உனை நீங்கியே உயிர் கரைகிறேனே – 14 | சுதா ரவி

 உனை நீங்கியே உயிர் கரைகிறேனே – 14 | சுதா ரவி

அவரின் அருகில் சென்று அமர்ந்த ராஜி” இந்த வயசில் அப்படி தான் எல்லாத்துக்கும் ஆசைப்படுவாங்க நாம தான் அவங்களுக்கு புரியிற மாதிரி எடுத்து சொல்லணும்…அதுவும் பெண்களுக்கு அப்பா சொன்னா நல்லா புரிஞ்சுக்குவாங்க”

“இல்ல ராஜி நீ சில விஷயங்களில் தப்பா முடிவெடுக்கிற,நம்ம பேச்சை கேட்டு நம்ம பசங்க நடக்கிறாங்க..அப்போ நாம என்ன செய்யணும் அவங்களுக்காக ஒரு சில சின்ன விஷயங்களை விட்டுக் கொடுத்து சந்தோஷப்படுத்தணும்.”

“நீங்க சொல்றது எல்லாம் சரி தான்…….ஆனா சின்ன ஆசைக்காக நம்ம பசங்களோட பாதுக்காப்பை நாம விட்டுக் கொடுக்க முடியுமா சொல்லுங்க?”

“ஏன்மா இதை போய் இவ்வளவு பெரிய விஷயமா பார்க்கிற.காலேஜில் கூட்டிட்டு போக போறாங்க..அதுவும் காலையில் போயிட்டு சாயங்காலம் வீடு திரும்பிட போறாங்க.பசங்க மட்டும் போகல கூடவே ப்ரோபாசர்களும் போறாங்க அப்புறம் என்ன பயம்.”

“எனக்கு பொண்ணை இப்படி தனியா அனுப்புறது பிடிக்கலைங்க.”

“இல்லம்மா..நீயே யோசிச்சு பாரு இத்தனை நாளும் அவ டான்ஸ் ஆடினா திட்டுவே அதுவும் மேடையில போய் ஆடக் கூடாதுன்னு சொல்வே…ஆனா அவ காலேஜ்ல போய் ஆடுறதுக்கு அனுமதி கொடுத்தே…அன்னைக்கு அம்முவோட முகத்தை பார்த்தியா..எப்படி துள்ளி குதிச்சா.”

“ஆமாங்க………அன்னைக்கு அவளுக்கு அப்படி ஒரு சந்தோஷம்…..ஆனா எனக்குள்ள பயம் உங்களுக்கே தெரியும் அதனால தான் மறுத்தேன்….அவ அத்தையோட வாழ்க்கையில் நடந்த மாதிரி இந்த டான்ஸ்சினால ஏதாவது பிரச்சனை ஏற்படுமோன்னு பயந்து தான் வேண்டாம்ன்னு சொன்னேன்.”

“எனக்கும் உன் பயம் புரியாமல் இல்ல..எல்லோருடைய வாழ்க்கையும் ஒரே மாதிரி போகாது.ஆனா அவளோட சந்தோஷத்தையும் கொஞ்சம் நினைச்சு பாருன்னு தான் சொல்றேன்…….இந்த கல்லூரி பருவம் தான் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய நேரம். படிச்சு முடிச்சு கல்யாணம் பண்ணி போயிட்டா இதெல்லாம் கிடைக்கவே கிடைக்காது…”

மணியின் பேச்சில் சற்று மனதை சமாதானப்படுத்திக் கொண்டவர்” என்னமோ போங்க.உங்க பொண்ணுக்கு நல்லா காரியத்தை சாதிக்கிற திறமை இருக்கு.உங்க கிட்ட சொல்லிட்டு அவ நிம்மதியா இருக்கா.நீங்களும் அவளுக்காக வேண்டி என் கிட்ட எவ்வளவு பேசி சம்மதம் வாங்குறீங்க.நல்ல அப்பா நல்ல பொண்ணு”என்று கூறி மறைமுகமாக தன் அனுமதியை வழங்கினார்.

அவள் அனுமதி கொடுத்து விட்டாள் என்பதில் மகிழ்ந்து போனவர்” நீ சம்மதிச்சிட்டேன்னு நானே என் பொண்ணு கிட்ட சொல்றேன்.நீ எப்பவும் போல இருந்து அவ எப்படி சந்தோஷப்படுரான்னு பாரு.”

மணியின் முகத்தை பார்த்த ராஜி” அவ மகிழ்ச்சியை விட உங்க முகத்துல ஒரு வெளிச்சமே தெரியுதே”என்று கேலி செய்தார்.

அதை ஆமோதித்தவர்” உண்மை தான்……..தான் பெத்த பொண்ணு சந்தோஷத்தில் குதிப்பதை பார்க்க எந்த தகப்பனுக்கு தான் பூரிப்பு வராது…”

“சரி சரி படுங்க.விட்டா உங்க பொண்ணு கிட்ட இப்போவே போய் சொல்லிடுவீங்க போல இருக்கு”என்று கேலி செய்தார் ராஜி.

