“முகவரி தேடும் காற்று” படித்தேன் ரசித்தேன்

  • தலைப்பு: முகவரி தேடும் காற்று
  • ஆசிரியர்: இரஜகை நிலவன்
  • வகைமை: புதினம்
  • பக்கங்கள்: 119
  • விலை: ரூ 140/-
  • வெளியீடு: புஸ்தகா டிஜிட்டல் மீடியா பி. லி., பெங்களூரு .

“முகவரி தேடும் காற்று” எனும் குறும் புதினத்தில், தந்தை ஒருவருக்கும், அவர்தம் மகனுக்கும் இடையில் நடக்கும் உரையாடலின் தொடக்கத்தில் வாழ்க்கையின் வணிகப் பாதை பிரிகிறது. தனித்துவம் வேண்டும் என்று மகனும் தனித்து கையறுநிலை வந்துவிடக்கூடாது மகனுக்கு என்று எண்ணும் தந்தையுமாக மன உணர்வுகள் நிலவுகின்றன. இதனால் வெற்றிப் பாதையில், மகன் முகவரியைத் தேடும் காற்றாகிறான். அந்தக் காற்றின் காரணமானவர் ஆசிரியர் இரஜகை நிலவன் அவர்கள்.

நூலின் முதலில் நம் ஆசிரியர், பாதகாணிக்கையைத் தன் தமக்கைக்குச் செலுத்துகிறார். அடுத்து, பட்டிமன்ற நடுவர், இலக்கியச் சொற்பொழிவாளர் திருமதி ராணி முத்துராஜ் அவர்களும் உதவிப் பொருளாளர், ஆசிரியர் அந்தோணி ஜேம்ஸ் பெலார்மின் அவர்களும் ஆசிரியரை வாழ்த்துகின்றார்கள். அடுத்தது ஆசிரியரின் அகவுரை. இனி, கதைக்குப் போவோம் வாசகர்களே!

“விடாமுயற்சியே விடை கொடுக்கும்; இலக்கின் நோக்கில் வெல்லவும் வைக்கும் என்பதை உணர்த்தும் எழுத்தாக்கம் இக்கதை ஆகும். கதை முழுக்க நாயகன் பரபரப்பாய்ப் பயணிக்கிறான். கதையின் நாயகனைப் போலவே இந்த புதினத்தின் எழுத்தோட்டமும் வேகமாகச் செல்கிறது.

தாய், தந்தை, தங்கை, மைத்துனன் என்று உறவுகளை விட்டு வெளியே வந்து சுழியத்தில் இருந்து தன் சுயத்தை நிரூபிக்கத் தொடங்கவுள்ள நாயகனிடம் இருந்து முதலில் காதலி விலகுகிறாள். காரணம் கையிருப்பு இல்லை! அன்பின் கைவிலங்கால், பிரிவில் பெற்றோர் வாடுகின்றனர். அன்பிலாதவளோ கைவிலங்கென உதறிச் செல்கிறாள்.

பின், நட்பு வட்டத்தின் வழியே பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு, எவ்வாறு தன் தனித்தன்மையில் வியாபாரத்தில் நாயகனாக, தமிழரசு அடைகிறான் என்பதில் கதை விரிகிறது. இளைஞன் ஒருவன் தன் பருவத்தில், கவனக் குவியத்தில், எவ்வகைச் சிதறல் எதிர் வந்தாலும் அவற்றைத் தகர்த்துத் தொடருழைப்பால் உயர்வது அகிலத்தால் பாராட்டப்படுவது ஒன்றாகும். சிந்தையில் பொழுதுபோக்கிற்காக இடம் கொடாமல் காலத்தைக் கனகமாக எண்ணி நேர்மறையில் சென்றால் செல்லுமிடம் யாவும் சிறப்பாகும். அத்தகைய அறம், இக்கதையில், ஆணிவேராக நிற்கிறது என்பதில் மகிழ்ச்சி!

என்னதான், பெற்றோரை விட்டுப் பிரிந்தாலும், தன் தந்தை அவரின் தொழில் வியாபாரத்திற்காக, எப்படிச் சிந்தித்திருப்பார் என்பதையும் மகன் உணர்வது பாராட்டத்தக்கது. இன்றைய காலத்தில், பெற்ற மக்களுக்காக ஓடாகித் தேய்ந்து எல்லாவற்றையும் கொடுத்த பெற்றோர்கள், அதே மக்களுக்காக இறுதியில் உறவையும் துறக்க வைக்கும் நிலைக்குத் தள்ளப்படுவதும் நடந்துகொண்டுதான் உள்ளது. முந்தைய தலைமுறையை இன்றைய தலைமுறை நினைப்பதே பெரிது. கதையில் தமிழரசு நினைக்கும் நிகழ்வு, கவனம் பெறும் வகையில் உள்ளது.

அலுவலக வணிக மொழியான, ஆங்கில வார்த்தைகள், இந்தி வார்த்தைகள், தமிழ் என கலவையான மொழிகளுடன் கதையின் மாந்தர்கள். இவையாவும் எழுத்தாளரின் வாழ்வியல் முறையில் கலந்து விட்ட அனுபவங்களைக் கொண்டு எதார்த்தமாக படைக்கப்பட்டுள்ளது.

தொடர் எழுத்துப் பயணத்தில் இருக்கும் எழுத்தாளர் இரஜகை நிலவன் அவர்கள், மின் வடிவ நூல்களாகவும் அச்சு வடிவங்களாகவும் இதற்கும் முன் 45 நூல்கள் எழுதியுள்ளார். தமிழ்த் தளங்களில் இவரின் எழுத்து என்பது பரவலாக எல்லோராலும் அறியப்பட்ட ஒன்றாகும். இவர், கவிதை, கட்டுரை, சிறுகதை என பலவிதங்களில் பரிமளிப்பவர். இலக்கிய ஆளுமைகளுடன் எப்போதும் தொடர்பில் இருப்பவர் ஆவார்.

இன்னும் இன்னும் எழுதுங்கள் ஆசிரியர் இரஜகை நிலவன் அவர்களே!

எழுத்தின் வழியேவும் அறம் பரவட்டும்! அதன் வழியே உண்மை அன்பு பெருகட்டும்! அதனால் அகிலம் மலர்ந்து சிறக்கட்டும்!

நல்வாழ்த்துகள்!

நெஞ்சார்ந்த வணக்கங்கள்!

மகிழ்வுடன்,

கவிஞர் மாலதி இராமலிங்கம்,

புதுச்சேரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!