மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் நாங்கள் தோல்வி அடையவில்லை. எங்கள் வெற்றி களவாடப்பட்டது. நான் ராஜினாமா செய்யப் போவதில்லை என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றி பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. திரிணமூல் காங்கிரஸ் கட்சி 80 இடங்களைக் கைப்பற்றியது. இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரான மம்தா பானர்ஜி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து கூறியதாவது: நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை. நாங்கள் இந்தத் தேர்தலில் தோற்கவில்லை; மாறாக எங்கள் வெற்றி களவாடப்பட்டது. நான் ராஜினாமா செய்ய மாட்டேன். அடுத்தக்கட்ட நகர்வு குறித்து எனது கட்சியினர் ஒன்றுகூடி ஒருமித்த முடிவை எட்டுவோம்.
தேர்தலில் பெரியளவில் வன்முறை நடந்துள்ளது. காவல்துறை, தேர்தல் ஆணையம் என அமைப்பு ரீதியிலான தாக்குதல்கள் நடந்துள்ளன. இந்தத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் தார்மிக வெற்றி பெற்றிருக்கிறது. எங்களுடைய போட்டி பாஜகவுக்கு எதிரானது அல்ல. அது தேர்தல் ஆணையத்துக்கு எதிரானது. இந்தத் தேர்தலில் அவர்கள் நியாயமான வெற்றியைப் பெற்றிருப்பார்கள் என்றால் நான் புலம்பியிருக்க மாட்டேன்.
