அந்தாதிக் கதைகள்! – நெத்திலி..! | இன்பா

 அந்தாதிக் கதைகள்! – நெத்திலி..! | இன்பா

நெத்திலி..!

இன்பா

ள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகளைப் போல, சிறகினைச் செல்லமாக அசைத்தபடி,கூட்டிலிருந்து வெளியே பறந்த பூங்குயில்கள்.

மலரின் இதழை வன் புணர்ச்சி செய்தால் மணம் கிடைக்கும் என்ற நப்பாசையில் போதை தலைக்கேறிய காலை நேரத் தென்றல்,

கதிர்க் காதலன் வருகிறான் என்பதையறிந்து, அவன் மனதைக் கவர்ந்திழுக்க,முகத்தில் வர்ணனை அழகைப் புதைய விட்டுக் கொண்ட மேகங்கள் என இரம்மிய பாட்டில் நடனம் கற்ற காலைப் பொழுதினில், காக்கைகளின் சுப்ரபாத கச்சேரியில் கண் விழித்து படுக்கையிலிருந்து எழுந்தேன்.

வீட்டில் நிழலாடிய ஆரவாரம் மனதிற்குள் மகிழ்வென்ற தேரை இழுத்துவர, அதனை உள்வாங்கிக் கொண்டு என்னழகைப் பார்க்க கண்ணாடி முன் நின்றேன். அகத்தின் மகிழ்ச்சி கண்ணாடியிலும் எதிரொலித்தது.

எனக்கு அவள் என, காதலில் பச்சை குத்திக் கொண்ட சுனிதா இன்று திருமதி இனியன் என்ற அடையாளத்தைப் பெறப் போகிறாள் என்ற மகிழ்வு. என்னடா… இனியன் என்ற பெயரை முன் வைக்கிறான்? அப்ப.. நெத்திலி யாரு? என்ற கேள்வி உங்களுக்குள் எழும்பியிருக்கும்… அவசரப்படாமல் பயணத்தைத் தொடருங்கள்!

கண்ணாடியில் கண்றாவியாகத் தெரிந்தாலும், மனதுக்குள் மன்மதன் என்ற நினைப்பு. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், கருப்புக்கட்டிக்கு நிறம் என்னிடமிருந்துதான் கடனாகப் போயிருக்க வேண்டும். நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள். இந்த மன்மதன் எத்தனை அழகென்று!

கொஞ்சமாவது வெள்ளை நிறம் கண்டால்தான் மாப்பிள்ளை தோரணைக்கு அழகாக இருக்கும் என்பதால், பாட்டியின் மருத்துவமான பாசிப்பயிறு, மஞ்சள் கலவையை முகத்தில் தேய்த்து அரை மணி நேரம் நின்று பார்த்தேன். தமிழகத்தில் காங்கிரசு ஆட்சியைப் பிடிக்கும் என்பது எப்படி கானல் நீரோ, அவ்வண்ணமே என் முயற்சியும் ஆனது. கறுப்பு கறுப்பாகவே இருந்தது.
அப்பாவையும், அம்மாவையும் மனதிற்குள் சபித்துக் கொண்டேன். மகப்பேறு காலத்தில் கொஞ்சம் குங்குமப்பூவைச் சாப்பிட்டிருந்தால், இன்று நமக்கு இந்தப் போராட்டம் இல்லாமல் போயிருக்கும். எல்லாம் விதிப்பயன்… வேறு என்ன சொல்ல..!

பட்டு வேட்டியும், பட்டுச் சேலையும் அணிந்து கொண்டு கிளம்ப அணியமான என்னிடம் வடிவேலுவின் களை மாறி, பார்த்திபன் களை ஒட்டிக் கொள்ள, மனதிற்குள் கொஞ்சம் நிம்மதி. அப்பாடா… நானும் அழகுதான் என நினைக்க வைத்தது.

மேஜையின் மீது கிடந்த திருமண அழைப்பிதழைக் கையில் எடுத்தேன்.

அதில் நானும், சுனிதாவும் இணையராக…

சுனிதா… என்ன அழகு..! சும்மா தேவதை போல அம்சமாகத் தோன்றினாள். அவளுக்குப் போய் நானா? மீண்டும் தாழ்வு மனப்பான்மை எனக்குள்!