மறுநாள் காலை இருவரும் பேசி வைத்துக் கொண்டது போல் அவரவர் வேலையில் ஈடுபட அம்முவுகோ இன்றைக்காவது அம்மா சரி என்று சொல்ல மாட்டாரா என்று அவ்வப்போது அவர் முகத்தை பார்த்துக் கொண்டே தன் வேலைகளை செய்து கொண்டிருந்தாள். நடக்கும் நாடகத்தை ஹாலில் அமர்ந்து கையில் நாளிதழால் முகத்தை மறைத்துக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் மணி. மகளின் நடவடிக்கை மனதிற்குள் சிரிப்பை

வரவழைக்க செய்தியை பார்க்கும் சாக்கில் குனிந்து சிரித்துக் கொண்டார். இப்படியே ஒரு அரை மணி நேரம் தொடர ராஜிக்கு ரெண்டு நாள் கழித்து தங்கள் சொந்தத்தில் நடக்க இருக்கும் நிச்சயதார்த்தம் நினைவுக்கு வர உடனே மகள்களை அழைத்து” அம்மு, மித்து நாளான்னைக்கு நம்ம ரகு மாமா வீட்டு நிச்சயம் இருக்கு அதுக்கு நீங்க என்ன உடுத்திக்கனுமோ அதை சாயங்காலம் எடுத்து வச்சிடுங்க….அப்போ தான் என்ன இருக்கு இல்லைன்னு தெரியும்…….கடைசி நிமிஷத்தில தேடாம இருக்கலாம்”என்றார்.

அவர் சொன்னதை கேட்டு மித்து தலையாட்டிக் கொண்டு அங்கிருந்து செல்ல, அம்முவோ ராஜி சம்மதிக்காத வருத்தத்தில் இருந்தவள்” நான் வரலம்மா வீட்டுலேயே இருந்துக்கிறேன்.நீங்க போயிட்டு வந்துடுங்க” என்றாள்.

அம்முவின் பதிலில் கடுப்பானவர்” அறைஞ்சிடுவேன் ராஸ்கல்!என்ன நான் உன்னோட டூருக்கு சம்மதிக்கலேன்னு வர மாட்டேன்னு சொல்றியா?”

அவரின் கோபத்தில் பயந்து போனவள் மெல்லிய குரலில்.” எனக்கு படிக்க வேண்டியது இருக்கு அது தான் சொன்னேன்” என்றாள்.

“இப்போ உனக்கு எக்ஸாமா நடக்குது?”

“இல்லம்மா…ஆனா படிக்கணும்…..”

“அதெல்லாம் வந்து படிச்சுக்கலாம்….எல்லோரும் ஒண்ணா போயிட்டு உன்னையும் மித்ராவையும் மட்டும் சீக்கிரம் வீட்டுக்கு அனுப்பி விட்டுடுறேன்…வந்து படி”என்றார் முடிவாக.

அவளுக்கிருந்த மனநிலையில் நிச்சயாதார்த்திற்கு போக மனமில்லாமல் மீண்டும் மறுக்க…….ராஜி ஆடி தள்ளி விட்டார். இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மணி இனியும் பேசாமல் இருந்தால் நல்லதில்லை என்று சொல்லி அவர்கள் இருவருக்கும் இடையே புகுந்து சமாதான தூதுவர் வேலையை பார்த்தார். மகளும் பிடிவாதமாக இருக்க மனைவியும் கோபத்துடன் இருக்க அவரின் நிலை தான் மோசமாக இருந்தது. பின்னர் சற்று யோசனை செய்து விட்டு பெண்ணை தனியே அழைத்து போய் ராஜி

டூர் போவதற்கு சம்மதித்ததை சொல்லி நிச்சயத்திற்கு வர ஒத்துக் கொள்ளும்படி கூறினார். அதில் சந்தோஷமடைந்தாலும் சற்று தயங்க…மணி தானே அவளை சீக்கிரம் அழைத்துக் கொண்டு வந்து வீட்டில் விடுவதாக ஒத்துக் கொண்ட பின் தன் சம்மதத்தை தெரிவித்தாள்.

மணி பெண்ணை சம்மதிக்க வைத்ததை பார்த்த ராஜி” இருந்தாலும் பொண்ணுக்கு ஓவரா தான் இடம் குடுக்குறீங்க……..இவளும் ரொம்ப தான் ஆடுறா” என்றார்.

“இப்போ அதெல்லாம் எதுக்கு…நேரமாச்சு பாரு….நீ போய் கிளம்புமா என்று மனைவி மகள் இருவரையும் விரட்டி அனுப்பி விட்டு தானும் வேலைக்கு கிளம்பினார்.

