விலகாத வெள்ளித் திரை – 7 | லதா சரவணன்

 விலகாத வெள்ளித் திரை – 7 | லதா சரவணன்

நெற்றியில் பளிரென்ற விபூதித் தீற்றலுடன் வெள்ளை வேட்டி சட்டையில் முழு கம்பீரம் தெறிந்தாலும் இளைஞன் என்று கங்கணம் கட்டிச் சிரித்தது அவனின் குறும்பு விழிகள். அமர்ந்திருக்கும் தோரணையிலே சிறுவயது பாட்டிகதையின் ராஜகுமாரனை நினைவூட்டினான். ஒருவரையொருவர் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்ததை கண்ட வேலம்மாவிற்கு மகிழ்ச்சி கரை புரண்டு ஓடியது ஆத்தா கண்ணைத் தொறந்து விட்டியே, இந்த பையனுக்கு என் பொண்ணை பிடித்து விட்டது போல வேஷம் மட்டும் கட்டட்டும் உனக்கு 101 தேங்காய் உடைக்கிறேன். மனதிற்குள்ளேயே வேண்டிவிட்டு, “ஏண்டி தம்பிக்கு தாக சாந்திக்கு காப்பிதண்ணிய கொடுக்கச் சொன்னா மரம் மாதிரி நிக்கறியே ?!” மகளை நெட்டித் தள்ளியதில் அவள் கையில் இருந்த காபியில் சில துளிகள் சுதந்திரமாய் அவன் வேட்டியில் கோலமிட்டது.

“சின்னபொண்ணு பாருங்க எல்லாத்திலேயேயும் விளையாட்டுதான். கும்பகோணத்திலேயே தாராசுரத்தில் அவளுக்கு பாட்டு டான்ஸூ எல்லாம் கத்து கொடுத்திருக்கிறேன் டீ வேணி சும்மா ஒரு இரண்டு வரி பாடிக் காட்டேன்!”

“அம்மா…?”!

“கூறுகெட்டவளே தம்பி என்ன அந்நியமா ? பாடு…. அப்பறம் எதுவும் புரியாத பாஷையில் கீர்த்தனை பாடாதே இந்த பராசக்தி படத்திலே பண்டரிபாய் பாடுவாங்களே அதப்பாடு!” கண்ணன் காப்பியை ஒரு மிடறு விழுங்கிவிட்டு ஒரக் கண்ணாலேயே அவளின் அவஸ்தையை உணர்ந்தவன் போல, “அதெல்லாம் வேண்டாம்மா ராமதுரை இல்லீங்களா ?” என்றான்.

“இப்ப வந்திடுவாங்க அண்ணாச்சி அவங்க சம்சாரத்துக்குப் பிரசவம் அதான் மாமியா வீட்டுக்கு விடப் போயிருக்காரு வர்ற நேரந்தேன். நீங்க வருவீங்கன்னு என்கிட்டே சொல்லிட்டுதான் போனான். அவரு எனக்கு ஒண்ணுவிட்ட அண்ணன்தான். நம்ம பொண்ணுக்கு நீங்க மட்டும் சான்ஸூ கொடுத்தீங்கன்னா ஒரு ரவுண்டு வந்திடுவா. ஆட்டத்திலே திருவிதாங்கூர் சகோதரிகளையே மிஞ்சிடுவா ஆடச் சொல்லடூங்களா ? நேரம் போகுது சீக்கிரம் பாடித் தொலை!” என்று மகளைப் பார்த்துக் கண்களை உருட்டினாள் வேலம்மா.

கண்ணன் அந்த பெண்மணியின் கண்களில் வழிந்த பேராசையைக் கண்டு தயங்கி நின்றிருந்த வேணியை நோக்கினான். அவளும் நான்கு வரிகளில் பாடிட, பாட்டின் முடிவில் தம்பிக்கு “பிடிச்சிருக்கல்ல …..!”

