முதல் வெற்றி அத்தியாயம் தொடக்கம் – விஜய்

தேர்தல் ஆணையம் நமக்கு விசில் சின்னத்தை ஒதுக்கியதற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை ஒதுக்கியுள்ளது. இது தவெகவின் முதல் வெற்றியாக கருதப்படுகிறது. விசில் சின்னம் வழங்கப்பட்டதற்கு தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கிய பொதுச்செயலாளர் ஆனந்த், விசில் சின்னம் ஒதுக்கியது மகிழ்ச்சி. இது தான் வெற்றி சின்னம். எங்கள் கட்சி தலைவர் சொன்ன அடுத்த நிமிடமே மக்களிடம் சென்று சேர்ந்துவிடும்’ என கூறினார்.

இந்தநிலையில்,

தவெக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில்,

என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் என் அன்பான வணக்கம். தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் முதன்மை சக்தியாகத் திகழும் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அரசியல் வரலாற்றின் முதல் வெற்றி அத்தியாயம் தொடங்கியிருக்கிறது. இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் நம் தமிழக வெற்றிக் கழகத்திற்கான தேர்தல் சின்னத்திற்காக நாம் விண்ணப்பித்திருந்த சின்னங்களில் ஒன்றுதான் விசில். தற்போது தேர்தல் ஆணையம் நமக்கு அந்த விசில் சின்னத்தையே ஒதுக்கீடு செய்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் உங்களோடு பகிர்ந்துகொள்கிறோம். இதற்காகத் தேர்தல் ஆணையத்திற்குக் கழகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

விசில் என்பது மனிதர்களின் ஆனந்த ஆர்ப்பரிப்பின் வெளிப்பாடாக எழும் ஒலி. ஓய்வறியாமல் இலக்கை நோக்கி உழைப்பவர்கள், அவ்விலக்கை அடைந்ததும் குதூகலத்தில் எழுப்பும் பேரொலி. இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில், மக்களின் பாதுகாவலர்கள் கையில் இருப்பதுதான் விசில். அந்த வகையில், விசிலைப் பாதுகாப்பின் அடையாளம் என்றும் குறிப்பிடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, ஆண்கள், பெண்கள் என அனைவரின் உள்ளங்களிலும் உதடுகளிலும் எழும் விசில் ஒலி நேர்மறை நிகழ்வின் குறியீடும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகம் ஈட்டப்போகும் வெற்றியை முன்கூட்டியே கணித்துக் கட்டியம் கூறும் வெகுஜன மக்களுக்கு நெருங்கிய சின்னமான விசில் நமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதே நமக்கான ஊக்கமும் உத்வேகமும் என்பதே இயற்கையும் இறைவனும் நமக்கு அளித்திருக்கும் பரிசு.

நமது சின்னம் விசில்.

நல்லவர்கள் சின்னம் விசில்.

நாடு காப்பவர்கள் சின்னம் விசில்.

ஊழலை ஒழிக்கும் சின்னம் விசில்.

ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஒரே சின்னம் விசில்.

வெற்றிச் சின்னம் விசில்.

வருகிற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம்.

விசில் போடுவோம். என அதில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!