சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலில் த.வெ.க. 108 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி 73 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. அதாவது, எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பெரும்பான்மை என்பது எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்றால், மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் பாதியான 117 தொகுதிகளைவிட ஒன்று கூடுதலாக இருக்க வேண்டும். அதாவது, 118 தொகுதிகள் வேண்டும்.
இதனிடையே த.வெ.க. தலைவர் விஜய், வெற்றி பெற்ற வேட்பாளர்களை நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார். மேலும் வெற்றி குறித்து கேட்டறிந்தார். அதனைத்தொடர்ந்து நடந்த ஆலோசனை கூட்டத்தில் சட்டமன்ற குழு தலைவராக விஜய் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

மொத்தமுள்ள 234 தொகுதிகளில் (50 சதவீதம் + 1) 118 தொகுதிகளை தனிக்கட்சியாக வென்றால் மட்டுமே தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைக்க முடியும். ஆனால் 108 தொகுதிகளை மட்டுமே வைத்துக் கொண்டு மற்ற கட்சிகளின் ஆதரவை பெற த.வெ.க. தீவிரமாக முயற்சித்து வருகிறது. எனவே தங்களுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க 14 நாட்கள் அவகாசம் கேட்டு, கவர்னருக்கு விஜய் இ-மெயில் அனுப்பியுள்ளார்.
விஜய், 2 தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலுமே (பெரம்பூர், திருச்சி கிழக்கு) வெற்றி பெற்றிருக்கிறார். அதில் ஒன்றை அவர் ராஜினாமா செய்ய வேண்டும். அதன்படி திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்வார் என்று கூறப்பட்டு வருகிறது. எனவே அதில் ஒரு தொகுதி குறைந்து 107 இடங்கள் மட்டுமே கிடைக்கும். அடுத்ததாக சபாநாயகராக ஒருவரை நியமிக்க வேண்டும். அதிலும் ஒரு சீட் குறைந்து 106 ஆக குறைகிறது. எனவே த.வெ.க. ஆட்சி அமைப்பதற்கு இன்னும் 12 இடங்கள் வேண்டும். இதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் மூத்த நிர்வாகிகள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் ஆதரவு
த.வெ.க.வுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தேசிய செயலாளர் நிவேதித் ஆல்வா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள 5 எம்.எல்.ஏ.க்களும் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் டெல்லி தலைமை எடுக்கும் முடிவுக்கு ஏற்ப தாங்கள் செயல்படுவோம் என்று எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்தனர். இதனையடுத்து கிரிஷ் சோடங்கர் டெல்லி சென்று இந்த விவரத்தை தலைமையிடம் தெரிவித்தார். இதனையடுத்து த.வெ.க.வுக்கு ஆதரவு கொடுப்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சி டெல்லியில் நேற்று இரவு ஆலோசனை நடத்தியது.
இந்த கூட்டத்தை தொடர்ந்து கே.சி.வேணுகோபால் நிருபர்களிடம் கூறுகையில், “தமிழ்நாட்டின் அரசியல் சூழல், குறிப்பாக தேர்தலுக்கு பிந்தைய நிலைமை குறித்து விவாதிக்க கூட்டம் நடத்தினோம். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமிழக மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். தமிழகத்தில் ஆட்சி அமைக்க ஆதரவளிக்குமாறு த.வெ.க. தலைவர் விஜய், அகில இந்திய தேசிய காங்கிரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் கிடைத்த மக்கள் ஆணை, அரசியலமைப்பை அதன் எழுத்து மற்றும் உணர்வின்படி பாதுகாக்க உறுதிபூண்ட ஒரு மதசார்பற்ற அரசாங்கத்துக்கே என்பதில் இந்திய தேசிய காங்கிரஸ் தெளிவாக உள்ளது. எந்த வகையிலும் பா.ஜனதாவும், அதன் கைப்பாவைகளும் தமிழ் நாடு அரசை நடத்துவதை இந்திய தேசிய காங்கிரஸ் அனுமதிக்காது என் பதில் உறுதியாக உள்ளது. அதன்படி, தேர்தல் தீர்ப்பில் பிரதிபலித்துள்ள மாநிலத்தின் உணர்வுகளை கருத்தில் கொண்டு, விஜய்யின் கோரிக்கை மீது இறுதி முடிவு எடுக்குமாறு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
இந்நிலையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று (புதன்கிழமை) காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடக்கிறது. இதில் முடிவில் த.வெ.க.வுக்கு ஆதரவு அளிப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கும் என்று தெரிகிறது. பெரும்பாலும் த.வெ.க.வுக்கு காங்கிரஸ் ஆத ரவுக்கரம் நீட்டும் என்றே தெரிகிறது.
கவர்னருடன் சந்திப்பு
இந்த சூழ்நிலையில் தமிழக கவர்னர் ஆர்.வி.அர்லேகர் இன்று (புதன்கிழமை) சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகைக்கு வரவுள்ளார். அதிக இடங்களை வென்ற கட்சி என்ற முறையில் விஜய்க்கு கவர்னர் அழைப்பு விடுப்பார். அப்போது புதிய அமைச்சரவை பதவி ஏற்புக்கான அனுமதியை கவர்னர் வழங்குவார். மற்ற கட்சிகளின் ஆதரவுக் கடிதமோ. அறிக்கையோ இருந்தால், அதை கவர்னரிடம் விஜய் அளிப்பார்.
முழு பெரும்பான்மை பெறாத கட்சி, மற்ற கட்சிகளின் ஆதரவுக் கடிதத்தை கொடுத்து பெரும்பான்மையை கவர்னரிடம் காட்டினாலும், பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபித்துக்காட்ட வேண்டியது கட்டாயமாகும். எனவே 108 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே இருந்தாலும், த.வெ.க.வால் அரியணை ஏற முடியும்.
நாளை அமைச்சரவை பதவி ஏற்பு

