நீயெனதின்னுயிர் – 15 | ஷெண்பா

 நீயெனதின்னுயிர் – 15 | ஷெண்பா

“அம்மா! சமோசா கோல்டன் பிரவுன் வந்ததும் எடுங்க… வெள்ளையா இருந்தா விக்ரம் சாப்பிடமாட்டார்… டீயில் அரைச் சர்க்கரை போட்டால் போதும்மா. அது தான் அவருக்குப் பிடிக்கும்” என என்றுமில்லாத திருநாளாக சமையலறையில் நின்றபடி ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டிருந்த மகளைக் கவனித்துக் கொண்டே இருந்தார் தேவிகா.

மகளது செயல்கள் அவருக்குச் சற்று வியப்பாக இருந்தாலும், அது தேவிகாவிற்கு பிடித்தே இருந்தது. காலையிலிருந்து அவரது தோழிகள் மாற்றி மாற்றி ஃபோன் செய்து, “விக்ரம் குமாரை உன் மகளுக்குத் தெரியுமாமே…!” என்று ஆரம்பித்து, விக்ரம் மற்றும் அவனது பெற்றோரைப் பற்றித் தாங்கள் அறிந்த, கேட்ட விஷயங்களைச் சொல்லச் சொல்ல, தேவிகா பூரித்துப் போனார்.

ஒரே நாளில் தான் அனைவருக்கும் முக்கியமான வளாக ஆனதில் அவருக்கு மனம் கொள்ளா சந்தோஷம். ‘விக்ரம் தங்கள் வீட்டிற்கு மருமகனாக வந்துவிட்டால் போதும்’ என்று ஒருபடி மேலாகவே ஆசைப்பட்டார்.

அதேநேரம், ‘தன் கணவர் இதற்குச் சம்மதிப்பாரா?’ என்ற சந்தேகமும் சேர்ந்தே தோன்றியது. மறுகணமே அவரை எப்படியும் வழிக்குக் கொண்டு வந்து விடலாம் என்ற நம்பிக்கையும் மனத்தில் எழுந்தது. மகளது நல்வாழ்க்கைக்கு நிச்சயம் குறுக்கே நிற்கமாட்டார் என்று சமாதானமும் சொல்லிக்கொண்டார். ஆனால் வைஷாலி?

திடீரென தேவிகாவிற்கு, ‘நான் நினைப்பது போலவே மகளும் நினைக்க வேண்டுமே… இல்லை, நான் சாதாரணமாகத் தான் பழகினேன் என்று சொல்லி விடக்கூடாதே!’ என்ற பயம் உதயமாக அமைதியாக ஒரிடத்தில் அமர்ந்து விட்டார்.

முன்தினம் நடந்தது அனைத்தையும் ஒருமுறை மனத்திரையில் ஓடவிட்டு அவற்றை அலசி ஆராய்ந்தார். ‘தன் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் எதுவும் இல்லை’ என்று தெளிவடைந்தார்.

மேலும், ‘வைஷாலி புத்திசாலி. நிச்சயமாகத் தன் வாழ்க்கையின் முக்கியமான கட்டத்தில் தவறு செய்யமாட்டாள்’ என்ற அபரிமிதமான நம்பிக்கையுடன், தன் வேலையில் மூழ்கினார்.

“அம்மா!” என்று பெருங்குரலில் அழைத்தபடி சமையலறைக்குள் நுழைந்த மகளை அன்புடன் பார்த்தார்.

“என்னடா கண்ணம்மா!” என்ற அன்னையை ஆச்சரியத்துடன் பார்த்தாள்.

“எதுக்கு இப்படிக் காட்டுக்கத்தல் கத்தற’ என்று தான் பேசியதற்கு மேல் உரக்கப் பேசும் அன்னையா இது? இது நிஜமா’ என்று நினைக்கும் போதே, இது நிஜமே தான் என்று சொல்வது போல, தேவிகா சமோசாவை எண்ணையில் போட்டதும் ஒரு துளி எண்ணைய் தெறித்து, வைஷாலியின் முழங்கையில் பட்டது.

அந்த எரிச்சலில், “ஸ்… ஆ!” என்று அலறினாள்.

“அச்சச்சோ! கைல பட்டுடுச்சா! சாரிடா” என்று சிங்க் குழாயைத் திறந்து வைஷாலியின் கரத்தில் நீர் படும்படிச் செய்தார். “இரு நான் ஆயின்மெண்ட் எடுத்துட்டு வரேன்…” என்று பதறிய அன்னையைப் பாசத்துடன் அணைத்துக் கொண்டாள்.

