இயற்கை எழுதிய கவிதைகளின் எழுத்துப்பிழைகள் – புத்தகவிமர்சனம் | லதாசரவணன்
செவிப்பூக்களைச் சுற்றி ரீங்கரிக்கும்
வண்டுகளாய் சொற்கள் அது சிலநேரம் தேனையும் சில நேரம் நஞ்சையும் உதிர்கிறது. அன்னப்பறவையாய் இனம் காண்பது நமது கைகளில். இயற்கை எழுதிய கவிதைகளின் எழுத்துப்பிழைகள் இந்த கவிதை நூலின் ஆசிரியர் தோழி ஸ்வேதா தனது உள்ளத்தின் வெளிப்பாடாய் அநேக சொற்களில் வாசிக்கும் நமக்கு தேனையும் வாழ்கையில் அவர் சந்தித்த நஞ்சுகளையும் தொகுத்திருக்கிறார்.
ஸ்வேதா சுதாகர் மென்மையான புன்னகைப் போராளி பத்து வருடங்களுக்கும் மேலான நட்பு ஒவ்வொரு நாளிலும் ஏதோ ஒரு புதிய பதிப்பை சுமந்திருக்கும் அவருடைய செயல்பாடுகள். தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் முன்னிருத்திப் பார்க்கும் வலிமை கொண்ட பெண். ஒரு ஆக்கபூர்வமான சிந்தனையாளராக, திறமை வாய்ந்த தொகுப்பாளராக, வழிநடத்தும் தலைமகளாக, சிறந்த நிர்வாகியாக இப்படி பல பரிமாணங்களை ஸ்வேதாவின் உடல்மொழியில் கண்டிருந்தாலும் அவரின் உள்ளக்கிடக்கையின் மொழியாக இக்கவிதை மகளையும் தன்னுள் புதைத்து வைத்திருக்கிறார் என்பது ஆச்சரியம் கலந்த இனிப்பாய் தொண்டைக்குள் இறங்குகிறது.
வாழும் வரை வாழ்க்கை
வெல்லும் வரை தோல்வி
சிரிக்கும்வரை கண்ணீர்
உதிரும்வரை பூக்கள்
மரணம் வரை நட்பு
அதேபோல்தான் மனம் சார்ந்த உணர்வுகளும். அவ்வுணர்வுகளின் தொகுப்புகளைச் சுமந்தது தான் இயற்கை எழுதிய கவிதைகளின் எழுத்துப்பிழைகள்.
மாறுகின்ற அனுபவங்களில் மாற்றமின்றி
மாறிக்கொண்டே இருப்பவை முகங்கள்
என்ற வரிகளை வாசிக்கும் போது தினம் தினம் அவர் சந்தித்த வேதனைகளின் முகப் பிரதிபலிப்புகள் புரிகிறது.
சிறகுகளை இழந்த இதயப்பறவையின் கதறல்களின் மொழியாய் காயங்கள் எனும் தலைப்பில்
வழிநெடுகிலும் காதலின் நேசக்கதறல்கள் மொழியற்ற பார்வையின் பரிமாற்றங்களை இக்கவிதைவரிகளில் உணர முடிகிறது. பேசாத ஒவிய வர்ணங்களின் குழைப்புகள், சாயமிழந்த ஓவியத்தூரிகையின் வைரவரிகளாய் இக்கவிதைத் தொகுப்பினை உணர்கிறேன். அலங்கார வார்த்தைகளைத் தவிர்த்த கவிதையில் ஆர்ப்பரிக்கும் கடலின் சீற்றத்தையும் அது தணிக்கும் தென்றலின் குளுமையும், கடல் சூடிக்கொண்ட சூரிய வெப்பத்தையும் ஒருசேர உணரமுடிகிறது.