டேய் பரதேசி… நீ அழகுதான்டா… என மூளைச் செல்கள் ஊக்கம் கொடுக்க, தாழ்வு மனப்பான்மைக்கு தாழ்வு சொல்லிவிட்டு மணவறை நோக்கிக் கிளம்பினேன். என்ன நீ  மட்டும் தனியாகவா கிளம்பினாய்? என நீங்கள் குசும்போடு கேட்பது எனக்கும் கேட்கிறது.
எல்லோருடன் மாப்பிள்ளையாக நான் கிளம்பினேன். போதுமா? கதை சொல்றதுக்குள்ள நம்ம கதையை முடிச்சு கிறுக்கன் ஆக்கிடுவாங்க போல..!

கோயமுத்தூரில் வேலை தேடிச் சென்ற போதுதான் சுனிதாவைப் பார்த்தேன். அட.. ஆரம்பித்துவிட்டான்பா… வழக்கம் போல பிளாஷ்பேக் சொல்ல… இதைவிட இவனுக்கு வெற பாணியே தெரியாது போல..!

நண்பா… நீங்க நினைக்கிறதை நான் யூகித்து விட்டேன். என்ன செய்ய… இந்தப் பாணியை விட வேற பாணி நமக்குத் தெரியாது, கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்க, கதை நல்லாத்தான் இருக்கும்.

கோயமுத்தூரில் பல மில்கள் இயங்கிக் கொண்டிருந்ததால் இருபத்து நான்கு மணி நேரமும் சாலைகளில் ஆள் நடமாட்டம் இருந்து கொண்டேயிருக்கும். மதிய நேரம் வந்து விட்டால், பெண்கள் கையில் வலைப் பின்னல் கூடையில் உணவை வைத்து மில்களுக்குக் கொண்டு செல்வதைப் பார்க்கலாம். மில்லில் வேலை செய்யும் தங்கள் உறவின், பசியாற்ற அவர்கள் சுமந்து வரும் அந்த அழகு கோயமுத்தூரின் கவிதை. அந்தக் கவிதைகளை இரசிப்பதற்கு என்று இளைஞர் கூட்டமும் வட்டமடிக்கும்.

கோயமுத்தூரில் இயங்கிக் கொண்டிருந்த இரகுபதி நிறுவனத்தில் வேலை கிடைத்த எனக்கு கூடவே அதிர்ச்சியும் காத்திருந்தது. படித்த படிப்பிற்கான வேலையை எதிர்பார்ப்பது சராசரி மனிதனின் இயல்பு. ஆனால், அந்த இயல்பு கூட என்னை விட்டு தீட்டு போலத் தள்ளியேயிருந்தது என்பதை கிடைத்த வேலை காட்டியது. கறிக்கடைக்காரன் வாயில் மந்திரம் ஓதுவது போல, வேலை என்னைப் பார்த்து கேலி செய்திட, பிடிக்காத வேலையை பிடித்தது போல செய்யத் தொடங்கினேன்.

யாருடனும் பேசாமல் வெறுப்போடு வேலை செய்து கொண்டிருந்த என்னை அந்தப் பெண் அழைத்தாள். மஞ்சள் நிறச் சேலையைக் கட்டிக் கொண்டு, விரிந்த கூந்தலோடு நின்ற அவளைப் பார்த்ததில் வாயில் எச்சில் வழிந்தது என்பது மிகையல்ல..

வேங்கை மரத்தின் மீது அமர்ந்து கொண்ட மரங்கொத்தி, அலகினைத் தீட்ட மரத்தினை  துளையிடத் தொடங்க, துகள்கள் பொன்னிறமாய்  காற்றில் பறந்து மின்னலை உருவாக்க, அத்துகள்களைத் தோகையாக்கிக் கொண்ட மயில் ஆடும் பொன்னிறத் தாண்டவம் அவளின் கூந்தலில் எதிரொலித்தது என்றால் எச்சில் ஒழுகாமல் இருக்குமா?

வீழ்ந்து கிடந்த கற்றை முடியைக் ஒரு கையால் கோதி விட்டபடி, இனியன் உங்களை மேலாளர் பார்க்கச் சொன்னார், உடனடியாகப் போய் பார்த்து என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள் என்றாள்.
மேலாளருக்கு வேலை தொடர்பில் ஏதோ அய்யம், நாம்தான் இங்கே அறிவாளியாச்சே… ஆலோசனை கேட்கக் கூப்பிட்டிருப்பார் என சத்தியராஜ் போல சிந்தித்துக் கொண்டு, நக்கலோடு அவர் அறைக்குள் சென்றேன்.

