படைத்திறல் பல்லவர்கோன் | 2 | பத்மா சந்திரசேகர்

 படைத்திறல் பல்லவர்கோன் | 2 | பத்மா சந்திரசேகர்

2. எதிராலோசனை

ல்லவ மன்னன் தனது அமைச்சர் விக்கிரமர் மற்றும் சேனைத் தலைவர் கோட்புலியாருடன் ஆலோசனை செய்த நான்காவது நாள்..! மதுரைக் கோட்டை நோக்கி விரைந்துக் கொண்டிருந்தது அந்த புரவி. அந்த அஸ்வத்தின் மீது அமர்ந்திருந்தவர் வெண்ணிறப் பட்டணிந்து, நீலவண்ண அங்கவஸ்திரம் அணிந்திருந்தார். கழுத்திலிருந்து மார்பில் புரண்ட முத்து மாலை காண்போர் விழிகளைக் கவர்ந்திழுத்தது. இடையிலிருந்த வாள் அவரது வீரத்திற்குச் சாட்சி கூறியது.

ஆதவன் மறைவதற்குள் மதுரைக் கோட்டையை அடைந்து விட வேண்டுமென்ற எண்ணத்தில் வேகமாக விரைந்து கொண்டிருந்தது புரவி. எனினும், அந்த வாலிபர் கொண்டிருந்த வேகத்திற்கு அவரது புரவியால் ஈடுதர இயலாததால், சற்றுத் தாமதமானது.

ஆதவன் மறைந்து விட்டதால், மதுரைக் கோட்டையின் பாதுகாப்பு அகழியின் பாலங்கள் தூக்கப்பட்டுவிட்டன. கோட்டையின் உள்ளேயும், வெளியேயும் தீவர்த்திகள் ஏற்றப்பட்டிருந்தன. கோட்டைக்கு வெளியே வீரர்கள் கையில் ஆயுதங்களுடன் பாதுகாவல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

புரவி வரும் ஓசை கேட்டதும் வீரர்கள் யாரெனப் பார்த்தனர். அஸ்வத்தில் வந்த வீரனைக் கண்டதும் முகம் மலர, அதே நேரம் மரியாதையும் தோன்ற, புரவியின் அருகே ஓடி வந்தனர்.

“இளவரசர் வரகுணவர்மர்1

“வாழ்க வாழ்க”

காவல் வீரர்கள் முழக்கமெழுப்ப, தனது புரவியை நிறுத்தினார் பாண்டிய வேந்தர் ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபரின் மகனும், பாண்டிய இளவரசருமான வரகுணவர்மர்.

“இளவரசே. வரவேண்டும்” அவசரமாக அகழியின் அருகில் சென்ற வீரனொருவன் தனது கையிலிருந்த கொம்பை ஊத, மறுமுனையிலிருந்து பதில் வந்தது. முன்பு கொம்பை ஊதிய வீரன் தனது கையிலிருந்த கொம்பை மும்முறை ஊத, மறுமுனையில் பரபரப்பு தெரிந்தது.

உடனே அகழிப்பாலம் இறக்கப்பட்டது. வீரனொருவன் தீவர்த்தியுடன் தனது புரவியில் முன்னே சென்றான். அந்த வீரனைத் தொடர்ந்தார் இளவரசர் என அழைக்கப்பட்டவர். அந்த இருவரையும் இன்னொரு வீரன் தனது கையில் தீவர்த்தி ஏந்தித் தொடர்ந்தான்.

அகழிப்பாலத்தைக் கடந்து உள்ளே நுழைந்த இளவரசர் விரைந்து பாண்டிய வேந்தர் அறைக்குச் சென்றார். தனியறையில் இளவரசர் வருவாரென எதிர்பார்த்திருந்தவர் போல காத்திருந்தார் பாண்டிய வேந்தர் ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபர்.

வீரத்திற்குக் கட்டியம் கூறும் உடற்கட்டுடனும், மகனை வெகு நாட்கள் கழித்துக் கண்டதில் உண்டான மகிழ்ச்சியைக் கட்டியம் கூறும் புன்னகையுடனும், கம்பீரமாகத் தனது ஆசனத்தில் வீற்றிருந்தார் பாண்டிய வேந்தர் ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபர். சாதாரண பருத்தி உடையணிந்து, வெற்று மார்புடன், தலையில் கிரீடம், இடையில் வாள் ஆகியவை இன்றி ஓய்வாக இருந்தார்.

“வா வரகுணா” வரகுணவர்மரைக் கண்டதும் வாஞ்சையுடன் வரவேற்றார்.