“சின்ன காயம்தாம்மா… நத்திங் டூ வொர்ரி…” என்று புன்னகைத்த மகளைப் பார்த்தவரின் மனம் சமாதானமாகவில்லை.

“ரிலாக்ஸ்ம்மா. நான் மருந்து போட்டுக்குறேன்” என்றவள், “இப்போதான் நான் அப்பாவுக்கு ஃபோன் செய்து நினைவு படுத்தினேன். இன்னும் இருபது நிமிஷத்துல வந்திடுறேன்னு சொல்லியிருக்காங்க. விக்ரம் ரொம்ப பங்க்சுவல் ஐந்து மணிக்கு வரேன்னு சொன்னால் சரியா வந்திடுவார். நீங்க சீக்கிரம் தயாராகுங்க. நானும் தயாராகுறேன்” என்று சொல்லிவிட்டுச் செல்லும் மகளை ஆதூரத்துடன் பார்த்தார்.

‘ஊர்க் கண்ணே என் குழந்தை மேலதான்… இன்னைக்கு சுத்திப் போடணும்’ என்று நினைத்துக் கொண்டே, வேலைகளை விரைந்து முடிக்க ஆரம்பித்தார்.

சுவர் கடிகாரத்தில் பெரிய முள் பன்னிரெண்டைத் தொட்டு, மணி ஐந்து என்று அறிவிக்கவும், விக்ரமின் கார் வாசலில் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

கேட்டைத் திறக்கும் சப்த கேட்டதும், எட்டிப் பார்த்தவள், “அம்மா, அவர் வந்தாச்சு” என்று குரல் கொடுத்துவிட்டு, “வாங்க சார்” என்று சொல்லிக் கொண்டே அவனை நோக்கிச் சென்றாள்.

நிதானமான நடையுடன் வந்தவன், “ஹாய் ஷாலு! என்ன ரொம்ப தடபுடல் செய்துட்டீங்களா? வாசனை இங்கே வரைக்கும் வருதே” என்றான் புன்னகையுடன்.

“ஸ்பெஷல்லாம் ஒண்ணுமில்லை” என்று புன்னகைத்தாள்.

“வாங்க தம்பி!” என்ற தேவிகாவிற்கு சொன்னபடியே வந்துவிட்டானே என்ற சந்தோஷம் வார்த்தைகளிலேயே வெளிப்பட்டது.

“உட்காருங்க…” என்றவர், “மன்னிக்கணும், வைஷூ வோட அப்பாவுக்கு கிளம்பற நேரத்தில் திடீன்னு ஒரு மீட்டிங் அட்டெண்ட் பண்ணியாக வேண்டிய சூழ்நிலை… தப்பா எடுத்துக்காதீங்க” என்றார் தேவிகா.

“எனக்கும் அங்கிள் எஸ்.எம்.எஸ் அனுப்பி இருந்தாங்க. ஆனால், இதெல்லாம் சகஜம். பதவி உயர உயர பொறுப்பு அதிகம் தானே. இப்போ எனக்கே முக்கியமான வேலை வந்திருந்து, நான் வரமுடியாமல் போயிருந்தால் நீங்க புரிஞ்சிக்க மாட்டீங்களா!” என்றான் இலகுவாக.

தேவிகா ஆமென்பது போலப் புன்னகையுடன் தலையசைத்தார்.

ஹாலை பார்வையால் அளந்தவன், “வீட்டை ரொம்ப அழகா வச்சிருக்கீங்க ஆன்ட்டி” என்றான் பாராட்டுதலாக.

“எங்க அம்மா சகலகலா வல்லி! சமையல், ஆர்ட் ஒர்க், பஜனைன்னு எந்த செக்மெண்ட் போனாலும் கலக்கிடுவாங்க” என்றபடி தண்ணீருடன் வந்தவள், “எடுத்துக்கோங்க” என்று அவனிடம் டிரேயை நீட்டினாள்.

“ஓ! அப்படியா, எங்க அம்மாவும் ரொம்ப நல்லா சமைப்பாங்க” என்றான்.

“வைஷூ, நீ தம்பியை பின்னால இருக்கும் லானுக்கு கூட்டிட்டுப் போ… நான் ஸ்நாக்ஸ் எடுத்துட்டு வரேன்” என்றார் தேவிகா.

“வாங்க சார்! எனக்கு எங்க வீட்டிலேயே ரொம்ப பிடிச்ச இடம் என் ரூம் பால்கனியும், இந்த லானும் தான். பெரும்பாலும் வீட்டின் முன்பக்கம் தான் லான் வைப்பாங்க. எங்க அப்பாவுக்குக் கொடுத்திருக்கும் கம்பெனி வீட்டில் பின்பக்கமா வச்சிருக்காங்க” என்று சிரித்தபடி, வீட்டின் பின்புறம் அழைத்துச் சென்றாள்.