அந்த வகையில்தான் நாளை அமைச்சரவை பதவி ஏற்பு நிகழ்ச்சியை நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார். இதனையடுத்து சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சாய்குமார் போலீஸ் டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோரை நேற்று அழைத்து ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இந்த நிகழ்ச்சி நாளை காலையில் நடக்கவுள்ளதாக தெரிகிறது. இதற்கு 5 ஆயிரம் பேரை அழைக்க விஜய் முடிவு செய்துள்ளார். இந்த நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
“ஜோசப் விஜய் எனும் நான்..”
பதவி ஏற்பு நிகழ்ச்சியில், அமைச்சரவைக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க கவர்னருக்கு தலைமைச்செயலாளர் அழைப்பு விடுப்பார். முதலில் விஜய் மேடைக்கு வந்து, ‘சி.ஜோசப் விஜய் எனும் நான்…’ என்று முதல்-அமைச்சருக்கான பதவிப்பிரமாணத்தையும், ரகசியகாப்பு பிரமாணத்தையும் ஏற்றுக்கொள்வார். அதன்பின்னர் ஒவ்வொரு அமைச்சராக வந்து பதவி ஏற்றுக்கொள்வார்கள். அமைச்சர்கள் பதவி ஏற்பு முடிந்ததும், யார் யாருக்கு என்னென்ன துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பதை கவர்னர் மாளிகை, செய்திக்குறிப்பாக வெளியிடும்.

முதல்-அமைச்சர் விஜய்
அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சராக விஜய் சென்னை கோட்டைக்கு வந்து, அவருக்கென்று தயார்படுத்தப்பட்டுள்ள அறைக்கு வந்து அரசு அலுவல்களை தொடங்குவார். அவருடன் அமைச்சர்களும் தலைமைச் செயலகத்திற்கு வந்து தங்களின் அறைக்கு வருவார்கள். பின்னர் முதல்-அமைச்சர் விஜய், இடைக்கால சபாநாயகரை நியமித்து உத்தரவிடுவார். இடைக்கால சபாநாயகருக்கு கவர்னர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். அதனைத்தொடர்ந்து அனைத்து கட்சிகளிலும் உள்ள வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு சட்டசபைக்கு வர அழைப்புவிடுக்கப்படும். இடைக்கால சபாநாயகர் குறிப்பிட்ட நாளில் அவர்கள் அனைவரும் சட்டசபைக்கு வந்து எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றுக்கொள்வார்கள்.
இதற்கிடையே தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் உத்தரவின் பேரில் தமிழக பொதுத்துறை அதிகாரப்பூர்வமாக இன்று வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
