`3 சிறுமிகளுக்குக் கட்டாயத் திருமணம்!’
ராணிப்பேட்டைக்கு அதிர்ச்சி கொடுத்த குடுகுடுப்பைக்காரர்கள்…!!!
ராணிப்பேட்டையை அடுத்த அம்மூர் நரசிங்கபுரம் கிராமம், பைரவா காலனியில், குடுகுடுப்பைக்காரர்கள் நிறைய பேர் குடும்பத்துடன் வசிக்கிறார்கள். அந்த இன மக்கள், தங்களின் பெண் பிள்ளைகளை 13, 15 வயதை எட்டியவுடன் திருமணம் செய்துவைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந்தநிலையில், 16, 17 வயதுடைய 3 சிறுமிகளுக்கு, இன்று காலை திருமணம் செய்துவைக்க ஏற்பாடு செய்தனர். இதுகுறித்து, சைல்டு லைன் 1098-க்கு நேற்றிரவு ரகசியத் தகவல் கிடைத்தது.
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினியின் உத்தரவின் பேரில், சைல்டு லைன் களப்பணியாளர்கள் மற்றும் வாலாஜா சமூக நலத்துறை அலுவலர்கள் இணைந்து, காவல்துறை உதவியுடன் சம்பந்தப்பட்ட கிராமத்துக்குச் சென்றனர்.
அங்கு சிறுமிகளின் பெற்றோர் மற்றும் ஊர் பிரமுகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, திருமண ஏற்பாடுகளைத் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த குடுகுடுப்பைக்காரர்கள், அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டனர்.
காவல்துறை உதவியுடன் 3 சிறுமிகளையும் மீட்ட அதிகாரிகள், ராணிப்பேட்டையில் உள்ள குழந்தைகள் நலக்குழு முன் ஆஜர்படுத்தி, வேலூர் அரசினர் பெண் குழந்தைகள் வரவேற்பு இல்லத்தில் தங்கவைத்தனர். இந்தச் சம்பவத்தால், அம்மூர் நரசிங்கபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.