“தந்தையே… ஒரு முக்கியமான செய்தியை உங்களிடம் சொல்லவே விரைந்து வந்தேன்”

“ஏனோ என் உள்மனம் நீ இன்று வருவாயென கூறியது. நீயும் வந்து விட்டாய். முதலில் போஜனம் செய்யலாம். பின்னர் நீ கூற வந்த தகவலைக் கூறு” ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபர் கூறிவிட்டு, கைகளைத் தட்ட, அறைவாயிலிலிருந்த வீரன் எட்டிப் பார்த்தான்.

“உணவு கொண்டு வரச்சொல்” வேந்தர் கூறிய சில கணங்களில் பணிப்பெண்கள் உணவு கொண்டு வந்தனர். பணிப்பெண்கள் பரிமாற, உணவை உண்டு முடிக்கும் வரை அங்கு மௌனம் நிலவியது. உணவுண்ட இடத்தை சுத்தம் செய்து, பணிப்பெண்கள் வெளியேறும் வரை காத்திருந்த வரகுணவர்மர் பின்னர் தனது பேச்சைத் தொடங்கினார்.

“தந்தையே. நந்திவர்மர் படை தீவிர போர்ப் பயிற்சியில் உள்ளது. புதிதாகப் போர்வீரர்களும் படையில் சேர்க்கப்படுகின்றனர்.”

“எனில் ஏதோ படையெடுப்புக்கு தயாராகின்றனர்”

“ஏதோ படையெடுப்பு எனத் தோன்றவில்லை தந்தையே. பாண்டிய நாட்டின் மீதான தாக்குதலாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது” வரகுணவர்மர் கூற, சில கணங்கள் யோசனையில் ஆழ்ந்தார் ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபர்.

“அப்படி இருக்கவும் வாய்ப்பு அதிகம் தான். இராஷ்டிரகூடர்களுடன் போரில் வென்று, அமோகவர்ஷர் பெண்ணை விவாகம் புரிந்து, மணவினைத் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் நந்திவர்மர். எனவே இராஷ்டிரகூடர்களுடன் போர் இருக்க வாய்ப்பில்லை. கங்க நாடும் தற்போது நந்திவர்மரின் நட்பு நாடே. எனவே பாண்டிய நாட்டின் மீது போர் தொடுக்க வாய்ப்புகள் அதிகமே”

“இப்போது என்ன செய்யப் போகிறோம் தந்தையே..?”

“தொண்டை மண்டலத்தில் நமது பரப்பு இன்னும் விஸ்தரிக்கப்பட ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டு நாமும் போருக்குத் தயாராவோம்” சொன்ன ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபர் குரலில் உறுதி தெரிந்தது.

“சாத்தனாரை2 வரச்சொல் வரகுணா” ஸ்ரீவல்லபர் கூற, வரகுணர் ஒரு வீரனிடம் சாத்தனாரை அழைத்து வரச் சொல்லியனுப்பினார். சற்று நேரத்தில் ஸ்ரீவல்லபர் இருந்த அறைக்கு வந்தடைந்தார் சாத்தனார்.

நடுத்தர வயதைக் கடந்த சாத்தனார் வயதுக்கு மீறிய முதுமையைக் கொண்டிருந்தார். முன்நெற்றி முடிகளில் சற்றே அதிக அளவு நரை தெரிய, கடல் நுரையால் செய்தது போல மீசை முழுக்க நரைத்திருந்தது. மணிமேகலை எழுதிய சங்கப்புலவர் கூலவாணிகன் சாத்தனாரின் வம்சத்தில் வந்தவர். இடையில் வாள் காணப்படவில்லை. மாறாக முகத்தில் அறிவுக்களை தெரிந்தது.

“வரகுணர் எப்போது வந்தார்..? இந்த மாலை நேரத்தில் அவசரமாக என்னை அழைத்தது ஏனோ..?” வினாக்களுடன் வந்தார் சாத்தனார்.

“தங்கள் இரு வினாக்களுக்கும் ஒரே விடை தான் சாத்தனாரே” வரகுணர் கைகாட்டிய ஆசனத்தில் அமர்ந்த சாத்தனாரின் செவிகளை அடைந்தது ஸ்ரீவல்லபரின் பதில்.

“சாத்தனாரே… பல்லவ மன்னன் நந்திவர்மன் பாண்டிய நாட்டின் மீது போர் தொடுக்கும் எண்ணத்தில் உள்ளதாகத் தோன்றுகிறது. பாண்டிய நாடு இன்னொரு போருக்குத் தயாராக வேண்டிய நிலையிலுள்ளது சாத்தனாரே” ஸ்ரீவல்லபர் கூற, அமைதியாக அமர்ந்திருந்தார் சாத்தனார்.