தோட்டத்தில் இறங்கியவன், “வாவ்! அருமையாக இருக்கு. முன்பக்கம் இருந்திருந்தால் நாம உட்கார்ந்திருப்பதெல்லாம் வெளியே இருக்கவங்களுக்குத் தெரியும். பட், பின்புறமா இருக்கறது ரொம்பவே நல்லா இருக்கு. நாம ரிலாக்ஸ்டாக இருக்கலாம்” என்றான்.

டைனிங் ஹாலிலிருந்து தேவிகா அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். ‘விக்ரமின் தோற்றப் பொறுத்தத்திற்குச் சற்றும் சளைத்தவள் அல்ல தங்கள் மகள்’ என்ற கர்வம் அவரது முகத்தில் எட்டிப்பார்த்தது. ருத்ரா பின் தொடர புன்னகையுடன் அவர்கள் இருந்த இடத்திற்குச் சென்றார்.

“என்ன வைஷூ! தம்பியை நிற்க வச்சே பேசிட்டு இருக்க. நிதானமா உட்கார்ந்து பேசக்கூடாதா!” என்றார்.

“பரவாயில்லை ஆன்ட்டி… எப்பவும் உட்கார்ந்து பார்க்கும் வேலை தானே செய்யறேன். எனக்கு நிற்பதே நல்லாயிருக்கு” என்றவனுக்குப் பாதாம் அல்வாவும், சமோசாவும் இருந்த தட்டை எடுத்துக் கொடுத்தாள் வைஷாலி.

“விக்ரம் சார்! எங்க வீட்டில் இருக்கும் நாலாவது ஆளை உங்களுக்கு அறிமுகப்படுத்தலையே… இவள் தான் ருத்ரா. எனக்கு மட்டும் ருத். எனக்குக் குட்டித் தங்கை மாதிரி” என்று வீட்டில் வேலை செய்யும் ருத்ராவை அறிமுகப்படுத்தினாள்.

“ஹலோ!” என்று விக்ரம் இயல்பாகச் சொல்ல, “வணக்கம்” என்றவள் கூச்சத்துடன் உள்ளே ஓடிவிட்டாள்.

சிரித்த வைஷாலி, “ரொம்ப நல்ல பொண்ணு. படிக்கணும்னு ஆசை; ஆனால், வசதி இல்லை. டென்த் வரைக்கும் முடிச்சிருக்கா. மூணு வருஷம் ஆகுது. வேலைக்கு வந்தவளை, இப்போ அப்பாதான் படிக்க வைக்கிறாங்க. இந்த வருஷம் பிளஸ் டூ எழுதறா” என்று அவளைப் பற்றிச் சிறு அறிமுகம் செய்தாள்.

“ரொம்ப நல்ல விஷயம். ஒருத்தருக்குக் கல்வி கொடுக்கறது பெரிய புண்ணியம். ருத்ரா காலேஜில் படிக்க ஆகும் செலவை நம்ம டிரஸ்ட் மூலமா ஏற்பாடு செய்யலாம் ஷாலு…” என்றதும், அவனது பெயர்ச் சுருக்கத்தைக் கேட்ட தேவிகா மனத்திற்குள் சிரித்துக் கொண்டார்.

“ரொம்ப தேங்க்ஸ் சார்!” என்று மகிழ்ச்சியுடன் சொன்னாள்.

மூவரும் பேசிக்கொண்டிருந்தனர். மொபைலை எடுத்து தனது அம்மாவை அழைத்தவன், “ஆன்ட்டி! அம்மா உங்ககிட்ட பேசணும்னு சொன்னாங்க… பேசுங்க” என்று மொபைலைக் கொடுத்தான்.

தேவிகாவிற்கு, சற்றுப் படபடப்பாகிப் போனது. தயக்கத்துடனேயே போனை வாங்கியவர், “ஹலோ, வணக்கம்மா” என்றார்.

“நல்லாயிருக்கீங்களா தேவிகா…” என்று அன்பைக் கொட்டி வந்த வார்த்தையில் தன்னை மூழ்கடித்துக் கொண்டார் தேவிகா.

வைஷாலியைப் பற்றி விசாரித்த செந்தளிர், அவளையும் அழைத்து இரண்டு வார்த்தைகள் பேசினார். அவள் தன் அன்னையிடம் பேசும் அழகைக் கணகளில் நிறைத்துக் கொண்டான். இருவரையும் கவனித்த தேவிகாவிற்கு அப்படி இப்படி என்று இருந்த சந்தேகமும் சுத்தமாக தீர்ந்து போனது.