இரு நாட்களுக்கு பிறகு வீட்டில் அனைவரும் நிச்சயத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்தனர். அம்முவிற்கோ ஒரு வாரமாக அவளின் பீகேயை பார்க்காமல் மனது தவிப்புடன் இருந்தது. அடுத்த நாள் வேறு பிச்சாவரதிற்கு தோழிகளுடன் முதல் முறையாக அம்மா அப்பாவை விட்டுவிட்டு வெளியில் செல்கிறோம் என்கிற ஆர்வமும் இருந்தது. அதை அவனிடத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தால் அவனை பார்க்க முடியாமலேயே போனது. இன்று அவன் வருவான் என்று மனது சொல்ல அதனாலேயே நிச்சயத்திற்கு போகாமல் இருக்க முயற்சிகளை செய்தாலும் அன்னையின் கண்டிப்பில் வேறு வழி இல்லாமல் கிளம்பினாள்.

கரும் பச்சையில் சிவப்பு பார்டர் போட்ட புடவையை உடுத்தி அதற்கேற்றார் போல் சிவப்பு கல் ஜிமிக்கி காதுகளில் ஆட ,சிவப்பு அட்டிகை கழுத்தை அலங்கரிக்க, கைகளில் சிவப்பு நிற வளையல்கள் போட்டு தலையில் மல்லிகை பூவை சூடி அவள் அவனது நின்றதை பார்த்த மணி மகளின் அழகில் ஆனந்தம் அடைந்தார் . அனைவரும் கிளம்பி நிச்சயம் நடக்கும் இடத்திற்கு சென்று விழாவில் கலந்து கொள்ள உத்ராவோ நகத்தை கடித்தபடி எவரிடமும் பேசாமல் எப்பொழுது வீட்டிற்கு போகலாம் என்று அமர்ந்திருந்தாள்.

அதை பார்த்த ராஜி அவளை விரட்டி எல்லோருடனும் கலந்து கொள்ள செய்தார். அவளும் நிச்சயம் முடியும் வரை தவிப்புடனே அமர்ந்திருந்தவள் உடனே ஓடி சென்று முதல் பந்தியிலேயே உணவை முடித்துக் கொண்டு அம்மாவிடம் சென்று நின்றாள். “அம்மா நான் இப்போ வீட்டுக்கு போகலாமா?”

அவளை மேலும் கீழும் பார்த்தவர்…….” இன்னைக்கு என்னவோ சரியில்லை நீ……..சரி சாப்பிட்டியா?”

அவர் கேட்டதும்……..”ம்ம்..அதெல்லாம் சாப்பிட்டுட்டேன்மா….அப்பாவை கொண்டு விட சொல்றீங்களா?”

அவளை சந்தேக கண்ணோடு பார்த்த்துக் கொண்டே மணியை அழைத்து அவளை வீட்டில் கொண்டு விட சொன்னார். “அப்படியே மித்ராவையும் கூப்பிடுங்க, வந்தா அழைச்சிட்டு போங்க……இவ மட்டும் தனியா இருக்கிறதுக்கு அவளும் துணைக்கு இருப்பா இல்ல.”

மித்ராவை அழைக்க அவளோ தன் வயது உறவு பெண்களிடம் சலசலத்துக் கொண்டிருந்தவள் மறுத்து விட உத்ராவை மட்டும் அழைத்துக் கொண்டு சென்று வீட்டில் விடுகிறார். அவளை வீட்டில் விட்டு விட்டு கதவை திறந்து விட வேண்டாம் யார் வந்து தட்டினாலும் நாங்கள் வரும்போது குரல் கொடுத்தால் மட்டுமே திறக்க வேண்டும் என்று அறிவுரையை கொடுத்து விட்டு சென்றார்.

அவர் சென்றதும் அவசரமாக மாடிக்கு ஓடியவள் கதவை திறந்து கொண்டு வெளியில் சென்று கைப்பிடிச் சுவரோரம் போய் நின்று விஸ்வாவின் வீட்டை பார்த்தாள். பின் மாடி எங்கும் நடந்து அவன் எங்காவது தென்படுகிறானா என்று பார்த்தவளுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. அத்தனை நேரம் இருந்த தவிப்பு மாறி தன்னுடைய உடமையை இழந்து தவிக்கும் குழந்தை போல் முகத்துடன் கைப்பிடி சுவற்றில் சாய்ந்து நின்று இருட்டை வெறித்து பார்த்தபடி நின்றாள். ஒரு வாரமாக அவனை காணாது ஏக்கம் கொண்ட மனதில் துயரத்தின் சாயல் படிந்தது. தன் மனதில் உள்ளவற்றை அவனிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று எண்ணி காத்திருந்தவளுக்கு ஏமாற்றம்

(தொடரும்)

அத்தியாயம் – 1 | அத்தியாயம் – 2 | அத்தியாயம் – 3 | அத்தியாயம் – 4 | அத்தியாயம் – 5 | அத்தியாயம் – 6 | அத்தியாயம் – 7 | அத்தியாயம் – 8 | அத்தியாயம் – 9 | அத்தியாயம் – 10 |அத்தியாயம் – 11 |அத்தியாயம் – 12 | அத்தியாயம் – 13 | அத்தியாயம் – 14 |

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...