நான் நானாக கவிதை வரிகள் தன் சுயத்தை மேன்நோக்கி காட்டும் விதமாய் வரையப்பட்டு இருக்கிறது. நான் முகமூடிகள் அணியாத நானாகவே இருக்க நினைக்கிறேன். அதன் வெளிப்பாடுகள் பற்றி நான் கவலைப்படவில்லை உண்மைச் சிறகைச் சுமந்த ஒற்றைப் பறவையாய் பறப்பதையே விரும்புகிறேன். வழிநெடுகிலும் ரணங்களை மிதித்து நிரந்தரமில்லாத பொழுதுகளில் சுவைத்த மொழிக் கவிதைகள் இவை நிஜம் பேசும் காவிய நினைவுகளாய் நம் கண்களுக்கு முன்னே விரிகிறது
கோடிக்கணக்கான கற்பனைகள்
லட்சக்கணக்கான முயற்சிகள்
ஆயிரக்கணக்கான தோல்விகள்
இருந்தபோதும் ஒரு சில நிஜங்களுடன் நாம் வாழ்கின்ற
இந்த நிகழ்வுக்கு பெயர்தான் வாழ்க்கை
வாழ்க்கை வலி நிறைந்தது என்பது வார்த்தைகளால் வாசிக்க தந்திருக்கிறார் ஸ்வேதாசுதாகர். நாம் வாழ்வின் தேடல்களை உணர்த்தும் வழி மறந்த பாதை இக்கவிதைகளின் வரிகள்.
மெளனமாய் ஒரு உரையாடலில்…. கண்சிமிட்டும் நேரக்கண்ணீர் கசிந்து உறைந்த வார்தைகளை தேங்கிய உதடுகளில்…! அருமையான வார்த்தை பிரயோகம்… கலங்கிய கருவிழிகளை கருவறைச் சிதையோடு ஒப்பீடு அட்டகாசம்.
பிறப்பின் அடையாளம் ….. உப்புத்தண்ணீர் தீர்த்த வயிற்றுப்பசியும், ஓயாமல் மொய்த்த ஏளனப் பார்வைகளையும், கருவறை காகித கோடுகள் என்று தன் பிறப்பை உருவகப்படுத்தும் வரிகளை ரசிக்கும் போது மனம் கனக்கிறது.
ஆர்ப்பரிக்கும் அலைகள் கூட அமைதிதான் என் செவிகளுக்கு ! அச்செவிகள் கேட்ட ஒலிகளின் வீரியத்தை உணர்த்துகிறது அக்கவிதை
காலம் முடியும் வரை
கல்லரை ஒரு நிழல்….! நிழல் கூட இருளில் நம்மைவிட்டு பிரிந்துவிடும். ஆனால் கல்லரை வரையில் ஒருமித்த கருத்துடைய துணையின் தேவையை உணர்த்துகிறது.
துளித்துளியாய் விழுந்த மழை
ஆம் இது என் மழை எனக்கே எனக்கான மழை
என்னை மட்டுமே நனைவிக்கும் மழையாய்…..! உங்களுக்கென்ற இலக்கிய உலகில் ஒரு இடம் உருவாக வேண்டும்
கை தவறி தரையில் உடைந்து
சிதறும் கண்ணாடிக் குடுவையாய் நான்
கண்சிமிட்டும் இலைகள்
என் மேல் விழும் ஆசீர்வாதமாய்…!
இத்தலைப்புகள் தாங்கிய வரிகளை அனுபவித்து படியுங்கள் அத்தனை சாரம் நிரம்பிவழிகிறது. கண்ணாடிக்குடுவையின் நிரப்பப்பட்ட கவிதை பானம் நிச்சயம் நம் தாகத்தை தீர்க்கும்.
நாங்கள்…!
பொம்மைகள் நாங்கள் விடியும் பொழுதுகளுக்காய்
காத்திருக்கும் கனவுகள்
திருநங்கைத்தாய்…
நகர்வு…..கவிதைகளின் வரிகள் நகர முடியாமல் கட்டிப்போடுகிறது. வாழ்க ஸ்வேதாவின் கலைப்பணி இன்னும் நிறைய படைப்புகளை படைக்கட்டும் உங்கள் பேனாவின் நுனி.