாதிரி நாம இதை எடுத்துக்கணும், கர்ம யோகம்னு நினைச்சுக்கணும். என்ன சரியா…?”

“சரி…”

”நான் என் வெற்றிக்கு எனக்குத் தோணின வழிகளையெல்லாம் பிரயோகிப்பேன். நீ தப்பாக நினைச்சுக்கக் கூடாது.”

“இல்லை… அதே மாதிரி உன் வழிகளையெல்லாம் அடைக்க நானும் பிரயத்தனப்படுவேன், அதை நீயும் தப்பாக எடுத்துக்கக் கூடாது.”

“ஓ கே…டன்…”

இருவரும் கட்டை விரலை உயர்த்தி முகத்திற்கு எதிராக நீட்டிச் சவாலை ஒப்புக் கொண்டார்கள். பின்னர் வகுப்பை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள்.

முதல் வகுப்பு. ஷைலஜாவிற்கு மிகவும் பிடித்தமான ஷேக்ஸ்பியர். அதிலும் அவளது மனம் கவர்ந்த பேராசிரியை மிஸ் மாத்யூஸ் வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார். கிங்லியர்.

மற்ற நாட்களாக இருந்தால் மிஸ் மாத்யூஸின் முகத்தை வைத்த கண்களை எடுக்காமல் பார்ப்பாள், வரி விடாமல் கவனிப்பாள். மனதிற்குள் பதிய வைத்துக் கொள்வாள். உருகுவாள். வார்த்தைகளின் அழகில் மாய்ந்து போவான். உள்ளுக்குள்ளேயே ஹா… ஹா… என்று அரற்றுவாள்.

ஆனால் இன்று…? முடியவில்லை. எதுவும் மனதில் பதியவில்லை. நெஞ்சில் நிற்கவில்லை. மிஸ் மாத்யூவின் முகம் தெரியவில்லை, குரல் மட்டும் கேட்டதே தவிர ஒரு வரி உள்ளுக்குள் அச்சாகவில்லை. ஜன்னல் வழியாகத் தெரிந்த கடலும், வானமும் வெறும் காட்சிகளாக மாறின. சாதாரண ஓவியன் வரைந்த படமாகப்பட்டன. பார்வை வெறுமனே பார்த்துக் கொண்டிருந்ததே தவிர எதற்கும் அர்த்தமில்லாமல் போயிற்று. சரக்கொன்றை, மஞ்சள் விரிப்பு, குல்மொஹர், தொடுவானம், நீலத்தடாகக் கடல்—

ஊஹம்… எல்லாம் வெறுமை. வெற்றுத் தோற்றம். மனது சங்கடப்படும் போது, அல்லது வேறொரு விஷயத்தில் லயித்திருக்கும்போது கண் எதிரில் தெரிகின்ற எந்த அழகும் இப்படி வெறுமையாகி விடுமோ…? ஒன்றுமில்லாததாகப் போகுமோ? இந்த அழகுகள் கண்ணில் படாத மாதிரி கவனிக்காமல் போகிறார்களே… அது எப்படி என்று நினைத்திருக்கிறோமே…. இப்படித்தானோ…? அவர்களின் மனங்கள் எல்லாம் வேறொரு விஷயத்தில் அழுத்தியிருக்குமோ? திசை திரும்பியிருக்குமோ?

அப்படித்தான் இருக்க வேண்டும். அதனால் தான் கண்ணெதிரில் காணுகின்ற அழகில் ‘என்னைப் பார் என்னைப் பார்’ என கூப்பிடுகின்ற இயற்கைக் காட்சிகளில் லயிக்காமல் போய்விடுகிறது. அவர்களைச் சொல்லித் தப்பில்லை என்று நினைத்துக் கொண்டவள் மீண்டும் தன்
பிரச்சினைக்குத் திரும்பினாள்.

வண்டலாகக் கலங்கிப் பாரமாகக் கிடந்தது. சித்ராவின் அந்தப் போட்டிக்கு ஒப்புக் கொண்டிருக்க வேண்டாமெனத் தோன்றிற்று. வலியப்போய் வம்பை விலைக்கு வாங்குகிற விவகாரமாகப் பட்டது.