என்னைப் பார்த்ததும், காட்டுக் கத்தல் கத்த ஆரம்பித்த அவர், வேலையில் கவனம் இல்லை. சுறுசுறுப்பு இல்லை… என பல இல்லைகளைச் சொல்லிவிட்டு, இனி சுனிதா மேற்பார்வையில்தான் எந்த வேலையும் செய்யணும், இதிலேயும் நீ சரிப்பட்டு வரவில்லையென்றால் உன்னை வேலையை விட்டுத் தூக்கிவிடுவேன் என கோப முழக்கம் செய்தார்.

ஆஹா.. நம்மகிட்ட வந்து சொன்ன புண்ணியவதிதான் சுனிதாவா? திரியைக் கொழுத்திப் போட்டுவிட்டு அமைதியா நடித்தாளா? வாடி.. வாம்மா உன்னை வச்சி செய்றேன்… என மனதுக்குள் பொறுமிக் கொண்டேன்.

அவளின் மேற்பார்வையில் வேலை செய்யத் தொடங்கிய நான் வேலைகளைக் கற்றுக் கொண்டேனா? என்பது தெரியாது. ஆனால், அவளை இரசிப்பதில் தேறிக் கொண்டிருந்தேன். அவளின் ஒவ்வொரு அசைவும் எனக்கு மெல்லியத் தீண்டல். அவள் மேல் கொண்ட மயக்கத்தில் தொலைந்து கொண்டிருந்த நான், வேலைக்குச் செல்வதை விருப்பச் செயலாக்கிக் கொண்டேன்.

பேருந்தில் எப்போதும் வேலைக்கு வரும் நான், ஒரு மாறுதலாக இருக்கட்டுமென நடந்து போய்க் கொண்டிருக்கிறேன். என்னருகில் இருசக்கர வாகனம் வேகமாக வந்து நிற்க, திரும்பிப் பார்த்தேன். அவள், மனது இறக்கை இன்றிப் பறக்கத் தொடங்க, வண்டியில் ஏறு.. என கண்ணால் சொன்னாள். கண்ணா இலட்டு தின்ன ஆசையா..? என மனது துள்ளாட்டம் போட்டாலும் தயக்கம் போலக் காட்டிக் கொண்டேன்.

என்னப் பார்த்துக் கொண்டிருந்தவள் தலைக்கவசத்தைக் கழற்றியபடி, நீ என்கூட எப்படிப் பழகுற… என்பதை உன்னோட ஒரு பார்வையில் கண்டு பிடித்துவிட்டேன். பெண்களுக்கு அப்படி ஒரு திறமை உண்டு, காதலிக்கிறாய் என்பது  தெரியும், ரொம்ப சீன் போடாம வண்டியில் ஏறு… என்றாள்.

காதலை டக்கெனச் சொல்லி என்னை தனதாக்கிக் கொண்ட அவளின் நுண்ணறிவு எல்லா பெண்களுக்கும் இருந்தால், ஆண்கள் காதலைச் சொல்ல நாயாக அலையை வேண்டிய அவலம் இருந்திருக்காது.


சுனிதாவும், நானும் காதலிக்கத் தொடங்கி விட்டோம். அப்புறம் என்ன.. கடற்கரை, பூங்கா என்று சுத்திகிட்டு இப்போ திருமணத்துக்கு அணியமாகி விட்டீங்க… இதில் என்ன பெரிசா இருக்கு? அப்படித்தானே நினைக்கிறீங்க..? இங்கேதான் நம்ம கதை பெரிய திருப்பத்தைச் சந்திக்கிறது.

சுனிதாவுக்கு அழகான அக்கா ஒருத்தி இருந்தாள். கவிதா என்ற அவள் அசப்பில் நயன்தாரா போல, அழக்குக்கு பொருள் சொல்லும் விதத்தில் இருப்பா. ஏன்.. அவளையும் விடல்லையா? நீங்கள் அவசரப்பட்டு கேட்டாலும், அப்படி ஒரு வாய்ப்பு எனக்கு கிடக்கல்ல நண்பா..

மீனவக் குடும்பத்தில் பிறந்த அழகான இளைஞன் நெத்தலி, கொஞ்சம் தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா போல இருக்கும் அவன், நல்லா பாடுவான். இதனால், கல்லூரியில் பெண்களின் கதாநாயகன் அவன்தான். கவிதாவும் அவனின் பாட்டுக்கு அடிமை.

