News
7th December 2021
  • தொடர்
  • பேய் ரெஸ்டாரெண்ட் – 10 | முகில் தினகரன்

பேய் ரெஸ்டாரெண்ட் – 10 | முகில் தினகரன்

5 months ago
379
  • தொடர்
  • பேய் ரெஸ்டாரெண்ட் – 10 | முகில் தினகரன்

“பேய் ரெஸ்டாரெண்ட்” அந்தக் காலை நேரத்தில் படு பிஸியாயிருந்தது.

எலும்புக் கூடு சப்ளையர்களும், பிசாசு உருவ ஊழியர்களும், ரத்தக் காட்டேரி கேஷியர்களும் பம்பரமாய்ச் சுழன்று கொண்டிருந்தனர்.

வழக்கம் போல் எலும்புக் கூட்டின் தலை கழன்று விழுவதும், அந்தரத்தில் ரத்தச் சொட்டுடன் கை பறப்பதும், கை கழுவச் செல்லும் கஸ்டமர்களை அங்கே ஒளிந்திருக்கும் பாதி எரிந்த சவம் கழுத்தைக் கடித்துக் குதறுவதும், சிறப்பாக நடந்து சிரிப்பாக முடிந்து கொண்டிருக்க,

கல்லா என்னும் கட்டழகி விரைவிலேயே நிறைமாத கர்ப்பிணி ஆகி விட, அவ்வப்போது டெலிவரி நடந்து கரன்ஸிக் குழந்தை வங்கித் தொட்டிலுக்கு அனுப்பப்பட்டுக் கொண்டேயிருந்தது.

அதே நேரம் அந்த மலையாளச் சேட்டன் சங்கரன் தன் கல்லாவை நிரப்பும் பணியில் ஈடுபடத் துவங்கினான்.

ரெஸ்டாரெண்ட்டுக்கு வெளியே வந்து நின்ற இன்னோவா காரிலிருந்து இறங்கிய மனிதர் வெள்ளை வேட்டி வெள்ளைச் சட்டையில் பளீரென்றிருந்தார். கையும் காலும் கரணை கரணையாய் உருண்டு திரண்டிருக்க, கழுத்தில் யானையைக் கட்டி வைக்கும் சங்கிலி சைஸில், மூன்று தங்கச் சங்கிலிகள் தொங்கிக் கொண்டிருந்தன. முகத் தழும்பும், கண்ணின் சிவப்பும் அவரை ஒரு “தாதா”என்று சொல்லாமல் சொல்ல,

காரிலிருந்து இறங்கிய மற்ற மூன்று பேரும், அவருக்குப் பின்னே பாதுகாவலர்கள் போல் ரெஸ்டாரெண்டை நோக்கி நடந்தனர்.

“இதென்னடா பேய் ரெஸ்டாரெண்ட்ன்னு போட்டிருக்கு?” தாதா கேட்க,

“ஆமாண்ணே…புதுசா வந்திருக்கு…உள்ளே பேய்க் குகை மாதிரி டெக்கரேஷன் பண்ணி…வித்தியாசமா பண்ணியிருக்காங்களாம்…பேப்பர்ல பார்த்தேன்”

அவர்கள் உள்ளே நுழைந்து அங்கிருந்தவற்றை ரசித்து விட்டு ஒரு மேஜையில் அமர்ந்தனர்.

“பார்ரா…மேஜையைக் கூட எலும்புகளால் பண்ணியிருக்காங்க” என்று தாதா சொல்லிக் கொண்டிருந்த போது, சற்றுத் தள்ளி நின்று அவரையும், அவர் கழுத்தில் போட்டிருந்த தடிமனான தங்கச் சங்கிலிகளையுமே பார்த்துக் கொண்டிருந்தான் மேஜிக் மேன் போல் பளபளக்கும் நீண்ட கோட் அணிந்திருந்த சங்கரன்.

“ஆஹா…இன்னிக்கு செம வேட்டை…எப்படியும் ஒரு சங்கிலி பத்துப் பதினஞ்சு பவுன் தேறும்!…ஒண்ணுக்கு மூணு சங்கிலி…இதுக கைக்கு வந்தால் போதும் கேரளாவுக்கே திரும்பிப் போயிடலாம்”

நேரே அந்த டேபிளுக்குச் சென்று, “சார்…உங்க ஆர்டரைச் சொல்லுங்க சார்” என்றான் சங்கரன் பவ்யமாய்.