“என்ன சாத்தனாரே? எதுவும் பேசாமல் மௌனித்து விட்டீர்?” வேந்தரின் வினாவிற்கு சில கணங்கள் மௌனமே விடையாக வந்தது. சில கணநேர சிந்தனைக்குப் பின்னர் பேசத்தொடங்கினார்.

“வேந்தே… நந்திவர்மர் தற்போது நல்ல படை பலத்துடன் உள்ளார். இராஷ்டிரகூடருடன் மணவினைத் தொடர்பு கொண்டுள்ளதால், அவர்களது ஆதரவும் பல்லவர்களுக்குக் கிடைக்கும். அத்துடன் கங்க மன்னர் பூதுகனும் தற்போது நந்திவர்மருக்கு உறவாகிவிட்டார். எனவே தற்போது இந்த போரைத் தவிர்ப்பது பாண்டிய நாட்டிற்கு நலம் பயக்கும்.” சாத்தனாரின் வார்த்தைகள் ஸ்ரீவல்லபருக்கு வியப்பை அளித்ததென்பது அவர் முகபாவனையிலேயே தெரிந்தது. ஸ்ரீவல்லபரின் நெற்றி சுருக்கம் அவர் யோசனையில் உள்ளதைத் தெரிவித்தது.

“நாம் போரை முன்னெடுக்கவில்லை சாத்தனாரே. பல்லவர் போர் தொடுக்க முடிவெடுத்த பின்னர், நாம் பின்வாங்க இயலாது சாத்தனாரே”

“பின்வாங்க சொல்லவில்லை வேந்தரை. எனினும், போரைத் தவிர்க்க நம்மால் இயலும்”

“சாத்தனாரே… பின்வாங்குவதற்கும், தவிர்ப்பதற்கும் என்ன வேறுபாடு..? இரண்டுமே போரிடாமலேயே நமது தோல்வியை ஏற்றுக்கொள்வது போன்றது தானே?” கேட்ட வரகுணர் குரலில் சற்றுக் கோபம் தெரிந்தது.

“இல்லை வரகுணா” வயது தந்த உரிமையிலும், சிறு வயதிலிருந்து தூக்கி வளர்த்த பாசத்திலும் பாண்டிய இளவரசர் வரகுணவர்மரை பெயரிட்டே அழைத்தார் சாத்தனார்.

“பல்லவர் போர் தொடுத்து வருகையில் சமாதானம் பேசி போரிலிருந்து பின்வாங்க சொல்லவில்லை வரகுணா. நந்திவர்மர் போர் தொடங்குமுன்னரே, சமாதானம் செய்து போரைத் தவிர்க்கச் சொல்கிறேன்”

“அதெப்படித் தவிர்க்க இயலும் சாத்தனாரே..?” விருப்பமில்லாவிடினும் உபாயம் என்னவென அறியும் ஆர்வத்தில் கேட்டார் ஸ்ரீவல்லபர்.

“இயலும் வேந்தே. இராஷ்டிரகூடர்கள் செய்த அதே உபாயத்தை நாமும் கைக்கொண்டால், போரைத் தவிர்ப்பதோடு அல்லாமல், எதிர்காலங்களில் நமது பலத்தை உயர்த்தவும் செய்யலாம்”

“விளங்கவில்லை சாத்தனாரே.”

“மாறன்பாவை.” மெல்லிய குரலில் சாத்தனார் கூற, கேட்டுக்கொண்டிருந்த ஸ்ரீவல்லபரின் விழிகள் சிவந்தன.

“நிறுத்துங்கள் சாத்தனாரே…” சினம் கொண்ட சிங்கம் குரலெடுத்து உறுமுவது போல, மதம் கொண்ட யானை மத்தகத்தின் மேலாக துதிக்கையைத் தூக்கி பிளிறுவது போல ஆக்ரோஷமான குரலில் இரைந்தார் பாண்டிய வேந்தர் ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபர். சாத்தனார் மட்டுமன்றி, வரகுணரும் அச்சம் கொண்டு அமைதியாக நின்றனர்.?

-தொடரும்…

< முதல் பாகம் | மூன்றாம் பாகம் >

——————————————————————————————–

1 பாண்டிய வேந்தர் ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபரின் மகன். பின்னாளில் இரண்டாம் வரகுணவர்மன் என்னும் பெயருடன் பாண்டிய நாட்டின் வேந்தனாக முடிசூடியவர்.

2 ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன் ஆட்சியில் அரசியல் அதிகாரியாக இருந்தவர் எட்டிசாத்தான் என்பவர். இவர் தென்பாண்டி நாட்டில் செய்துள்ள தொண்டுகளும், அறங்களும் பலவாகும். பாண்டியர் வரலாறு – T.V. சதாசிவ பண்டாரத்தார்.

ganesh

26 Comments

  • அழகிய நடை
    அற்புதமான களம்
    சிறந்த சொல்லாடல்

    முதல் அத்தியாயம் பல்லவன்
    இரண்டாம் அத்தியாயம் பாண்டியன்

    கதை விறுவிறுப்பாக இருக்கிறது.