கொஞ்சம் பாடத் தெரிந்திருந்த கவிதா, அவனோடு பல மேடைகளில் இணையத் தொடங்கினாள். இருவரின் நட்பும் ஆழமாகிவிட கவிதா இன்றி எந்த நிகழ்ச்சியிலும் நெத்தலி கலந்து கொள்ளுவதில்லை.

இரட்டை வசனப் பேச்சுக்களால் இருக்கும் கூட்டத்தைக் கலகலப்பாக வைத்திருக்கும் நெத்தலி,தவறியும் கவிதாவிடம் தப்பான பேச்சுக்களை முன் வைப்பதில்லை. தோழமை என்ற சொல்லின் பொருள் கவிதா என்பான். அந்தத் தோழமைக்கு நிகராக தாய்மைகூட இல்லை என்பது அவன் வாதம்.

இருவரின் நெருக்கம் கவிதாவின் தாய் மாமனுக்குப் பிடிக்கவில்லை. நெத்திலியை ஒழித்துக் கட்ட வழி தேடி, சாதியைக் கையில் எடுத்தான். மீன் விற்றுப் பிழைக்கிற நாய்.. நம் பொண்ணுகூட சுத்திகிட்டு இருக்குதது நம்ம சாதிக்கு அவமானம், அந்த நாயின் குரலை அழித்துவிட்டால், எந்த மேடையிலும் அவனால் பாட முடியாது. நம்ம பொண்ணும் மேடை ஏறாது என சாதி இளைஞர்களுக்குக் கொம்பு சீவினான்.

கல்லூரியில் விழா ஒன்றில், நெத்தலியும், கவிதாவும் பாடுவதாக ஏற்பாடு. நெத்தலியின் பாட்டைக் கேட்க மாணவர்கள் ஆரவாரம் செய்து கொண்டிருக்க , கூட்டத்தில் கவிதாவின் தாய் மாமனால் ஏற்பாடு செய்யப்பட்ட இளைஞர்கள் பலூனில் தண்ணீரை நிரப்பி அதற்குள் கண்ணாடித் துகள்களை  கலந்து நெத்தலி மீது அடிக்க அணியமாகிக் கொண்டிருந்தனர்.

நெத்தலியும் கவிதாவும் மேடையில் பாட ஆரம்பித்த உடன், கூட்டத்தில் இருந்து  பறந்து வந்த பலூன் வேகமாக  நெத்தலியின் முகத்தைத் தாக்கிட, அதில் கலந்திருந்த கண்னாடித் துகள்கள் நெத்தலியின் முகத்தில் இரத்த ஆறை ஓடச் செய்தது. நெத்தலியின் நிலையைப் பார்த்து அலறியபடி அவன் அருகில் ஓடி வந்த கவிதா அவனை தாங்கியபடி அழுது .நிலைமையை அப்படியே  கீழே சாய்ந்தாள் . பலூன் எறிந்தவர்களை  தேடிய மாணவர் கூட்டம் தோற்று திரும்பியது.

மருத்துவமனைக்கு  கொண்டு செல்லப்பட்ட நெத்தலியை  பரிசோதித்த மருத்துவர் அவன் கழுத்துப் பகுதியில் கண்ணாடித் துண்டு ஆழமாகப் பாய்ந்துள்ளது. அதனை நீக்கினால்தான் உயிர் பிழைப்பான், ஆனால், குரல் தொடருமா என்று தெரியாது என்றார். நெத்தலியின் உயிர் உறுதியானது. குரல் இறுதியாகிப் போனது.

அதன் பின் நெத்தலியைச் சந்திக்கும் வாய்ப்பைக் கவிதா பெறவில்லை. சாதி வளையம் அதனைத் திட்டமிட்டு தடுத்து வைத்திருந்தது.

திருமணத்திற்குக் கண்டிப்பாக நெத்தலியை அழைக்க வேண்டும் என சுனிதா சொன்ன போதுதான், இக் கதைகள் எனக்குத் தெரிந்தன. நெத்தலி என்கின்ற பெயரை நெய்தலில் அடையாளமாக வைத்துக் கொண்டான் என்பது இன்னொரு தகவல்.