அவர்கள் பட்டியலைச் சொன்ன பின், “இதோ அஞ்சே நிமிடத்தில் கொண்டு வருகிறேன்” என்றபடி அங்கிருந்து நகர்ந்து, யாருமில்லாத ஒரு இடத்திற்குச் சென்று, கோட் பாக்கெட்டினுள் கையை விட்டு, இசக்கி என்னௌம் அந்தக் குட்டிச் சாத்தனை எடுத்து, “டேய்ய்ய்…இசக்கி…அந்த ஆள் கழுத்துல மூணு சங்கிலியும் எனக்கு வேணும்…உடனே அதை எடுத்துக் கொண்டு போய் ரமணிகிட்டச் சேர்த்திடு…அதே மாதிரி அதுக்கான போலிகளை சீக்கிரமே செஞ்சு…நான் உன்னைத் தொடும் போது அந்தாளு கழுத்துல போட்டுடு…என்ன?”

குட்டிச் சாத்தானுக்கு வேலை கொடுத்து விட்டு, அந்த தாதா கும்பலுக்கு சப்ளை செய்து கொண்டிருந்தான் சங்கரன்.

தனது அறையில் கணக்கு வழக்கு பார்த்துக் கொண்டிருந்த திருமுருகன் காதருகே வந்து, “இங்க வேலை செஞ்சு கிழிச்சது போதும்..அங்க போய்யா…சங்கரன் கை வரிசையைக் காட்ட ஆரம்பிச்சிட்டான்” என்றது சங்கீதா ஆவி.

“அப்படியா?’ என்றபடி ‘விருட்’டென எழுத திருமுருகனை மற்றவர்கள் வினோதமாய்ப் பார்க்க, அதைக் கண்டு கொள்ளாமல் ரெஸ்டாரெண்டின் முன்புற அரங்கிற்குள் வந்தான் அவன்.

அவன் வரும் போது தாதாவின் கழுத்தில் மூன்று சங்கிலிகள் தொங்கிக் கொண்டிருந்தன. ஆனால், அவன் பார்க்கப் பார்க்கவே அவை மூன்று மறைந்து போயின.

“பார்த்தியா?…சங்கரனோட குட்டிச் சாத்தான் சங்கிலிகளை எடுத்திடுச்சு!…” ஆவி சொல்ல, தலையை மேலும் கீழும் ஆட்டினான் திருமுருகன்.

அப்போது, தாதாவிற்கு எதிரில் அமர்ந்திருந்தவன், “அண்ணே…உங்க கழுத்தில் இருந்த சங்கிலிகள் எங்கே?” என்று கேட்க,

கழுத்தைத் தொட்டுப் பார்த்து விட்டு, வேகமாய் எழுந்தார் தாதா. “யோவ்…என்னய்யா?…என்னய்யா? நடக்குது இங்கே?…பேய் ரெஸ்டாரெண்ட்டுன்னு பேரு வெச்சுக்கிட்டு…திருட்டுத்தனம் பண்ணிட்டிருக்கீங்களா?”

நடு ஹாலில் நின்று நாட்டியமாடினார் தாதா.

வழக்கம் போல் ஆனந்தராஜூவுக்குத் தகவல் போக, அரக்கப் பறக்க ஓடி வந்தான். “என்ன என்ன பிரச்சினை?”

“ம்…தேர் இழுக்கற வடம் மாதிரி மூணு சங்கிலி கழுத்துல போட்டிருந்தேன்…திடீர்னு பார்த்தா மூணையும் காணோம்…ஒவ்வொண்ணும் இருபது பவுன்…சுமக்க முடியாம சுமந்திட்டிருந்தேன் தெரியுமா?”

உடனே ஆனந்தராஜின் பார்வை சங்கரனிடம் செல்ல, சங்கரன் முன்னே வந்து, “அய்யா…இதுவும் இந்த பேய் ரெஸ்டாரெண்டோட ஜாலி பர்ஃபாமென்ஸ்ல ஒண்ணு!…” என்று சிரித்தபடி சொன்னான்.

எரிச்சலாகிப் போன அந்த தாதா, “யோவ்…மூணும் சேர்ந்து இருபது லட்சம்…அதிலேயா விளையாடுவீங்க?” கத்தினார்.

அப்போது தாதாவின் கழுத்தில், கொஞ்சம் கொஞ்சமாய்த் தெரிய ஆரம்பித்த சங்கிலிகள் சில விநாடிகளில் “பளிச்” சென்று மின்ன, “இப்ப உங்க கழுத்தைத் தொட்டுப் பாருங்க” என்றான் சங்கரன்.

தொட்டுப் பார்த்து விட்டு, தன் சகாக்களிடம், “என்னடா…சரியாயிருக்கா?” என்று கேட்டார் தாதா.

அருகில் வந்து கண்களைச் சுருக்கிக் கொண்டு பார்த்த இன்னொருத்தன், “ஒண்ணு…ரெண்டு…மூணு…”என்று எண்ணி விட்டு, “சரியா இருக்குண்ணே” என்றான்.