“ஒரு வேளை மது நிஜமாகவே மனம் மாறிவிட்டால்…? சித்ரா அழகி, கல்லூரி நாடகங்களில் அழகான எந்த வேடத்திற்கும் சித்ராவைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். கல்லூரியில் மட்டுமல்ல, பள்ளியிலேயே அப்படித்தான். சிண்ட்ரில்லா, ஸ்நோவொயிட் எல்லா வேடங்களும் சித்ராவிற்குத்தான். அதே மாதிரி சீதை. தமயந்தி, சகுந்தலை என தமிழ் நாடகக் கதாநாயகிகளானாலும் “போடு சித்ராவை’ எனப் போடுவார்கள்.

அது மட்டுமின்றி சித்ரா பெரிய இடத்துப் பெண். பரம்பரைப் பணம். இன்று என் இ 118-ல் வந்தாளாகில் மறுநாள் காண்ட்டஸாவில் வருவாள். அதற்கு மறுநாள் மாருதி. அப்புறம் பியட் என வகைக்கு ஒரு காரில் கல்லூரிக்கு வருபவள், அரண்மனை மாதிரி அடையாறு போட் கிளப் ரோடில் வீடு, சித்ராவின் அறையைப் பெருக்க மட்டும் தனியாக ஒரு வேலைக்காரி…..

சித்ராவோடு ஒப்பிட்டால் தான் ஒன்றுமே இல்லை என்பதை உணர்த்திருந்தாள். இத்தனை வருடங்களாகச் சித்ராவோடு பழகினபோதெல்லாம் ஏற்படாத தாழ்வு மனப்பான்மை திடீரென்று இப்போது தோன்றியது. மைலாப்பூர் குளத்தங்கரைக்கு எதிரில் இருக்கும் தன் பிளாட்டை நினைத்துப் பார்த்தாள். பெட்டி பெட்டியாக இரண்டே படுக்கை அறைகள், சின்னதாக ஒரு ஹால், வரவேற்பறை, சாப்பாட்டு அறை. அதில் ஒயர்களால் பின்னப்பட்ட வெகு சாதாரண சோபாக்கள், சாதாரண காட்டுமர சாப்பாட்டு மேஜை. தம்பிக்கும், தனக்குமாகச் சேர்ந்து ஒரே படுக்கை அறை. இருவருக்கும் புத்தகங்கள் வைப்பதில் இருந்து, படிப்பது வரை சண்டை வரும்.

“கத்திப் படிக்காதடா… இதே ரூம்லதான் நானும் படிச்சாகணும்,” என்பாள் இவள்.

அவன் விடமாட்டான். படிக்கிற ஆறாம் வகுப்பை ஐ.ஏ.எஸ். ஆக நினைத்து அரற்றுவான். “நீ போய் ஹால்ல படி….” என்பான்.

“ஹால்ல அம்மாவும், அப்பாவும் டி.வி. பார்த்துக்கிட்டிருக்காங்க. அங்க போய் எப்படிடா படிக்க முடியும்..?” இவள் திருப்பிக் கேட்பாள்.

“அதைப்பற்றி எனக்கென்ன கவலை…. நீ படிச்சாப் படி… இல்லைன்னால், விடு. நாளைக்கு எனக்கு டெஸ்ட் இருக்கு நான் படிக்கணும்…”

சொல்லிவிட்டுப் பிடிவாதமாக இன்னும் உரத்த குரலில் ஆரம்பிப்பான், தாங்க முடியாத கோபம் வரும். எழுந்து போய் நாலு அறை விடலாம் போலத் தோன்றும். ஆனால் அவனை அடித்தால் அம்மாவும் அப்பாவும் பரிந்து கொண்டு வருவார்கள்.

“ஆம்பிளைப் பையனைக் கை நீட்டி அடிக்கிறதாவது…” என்று சண்டை போடுவார்கள்.