மணவறைக்கு என்னுடன் கிளம்பிக் கொண்டிருந்த நெத்தலிக்கு என் திருமணத்துடன் கவிதா திருமணமும் நடைபெறுகிறது என்ற தகவலை தெரியாமல் பார்த்துக் கொண்டோம். நெத்தலிக்கும் பட்டு வேட்டி, பட்டுச் சட்டை என அமர்க்களப்படுத்தி அழைத்து செல்ல மணவறையில் கவிதாவைப் பார்த்து அவன் அசர வேண்டும் என்ற நோக்கம்.

காரில்  முன் இருக்கையில் நான் அமர, நெத்தலி பின் இருக்கையில் அமர்ந்து கொண்டான். அவன் முகத்தில் தெய்வீகக் களையோடு மகிழ்ச்சியும் நிழலாடியது.

நெத்தலியும் என்னுடன் வருகிறான் என்ற செய்தி எப்படியோ கவிதாவின் தாய் மாமனுக்குத் தெரிந்துவிட. கவிதாவை மணம் முடிக்கப் போகிறவன் அவன் என்பதால், பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

திருமண மண்டபத்திற்கு அருகில் கார் வந்து கொண்டிருந்த போது, அந்த துயர நிகழ்வு அரங்கேறியது .எங்கிருந்தோ வீசப்பட்ட  கையெறி குண்டு காரின் பின் பகுதியைச் சிதைக்க, இரத்த வெள்ளத்தில் நெத்தலி தூக்கி வீசப்பட்டான். உடன் பயணித்த  எனக்கும் ஓட்டுனருக்கும் பலமான அடி.

கவிதாவின் திருமணத்தை நிறுத்துவதற்காக நெத்தலி வந்து கொண்டிருக்கிறான்  என நினைத்த  சாதி வெறியர்கள் கவிதாவின் தாய் மாமன் ஏற்பாட்டில் இந்த கொடூரத்தை செய்தனர். தூக்கத்திலும் சாதி மட்டும் விழித்திருக்கும் போல!

குண்டு வெடித்த ஓசை அந்த பகுதியை அலற வைக்க திருமண மண்டபத்தில் இருந்த அனைவரும் பயத்தினால் ஓடி வந்தனர்.மணப்பெண்ணாக கவிதாவும்  ஓடி வந்தாள்.
இடுப்புப் பகுதி முழுவதும்  மொத்தமாகச் சிதைந்த நிலையில் கிடந்த நெத்தலி, தொலைவில் கவிதாவைப் பார்த்ததும்  வேதனையிலும் சிரித்தபடி எழ முயன்றான். அவனால் முடியவில்லை.  உடலில் பல உறுப்புகள் செயல்  இழக்க தொடங்கிய, அந்த நிலையிலும் அவன் கண்கள் கவிதாவைப் பார்த்து ஏதோ பேச விழைந்து கொண்டிருந்தன. அதற்குள் ஆயிரம் அர்த்தங்கள் புதைந்து கிடந்தன.

அழுதபடி… நெத்தலியின் அருகில் வந்த அவள் ,நெத்தலியின் பார்வையை தவிர்க்க தொடங்கினாள். அருகில் ரணத்தோடு பாதி மயங்கிய நிலைக்கு சென்று கொண்டிருந்த எனக்கு, அவர்களின் நிலையை பார்த்தபோது  இருவரிடம் ஏதோ ஒன்று சொல்ல முடியாமல் உள்ளத்திற்குள் இருக்கிறது என்பதை உணர்ந்தேன் . காதுகள் கூர்மையை வாங்கி கொண்டன.

டேய்  என்னை மன்னித்து விடுடா.என்னால் தானே உனக்கு  இந்த  நிலைமை.ஏண்டா என்கூட நட்பா வந்தே.. அவள் சொல்லியதை கேட்டு மெல்லிதாக சிரித்த அவன், பேச முற்பட்டான்.குரல் இழந்த அவனால் பேச  முடியாதே என்ற அனுதாபம்,ஆனால்  கவிதாவுக்கு தெரியுமா என்பது  தெரியாது.

அவன் மெல்லிய குரலில் கவிதா என்றான்.எனக்கு தூக்கி வாரி போட்டது.குரல் போகவில்லையா? சந்தேகத்தோடு இருவரையும் பார்த்தேன்.