திருமுருகனின் காதருகே சங்கீதாவின் ஆவி பேசியது. “இப்ப அந்தாளு கழுத்துல இருக்கற நகைகள் தங்கமல்ல…போலித் தங்கம்”

“என்ன சொல்றே?” கிசு…கிசு…குரலில் கேட்டான்.

“அவன் அசல் தங்க நகைகளை குட்டிச்சாத்தான் மூலமா வேறெங்கேயோ கொண்டு போய் வெச்சிட்டு…இங்க போலி நகைகளை கொண்டு வந்து போட்டிருக்கான்!”

சில விநாடிகள் யோசித்த திருமுருகன், “விடு..விடு”…வென்று நடந்து அந்த தாதாவின் எதிரே சென்று நின்று, “யோவ்…கவரிங் நகைகளைப் போட்டுட்டு வந்து எதுக்கய்யா..இவ்வளவு அலப்பரை பண்றே?” கேட்டான்.

கோபமாகிப் போன தாதா, “ஏய்…என்னடா?…யாரைப் பார்த்து கவரிங் நகைன்னு சொல்றே?…எல்லாம் அசல் தங்கம்” கத்தலாய்ச் சொல்ல,

“ம்ஹும்…எனக்கு நம்பிக்கையில்லை!…நீ ஒரு டுபாக்கூர்…உடான்ஸ்” என்றான் திருமுருகன்.

ஆனந்தராஜே ஆடி போனான். “டேய்…திருமுருகா…அவரு நம்ம கஸ்டமர்…அவரைப் போய்…இப்படி?”

“யாராயிருந்தால் என்ன?…போலி நகைகளைப் போட்டுட்டு அல்டாப்பு பண்றவனை டுபாக்கூர்ன்னு சொல்லாம…வேற என்ன சொல்றது?”

“டாய்….”என்று அந்த தாதா பற்களை “நற…நற”வென்று கடிக்க,

“யோவ்….உனக்கு சந்தேகமாயிருந்தா…உன்னோட சங்கிலிகளை உரசிப்பார் தெரியும்…நான் சொல்றது பொய்யா?…இல்லை மெய்யா?ன்னு” திருமுருகன் விடாது பேசினான்.

உடனே தனது மொபைலை எடுத்து, “யோவ்…நாகராஜா…என்னோட தங்கச் சங்கிலிகளை சோதனை செய்யணும்…உடனே புறப்பட்டு…பொள்ளாச்சி ரோட்டுல மலுமிச்சம்பட்டிக்குப் பக்கத்துல இருக்கற பேய் ரெஸ்டாரெண்ட்டுக்கு வா” ஆணையிடுவது போல் சொன்னார்.

எல்லோரும் அந்த நகைப் பட்டறைக்காரனுக்காக காத்திருந்தனர்.

“அவன் வந்து சோதனை பண்ணிட்டு…எல்லாம் ஒரிஜினல் தங்கம்!ன்னு சொல்லட்டும்…அப்புறம் வெச்சுக்கறேன் இந்த ராஸ்கலை” என்று திருமுருகனை முறைத்தபடி சொன்னார் தாதா.

அடுத்த இருபதாவது நிமிடம் வந்திறங்கிய நகைப் பட்டறைக்காரனிடம் தனது சங்கிலிகளைக் கழற்றிக் கொடுத்தார் தாதா.

நீண்ட நேரம் உரசிக் கொண்டேயிருந்த அந்த நகைப் பட்டறைக்காரனை எல்லோரும் “திக்…திக்” நெஞ்சுடன் கவனித்தனர்.

“அய்யா…என்னை மன்னிச்ச்டுங்க…எல்லாமே…போலித் தங்கம்…கவரிங்” என்று அவன் சொல்ல,

“ஏய்ய்ய்ய்ய்ய்….”என்று ஓங்கிக் கத்திய தாதா, “நல்லா…நல்லா…பார்த்துச் சொல்லுடா நாயே” கூவினார்.

அவரது அதட்டலில் பயந்தவன் மீண்டுமொரு முறை நன்றாக உரசிப் பார்த்து விட்டு, “அய்யா…சத்தியமா சொல்றேன்…இந்த மூணு சங்கிலிகளுமே கவரிங் அய்யா” என்றான்.