“அம்மா, ஆன்ட்டி உங்ககிட்ட பேசணுமாம்’ என்று போனை தன் அம்மாவிடம் கொடுத்தாள்.

செந்தளிர் சொன்னதைக் கேட்ட தேவிகா, “வீட்டுக்குத் தானே கட்டாயம் வரோம். இந்த ஞாயிற்றுக் கிழமை முடியுமான்னு தெரியலை. இவங்க அப்பா வந்ததும் பேசிட்டு நாளைக்குச் சொல்றேனே” என்றார் தேவிகா.

“அப்படியே செய்ங்க தேவிகா. திங்கட் கிழமை விக்ரம் பூனா கிளம்பிடுவான்… அதான் அவன் இருக்கும் போதே வந்தால் நல்லா இருக்கும்ன்னு நினைத்தேன். எனக்கும் வைஷாலியைப் பார்க்கணும் போல இருக்கு” என்றார் ஆசையுடன்.

தேவிகாவிற்கு சந்தோஷமாக இருந்தது. “கட்டாயம் இவங்க அப்பாவிடம் பேசி நல்ல பதிலாவே சொல்றோம்” என்று மலர்ந்த முகத்துடன் போனை வைத்தார்.

“சார், எங்களைப் பத்தி உங்க வீட்டில் சொல்லியிருப்பீங்கன்னு நினைக்கவேயில்லை” என்று ஆச்சரியம் விலகாமல் சொன்னாள் வைஷாலி.

“உன்னை என்னைக்கு சந்திச்சேனோ அன்னைக்கே சொல்லிட்டேன்…” என்றான்.

“ஓ! நீங்க அம்மா பையனா…” என்று கேட்டாள்.

“நான் ரெண்டு பேருக்குமே செல்லப் பையன்” என்றவன், “ஓகே ஆன்ட்டி, நான் கிளம்பறேன். அங்கிள் கிட்ட பேசுங்க. அம்மா உங்களையெல்லாம் பார்க்க ரொம்ப ஆவலா இருக்காங்க” என்றவனின் பார்வைக் கடைசி வாக்கியத்திற்கு வைஷாலியை ஸ்பரிசித்துவிட்டு மீண்டது.

“நிச்சயம் சொல்றேன் தம்பி. நீங்க ரத்னகிரி வரும் போது நம்ம வீட்டுக்கும் ஒரு எட்டு வந்திட்டு போங்க” என்றவருக்குப் புன்னகையைப் பதிலாக்கிவிட்டு, வைஷாலியின் பக்கமாகத் திரும்பினான்.

தேவிகா, பாத்திரங்களை எடுத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தார். தேவிகாவின் குறிப்பறிதலை, வைஷாலி உணர்ந்தாளோ இல்லையோ! விக்ரம் அறிந்து கொண்டான்.

புன்னகையுடன், “கிளம்பறேன் ஷாலு. நேரம் கிடைச்சா, ஒரு போனோ மெயிலோ பண்ணு. நீ வருவதை கன்ஃபார்ம் செய்து சொன்னால் சீமாவை வரச் சொல்றேன் அவளும் உன்னைப் பார்க்கணும்னு சொல்லிட்டு இருந்தா” என்றான்.

“சொல்றேன் சார். எங்க வார்த்தைக்கு மதிப்புக் கொடுத்து வீட்டுக்கு வந்ததற்கு ரொம்ப தேங்க்ஸ்” என்றாள்.

“அம்மா பெரிய மனுஷி, நான் யாரோ அன்னியன் இல்லை. என்னைக்குமே…” ‘உன் விக்ரம் தான்’ என்று சொல்ல வந்த வார்த்தையைக் கட்டுப்படுத்திக் கொண்டு, “உன் வெல் விஷர் தான்” என்றான்.

மலர்ந்த முகத்துடன் தலையசைத்தவளை கண்களில் நிறைத்துக் கொண்டு, அவள் தங்கள் வீட்டிற்கு வரும் நாளுக்காக, ஆவலுடன் காத்திருந்தான்.

(தொடரும்)

அத்தியாயம் – 1 | அத்தியாயம் – 2 | அத்தியாயம் – 3 | அத்தியாயம் – 4 | அத்தியாயம் – 5 | அத்தியாயம் – 6 | அத்தியாயம் – 7 | அத்தியாயம் – 8 | அத்தியாயம் – 9 | அத்தியாயம் – 10 | அத்தியாயம் – 11 |அத்தியாயம் – 12 |அத்தியாயம் – 13 |அத்தியாயம் – 14 | அத்தியாயம் – 15 |

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...