    எழுத்தாளர் பத்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்

    • நன்றி தம்பி.. ❤️❤️

      • விருவிருப்பான களத்தில் இரண்டாம் வாரம்..
        அடுத்தது என்ன? என்ற ஆவலைத் தூண்டுகிறது எழுத்து.
        வாழ்த்துகள் அக்கா

  • சென்ற வாரம் பல்லவ நாடு, இந்த வாரம் பாண்டிய நாடா! எதிர்பார்க்காத திருப்பம்.. பல்லவனின் ஆலோசனை நீட்சி தான் இந்த வாரமும் இருக்குமென நினைத்தேன். மாறாக வரகுணபாண்டியன் வந்து அசத்தியுள்ளார். அருமை! வாழ்த்துகள் எழுத்தாளரே 💐

    • இரண்டாம் வாரம் ஆசிரியரின் இயல்பான வேகத்தைக் காணமுடிகிறது. முதல் வாரத்திற்கு முற்றிலும் மாறான கதை மாந்தர்கள். முடிச்சுகள் ஆரம்பித்து விட்டன. மூன்றாம் வாரத்தை எதிர் நோக்க வைக்கும் கடைசி பத்தி.

      • நன்றி அண்ணா.. 🙏🙏

    • நன்றி ப்பா.. 🙂🙂

    • நன்றி ப்பா.. 🙂🙂🙂

      • விருவிருப்பான களத்திற்குள் அழைத்து வந்து விட்டீர்கள். அடுத்தது என்ன? என்ற ஆவல் இன்றே தொற்றிக் கொண்டது. இன்னும் ஏழு நாள் காத்திருக்க வைத்து விட்டீர்களே அக்கா!!

        வாழ்த்துகள் அக்கா…

        • நன்றி தம்பி… 🙂🙂

        • அட்டகாசம்… ❤️

          • நன்றியும் அன்பும்.. 🙂🙂

  • அருமையான நடை…..போடட்டும் வீறுநடை

  • பல்லவன் டூ பாண்டியன் கடைசி வரிகள் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பில்….
    அருமையான கதை அக்கா

    • நன்றி ப்பா.. 🙂🙂

  • விறுவிறுப்பான கதைக்களம்

    • நந்திவர்மன் மாறன்பாவையை காதலிப்பாரா? Waiting for next episode

      • நன்றியும் அன்பும்…
        நந்திவர்மரும் காத்திருக்கிறார்… ஆனால்……

    • Thanks டி.. ❤️❤️

  • நந்திவர்மன் மாறன்பாவையை காதலிப்பாரா? Waiting for next episode

  • பல்லவ நாட்டிற்கும் பாண்டிய நாட்டிற்கும் ஒரு இனிமையான பயணம். படிப்பவர்களின் ஆவலைத் தூண்டும் எழுத்து நடை. எழுத்தாளரின் தனித்திறமை. அருமை அருமை

    • நன்றி ப்பா…

  • முதல் அத்தியாயத்தில் பல்லவ நாடு தொடர்ந்து அதே விறுவிறுப்புடன் பாண்டியநாட்டில் நடக்கும் எதிர் ஆலோசனை என்று எக்ஸ்பிரஸ் வேகம் எடுக்கிறது. இளவரசர் கோட்டைக்குள் வரும்போது நடக்கும் அகழி, அகழி பாலம், மூன்று முறை ஊதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறிய கதைக்குள் இவ்வளவு டீட்டைல் இருக்கு.
    அரசர் குடும்பத்தில் பிறந்தால் பலதார மணம் அதுவும் பல அரசியல் காரணத்தால் நடந்திருக்கின்றது என்கிற வரலாற்றை சொல்லுருக்கீங்க. ஆனால் இவர்களின் சொந்த பகை, குடும்ப பகை, பெண்கள் தொடர்பான பகை போன்றவைகளால் வரும் போரில் அப்பாவி பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டார்கள் என்ற சோகமும் வரலாறுதானே .அதை மாற்ற முடியாதே ..

    கதைக்கு ஓட்டத்திற்கு சரியாக கைகொடுக்கும் ஓவியம் பிரமிப்பா இருக்கு ஓவியர் தமிழ் க்கும் வாழ்த்துக்கள் ..

    அடுத்த திங்கள் கிழமையை நோக்கி ஆவலுடன் …

    • நன்றியும் அன்பும்.. 🙂🙂

  • Interesting one madam

    • Thank you mam… ❤️❤️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...