“எப்படி?…எப்படி?” என்று எல்லோரையும் பார்த்துக் கேட்ட தாதா, ஆனந்தராஜிடம், “யோவ்…நீங்க ரெஸ்டாரெண்ட் நடத்தறீங்களா?…இல்லை…கொள்ளைக் கூட்டம் நடத்தறீங்களா?…இப்ப ஒரு அஞ்சு நிமிஷம் என் தங்கச் சங்கிலிகள் மாயமாய் மறைஞ்சு போய் மறுபடியும் வந்ததே…அந்த இடைப்பட்ட நேரத்தில்தான் என்னமோ நடந்திருக்கு” சரியாக யூகித்து தெளிவாகச் சொன்னார் தாதா.

கை தட்டிய திருமுருகன், “சரியாகச் சொன்னீர்கள்..”என்று சொல்ல, வேக வேகமாய் அவனிடம் வந்து, அவன் சட்டைக்காலரைப் பற்றிய தாதா, “டாய்…எனக்கு உன் மேலேதான் சந்தேகமாயிருக்கு…உண்மையைச் சொல்லு…என் நகைகள் எங்க?…இன்னும் அஞ்சு நிமிஷத்துல என்னோட ஒரிஜினல் நகைகள் இங்க வரலை…உண்மையாக உன்னோட கை ரெண்டும் ரத்தத்தோட மேலே பறக்கும்” என்றார்.

அவர் அப்படிச் செய்ததும் அடி வயிற்றில் ஒரு பயபந்து உருள, “சங்கீதா…சங்கீதா” என்று சன்னக் குரலில் திருமுருகன் அழைக்க, அவன் காதோரம் வந்த சங்கீதா ஆவி, “சுந்தராபுரம்…பிள்ளையார் கோயிலுக்கு நேர் எதிரில் இருக்கும் வீட்டில் ரமணின்னு ஒருத்தன் இருப்பான்…அவனைப் போய் கவனிங்க…எல்லாத்தையும் கக்குவான்” என்று முணுமுணுப்பாய்ச் சொன்னது.

அதை அப்படியே தாதாவிடம் திருமுருகன் சொல்ல, சங்கரனுக்கு வியர்த்தது.

“ஆஹா…ஞான் நன்னாயிட்டு மாட்டி…ஈயாளு இன்ன என்னைச் சவட்டிக் கழிப்பான்”
திருமுருகனையும் ஆனந்தராஜையும், அந்த சங்கரனையும் தங்கள் இன்னோவாவில் அடைத்துக் கொண்டு, தாதாவும், அவன் சகாக்களும் சுந்தராபுரம் சென்றனர்.

திடுமென வீட்டினுள் நுழைந்த புது மனிதர்களைப் பார்த்து அந்த ரமணி மிரள, தாதாவின் அடியாட்கள் அவனை சகட்டு மேனிக்கு அடித்துத் துவைக்க,

சங்கரனைப் பற்றியும், அவன் நகைகளை “லபக்”செய்யும் நுட்பத்தையும் அப்படியே ஒப்பித்து விட்டு, அது நாள் வரையில் அவர்கள் திருடி சேர்த்து வைத்திருந்த மொத்த நகைகளையும் அப்படியே அவர்களிடம் ஒப்படைத்தான்.

தாதாவின் கோபம் இப்போது திருமுருகன் மீதிருந்து இடம் மாறி சங்கரன் மீது இறங்கியது. விளைவாய் அவனும் தாறுமாறாய் அடிபட்டான்.

அப்போதே தனக்கு பழக்கப்பட்ட காவல் துறை அதிகாரிக்குப் போன் செய்து, விஷயத்தைச் சொல்லி அங்கே வரவழைத்தான் ஆன்ந்தராஜ்.

காவல் துறை வந்தால் தங்களுக்குத் தலைவலிதான் என்பதைப் புரிந்து கொண்ட தாதா கும்பல், தங்களது தங்கச் சங்கிலிகளை மட்டும் வாங்கிக் கொண்டு உடனே பறந்து போனது.

காவல்துறை வந்ததும், சங்கரனையும், அந்த ரமணியையும் அவர்களிடம் ஒப்படைத்து விட்டு, கால் டாக்ஸியில் ரெஸ்டாரெண்டிற்குத் திரும்பினர் ஆனந்தராஜும், திருமுருகனும்.

வரும் வழியில் ஆனந்தராஜ் கேட்டான், “எப்படிடா இந்த விஷயங்களெல்லாம் உனக்குத் தெரிஞ்சுது?”

“ஆவி சொல்லிச்சு”

திரும்பி அவனைக் கூர்ந்து பார்த்த ஆனந்தராஜின் பார்வையில் எப்போதும் இருக்கும் கிண்டல் காணாமல் போய், ஒரு நம்பிக்கை வந்திருந்தது.

–தொடரும்…

< ஒன்பதாவது பகுதி

1 thought on “பேய் ரெஸ்டாரெண்ட் – 10 | முகில் தினகரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

December 2021
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031