மோர் அருந்துவது ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, அழகுக்கும்தான்!
மிகவும் குறைவான விலையில் கிடைக்கக்கூடிய மோர் உடல் சூட்டை தணிக்கும் என்பதுதான் அனைவருக்கும் தெரியும். ஆனால், ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, அழகுக்கும் மோர் பல்வேறு வகைகளில் பயன்படுகிறது.
வழக்கமாக கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கத்திலிருந்து நம்மை காத்துக்கொள்ளவும், உடல்நிலையை சீராக வைத்துக் கொள்ளவும் மோர் எடுத்துக்கொள்கிறோம். உடல் சூட்டை தணிப்பது மட்டுமின்றி, நல்ல செரிமானத்திற்கும், தோல் நோய்களில் இருந்து நம்மை காத்துக்கொள்ளவும் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை அகற்றி உடல் எடையை குறைக்கவும், வெயிலினால் சருமத்தில் ஏற்படும் வறட்சியைத் தடுக்கவும், அஜீரணம், நெஞ்செரிச்சல் உள்ளிட்ட கோளாறுகளை சரிசெய்யவும் மோர் அருந்துகிறோம். இதனை ஆராய்ச்சியாளர்களும் பல்வேறு கட்ட ஆய்வுகளின் மூலமாக உறுதி செய்துள்ளனர்.
இந்நிலையில், மோர் குடிப்பதனால் உங்களது அழகையும் நீங்கள் மேம்படுத்தலாம். தினமும் ஒரு டம்ளர் மோர் குடிப்பதன் மூலமாக, அதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி, சருமம் பொலிவுடன் இருக்க உதவுகிறது.
முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், மறைய மோரை முகத்தில் தடவலாம். பருக்கள் இருந்தாலும் ஒரு சில நாட்களுக்கு மோரை தடவி வந்தால் பருக்கள் மறந்து நல்ல மாற்றத்தைக் காணலாம். வயதான தோற்றமளிக்கும் முகச்சுருக்கங்கள் மறையும். முதுமையிலும் இளமையாக இருக்கலாம். மோரை பயன்படுத்துவதன் மூலமாக இயற்கையான முறையிலேயே சருமத்தினை ஆரோக்கியமாகவும், பொலிவுடனும் வைத்துக்கொள்ளலாம்.