வேணிக்கு கோபம் வந்தது “இவனென்ன மாப்பிள்ளையா ? பிடிச்சிருக்கா இல்லையான்னு ?” இந்த அம்மாவிற்கு விவஸ்தையே இல்லை இன்னும் எத்தனை நாள் இந்த வேதனையெல்லாம் நான் அனுபவிக்கணுமோ. ஒருவேளை இவனே மாப்பிள்ளையானால் என்ற யோசனையில் அவன் தன்னைக் கண்டுகொண்டானோ என்று தன் முகத்தையே பார்த்திருந்தவனைப் பற்றி எண்ணினாள்.

போன வாரம் வாத்தியாரின் தம்பிக்கு பெண்பார்க்கப் போனபோது இப்படித்தான் அந்த பெண்ணை ஆடியும் பாடியும் காட்டச் சொன்னார்கள் பிடித்திருக்கிறதா என்று வாத்தியாரின் தம்பியிடம் கேட்டார்கள். இது பெண் பார்க்கும் படலம் போல் இருக்கிறது என்று அவனின் இதழ்களும் சிரிப்பை மென்றது. தன் முன்னால் நின்றிருக்கும் அந்த சிறு பெண்ணைப் பிடித்து போய்விட்டதே, மானைப் போல மருண்ட விழிகள், அந்நிய ஆடவனின் முன்னால் ஆடவும் பாடவும் சொன்ன அம்மாவின் செயல் அவளுக்குச் சுத்தமாய் பிடிக்கவில்லை என்பதை அவளின் கண்களே உணர்த்திவிட்டதே. கடலையே கண்களில் தேக்கி வைத்திருப்பாள் போலும் என்று வியந்தபடி இருக்கவே அந்த வேணி அவன் மனதில் புகுந்து கொண்டாள்.

நல்லவேளை இந்த சங்கடங்கள் அதிகரிக்கும் முன்னரே இருவரும் எதிர்பார்த்து இருந்த ராமதுரை வந்துவிட்டார். வருவதாய் சொல்லியிருந்த புரோடியூசருடன். அவரைக் கண்ட வேலம்மாவிற்கு உயிர் போய் உயிர் வந்தது. யாரோ பெரிய மனிதர் வருவார் என்றால் இரண்டுகெட்டான் வயதில் ஒரு பையன். அவனிடம் எத்தனை குழைந்தாலும் சரியென்று ஒரு வார்த்தை சொல்லத் தெரியலை இவனுக்கு ராமதுரைதான் கரெக்டு என்று எண்ணும் போதே வந்ததில் நிறைவு.

பிரம்பு சோபாவில் யாரோ ஒருவர் முன் ஆடிக்கொண்டிருக்கும் வேணியை வியப்பாய் பார்த்த ராமதுரை ஒருவேளை வேலம்மாள் நம்மை நம்பாமல் யாரையோ கூட்டிவந்திட்டது போல என்று எண்ணிக்கொண்டே உள்ளே வேகமாய் நுழைந்தார்.

“என்னாங் காணோம் புதுமுகம் ஒண்ணு இருக்கு நீங்கதான் அறிமுகப்படுத்தனுமின்னு என்கிட்டே சொல்லிட்டு இப்போ வேறயாரோ இல்லை வந்து உட்கார்ந்து இருக்காங்க ?!”

“இருங்க அய்யா கேட்டுடறேன் யாராவது சொந்தமா இருக்கும். தொண்டையைச் செருமியபடியே தம்பி நீங்க?” என்றார் அவனுக்கு சமமாக உட்கார்ந்து கொண்டு ராமதுரை

“அய்யா நான் விருதுநகர் பக்கத்துலே ஒரு கிராமம் . நம்ம கிராமத்து டெண்ட் கொட்டாயிலே நடிக நடிகர்களை வைச்சு ஒரு நாடகம் போடணும் பொங்கல்ல இருந்து மூணு நாளைக்கு ஏற்கனவே நாம சந்திச்சிருக்கோம். பாகவதர் வீட்டுலே முதலியார் கூட வந்திருக்கிறதா கொட்டகை விஷயமான்னு பேசினேனே !”