“ஆம்பிளைப் பையன் மட்டும் என்னைப் படிக்க விடாமல் செய்யலாமா..?” என்றால், பதில் வராது.

“பொம்மனாட்டிகள் கொஞ்சம் அடங்கித்தான் போகணும்” என்பாள் அம்மா. சம்பந்தமே இல்லாமல் பெண்கள் அடங்க வேண்டும் என்பாள். அடங்கி அடங்கிப் பழக்கப்பட்டு விட்டது. விட்டுக் கொடுத்து வழக்கமாகி விட்டது. குனிவது சகஜமாகி விட்டது. அதனால் அதுவே நியாயம் போல் பேசுகிறார்கள் என்று கோபம் வரும்.

“இருபத்தோராம் நூற்றாண்டை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிற இந்தக் காலத்திலும் இப்படிப் பேசுகிறீர்களே…!” என்று பெண் உரிமைக்காகக் குரல் கொடுக்க வேண்டும் போலிருக்கும். ஆனால் பேசாமல் இருப்பாள். ‘ என்ன சொன்னாலும் இந்த அம்மாவை மாற்ற முடியாது’ என்றிருப்பாள்,

“ஏய் ஷைலு… நீ போய் எங்க ரூம்ல உட்கார்ந்து படி-” என்பதற்குச் செவி சாய்ப்பாள். தன் புத்தகங்களை எடுத்துக் கொண்டு பக்கத்துப் படுக்கையறைக்குப் போவாள்.

அதெல்லாம் நினைவிற்கு வந்ததும் இவளுக்குப் பகீரென்றது. பனிரெண்டு வயதுச் சிறுவனான தன் தம்பிக்கே இத்தனை பிடிவாதம் இருக்கிறபோது… என்ற கேள்வி எழுந்தது. தனக்குத் தேவையானதைச் சாதித்துக்கொள்கிறானே… அம்மாவும், அப்பாவும் கூட ‘ஆம்பிளைப் பையன் என்று மதிப்புக் கொடுக்கிறார்களே… அவன் எண்ணங்களுக்கு செவி சாய்க்கிறார்களே… ஒருவேளை இது ஆண்களின் உலகமா….. அவர்களின் வசதிக்காகப் படைக்கப்பட்டவர்கள் தான் பெண்களா…? எது. ஒன்றையும் ஆண்கள் செய்யும்போது ஏற்றுக்கொள்கிற உலகம், அதையே ஒரு பெண் செய்தால் ஏன் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்கிறது…’

யோசித்துக் கொண்டிருந்தபோதே முதல் வகுப்பு முடிந்து போயிற்று. அடுத்த வகுப்பிற்காகக் கலைத்தபோது தான் அவளுக்குச் சுய உணர்வு வந்தது. எங்கு ஆரம்பித்து எங்கு போயிருக்கிறோம் எனத் தன் எண்ணங்களைப் பார்த்துத் தானே பிரமித்துக் கொண்டாள். படிக்கிற அறைக்கே சண்டை பிடித்துக் கொள்கிற தன் வீட்டு நிலைமைக்கும். கேட்டால் தனி வீடே கட்டித் தந்து விடுகிற நிலையில் இருக்கிற சித்ராவையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தபோதே தோளில் சித்ராவின் கை விழ, திரும்பினாள்.

“கிளாஸ் முடிஞ்சு இத்தனை நேரமாச்சு… என்ன யோசனை..?”

“ஒண்ணுமில்லை…”

“சரி… நான் ஒண்ணு சொல்றேன். கேட்கறியா…?”

“சொல்லு…”

“மது மகாபலிபுரம் போகலாம்னு சொன்னார்னியே…… ஒத்துக்க…”

சடாரென்று தலை உயர்த்தி ஷைலஜா அவளைப் பார்த்த போது, சித்ரா அமைதியான குரலில் முகம் மாறாமல் சொன்னாள்.

“நானும் வரேன். என் கார்லயே போயிடலாம்..”

–தொடரும்…

ganesh

3 Comments

  • வெற்றி யாருக்கு?

  • ❤️❤️

  • உங்கள் கதையை படிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அம்மா….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...