அன்னைக்கு கல்லூரியில் விழாவில் என் மீது வீசப்பட்ட கண்ணாடி துகள்கள்  கீறி,முகத்தில் ரத்தம் ஆறாக பாய, பார்த்த நீ  அழுதுபடி வந்து, தாங்கி பிடித்தாய். நட்பில்  எனக்காக துடிக்கிறாய் என்று நினைத்தேன் .ஆனால் நீ  நட்பு என்று யாரும் செய்யாததை செய்தாய். கூர்மையான ஏதோ ஒன்றால் என் கழுத்தில் குத்தி விட்டு, யாருக்கும் தெரியக்கூடாது  என மயங்குவது போல கீழே விழுந்து நடித்தாய்.

உன் துரோகம் உயிரே போனது போல ஆகிவிட்டது. இனி இந்த உலகத்தில் யாருடன் பேச கூடாது என முடிவு எடுத்து குரல் போனது போல நடித்தேன்.என் வாழ்வில் உன்னை பார்க்க கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன் .ஆனால்  இனியன் அவன் கல்யாணம் என  விரும்பி அழைத்தான். தட்ட முடியவில்லை.

கவிதாவின் அழுகை புயலாக உருவெடுத்திட,அவனை கும்பிட்டபடி நான் தப்பு பண்ணலடா.. சுனிதாவை நீ காதலிப்பதாகவும், அன்று இரவு நீங்கள் இருவரும் ஊரை விட்டு ஓட திட்டமிட்டு  இருப்பதாகவும் என் மாமன் சொன்னான். அவன் சொன்னது அனைத்து பொய்னு அப்புறம்தான் புரிந்தது. நான் நட்பாக உன்கூட பழகிட்டு இருந்தாலும் உன்னை மனசார காதலித்தேன்டா. நீ என்னை ஏமாத்திவிட்டாய் என்ற கோபத்தில், எனக்கு கிடைக்காத நீ  தங்கைக்கும்கிடைக்கக் கூடாதுனு நினைத்து  அப்படி நடந்தேன். உன்னை குத்த வந்தா நான்,மனது கேட்காமல் மெதுவாக கீறினேன். ஆனால் பயத்தில் கொஞ்சம் அழுத்தமாக பட்டு விட்டது. நீ என்னை பார்த்து விட்டாய் என்பது தெரிந்ததும் மயங்குவது போல கீழே விழுந்தேன் .

இப்போ கூட இந்த கல்யாணத்துக்கு நான் சொல்லி தான் சுனிதா உன்னை அழைத்தாள். மாமனை கல்யானம் பண்ணுவது போல நடித்து உன்னை கல்யாணம் செய்ய திட்டமிட்டேன் . நீ என் உயிர்டா.. உனக்கு குரல் போச்சுன்னு கேள்வி பட்டு உன்னை பார்க்க துடித்தேன் ,ஆனால் பயம்… அவள் சொல்ல நெத்தலி  தலையை தரையில் முட்டி சத்தம் போட்டு அழுதான் .

காவல்துறையும் மருத்துவ வாகனமும் வர, நெத்தலியையும் என்னையும் ஓட்டுனரையும் தூக்க முற்பட்டனர். நெத்தலி கடைசி நிலைக்குப் போய் கொண்டிருக்கிறான் என்பதை சூழல் சொல்லியது.கவிதா அவன் கையைப் பிடித்தாள்… டேய்… எத்தனை பிறவி எடுத்தாலும் நீ தாண்டா என் தோழமை…  என் காதல் என்று சொல்லியபடி  அவன்  கையில் வடிந்த  ரத்தத்தால் நெற்றியில் பொட்டு வைத்தாள்

அப்போது நெத்தலியின் பாக்கெட்டில்  இருந்த  கைபேசி ஒலிக்க, எங்கே போவேன்  என் அன்பே  என் கண்கள் உன்னை தேடுதே என்ற பாடல் காற்றில்  பரவ …என் மனதில் வலி….காதல் வலிமையானதுதான் .

கவிதாவை  பார்த்து  நெத்தலி சிரிக்க முயற்சித்தான், அவனால் முடியவில்லை, குருதி சிந்திய இடத்தில் மொய்த்த  ஈக்கள்  அவன் உயிர் பிரிவதை  சொல்ல  ,மாப்பிள்ளை தோரணையில் நெத்தலி எங்கே போகிறான்….. மறுபடி வருவான் என கவிதா…. நானும்தான்.

ganesh

1 Comment

  • பாவம் நெத்திலி 😭😭😭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...