“ஏய் ஆமாமா !” முதலியார் பெரிய இடமாச்சே….பேஷா செய்திடலாம் ஆளுக்கேத்தா மாதரி ரேட்டும் ஏறும். தம்பி எங்கே தங்கியிருக்கீங்க ?”

“சென்டரல் பக்கத்திலே ஒரு மடத்திலே….?!”

“அப்படியா சரி நாளைக்கு காலையிலே ஸ்டூடியோவுக்கு கூட்டிப்போறேன். காலையிலே நம்ம வீட்டுக்கு வெள்ளன வந்திடுங்க அப்பறம் ஒரு கார் புடிச்சிடுங்க தம்பி அப்பத்தான கெளரவதையா இருக்கும். இது மெட்ராஸ் ஆளு பாதி ஆடை பாதி பவிசுக்குத்தான் மதிப்பு புரியுணுன்னு நினைக்கிறேன் கண்ணன் தலையசைத்தான் அப்போ நீங்க கிளம்புங்க இவரு பெரிய ப்ரோடியூசர் நம்ம வேணிக்கு ஒரு வேஷம் தர்றேன்னு சொன்னாரு. வேணி தெரியுமில்லை இந்தம்மாவோட பொண்ணு எனக்கு உறவுமுறைதான் ஒரு வகையில் அக்கா!” படபடவென இயல்பாய் பேசிய ராமதுரையை கண்ணனுக்குப் பிடித்துப்போனது. “அக்கா வேணி எங்கே ? அப்பறம் தம்பிக்கு தாகத்துக்கு ?”

“அதெல்லாம் எனக்கு தெரியாதா தம்பி பதமா கவனிச்சிட்டேன் வேணி அய்யாவுக்கு காப்பி கொண்டுவரப் போயிருக்கு?” எங்கே கண்ணனுக்கு கொடுத்த ஒருகாபி வீணோ என்று நினைத்து ராமதுரையின் பேச்சில் மாறினாள். உள்ளேயிருந்து திரும்பிய வேணியின் கையில் காப்பிதம்ளரோடு ஒரு தட்டும், புடவைத் தலைப்பினை தோளில் போட்டு முழுக்கச் சுற்றியிருந்தாள்

“ஏய் என்னடியிது இப்படி கோஷாமாதிரி முக்காடு போடாதது தான் குறை?” தோள்பட்டையில் இடித்துக் கொண்டாள் வேலம்மா.

“ராமதுரை நீ சொன்னா மாதிரி பொண்ணு புதுசுதான் முகவெட்டு சரியா இருக்கும். இந்த டிரஸ்லே முகஅழகு தெரியுது நம்ம படத்துலே மார்டன் கேர்ள் வேடம் புடவையும் கட்டணும் மார்டன் டிரஸ்ஸீம் போடணும் இவ உடற்கட்டு எப்பிடியிருக்குன்னு பார்க்கணுமே நீ ஒன்னு செய் இந்தா இதுலே ரூவா 20 கிடக்கு அவளை விதவிதமா போட்டோ புடி நான் டைரக்டர் கிட்டே காட்டிடறேன். நாளைக்கு ஸ்டியோவுக்கு வந்துடு அங்கே போட்டோ பார்த்திடலாம்” என்று அவர் வேணியை அங்கம் அங்கமாய் பார்த்துவிட்டு கிளம்பிட, கம்பளிபூச்சு ஊர்வதைப் போல நெளிந்தாள் வேணி ஆனால் அவன் பார்த்தபோது மட்டும் இப்படியொரு அசிங்க உணர்வு தோற்றவில்லையே ஏன் என்று நினைக்காமல் இல்லை அவள் மனது.

(தொடரும்)

பகுதி – 1 | பகுதி – 2 பகுதி – 3 | பகுதி – 4 | பகுதி – 5 | பகுதி – 6 | பகுதி – 7 | பகுதி – 8 | பகுதி – 9 | பகுதி – 10 |

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...